வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, திசை தெரியாமல் திண்டாடும் மக்களுக்காக சொல்லப்பட்ட பழமொழி, "திக்கற்றவருக்குத் தெய்வமே துணை" என்பது. இதைப் பற்றிய விளக்கத்தை சத்குருவிடம் கேட்டபோது...

சத்குரு:

இதைப் போன்ற வாக்கியங்கள் ஏழைகளுக்கும், சமூகத்தில் எல்லாவற்றையும் தொலைத்தவர்களுக்கும் பெரும் நம்பிக்கை ஊட்டப் பிறந்தன. தெய்வம் துணையிருக்கும் என்ற நம்பிக்கை மனரீதியாக அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும். அதே சமயம், இந்த நம்பிக்கை பலரை முடமாக்கி, சோம்பேறிகளாக்கி நிறைய ஏழைகளை உற்பத்தி செய்துவிட்டது.

உங்களை முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு எது வந்தாலும் குறைப்பட்டுக் கொள்ளாமல், அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா?

நம்பினோர் கைவிடப்படார் என்பது பல தலைமுறைகளாக நம்பப்பட்டு வரப்படும் ஒரு வாசகம். தனிப்பட்ட நபர்களில் தொடங்கி, ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை, ஏன் இந்த உலகத்தையே கடவுள் கைவிடாமல் காப்பாற்றுவார் என்று சும்மா நம்பிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தியாவில் அது எவ்வளவு தூரம் தோற்றப் போனது என்று கண்கூடாகத் தெரியவில்லையா?

தங்களைக் கவனித்துக் கொள்பவர்களைத்தான் கடவுளும் கவனித்துக் கொள்வார். கடவுளிடம் இறைஞ்சாமல், தங்களை நம்பி வாழத் தயாராக இருப்பவர்களிடம்தான் கடவுளுக்கும் நம்பிக்கை வரும்.

தெய்வம் என்று நீங்கள் குறிப்பிடுவது படைப்பின் மூலம்.

உங்களுக்கு ஓர் அற்புதமான உலகைப் படைத்துக் கொடுத்திருக்கிறாரே, போதாதா? அதைப் பராமரித்து கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் அவர் தலையில் கட்டிவிட்டு, நீங்கள் முட்டாள்தனமாக அதை சிதைத்துக் கொண்டிருந்தால், என்ன அர்த்தம்?

உண்மையாகச் சொல்லுங்கள்; உங்களை முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு எது வந்தாலும் குறைப்பட்டுக் கொள்ளாமல், அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா?

படைப்பின் மூலத்தை சும்மா நம்பிக் கொண்டிருந்தால் பலனில்லை. அதனுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்ற தேடுதலிலாவது அர்த்தமிருக்கிறது. தொடர்பு கொண்டால் வாழ்க்கை பலமடங்கு மேன்மையடையும்.

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!