இந்தப் பதிவில், கர்ணனின் வீழ்ச்சிக்கான அடிப்படையை – அவனது கசப்புணர்ச்சியை சத்குரு உரைக்கிறார்.

சத்குரு: இந்தியாவில், மஹாபாரதத்தில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டிருக்கும் மக்களுக்கு, கர்ணன் ஒரு விதமான எதிர்வினை நாயகன் (ஆன்டிஹீரோ) என்பதற்கு ஒரு ஒட்டுமொத்த கலாச்சாரமே இருக்கிறது. அவன் கெட்டுப்போன, ஒரு இனிப்பான மாம்பழம். அவன் கசப்புணர்வில் நிலைகொண்டிருந்த காரணத்தால், முழுவதுமாகக் கெட்டுப்போன, ஒரு அற்புதமான மனிதனாக இருந்தான். அவனது கசப்புணர்ச்சியானது அவனை விபரீதமான ஒரு வாழ்க்கைக் கதைக்குள் இடம்பெறச் செய்துவிட்டது. அவன் உன்னதமான நேர்மையுணர்வும், கொடை உள்ளமும் கொண்ட ஒரு மனிதனாக இருந்தான், ஆனால் இவை எல்லாமே காணாமல் போனது. அவன் போரில் மோசமான வழியில் இறந்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“கீழ் குலப்பிறப்பு” அரசன்

கர்ணன் கோபமும், கசப்பும் நிறைந்தவனாக இருந்தது ஏனென்றால், அவன் யாருடைய குழந்தை என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் கர்ணனைக் கண்டெடுத்தவர்கள், அவனை அளவற்ற அன்புடன் வளர்த்தனர். அவனது வளர்ப்புப் பெற்றோர் ராதா மற்றும் அதிரதன், அவனை மிகுந்த பாசத்துடன், அவர்களுக்குத் தெரிந்த வரையில் மிக நல்ல விதத்தில் வளர்த்தனர். அவனது தாய் அவனை எவ்வளவு நேசித்தாள் என்பதை கர்ணன் எப்போதும் தன் நினைவில் வைத்திருந்தான்.” என்னை எனக்காகவே நேசித்த ஒரு நபர்,” என்று தன் தாயைப் பற்றி அவன் கூறுகிறான். கர்ணன் திறமையினாலும், விதியின் விருப்பத்தாலும், அங்கதேசத்துக்கு அரசனானான். அவனுக்குக் கூடுதலாகப் பல விஷயங்களும் கிடைத்ததுடன், அரண்மனையில் அவனுக்கென்று ஒரு பதவியும், இருக்கையும் வழங்கப்பட்டது. பல விதங்களில், மகாராஜாவுக்கு உதவியாளனாகவும் இருந்தான். துரியோதனன் கர்ணனைத் தன்னுடன் மிக நெருக்கமாக வைத்துக்கொண்டு, அவனிடமிருந்து அறிவுரைகளைப் பெறுபவனாக இருந்தான். வாழ்க்கை என்னென்ன வழங்கமுடியுமோ அத்தனையும் கர்ணன் பெற்றான். நீங்கள் அவனுடைய வாழ்க்கையை நோக்கினால், உண்மையில், அவன் அரசனாக மாறிவிட்ட ஒரு தேரோட்டியின் மகன். அவன் நிஜமாகவே, மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஆற்று நீரில் மிதந்தவாறு காணப்பட்ட ஒரு குழந்தை, அரசனாக வளர்ந்து நிற்கிறான். அது அற்புதமான ஒரு விஷயமல்லவா? ஆனால் இல்லை, அவன் தனது கசப்புணர்வை விடவேயில்லை. அவன் என்ன முத்திரை இடப்பட்டிருந்தானோ, அதனுடன் அவனால் ஒத்துப்போக முடியாத காரணத்தால், எப்போதும் அவன் மகிழ்ச்சியிழந்தவனாகவும், துயரமிக்கவனாகவும் இருந்தான். வெற்றி கொள்ளும் அவனுடைய துடிப்பின் காரணமாக, அவன் சென்ற இடமெல்லாம் மக்கள் அவனை “சூதன்” அல்லது ‘கீழ்மைப் பிறப்பு’ என்று குறிப்பிட்டனர். அவன் தனது வாழ்க்கை முழுவதும் இதுகுறித்து முறையிட்டான். கீழ்குடிப் பிறப்பு என்று அவன் அழைக்கப்பட்டது குறித்து எந்த நேரமும் அவன் தனக்குள் கசப்புணர்வை ஊட்டி வளர்த்தான்.

இந்த கசப்புணர்வு, ஒரு அற்புதமான மனிதனை அவ்வளவு மோசமான, அருவெறுப்பான ஒரு கதாபாத்திரமாக மஹாபாரதத்தில் உருவாக்கியது. அவன் ஒரு மாமனிதனாக இருந்து, வெவ்வேறு சூழ்நிலைகளில் அவனது பெருந்தன்மையைக் காண்பித்தான், ஆனால் இந்தக் கசப்புணர்வினால், பல வழிகளிலும் எல்லாவற்றையும் தவறாக மாற்றியது அவன்தான். துரியோதனனுக்கு, சகுனி என்ன கூறினாலும் அல்லது செய்தாலும் அது ஒரு பொருட்டில்லை, எப்போதும் நிகழ்வுகளை முடித்துவைத்தது கர்ணனின் அறிவுரைதான். எல்லா விஷயங்களும் முடிவு செய்யப்பட்ட பிறகு, துரியோதனன், “நாம் என்ன செய்யலாம்?” என்ற கேள்வியுடன் கர்ணனைப் பார்ப்பான். ஆகவே கர்ணன் ஒட்டுமொத்த கதையின் போக்கையும் மிக எளிதாக மாற்றியிருக்க முடியும்.

துயரமும், தியாகமும்

அவனது வாழ்க்கை துயரமும், தியாகமும் என ஒன்றுமாற்றி ஒன்றாக பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கண்டது. இந்தத் தியாக உணர்வை அவன் தொடர்ந்து வெளிகாட்டியவாறு இருந்தான், ஆனால் அதன் பயனாக எந்த நன்மையும் விளையவில்லை. அவன் பெரிதும் பொருட்படுத்திய ஒரு விஷயத்தினால் அவன் அழிவுக்கு ஆட்பட்டான் – அவன் யாராக இல்லையோ அந்த யாரோ ஒருவனாக இருக்க – குறைந்தபட்சம் சமூகத்திலாவது – விரும்பினான். உண்மையாகவே அவன் அப்படித்தான் இருந்தான் என்பது நிஜமாக இருக்கலாம், ஆனால் சமூகத்தைப் பொருத்தவரை, அவன் யாராக இல்லையோ, அந்த யாரோ ஒருவனாக இருக்க விரும்பினான். இந்த வேட்கையின் காரணத்தால், அவன் தொடர்ந்து தவறிழைத்தான். அவன் புத்திசாலியான ஒருவனாக இருந்தான். துரியோதனன் என்ன செய்துகொண்டிருந்தானோ, அது தவறானது என்று பார்க்கப் போதிய அறிவு அவனுக்கு இருந்தது. அவன் செயலற்ற ஒரு பங்கேற்பாளனாக மட்டும் இல்லாமல், பல தருணங்களில் துரியோதனனைத் தூண்டி ஊக்கப்படுத்தும் பங்கேற்பாளனாக இருந்தான். கர்ணன் அவனுடைய விசுவாசத்தையும், நன்றியறிதலையும் ஒதுக்கிவைத்து, அவனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியிருந்தால், துரியோதனனின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கும். கர்ணன் அவனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தாமல், தொடர்ந்து ஒரு தவறிலிருந்து மற்றொன்றுக்குச் சென்றான்.

தவறான செயல்கள் நிறைந்த ஒரு வாழ்க்கை

கிருஷ்ணர் அமைதிக்கான வேண்டுகோளுடன் வந்தபோது, கர்ணனிடம் பேசினார். “உனக்கு நீயே ஏன் இதைச் செய்துகொள்கிறாய்? நீ என்னவாக இருக்கிறாயோ, அது இது அல்ல. உன்னுடைய வம்சம் என்ன என்பதை நான் கூறுகிறேன். உனது தாய் குந்தி மற்றும் உனது தந்தை சூரியதேவன்.” இதைக் கேட்டதும் கர்ணன் உடைந்துபோனான். கர்ணன் தான் யார் என்பதையும், தான் எங்கிருந்து வந்தோம் என்பதையும் அறிந்துகொள்வதற்கு எப்போதும் விருப்பம் கொண்டிருந்தான். அந்தச் சிறு பெட்டியினுள் வைத்துத் தன்னை ஆற்றில் விட்டது யார் என்பதைத் தெரிந்துகொள்ள எப்போதும் விரும்பினான். அவன் பஞ்ச பாண்டவர்கள் மீதும், இயற்கையாக எழவில்லையென்றாலும், தீவிரமாக வெறுப்பை வளர்ப்பதற்கு தான் முயற்சி செய்திருந்ததை சட்டென்று உணர்ந்தான். துரியோதனனின் மீது கொண்ட நன்றி உணர்ச்சியின் காரணமாக, இந்த ஐவரையும் வெறுக்கவேண்டும் என்று அவனுக்குள் ஏதோ ஒரு புள்ளியில் அவன் நம்பினான். அவனது இதயத்தில் வெறுப்பு இல்லாதபோதும், பெருமுயற்சி செய்து எந்த நேரமும் வெறுப்பை வளர்த்து, வேறு யாரை விடவும் மிகக் கீழ்த்தரமாக அதை வெளிப்படுத்தினான். சகுனி கீழ்த்தரமான ஒரு விஷயத்தைக் கூறினால், அடுத்த கீழ்த்தரமான விஷயத்தைக் கர்ணன் கூறுவான். அதோடு அவன் நிற்க மாட்டான். ஏனென்றால், துரியோதனன் அவனுக்குச் செய்திருந்தவைகளுக்காக, அவனுடைய விசுவாசத்தையும், நன்றியுணர்ச்சியையும் நிரூபிக்க முயற்சித்து, எப்போதும் அவன் தனது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்தான். அவன் செய்வது அனைத்தும் தவறு என்று அவனுக்குள் ஆழமாக எங்கோ அவன் அறிந்திருந்தான், ஆனால் அதைத் தொடர்ந்து செய்யும் அளவுக்கு அவனது விசுவாசம் மிகவும் வலிமையாக இருந்தது. அவன் அற்புதமானவன், ஆனால் அவன் தொடர்ந்து தவறுகள் செய்தான். நம் அனைவர் வாழ்க்கையும் அந்த விதமாகத்தான் இருக்கிறது – நாம் தவறான ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அதிலிருந்து மீள்வதற்கு பத்து வருடங்கள் ஆகிறது, இல்லையா? கர்ணன் ஒருபோதும் மீளவில்லை, ஏனென்றால் அவன் மிக அதிகமான தவறுகளை செய்துவிட்டான்.

கர்ணன் நல்லவனா, கெட்டவனா?

Karna in his final moments kurukshetra war
அர்ஜுனனின் அம்பினால் கர்ணன் மரணத்தைச் சந்திக்கிறான்

படைப்பானது, நல்லவன், கெட்டவன் என்ற தீர்ப்புகளை உருவாக்குவதில்லை. சமூக சூழல்கள்தான் மனிதர்களை நல்லவர் என்றும் தீயவர் என்றும் தீர்ப்பு கூற முயல்கிறது. தனிமனிதர்கள்தான் உங்களை நல்லவர் என்றும் தீயவர் என்றும் தீர்மானிக்க முயற்சிக்கின்றனர். படைப்பு ஒருபோதும் தீர்மானிப்பதில்லை. ஏனென்றால், ஒரு விஷயம் நல்லது, மற்றொன்று கெட்டது என்று எங்கும் எழுதப்படவில்லை. அது என்னவென்றால், நீங்கள் சரியான விஷயங்களைச் செய்தால், சரியான விளைவுகள் உங்களுக்கு நிகழ்கின்றன. நீங்கள் சரியான விஷயங்களைச் செய்யவில்லை என்றால், சரியான விஷயங்கள் உங்களுக்கு நிகழ்வதில்லை. அது மிகச்சரியான நியாயம் என்று நான் நினைக்கிறேன். கர்ணனின் அபிமானிகள், அவன் அவ்வளவு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டது நியாயமற்றது என்று நினைக்கின்றனர். அது மிகச் சரியான நியாயம் என்று நான் நினைக்கிறேன். சமூகம் நியாயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் படைப்பு மிகத் துல்லியமான நியாயத்துடன் இருக்கிறது – நீங்கள் சரியான விஷயங்களைச் செய்தால் தவிர, சரியான விஷயங்கள் உங்களுக்கு நிகழாது. படைப்பு இப்படி இல்லையென்றால், சரியான விஷயங்களைச் செய்வதற்கோ அல்லது மனித புத்திசாலித்தனத்துக்கோ மதிப்பு இருக்காது. உங்களால் தவறான விஷயங்களைச் செய்யமுடிந்து, அப்போதும் உங்களுக்குச் சரியான விஷயங்கள் நிகழ்ந்தால், நமது வாழ்க்கையில் நாம் பெரிதும் மதிக்கும் எதுவும் மதிப்பு மிக்கதாக இருக்காது. வாழ்க்கை அப்படிச் செயல்படுவதில்லை.