கேள்வியாளர்: விதி பற்றிய கவிதையில், ஒருவர் தன் விதியை இப்போது அல்லது எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறீர்கள்‌. அதை பற்றி சற்று விளக்க முடியுமா? மேலும், ஒருவர் தன் வாழ்வில் எதையெல்லாம் தேர்ந்தெடுப்பார் என்பதை எந்தளவுக்கு முன்னதாகவே அறியலாம்?

விதி என்பது முடிவான ஒன்றல்ல
மலர்கள், மணிகள் அல்லது எலும்புகளை
கோர்த்து மாலையாக்கக்கூடிய நாரே விதி

இப்போதோ பிறகோ இங்கேயோ அங்கேயோ
அதை நீங்கள் அணியலாம்.
அல்லது இன்னொருவரின் நெஞ்சின்மேல் சூடலாம்

ஆனால் நாரை இழுக்காமல்
ஒரு மலர் கூட உதிராது

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அன்பும் அருளும்,

விதி

சத்குரு: அடுத்த ஒரு மாதத்திற்குள் நீங்கள் இப்போது இருக்கும் உயரத்தை விட ஆறு அங்குலம் உயரமாக வளர வேண்டும் என்று நான் கூறுவதாக வைத்துக்கொள்ளுங்கள், உங்களால் வளர முடியுமா? அனேகமாக நீங்கள், "சத்குருவுக்கு ஏதோ ஆகிவிட்டது" என்பீர்கள். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மாதத்திற்குள் உங்கள் எடையை ஆறு கிலோ அதிகரிக்க வேண்டும் என்று நான் கூறினால் உங்களால் முடியுமா? முடியும். நீங்கள் எடையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம், ஆனால் உங்களால் உயரமாக வளர முடியாது. விதியும் அதுபோல தான்; அது உங்கள் உடலின் எலும்பு மண்டலம் போன்றது - அது இல்லாமல் ஒரு கணம் கூட தசைகளால் நிற்க முடியாது. எலும்பு மண்டலமே ஒரு குறிப்பிட்ட அடிப்படையையும், வடிவத்தையும் உங்கள் உடலுக்கு தருகிறது. நீங்கள் அதை பார்க்க முடியாவிட்டாலும், அது எப்போதுமே இருக்கிறது. ஆனாலும், தசை தான் நீங்கள் இப்போது யாராக, எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள் என்பதை - நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறீர்கள், உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் அல்லது செய்ய முடியாது என்பதை நிர்ணயிக்கிறது. உங்களிடம் சேரும் தசையே அனைத்தையும் நிர்ணயிக்கிறது, உங்களிடம் உள்ள எலும்புகள் அல்ல.

ஆன்மீக செயல்முறையின் அடிப்படை சாரமே உங்கள் விதியை இப்போதே எதிர்கொள்வதுதான்.

நீங்கள் உங்கள் உயரத்தை அதிகரிக்க முடியாது என்றாலும், உங்கள் "தசைகளை" - உங்கள் உடல், மூளை, உணர்ச்சிகள் மற்றும் உயிர்சக்தியை - இன்னும் சிறப்பாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், நீங்கள் வாழ்க்கையில் வேறொரு பரிணாமத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் விதியிடமிருந்து தப்பிக்க முயற்சித்தால், சிறிது காலத்திற்கு வேண்டுமானால் அதை தள்ளிப்போடலாம், அதனிடமிருந்து தப்ப முடியாது. இப்போதே அதை செய்வதை விட தள்ளிப்போடுவது நல்லது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முடிவு. ஆனால் வாழ்க்கையை வீணடிப்பதாகவே நாம் கருதுவோம். எதையெல்லாம் இந்த பிறவியிலேயே செய்ய வேண்டுமோ, அதை இந்த பிறவியிலேயே செய்து முடிக்க வேண்டும் - அதை ஏன் அடுத்த பிறவிக்கோ அல்லது ஏன் அடுத்த பிறவியை எடுக்கவும் வேண்டும்? நீங்கள் புத்திசாலியாக உங்கள் இருப்பை குறைந்தபட்சமாக அறிவுபூர்வமாக புரிந்தவராக இருந்தாலே உங்கள் விதியை நீங்கள் தள்ளிப் போடக்கூடாது; அதை இப்போதே என்னவென்று பார்த்துவிட வேண்டும். ஆன்மீக செயல்முறையின் அடிப்படை சாரமே உங்கள் விதியை இப்போதே எதிர்கொள்வதுதான்.

விதியைப் பற்றி யார் பேச முனைந்தாலும் அவர்களை வாயடைப்பது நம் வழக்கம், ஏனென்றால் அதன் பங்கை பூதாகரமாக்கி தேவையில்லாமல் தங்கள் வாழ்வை தாங்களாகவே முடக்கிக் கொள்வார்கள். விதி சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் அதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அதிலுள்ள மற்ற எல்லா சாத்தியங்களையும் புறக்கணிக்காதீர்கள். இப்போதுள்ள மனநிலை இப்படித்தான் இருக்கிறது - "நானும் ஒரு மனிதன் தானே" என்று மக்கள் கூறும்போது, அவர்கள் தங்கள் மனிதத் தன்மையை ஒரு கட்டுப்பாடாகவே குறிப்பிடுகிறார்கள், ஒரு சாத்தியமாக அல்ல.‌ மனிதனாக பிறந்தாலே எல்லையற்ற சாத்தியங்கள் உண்டு என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஒரு சிறு சாவி துவாரத்தின் வழியாக ஒரு பெரும் கதவை நீங்கள் திறக்க முடியும், அது அதற்கு அப்பால் இன்னும் பெரிதாக இருக்கும் உலகத்தைத் திறக்கிறது.

அப்படியானால் விதி என்று ஒன்றுமே இல்லையா? இருக்கிறது, ஆனால் அதை நீங்கள் உங்கள் மனதில் இருந்து அழித்துவிட வேண்டும். நீங்கள் விதியில் நம்பிக்கையற்ற ஈஷா யோகா வகுப்பில் வழங்கப்படும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றைப் பற்றி செய்வதற்கு ஏதுமில்லை - அதை அப்படியே விட்டுவிடுங்கள். எது நிர்ணயிக்கப்படவில்லையோ அதை நீங்கள் சரிசெய்ய வேண்டும். உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதன்மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

தொடரும்...

மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.