சத்குரு:

சில பத்தாண்டுகளுக்கு முன்புகூட, இந்த தேசத்தின் மக்கள் குடிநீர்த் தேவைக்கும், தங்களது துணிகளைத் துவைக்கவும், குளிப்பதற்கும் அல்லது நீந்தி, அவர்களுக்குள் விளையாடி மகிழ்வதற்கும் உள்ளூரில் இருக்கும் நீரோடையையும், ஆற்றையும் நோக்கியே நடந்தனர்! இன்றைக்கு, இப்படிப்பட்ட எது ஒன்றையும் செய்வதென்பது கேள்விக்கு அப்பாற்பட்ட விஷயம். உலகின் மற்ற பல நதிகளைப் போல, கலாச்சாரத்தில் என்றைக்கும் புனிதமானதாக விளங்கிய இந்தியாவின் நதிகள் – இன்று மாசுபட்ட நீர்நிலைகளாக மாறியுள்ளன. இருப்பினும், இந்திய மக்களால் இந்த நதிகளிலிருந்து தூர விலக முடியவில்லை. அவைகள் தேசத்தின் உயிர் நாடிகளாக இருப்பதுடன், இந்தியாவின் எதிர்காலம் பல வழிகளிலும் நமது நதிகளின் ஆரோக்கியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

நதி மாசுபாட்டின் காரணிகள்

நமது நதிகள் இரண்டு விதமான மாசுபாடுகளைச் சந்திக்கின்றன. முதலாவதாக, பல முனைகளிலிருந்து பெரிய அளவுகளில் தொழிற்சாலைக் கழிவுகள் நதியைச் சென்றடைகின்றது. மற்றொன்று, நதிகளின் போக்கில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களிலிருந்து கழிவுகள் வெளியேறி நதிகளில் கலக்கிறது.

இதனைத் தவிர்ப்பதற்கு, நாம் நதிகளில் இறங்கி சுத்தம் செய்யவேண்டியதில்லை. நாம் அவற்றை மாசுபடுத்துவதை நிறுத்தினால், ஒரே ஒரு வெள்ளப்பெருக்கில் அவைகளே தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளும்.

பயிர்களுக்கு இரசாயனங்களைப் பயன்படுத்துவது இன்றைக்கு கட்டாயமாகிப்போன காரணத்தால், விவசாய மண் அரிப்பு நதிகளுக்குக் கேடு உண்டாக்குகிறது. மண்ணை, மண் என்று அழைப்பதற்கு அதற்குக் குறைந்தபட்சம் இரண்டு சதவிகித அங்ககச் சத்து இருக்கவேண்டும். இந்த அங்ககச் சத்து (organic content) நீக்கப்பட்டுவிட்டால், மண், மணலாக மாறிவிடுகிறது. பிறகு அது விவசாயம் செய்யத் தகுதியில்லாமல் போகிறது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற இந்திய மாநிலங்களில், மண்ணின் அங்ககச் சத்து 0.05 சதவிகிதமாக இருக்கிறது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு உணவளித்த நிலத்தைப் பாலைவனமாக்க வழிவகுக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொதுவாக நதிகளின் மாசுபாடு என்பது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயன மற்றும் ஆலைக்கழிவுகள் அல்லது பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் வீட்டு உபயோகக்கழிவுகள் போன்றவைகளால் ஏற்படுகிறது. இதில் ஒரு முக்கியமான அம்சம் – நகரங்களின் வீடு மற்றும் தொழிற்சாலைகளின் தண்ணீர், மின்சாரத்தின் பயன்பாட்டை அளவிடுவதைப் போலவே இவ்விடங்கள் வெளியிடும் கழிவுகளுக்கும் அளவுகோள் அமைத்து கட்டணமிடுவது அவசியம்.

உதாரணத்திற்கு, மும்பை போன்ற ஒர் நகரம் ஒரு நாளைக்கு 210 கோடி லிட்டர் கழிவு நீரை உற்பத்தி செய்கிறது. இன்றுவரை அதன் பெரும்பான்மையான கழிவு நீரும் கடலைச் சென்றடைகிறது. ஆனால் இது சுத்திகரிக்கப்பட்டு, micro-irrigation செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டால், அது ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கமுடியும். 200 – இந்திய பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களின் 36,00,00,00,000 லிட்டர் கழிவு நீரைக் கொண்டு 30-லிருந்து 90 இலட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு micro-irrigate செய்யமுடியும்.

விவசாய மண் அரிப்பிலிருந்து நதி மாசுபாட்டைத் தவிர்ப்பது

இயற்கை விவசாயம் செய்வதற்கு உழவர்கள் ஊக்குவிக்கப்பட்டால், விவசாய மண் அரிப்பு சரிசெய்யப்பட முடியும். விவசாயிகளுக்குச் சிறப்பான விளைச்சலும், வளமான வாழ்வும் விவசாயத்தின் மூலம் கிடைக்கவேண்டுமென்றால், மண்ணுக்கு இரசாயன ஊட்டம் தேவையில்லை, அதற்கு அங்ககச் சத்து (Organic content) அவசியமாகிறது. மரங்களிலிருந்து இலைக்கழிவுகளையும் மற்றும் கால்நடைக் கழிவுகளையும் நிலத்திற்கே நம்மால் மீண்டும் கொடுக்கமுடிந்தால், மண் ஆரோக்கியமாக இருக்கும். இது நதியின் ஆரோக்கியத்துக்கு நன்மை என்பதுடன், மண்ணுக்கும், விவசாயிகளின் வருமானத்துக்கும் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கிறது. அதனால் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது என்பது நமது நதிகளுக்கான தேவை மட்டுமல்ல, தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இலட்சக்கணக்கான விவசாயிகளின் நல்வாழ்வுக்கும் அவசியமானது.

தொழிற்சாலை மற்றும் இரசாயனக் கழிவுகளைச் சுத்திகரித்தல்

இன்றைய நிலையில் இரசாயன மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் இந்தியாவில் எப்படிக் கையாளப்படுகிறது என்றால், கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுவதற்கு முன்னால், அந்தக் குறிப்பிட்ட தொழிற்சாலையே அதன் கழிவைச் சுத்தப்படுத்துமாறு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, பல தொழிற்சாலைகள் ஆய்வாளர்கள் வருகையின்போது மட்டும் அதன் கழிவுகளைச் சுத்திகரிக்கின்றன. மேற்பார்வை செய்வதற்கு ஒருவரும் இல்லாதபொழுது, பல தொழிற்சாலைகளும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை ஆறுகளில் கொட்டுகின்றன. இந்த சுத்திகரிப்பு செயல்முறையானது திறம்பட செயல்படவேண்டும் என்று நாம் விரும்பினால், கழிவு சுத்திகரிப்பு என்பதே ஒரு இலாபகரமான தொழிலாக உருவாக்கப்படவேண்டும். உங்களது கழிவு என்னுடைய தொழில் மூலதனமாக இருந்தால், உங்களுடைய சுத்திகரிக்கப்படாத கழிவை ஆற்றில் கொட்டுவதற்கு நான் விடமாட்டேன். உங்கள் கழிவைப் பெற்று சுத்திகரிப்பதை நான் என்னுடைய தொழிலாக உருவாக்கிக்கொள்வேன். இப்படிப்பட்ட தொழில் முனைவில், ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் தர நிர்ணயத்தை விதிப்பது மட்டுமே அரசாங்கத்தின் பணியாக இருக்கும்.

அசுத்தத்திலிருந்து வளத்திற்கு

கழிவு என்று ஒன்று இல்லை. நிலத்தைத்தான் நாம் அசுத்தமாக மாற்றிவிட்டிருக்கிறோம். பூமியை நன்னிலமாக மறுபடியும் செம்மைப்படுத்துவது நமது பொறுப்பு. இது அசுத்தத்திலிருந்து வளம் நோக்கிய ஒரு பயணமாக இருக்க முடியும். ஏதோ ஒன்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது நமக்குத் தெரிந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி. எல்லாவற்றையும் நமது நல்வாழ்வுக்குப் பயன்படுத்துவதற்கு நாம் கற்றுக்கொள்வதற்கான தருணம் வந்துள்ளது. அதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரின் பிரதம மந்திரி சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தானே அருந்துவதன் மூலம், சிங்கப்பூரின் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் எவ்வளவு தூய்மையானது என்பதை நிரூபித்துக் காட்டினார். உண்மையில் நமது நீர் ஆதாரங்களை நாம் புத்திசாலித்தனமாக நிர்வகித்தால், குடிநீர் தேவைக்கு இந்தியாவில் இன்னமும் போதுமான நீர் உள்ளது. ஆகவே, தொழில்துறை மற்றும் விவசாய நோக்கங்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் கழிவு நீர் சுத்திகரிப்பதனால், சுத்திகரிக்கும் செலவை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும்.

இந்தியாவில் நதி மாசுபாட்டைத் தீர்ப்பதற்கான Public-private partnership (PPP) மாதிரித் திட்டம்

ஆயினும், இது ஒன்றும் வெல்லமுடியாத பிரச்சனை அல்ல. இந்தப் பிரச்சனை குறுகிய கால அவகாசத்தில் தீர்க்கக்கூடியது என்பதுடன் இதற்கான தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. இப்போது தேவைப்படுவது என்னவென்றால் கடுமையான சட்டங்களும், அதை நடைமுறைப்படுத்த அவசியமான உறுதியும் மட்டும்தான். நாம் ஆறுகளில் இறங்கிச் சென்று சுத்தப்படுத்த வேண்டியதே இல்லை. அவற்றை மாசுபடுத்துவதை நாம் நிறுத்திவிட்டால், ஒரே ஒரு வெள்ளப்பெருக்கில் அவைகள் தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளும்.

இதற்குத் தேவைப்படுவதெல்லாம், கடுமையான விதிமுறைகளும், அவற்றை நடைமுறைப்படுத்தத் தேவையான உறுதியும்தான்.

ஒரு தேசமாக, நதி மாசுபாடு குறித்துத் தீர்வு காண்பதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தினால், பொதுத்துறை - தனியார் துறை கூட்டு நடவடிக்கை முறை நிறுவப்பட்டு, நீடித்த திறனுடன் செயல்படுவது அவசியம். இந்தியாவில் இவ்வளவு குறுகிய காலத்தில் சாலைகள் அமைக்கபட்டிருப்பது இப்படிப்பட்ட முயற்சிகள் சாத்தியப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நம் குறை என்னவென்றால், இத்தகைய அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இதை முடிவு செய்வதற்கு பத்தாண்டுகாலங்கள் தேவையில்லை. தொழில் நுட்பங்களைக் கைவசம் வைத்துக்கொண்டிருக்கையில், நோக்கமும், செயலாற்றுவதற்கான பொறுப்புணர்வும்தான் இப்போதைய தேவை.

அடுத்த சில வருடங்களில், அனைவரின் களங்கங்களையும் உள்வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ஒரு பரிசுத்தமான எதிர்காலத்தை வழங்கும் திறனுடைய தாயைப் போன்ற தன் புராதன பிம்பத்தை நமது நதிகள் மீட்டெடுப்பதற்கு நம்மால் உதவ முடியும் என்று நான் நம்புகிறேன். இது நதிகளை சுத்தமாக வைத்திருப்பது நம் பிழைப்பிற்கு மட்டும் முக்கியமானதில்லை. அது மனிதகுலத்திற்கு உத்வேகம் அளிக்கும் அடையாளங்களாக விளங்குவதும் மிக அத்தியாவசியமானது.


ஆசிரியர் குறிப்பு : இந்தியாவின் நதிகளை புத்துயிரூட்டுவதற்கு, சத்குரு தலைமையில் நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' என்ற தேசிய அளவிலான பேரணியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த கட்டுரை முதலில் உலக பொருளாதார மன்றம்' தின் வலைபதிவில் இடம்பெற்றது.