நம் தேசத்தின் விதியை மக்கள் தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்
இந்தியா தனது 79-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், மறுக்க முடியாத ஒரு புத்துணர்வு எங்கும் பரவியுள்ளது. மக்களிடையே பெருகிவரும் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் தெளிவாக உணர முடிகிறது. இந்த தேசத்தின் உயிர் மலர வேண்டுமென்றால், இந்தியர்கள் தம் நாட்டின் தலைவிதியைத் தாமே முழுமையாக நிர்ணயிக்க நாம் அனுமதிக்க வேண்டும்.

நமக்கு தேவையான சுதந்திரம் எது? - சத்குரு
சத்குரு:சுதந்திரத்தின் 79-ஆம் வருட நிகழ்வை இந்தியா கொண்டாடும் இந்த தருணத்தில் - விடுதலை, இறையாண்மை எனும் சொற்களின் அர்த்தத்தை கூர்ந்து கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
தற்சமயம் பலவகையான சவால்கள் இருக்கின்றன - நிலையின்றி மாறிக்கொண்டிருக்கும் உலகப் பொருளாதார சூழல் முதல் அரசியல்ரீதியாக தனிமைப்படுவது வரை; மதம், ஜாதி, மாநிலம் ஆகிய அடையாளங்களை சுற்றி நிகழும் உள்நாட்டு பிரச்சனைகள் முதல் இளைஞர்களுக்குள் அதிகரித்து வரும் மனநல பிரச்சனைகள் வரை - இப்படி பலவற்றை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படி இருந்தும், முதுகெலும்பு கொண்ட எந்தவொரு தேசத்திற்கும், ஊக்கமும் மதிநுட்பமும் கொண்ட எந்தவொரு தலைமைக்கும், சவால்கள் என்பவை ஒருபோதும் பின்னடைவாக இருப்பதில்லை. அவை வளர்ச்சிக்கான படிக்கல்லாகவே அமைகின்றன. இன்றைய சூழலில் இருக்கும் உற்சாகம் மறுக்க முடியாதது - வெற்றி அடையும் நம்பிக்கையும், உறுதியான திண்ணமும் மக்களுக்குள் நன்றாகவே தென்படுகிறது.
தாராளமயமாக்கும் நேரம் மட்டுமல்ல, இது கட்டுகளை அவிழ்த்து விடுவிக்கும் நேரமும் ஆகும். சுதந்திரமான தொழில் முனைவு பெருகுவதுதான் இப்போதைய தேவை - தைரியமான, உறுதியான, சாகசமான தொழில் முனைவோர்கள் அவசியம்.
Subscribe
கல்வி, தொழில்துறை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு ஆகியவற்றை அரசாங்கத்தின் பிடிகளில் இருந்து விடுவித்து, தனிநபர் தொழில்முனைவுகளை செழிக்கச் செய்யவேண்டிய நேரம் இது. மனிதர்களின் உள்ளார்ந்த அறிவுத்திறன் தற்போதைய உச்சவரம்புகள் அனைத்தையும் தகர்த்து முன்னேறி வெற்றி அடையும் சூழல் உருவாக வேண்டும்.
தனியார்துறை வலிமை பெற வேண்டுமென்றால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நம்முடன் தொழில் செய்ய மதிப்பும் நம்பிக்கையும் வர வேண்டுமென்றால் - இங்கு தொழில் செய்வதற்கும், அந்நிய முதலீடு வருவதற்கும் உகந்த சூழலை நாம் அவசர கதியில் உருவாக்குவது அவசியம்.
வெறும் அன்றாட பிழைப்பிற்கான நோக்கம் மட்டுமே கொண்டிருந்து சிறியவர்களாக குறுகிய வட்டத்தில் அடைந்து கிடப்பது, முந்தைய அடிமை மனநிலையின் நீட்சியாகவே இருந்திருக்கிறது - இந்த மனநிலையை உதறித் தள்ளுவதற்கான நேரம் இது. நம் தேசத்தை கட்டமைக்கும் உன்னத பணியில் நம் மக்கள் பங்களிக்க வேண்டும் - சாலைகள் அமைப்பது, பாலங்கள் கட்டுவது, பல்கலைக்கழகங்கள் உருவாக்குவது, அனைத்து விதமான உள்கட்டமைப்புகளையும் நிறுவுவது போன்ற பணிகளில் நம் மக்கள் ஈடுபட ஊக்கமளிக்க வேண்டும். இது போன்ற பொறுப்புகள் அரசாங்கத்திடம் மட்டுமே இருக்க வேண்டியதில்லை.
நாட்டு மக்கள் பெரிதாக கனவு காணும்போது, தம் வாழ்வையும் தேசத்தையும் கட்டமைக்க அவர்கள் முயலும்போது, சில திடீர் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். சிறிய வரைமுறைகள் சில மீறப்பட வாய்ப்புள்ளது, பழங்காலத்து விதிகள் சில வளைக்கப்பட வாய்ப்புள்ளது. காலாவதியாகிப் போன சில வரித்துறை சட்டங்களும், நிர்வாக முறைகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டியிருக்கலாம். கலங்கிக் குழம்பும் சூழல் போல் தோன்றும் இந்த நிலை பெரிய மாற்றங்களின் இன்றியமையாத அங்கம்தான், அது பரவாயில்லை.
அத்தியாவசியமான சில அடிப்படை விதிகளை நிறுவி, தனிநபர்கள் அதை கடைப்பிடிப்பார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைப்போமாக. முற்றிலும் மாறுபட்ட புதுமுயற்சிகள் நிர்வாக முறைகளின் இறுக்கங்களால் தடைப்பட்டுப் போகக்கூடாது. வீரியமான விடுதலையான தேசம் ஒன்றை உருவாக்க ஒரே வழி இதுதான்.
நம் பிரதான பலமாக இருப்பது தகவல் தொழில்நுட்பம். செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) துறையில் மிக வேகமாக உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்து வருகிறோம். நமக்கு இருக்கும் இந்த சாதகமான நிலையை, வெளியேயுள்ள உள்நோக்கம் கொண்ட சக்திகள் குலைத்திட நாம் அனுமதிக்கக் கூடாது.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சென்டர் எனப்படும் தகவல் மையங்களை பெரும் அளவில் சார்ந்திருக்கிறது - இந்த மையங்களுக்கு வலுவான கட்டமைப்புகள் அவசியம் - அதாவது, கம்ப்யூட்டர் ஹார்டுவேர், ஸ்டோரேஜ் மற்றும் நெட்வொர்க்கிங் வசதிகள் அவசியம். இந்தக் காரணத்தால் நாம் திறன்மிக்க ‘பவர் க்ரிட்’ எனப்படும் மின் விநியோக கட்டமைப்புகளை அமைப்பதில் முதலீடு செய்யவேண்டும்.
அரசு மின் வசதியை மட்டும் நம்பியிருக்க முடியாது. ‘மினி நியூக்ளியர் ஸ்டேஷன்’ எனப்படும் சிறு அணு ஆலைகளை வாங்குவதன் மூலம், வலுவான மின் உற்பத்தி மையங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை நாம் சமாளிக்க முடியும். இதன்மூலம் நம் சுயசார்பு நிலையை தக்கவைத்து, நம் ஆற்றலையும் திறமையையும் அதிகரித்து, தொழில்நுட்பத் துறையில் உலகளவில் மாபெரும் சக்தியாக மதிக்கப்படுவோம்.
கல்வி என்பது மனிதர்களுக்குள் மகத்தான மாற்றத்தை கொண்டுவரவில்லை என்றால், அதற்கு அர்த்தமே இல்லை. அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்னும் சாதக நிலையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், நம் இளைஞர்களுக்குள் ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ஆற்றலை சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும் - அவர்கள் தம் சுயசிந்தனை திறனை தொலைத்து, அவர்களின் ஆர்வம் குன்றுவதற்கு முன்பாகவே இதை செய்ய வேண்டும்.
புத்துயிரூட்டப்பட்ட கல்வி முறையே இன்றைய உடனடித் தேவை. அதாவது, கல்வித்துறையில் அரசாங்கத்தின் வலுவான தலையீடு இல்லாமல் - உறுதியான உடலையும், தெளிவும் கூர்மையும் மிக்க மனத்தையும் உருவாக்கும் நோக்கம் கொண்ட கல்வியாக இருக்க வேண்டும்.
சர்வதேச உறவுகளைப் பொருத்தவரை, ஆதிக்க உணர்வு கொண்ட தேசங்களின் கையோங்கும் முயற்சிகளை எதிர்த்து சமாளிக்கும் விதத்தில், புவியியல் பொருத்தம் கொண்ட நாடுகளுடன் நம் நல்லுறவை ஆழப்படுத்தும் நேரம் இது. தேசங்களுக்கு இடையே கதவுகள் திறக்கும் போது, பயனடைபவர்கள் மக்கள்தான். நமக்கு இன்னும் அதிகமான சுவர்கள் தேவையில்லை. நமக்கு தேவை இன்னும் அதிகமான ஜன்னல் கதவுகள்தான்.
அனைத்திற்கும் மேலாக, தொன்றுதொட்டு தழைக்கும் நமது ஆன்மீக கலாச்சாரம், படைப்பின் மூலத்தை ஆராய்ந்து உணர்வதற்கான அற்புத அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. சொர்க்கத்துக்குப் போகும் நுழைவுச்சீட்டை விற்றுப் பிழைப்பவர்களாக நாம் ஒருபோதும் வாழ்க்கையை ஓட்டியதில்லை. மனித உயிர் பற்றி, இது இயங்கும் விதம் பற்றி மிக ஆழமான, நுட்பமான புரிதலுடன் உணர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறோம்.
எனவே, நம்பிக்கை முறைகளைச் சார்ந்து மனிதர்களை பிளவுபடுத்துவது இப்போதே நின்றாக வேண்டும். நம் உள்நிலையை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம், நாம் எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. ஏதேதோ நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இல்லாமல், தேடலில் வாழ்பவர்களாக இருப்பதுதான் நம் கலாச்சாரம், அதுவே நமது முதன்மையான அடையாளமாக இருந்திருக்கிறது. போதனைகளால் கடிவாளம் கட்டப்பட்ட, பிளவு மனப்பான்மை கொண்ட குழந்தைகளை உற்பத்தி செய்வது நம் நோக்கமாக ஒருபோதும் இருக்கக்கூடாது. சுதந்திரமான, உயிர்நோக்கமான குழந்தைகளை உருவாக்குவதே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
ஒரு குழந்தையை நன்கு வளர்க்க, பாதுகாப்பு முறைகள் அவசியம்தான். ஆனால் இனியும் இது கைக்குழந்தையாக இருக்கும் தேசமாக இல்லை. வளர்ந்து துடிப்புடன் துள்ளிக்கொண்டிருக்கும் இளமைப்பருவத்தில் இருக்கிறது. சாகசங்களுக்கு அஞ்சாமல் தயாராக இருக்கிறது. புதிய சிந்தனைகளுக்கு, புதிய நிர்வாக முறைகளுக்கு, புதிய நிறுவன கட்டமைப்புகளுக்குத் தயாராக இருக்கிறது.
சில பாதுகாப்பு முயற்சிகள் கடந்த காலத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கலாம் என்றாலும், வீரியமில்லாத சோசியலிச முறைகளுக்கு நாம் ஆளாக்கப்பட்டு இருந்திருக்கிறோம் - அதில் சவடால் பேச்சுதான் அதிகமே தவிர, நிஜமான செயலாக்கம் என்னவோ குறைவுதான். மிகையான பாதுகாப்பு தந்து பிடித்து வைத்திருந்த பெற்றோர், அவர்களின் பிடியை தளர்த்தி குழந்தையை விடுவிக்கும் நேரம் வந்துவிட்டது. சவால் என்பது ஒரு தடைக்கல் அல்ல, அது ஒரு ஊக்க சக்தியாகும், ஒரு உந்து சக்தியாகும்.
இந்த தேசத்தின் உயிர் மலரவேண்டும் என்றால், இந்தியர்கள் தம் தேசத்தின் தலையெழுத்தை தம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். கட்டுகளைக் களைந்து விடுபடும் நேரம் வந்துவிட்டது. நாம் இதனை நிகழச் செய்வோமாக!