குண்டலினி என்றால் என்ன? குண்டலினி யோகா என்றால் என்ன? இந்த சக்திவாய்ந்த ஆன்மீகச் செயல்முறையை பக்தியோடும், முழுமையான பொறுப்புணர்வோடும் எப்படி அணுகுவது என்பது பற்றி இங்கே சத்குரு விளக்குகிறார்.

சத்குரு:

யோகக் கலாச்சாரத்தில் குண்டலினி சக்தியை குறிக்க, பாம்பைக் குறியீடாகப் பயன்படுத்துவார்கள். இந்தக் குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள் இருக்கும் 'வெளிப்படாத சக்தி'. அதாவது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வரை, அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக் கூட நீங்கள் அறியமாட்டீர்கள். ஆம், 'அசையாத வரை' இல்லாதது போல் இருக்கும், ஆனால் அது எழுச்சியுற்று, வெளிப்பட ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும் உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள் மலைத்துப் போவீர்கள். இக்காரணத்தினால் தான் இந்த சக்தியை 'சுருண்டு கிடக்கும் பாம்பாக' குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு நகர ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது. அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும் இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை நீங்கள் உணரமாட்டீர்கள். இந்த சக்தி எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில் கூட நினைத்திடாத அதிசயங்கள் உங்களுக்குள் நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான, அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள் நிகழ, அனைத்துமே வேறு வகையில் இயங்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குண்டலினியும் அதனை உணர்தலும்

"குண்டலினி" என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்றாலும் கூட, மிக்க கவனத்துடன், விழிப்புணர்வோடு, மரியாதையோடு தான் உச்சரிக்கவேண்டும்.

சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள் 'ஆழ்ந்து உணரும்' ஆற்றலும் கூடுகிறது. யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின் இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக செயல்முறை என்றாலே உங்களின் உணரும் திறனை அதிகரிப்பதற்குத்தான்... ஏனெனில் உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே இருக்கிறது. சிவன் பாம்புடன் காட்சியளிப்பதும் கூட இதனால் தான். சிவனின் சக்தி அதன் உச்சத்தை எட்டியதால், அவரின் உணரும் திறனும் உச்சத்தில் இருக்கிறது. அதனால் அவரின் நெற்றிக்கண்ணும் திறந்துவிட்டது.

குண்டலினியும் நெற்றிக் கண்ணும்:

மூன்றாவது கண் என்றால் ஒருவருடைய நெற்றி பிளந்து, அங்கே இன்னொரு கண் தோன்றிவிட்டது என்று அர்த்தமல்ல. இது ஒரு குறியீடு... முற்றிலும் புதுவிதமான பரிமாணத்தில் உணரும் திறன் வந்துவிட்டது என்பதைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு... அவ்வளவே! இந்த இரண்டு கண்களால் பொருள்நிலையில் உள்ளவற்றை மட்டுமே பார்க்க முடியும். உதாரணத்திற்கு, இந்தக் கண்களை கைகளால் மூடினால், அவற்றால் எதையும் பார்க்க முடியாது. அதன் திறன் அவ்வளவு தான். பொருள்நிலைக்கு உட்பட்டே அது செயல்படுகிறது. ஆனால் 'நெற்றிக்கண் திறந்துவிட்டது' என்று சொன்னால், அது உள்நோக்கிப் பார்ப்பது. வாழ்கையை முற்றிலும் வேறு விதமாக உணரும் பரிமாணம் திறந்து கொண்டுவிட்டதால், இவ்வுலகில் எதையெல்லாம் உணரவேண்டுமோ, அவை அனைத்தையுமே உணர்ந்துகொள்வது.

குண்டலினி யோகா – முன்னேற்பாடு

இப்போதெல்லாம் நிறைய புத்தகங்களிலும், யோகப் பயிலகங்களிலும் 'குண்டலினி யோகா' மிகப் பிரபலமாகி வருகிறது. குண்டலினி யோகா பற்றியும், அதன் பலன்கள் பற்றியும், ஒன்றுமே அறியாவிட்டாலும் சர்வசாதாரணமாகப் பேசுகிறார்கள். "குண்டலினி" என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்றாலும் கூட, மிக்க கவனத்துடன், விழிப்புணர்வோடு, மரியாதையோடு தான் உச்சரிக்கவேண்டும். ஏனெனில் அந்த வார்த்தையே அத்தனைப் பெரிது. உங்கள் உடல், மனம், உணர்வுகள் அனைத்தையும் தேவையான அளவிற்கு தயார் செய்து கொண்ட பின்னரே, குண்டலினியை எழச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த அளவிற்கு சக்தியை தாங்கிக்கொள்ள முடியாத உடலில் அதைச் செலுத்தினால், 'ஹை வோல்டேஜ்ஜால்' செயலிழக்கும் எந்திரங்கள் போல், உங்கள் உடலும் சமனற்றோ, செயலிழந்தோ போகும். இதுபோல் தேவையான வழிநடத்துதலும், துணையும் இன்றி குண்டலினி யோகாவைச் செய்தவர்கள் பலர், மதியிழந்து, அல்லது செயலிழந்த உடல்களுடன் உதவிகேட்டு என்னிடம் வந்திருக்கிறார்கள். தேவையான, பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உண்டாக்காமல் குண்டலினி சக்தியை தூண்ட முயற்சிப்பது மிகவும் பொறுப்பற்ற, ஆபத்தான செயல்.

குண்டலினி யோகா - மிகவும் ஆபத்தானது

குண்டலினி யோகா தான் இருப்பதிலேயே மிக அபாயகரமான யோகமுறை. அபாயம் என்பது... அதுதான் இருப்பதிலேயே மிகவும் வீரியம் வாய்ந்த செயல்முறை என்பதால்! எது சக்திவாய்ந்ததோ, அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அது பேராபத்தாய் முடிந்துவிடும். உதாரணத்திற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று அணுஉலை வாயிலாக உற்பத்தி செய்வது. மின்சாரம் உற்பத்தி செய்ய நாம் அறிந்தருக்கும் எல்லா வழிகளிலும் இதுதான் சிறந்த வழி... என்றாலும், இதுதான் மிகவும் ஆபத்தான வழியும் கூட. நிஜம் தானே? எல்லாம் சரியாக நடக்கும்போது மிகச்சிறப்பான வழியாய் இருப்பது, தவறாகிப் போனால் சரிசெய்ய முடியாத அளவிற்கு பெரும் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது. அதேபோல் தான் குண்டலினி யோகாவும். அனைத்திலும் சிறந்த வழி... அதே நேரத்தில் மிகவும் ஆபத்தானதும் கூட. தேவையான முன்னேற்பாடுகளோடு, அதைப் பற்றி முழுமையாய் அறிந்தவரின் தொடர் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் மட்டுமே இதை நாம் பயிற்சி செய்யவேண்டும். இல்லையெனில் இதை செய்யாதிருப்பதே நல்லது. ஆனால் இன்றிருக்கும் பிரச்சினை... இவை பற்றி புத்தகங்கள் வெளியாகிவிட்டன. அதோடு எல்லோருக்கும் உயர்நிலை யோக வகுப்புகளே வேண்டும். யாரும் 'அ' வில் இருந்து ஆரம்பித்து 'ஃ' ற்குப் போவதற்குப் பதிலாக, நேரடியாக 'ஃ' ற்கு செல்வதையே விரும்புகின்றனர். இந்த மனப்பான்மை மிகவும் ஆபத்தானது.

பாரம்பரிய யோகக் கலாச்சாரத்தில், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான யோகாவும், துறவிகளுக்கு வேறு விதமான யோகாவும் சொல்லிகொடுக்கப்பட்டது. எப்போதுமே குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு துறவிகளுக்கான யோகமுறையை நாங்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. இவ்வழி தான் சிறந்தது, மிகவும் சக்திவாய்ந்தது... ஆனால் அதற்குத் தேவையான கட்டுப்பாடும், ஒருமுகமான முனைப்பும், ஒரு சாமான்ய மனிதரிடம் இருக்காது. துறவு வழியில் இல்லாமல் இதுபோன்ற யோகா செய்தால், அது வெளி உலகத்திலிருந்து உங்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி விடும்.

இதனால் குண்டலினி யோகா செய்வது தவறு என்று இல்லை. முறையாய் செய்தால் அது போன்ற ஒரு அருமையான வழியில்லை, ஆனால் பிரச்சினை என்னவெனில், 'சக்தி'க்கு என்று தனியாய் பிரித்தறியும் திறன் கிடையாது. அதை வைத்து உங்கள் வாழ்வை உருவாக்கவும் செய்யலாம், அழித்தும் கொள்ளலாம், இன்று மின்சாரம் தான் உங்கள் வாழ்வை பல வழிகளிலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது... ஆனால் அதுவே மின்சாரக் கம்பியை கைகளால் தொட்டால், என்னாகும் என்று உங்களுக்கே தெரியும்! 'சக்தி'க்கு என்று தனியாய் பிரித்தறியும் திறன் கிடையாது. அதை எவ்வகையில் நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ, அது தான் அதன் குணமும். குண்டலினியும் அப்படித்தான். இப்போது அதை மிகக் குறைவாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதை அதிகரித்தால், உங்கள் வாழ்வின் எல்லைகளைக் கடந்து நீங்கள் விரிவடைய அது வழிசெய்யும்.

எல்லையை தாண்டுவதற்கான விஞ்ஞானம்.

எல்லா யோக வழிகளுக்குமே அதுதான் நோக்கம், ஆனால் குண்டலினி யோகா குறிப்பாக அதை நோக்கியே இருக்கிறது. சொல்லப்போனால் இங்கு வாழும் எல்லா உயிர்களுக்குமே அதுதான் நோக்கம். ஆம், மனிதர்கள் ஏதோ ஒரு வழியில் இக்கணம் தாங்கள் உணர்ந்து கொண்டிருப்பதைவிட இன்னும் ஆழமாக, இன்னும் தீவிரமாக வாழ்வை உணரவே முற்படுகிறார்கள். ஒருவர் பாட நினைக்கிறார், ஒருவர் ஆட நினைக்கிறார், ஒருவர் மதுபானம் அருந்துகிறார், இன்னொருவர் பிரார்த்தனை செய்கிறார்... இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள்? வாழ்வை இன்னும் ஆழமாய், தீவிரமாய் உணர்ந்திட வேண்டும் என்ற ஏக்கத்தினால் தான். எல்லோரும் குண்டலினியை எழுப்பிடவே முயற்சி செய்கிறார்கள்... ஆனால் ஏதேதோ தற்செயலான வழிகளில். இதை எப்போது விஞ்ஞான ரீதியில் அணுகி, சரியான செயல்முறைகளை பயன்படுத்துகிறீர்களோ, அது யோகா!