தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைகளில் இந்தியா அதிவேகமாக வளரும்போதிலும், நீர்வளமும் மண்வளமும் குறைந்து வருவதால், பேரழிவு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதை சத்குரு விளக்குகிறார்.

சத்குரு : பல அறிவியல் சாதனைகள் படைத்து, பல அற்புதமான தொழில்நிறுவனங்கள் நம் தேசத்தில் வளர்ந்து வருகின்றன. ஆனால், இந்த சாதனைகள் அனைத்திலும் மிகப்பெரிய சாதனை, நம் விவசாயிகள் எவ்வித தொழில்நுட்ப வசதியும் கட்டமைப்பும் இல்லாமலேயே 130 கோடி மக்களுக்கு உணவு விளைவித்துத் தருவதுதான்.

நீங்கள் என்ன பயிர் செய்தாலும், உதாரணத்திற்கு நீங்கள் பத்து டன் கரும்பு விளைச்சல் எடுத்தால், பத்து டன் மண்ணை எடுக்கிறீர்கள். அதை ஏதோவொரு விதத்தில் ஈடுசெய்ய வேண்டும். ஆனால், இப்போது நாம் செய்யும் விவசாயத்தில் மண்ணுக்கு எதுவும் திரும்பி வருவதில்லை.

துரதிர்ஷ்டவசமாக, நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் பிள்ளைகள் பட்டினி கிடக்க, தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பும் அவலநிலையே நிலவுகிறது. இது என்னை வெட்கத்தில் தலைகுனிய வைக்கிறது. இது நிகழ பல காரணங்கள் உள்ளன. ஆனால், நம் நீர்வளமும் மண்வளமும் குன்றிவருவதே இதில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நம்மிடம் மிக வளமான மண் இருந்ததாலேயே இந்த தேசத்து மக்களுக்கு நம்மால் உணவு விளைவிக்க முடிந்தது. வருடம் முழுவதும் நாம் விரும்பியவை அனைத்தையும் நம் மண்ணில் விளைவித்தோம். ஆனால், துரிதமாக நம் மண்வளம் குறைந்து வருகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

நீங்கள் என்ன பயிர் செய்தாலும், உதாரணத்திற்கு நீங்கள் பத்து டன் கரும்பு விளைச்சல் எடுத்தால், பத்து டன் மண்ணை எடுக்கிறீர்கள். அதை ஏதோவொரு விதத்தில் ஈடுசெய்ய வேண்டும். ஆனால், இப்போது நாம் செய்யும் விவசாயத்தில் மண்ணுக்கு எதுவும் திரும்பி வருவதில்லை. ஏனென்றால் மண்வளம் திரும்பி வருவதற்கான ஒரே வழி, மரங்களும் கால்நடைக் கழிவுகளும்தான். ஆனால் நம் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. அது போதாது என்று நம் கால்நடைகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமது செய்கிறோம்.

விலங்குகளும் மரங்களும் இல்லாமல் மண்வளத்தை பாதுகாக்க வழியேயில்லை. கடந்த சில ஆண்டுகளாக நாம் இதற்கு துளியும் கவனம் கொடுக்காமல் இருந்துள்ளதால், தேசத்தின் 25% நிலம் பாலைவனமாகும் நிலையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம்.

இன்னொரு அம்சம், கோடான கோடி வருடங்களாக வற்றாமல் ஓடி நமக்கு நீராதாரமாக இருந்த நம் நதிகள், ஒரே தலைமுறையில் பருவமழை வந்தால் மட்டுமே ஓடும் அளவிற்கு வேகமாக வற்றி வருகின்றன. இப்போதே வருடத்தில் மூன்று மாதங்களுக்கு காவிரி சமுத்திரத்தை அடைவதில்லை.

வற்றிவரும் காவிரிக்கு இரண்டு மாநிலங்கள் போர்புரியும் நிலை நிலவுகிறது. கிருஷ்ணா நதி வருடத்தில் நான்கைந்து மாதங்களுக்கு சமுத்திரத்தை அடைவதில்லை. தேசத்தின் எல்லா பகுதிகளிலும் இது நடக்கிறது. மற்ற எல்லா நிலையின்மைகளையும் நாம் சமாளித்துவிடலாம். ஆனால் நீராதாரம் இல்லாமலும், நம் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்ய முடியாமலும் போய்விட்டால், அது பேரழிவை ஏற்படுத்திவிடும்.

இதற்கு மிக எளிமையான தீர்வு, ஒவ்வொரு நதியின் இருபுறமும் ஒரு கிலோமீட்டருக்கு மரப்போர்வை உருவாக்கவேண்டும். மழை வந்தால், மண் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொண்டு, வருடம் முழுவதும் நதியில் நீர்வரத்திற்கு வழிவகை செய்யும். நீர் இருப்பதால் மரங்கள் இருக்கின்றன என்று மக்கள் நினைக்கிறார்கள்.

அப்படியல்ல, மரங்கள் இருப்பதால்தான் நீர் இருக்கிறது. அதனால் அரசு நிலங்களில் மரங்கள் நட்டு காடுகள் வளர்க்கவேண்டும். விவசாய நிலங்களில், தன் பிழைப்பிற்கே போராடிக்கொண்டு இருக்கும் ஏழை விவசாயியிடம் பூமியைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்பது நியாயமாக இருக்காது. அதற்கு பொருளாதார நன்மை தருவதோடு சுற்றுச்சூழலுக்கும் தேவையான நன்மையைச் செய்யும் ஒரு திட்டமுள்ளது. இதை முறையாக செயல்படுத்தினால், ஐந்தாறு வருடங்களில் விவசாயியின் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும்.

இதற்கு மிக எளிமையான தீர்வு, ஒவ்வொரு நதியின் இருபுறமும் ஒரு கிலோமீட்டருக்கு மரப்போர்வை உருவாக்கவேண்டும். மழை வந்தால், மண் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொண்டு, வருடம் முழுவதும் நதியில் நீர்வரத்திற்கு வழிவகை செய்யும்.

சாதாரண பயிர்களிலிருந்து வேளாண்காடு வளர்ப்பு முறைக்கு மாறுவதற்கு, நதிக்கரைகளில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு மானியம் வழங்கவேண்டும். மரப்போர்வை உருவாக்கி, விலங்குகளையும் விலங்குக் கழிவுகளையும் கொண்டு வந்தால், மண்வளமும் நீர்வளமும் புதுப்பிக்கப்படும்.

இதை நிகழ்த்துவதற்கு, நாம் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க ஒரு செயல்திட்ட வரைவை தயார்செய்துகொண்டு இருக்கிறோம். அதோடு, "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்" விழிப்புணர்வு இயக்கம் மூலம், செப்டம்பர் 3ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நதிகள் மீட்பு பயணம் மேற்கொள்கிறோம்.

இந்த பயணத்தில், குமரி முதல் இமயம் வரை நானே நேரடியாக வண்டி ஓட்டிச்சென்று, நம் தேசத்து நதிகள் வற்றிவருவதைப் பற்றிய விழிப்புணர்வினை உருவாக்கப் போகிறேன். 16 மாநிலங்களின் ஊடே செல்லும் இப்பயணத்திற்கிடையே, பிரம்மாண்டமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடக்கும். பல மாநில முதல்வர்களும் ஆளுநர்களும் தங்கள் பங்கேற்பினை உறுதி செய்துள்ளனர். தில்லியில் இந்த செயல்திட்ட வரைவை அரசிடம் சமர்பிப்போம்.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் இயன்ற விதங்களில் எல்லாம் இதில் கலந்துகொள்ள வேண்டுமென நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அனைவரையும் என்று நான் சொல்லும்போது, தண்ணீர் பருகும் அனைவரையும் சொல்கிறேன். நதிகளை ஓடச்செய்து, நம் நிலத்தை வளமாய் விட்டுச் செல்வதுதான், வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய சிறந்த பரிசாய் இருக்கும்.

ஆசிரியர் குறிப்பு : காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள்! #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி : 80009 80009