"கடமையை செய். பலனை இறைவன் கையில் தந்துவிடு" என்கிறது பகவத்கீதை. ஒரு வேலையை செய்யும்போது அதன் பலனை எதிர்பார்ப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லையா? இப்படிக் கேட்பதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. பிறகு ஏன் கிருஷ்ணர் அப்படிச் சொன்னார்?! இதனை சத்குருவிடம் கேட்டறிவோம்!

சத்குரு:

பகவத்கீதை அப்படிச் சொல்லவில்லை. அது யாரோ முட்டாள்தனமான அறிஞரின் இடைச்செருகல். கிருஷ்ணர் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தால் கடமையைப் பற்றி பேசுபவர் போல் உங்களுக்கு தோன்றுகிறதா? அவர் தர்மம் என்று சொன்னதை கடமை என்று பொருள் கொடுத்து விட்டார்கள். கடமையை பற்றி நிச்சயமாக கிருஷ்ணர் பேசியிருக்க முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆனந்தமான நிலையில் செயல்படும்போது, முடிவு உங்களைப் பாதிக்காது; ஆனால் முழுத் திறமையை வெளிப்படுத்தி செயல்பட முடியும்.

அவர் swadharma என்று சொன்னார். அப்படியென்றால் 'சுய தர்மம்' என்று பொருள். அவர் இந்து தர்மத்தைப் பற்றி பேசவில்லை. ஏனெனில் அவர் காலத்தில் இந்து தர்மம் என்று எதுவும் இல்லை. இப்போதுதான் 'இந்து' என்பது மதமாக அடையாளம் காணப்படுகிறது. அந்த காலத்தில் இந்து என்பது ஒரு கலாச்சார அடையாளம் மட்டுமே. எனவே, கிருஷ்ணர் சுயதர்மம் என்று சொல்லும்போது உங்கள் மதத்தைப் பற்றி பேசவில்லை, உங்கள் இயல்பான தன்மை பற்றிதான் பேசுகிறார். உங்கள் இயல்பான தன்மை என்ன? ஆனந்தம்தான். அதை நீங்கள் விட்டுவிடக்கூடாது. உங்களுக்கு என்ன நிகழ்ந்தாலும் உங்கள் மனிதத்தன்மையான ஆனந்தத்தை விட்டுவிடக்கூடாது என்கிறார்.

நானும் இதைத்தான் எப்போதும் சொல்கிறேன். மகிழ்ச்சியாக, ஆனந்தமாக 'ஒரு மனிதர் போன்று இருங்கள்' என்று சொல்கிறேன். குறைந்தபட்சம், ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது ஆனந்தமாக, அதாவது மனிதராக இருக்கப் பாருங்கள் என்று சொல்கிறேன். 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது மனிதராக இருங்கள் என்று பிறர் வந்து உங்களிடம் சொல்வது மிகவும் கொடுமையான விஷயம்தான். நீங்கள் மனிதர் என்றால் 24 மணி நேரமும் அப்படித்தானே இருக்க வேண்டும்! இதை வேறொருவர் வந்து நினைவு படுத்த வேண்டுமா என்ன?

எனவே, உங்களுக்கு போதனை தருவதில் கிருஷ்ணருக்கு எந்த விருப்பமும் கிடையாது. உங்கள் தன்மை எதுவோ அதன்படி வாழுங்கள் என்கிறார். உங்கள் மனம் கூட மற்றவர்களால் நிரப்பப்பட்ட குப்பைதான். எனவே அது சொல்வதையும் கேட்க வேண்டாம். உங்கள் தன்மைபடி மட்டுமே வாழுங்கள் என்கிறார்.

எனவே, நீங்கள் ஆனந்தத்துடன் செயல் செய்யும்போது பலன் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? பலன் என்னவாக இருந்தால்தான் என்ன? உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். விளையாடும்போதே மிகவும் ஆனந்தமாக உள்ளது. இப்போது விளையாட்டில் வென்றால் என்ன? தோற்றால் என்ன? நீங்கள் ஒரு துயர் நிறைந்த மனிதராக இருந்தால், விளையாட்டின் முடிவு உங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கும். ஆனந்தமான மனிதராக இருந்தால், இயல்பாகவே உங்களுக்கு விளையாட்டின் முடிவு முக்கியமாக இருக்காது.

கிருஷ்ணர் உங்களுக்கு போதனை செய்யவில்லை. உங்கள் வாழ்க்கையின் தன்மையை, நீங்கள் யார் என்பதன் தன்மையை விவரிக்கிறார். யாரோ முட்டாள் அறிஞர்கள், கிருஷ்ணர் சொன்னதிலிருந்து ஒரு போதனையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவ்வளவுதான். கிருஷ்ணரைப் பார்த்தால், ‘முடிவுக்கு கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்பவர் போலவா தெரிகிறது? போரின் முடிவு இப்படித்தான் அமைய வேண்டும் என்பதற்காக பலவற்றையும் அவர் செய்தார். அப்படி இருக்கும்போது முடிவைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுங்கள் என்று அவர் சொல்வாரா?

கிருஷ்ணர், தான் விரும்பிய முடிவுகளை அடைய மிகவும் உறுதியோடு செயல்பட்டவர். சில நேரங்களில், எதைச் செய்தாவது தான் விரும்பிய முடிவுகளை அடைய செயல்பட்டவர். அந்த செயல்உறுதியை அவர் வாழ்க்கை முழுதும் பார்க்க முடியும். 'தனக்கும், தன்னைச் சுற்றி இருப்பவருக்குமான முடிவு இப்படி மட்டுமே இருக்க வேண்டும்' என்று நிர்ணயம் செய்தார். அது அவருக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. எனவேதான் அந்த முடிவை அடைவதற்கு தீவிரமாக செயல்பட்டார். ஆனால் ஆனந்தமாக செயல்பட்டார். அதைத்தான் அவர், ஆனந்தமாக செயல்படும்போது முடிவு உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது என்று சொன்னார்.

அவர் என்ன விருப்பப்பட்டாரோ அது இறுதியில் நடக்கவில்லை. போர் வேண்டாம் என நினைத்தார். ஆனால் போர் நடந்தது. அரசியலில் ஆன்மீக செயல்முறையை புகுத்த நினைத்தார். அவருடைய முழு முயற்சி அதுவாகத்தான் இருந்தது. ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. இருதரப்பினரும் போரிட்டு, ஒருவரை ஒருவர் வீழ்த்திக் கொண்டனர். ஆனால், கிருஷ்ணர் ஆனந்தமாகத்தான் இறந்தார். அவர் சொன்னதெல்லாம் இதுதான், 'ஆனந்தமான நிலையில் செயல்படும்போது, முடிவு உங்களைப் பாதிக்காது; ஆனால் முழுத் திறமையை வெளிப்படுத்தி செயல்பட முடியும்'. ஒரு மனிதன் அதிகபட்சம் அதைத்தானே செய்ய முடியும்?

எனவே வெற்றியா தோல்வியா என்பதல்ல கேள்வி. உங்கள் முழு திறனையும் உபயோகித்து ஆனந்தமாக செயல்பட்டீர்களா இல்லையா என்பதுதான் கேள்வி. ஏனென்றால், உங்களால் எதைச் செய்ய முடியாதோ, அதை உங்கள் வாழ்க்கையில் செய்யாமல் போனால் பிரச்சனை இல்லை. ஆனால் உங்களால் செய்ய முடிந்ததைக் கூட செய்யாமல் போனால், நீங்கள் ஒரு பேரழிவு போன்றவர். எனவே கிருஷ்ணர் சொன்னது 'நீங்கள் ஒரு பேரழிவாக இருக்கவேண்டாம்'! என்பதுதான்.