குழந்தை வளர்ப்பென்ன சவாலா? பகுதி 1

பெற்றோரின் லட்சணம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் குணங்கள் குழந்தைகளிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் விரிவாக அலசுகிறார் சத்குரு. அத்துடன் நாம் எளிதாக கடைபிடிக்கக் கூடிய சில குறிப்புகளையும் வழங்குகிறார். படியுங்கள்...

சத்குரு:

பெற்றோர்களுக்கென்று எத்தனையோ லட்சியங்கள் உண்டு. வாழ்வில் அவர்களால் என்னவெல்லாம் ஆக முடியவில்லையோ, அப்படியெல்லாம் அவர்கள் குழந்தைகளை ஆக்கிப்பார்க்க நினைக்கிறார்கள். தங்களுடைய பெற்றோர் வழங்கிய சில அடிப்படைகளைத் துணையாகக்கொண்டு தாங்கள் ஓரளவு செயல்பட்டது போல, தாங்கள் வழங்கும் சில அடிப்படைகளின் உதவியோடு தங்கள் குழந்தைகள் செயல்பட வேண்டும் என்று பெற்றோர் கருதுவது இயற்கை. ஆனால் ஒரு சில பெற்றோர்கள் அதீத ஆர்வம் காரணமாக தங்கள் குழந்தைகளிடம் கொடுமையாக நடந்துகொள்வதும் உண்டு. இன்னும் சிலரோ, குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்வதாகக் கருதி அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்து குழந்தைகளை வலிமையில்லாமலும் உலகுக்குப் பயன்படாத வகையில் வளர்த்துவிடுவதும் உண்டு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குழந்தைகளுக்கு தயவுசெய்து ஆன்மீகத்தை அறிமுகம் செய்யாதீர்கள். இது ஒரு செடிக்கு மலர்ச்சியைச் சொல்லிக்கொடுப்பது போன்றது.

சொல்லப்போனால், குழந்தை வளர்ப்பில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சொல்வதற்கு சரியான எல்லைக் கோடுகள் இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு அளவிலான கவனம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப அதனிடம் செலுத்த வேண்டிய கனிவின் அளவும் கண்டிப்பின் அளவும் வேறுபடுகிறது.

குழந்தைகளுக்கு விதிக்கின்ற கட்டுப்பாடுகள் மிகவும் கொடுமையாக உள்ளன. பள்ளியிலும் வீடுகளிலும், இந்தக் கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு மிகுந்த சிரமம் தருவதாய் இருக்கின்றன. பொதுவாகவே பள்ளி வாழ்க்கை குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தன்மையை முற்றிலும் அகற்றுவதாகவே உள்ளது. குழந்தைத்தன்மையை அகற்றிவிட்டால், பெரியவர்கள் போல் நடந்துகொள்கிற குழந்தைகள்தான் மிஞ்சுவார்கள். இதை எல்லா இடங்களிலும் பார்க்கிறீர்கள். பல பெரியவர்கள் பதின் பருவத்தினர் போல் நடந்து கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் குழந்தைத்தன்மையை இழந்திருக்கிறார்க்ள்.

இந்நிலை மேலை நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் தங்கள் குழந்தைத்தன்மையை இழந்தவர்கள், பிற்காலத்தில் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். ஒரு குழந்தை குழந்தையாக இருப்பது மிகவும் முக்கியம். அந்தக் குழந்தையை பெரியவர்களாக்க எந்த அவசரமும் இல்லை. ஒரு குழந்தை குழந்தைத்தனமாக நடந்து கொள்வது அற்புதமான விஷயம். ஆனால் பெரியவர்கள் குழந்தைத்தனமாக நடந்துகொண்டால் அது வளர்ச்சியின்மையின் அடையாளம்!

நீங்கள் உங்கள் குழந்தையை நல்லவிதமாக வளர்க்க ஆசைப்பட்டால், முதலில் உங்களுக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த இயலும் என்று பார்க்க வேண்டும். இதற்கு ஓர் எளிய பரிசோதனையைச் செய்து பார்த்தாலே போதும். ஓரிடத்தில் தனியாக அமர்ந்து உங்கள் வாழவில் எதையெல்லாம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தீவிரமாகச் சிந்தித்துப் பாருங்கள். அந்த மாற்றங்களை அடுத்த மூன்று மாதங்களில் கொண்டுவர என்ன வழி என்று சிந்தியுங்கள். அந்த மாற்றங்கள் வெளியுலகைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது. உங்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகள், உங்கள் பேச்சு, உங்கள் செயல்முறைகள், உங்கள் பழக்கங்கள் ஆகியவற்றை மூன்று மாதங்களில் உங்களால் மாற்றிக்கொள்ள முடிந்தால் உங்கள் குழந்தைக்கு போதனை செய்கிற உரிமை உங்களுக்கு உண்டு.

குழந்தையை வளர்ப்பதில் ஆலோசனைகள் உதவாது. ஒவ்வொரு குழந்தையையும் கூர்ந்து கவனித்து அதன் வளர்ச்சிக்கு என்ன தேவை, அதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்கிற புரிதல்தான் முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் அரியதோர் அற்புதம்!

இளம் குழந்தைகளுக்கு தயவுசெய்து ஆன்மீகத்தை அறிமுகம் செய்யாதீர்கள். இது ஒரு செடிக்கு மலர்ச்சியைச் சொல்லிக்கொடுப்பது போன்றது. எந்தச் செடிக்கும் ஒரு பூவை எப்படி மலர்விப்பது என்று சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அதேபோல குழந்தைகளுக்கு ஆன்மீக போதனை அவசியம் இல்லை. எந்த அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ளாத விதத்தில், உங்களோடும்கூட தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வளர்வதற்கு, உங்கள் குழந்தைக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். மனதில் எந்த அடையாளமும் இல்லாமல் வளர்கிற குழந்தை ஆன்மீகத் தன்மையோடுதான் மலரும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தந்த அபத்தங்களையும் தந்திரங்களையும் மறக்கடிக்கச் செய்தால், இயல்பாகவே உங்கள் குழந்தை ஆன்மீகத்தன்மையை அடையும்.

குழந்தைப் பருவத்திலிருந்தே குறிப்பிட்ட சில விஷயங்கள் உங்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடையாளங்களை இறுகப் பற்றிக்கொள்ளுமாறு பலரும் உங்களை ஊக்குவித்து வந்திருக்கிறார்கள். உங்கள் பெற்றோர்களும் உங்கள் ஆசிரியர்களும் அந்த அடையாளங்களை உங்கள் மேல் திணித்திருக்கிறார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களின் கல்வி முறையாக இருக்கிறது. உங்கள் தலைவர்கள் உங்கள் சாதி, இனம், நாடு ஆகிய அடையாளங்களை நீங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒவ்வொருவருக்கும் இப்படி ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது.

இவையெல்லாம் எந்தப் பொருளுமற்றவை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் செய்கிற ஒரு விஷயம் மிகவும் பயனுள்ளது என்பதற்காகவே அதனோடு உங்களை ஆழமாக அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எப்போது உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ, அப்போதே நீங்கள் உருக்குலைந்து போகிறீர்கள். உருக்குலைந்து போனவர்களால் மக்களுக்கு நலவாழ்வைக் கொண்டுவர இயலாது. உங்களுக்கு நல்ல நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அடையாளங்களாலேயே இந்த உலகத்தை பல லட்சம் துண்டுகளாகச் சிதறடித்துவிடுகிறீர்கள். இது மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்கு எந்த விதத்திலும் உதவாது.

எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஆன்மீக போதனையை வழங்காதீர்கள். அவர்களது உடல் மற்றும் மன மேம்பாட்டுக்காக சில எளிய யோகப் பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ளலாம், அதுவே போதுமானது!

முற்றும்.

Photo Courtesy: Rob Parker @ flickr