மஹாபாரதம் பகுதி 5 : சாந்தனு -கங்கையை சந்திக்கிறான்
கடந்த பகுதியில் சகுந்தலை, துஷ்யந்தனின் சந்திப்பு மற்றும் பரதனின் பிறப்பு பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் பரதனின் ஞானம் பற்றியும் அவரது குலத்தோன்றலான சாந்தனு கங்கையை சந்திப்பது பற்றியும் விளக்குகிறார் சத்குரு.
சத்குரு:
பரத மன்னனுக்கு பல மகன்கள் வாரிசு உரிமையுடையவர்களாக இருந்தாலும், அவர்கள் வளர்ந்தபின் "இவர்களால் என் குடிமக்களுக்கு சிறந்த மன்னனாக இருக்க முடியாது" என அறிவித்தார். அதிகாரத்தில் இருப்பவர்களின் சொந்தபந்தமாக இருப்பதால் மட்டுமே ஒருவர் அரசாளும் தகுதியை அடைந்துவிட முடியாது என்று ஒரு மன்னர் தன் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துவது முதல்முறையாக நடந்தது. நீங்கள் அரசனுக்கு மகனாக பிறந்ததால் மட்டுமே நீங்களும் அரசனாவது அவசியம் இல்லைதானே. இந்த தெளிவை பரதர் கொண்டு வந்தார். இதனால் பரதரின் மீது இன்னும் மதிப்பு ஏற்பட்டது. சமநிலையான மனம், பாரபட்சமற்ற தன்மை, குடிமக்களில் தன்னையும் ஒருவனாக பாவிப்பது என எல்லாமாக சேர்ந்து இந்த தேசமே அவர் பெயரால் 'பாரததேசம்' என்று புகழ்பெற்றது.
Subscribe
விததா என்ற ஒரு இளைஞனை கண்டுபிடித்தார் பரதர். பிரகஸ்பதியின் சகோதரர் மனைவியான மமதாவின் பிள்ளைதான் விததா. ஒரு ஷணம் நிலைதடுமாறிய பிரகஸ்பதி அறிவிழந்து, மமதாவின் மீது தன் ஆளுமையை பிரயோகிக்க, இருவரின் பிள்ளையாக விததா பிறக்கிறான். பரதர் இந்த பிள்ளையை அரசனாக தேர்ந்தெடுக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் சமநிலையுடனும், ஞானத்துடனும் மாபெரும் அரசனாக வாழ்ந்து காட்டுகிறார் விததா. விததாவின் வாரிசுகளில் பதினான்காவது தலைமுறையில் சாந்தனு பிறக்கிறான். நாமும் வேகமாக பயணித்து சாந்தனுவின் கதைக்கு வருகி்றோம்.
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் பாட்டனார் தான் சாந்தனு. அவரது முந்தைய பிறவியில் மகாபிஷேக் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த மகாபிஷேக் தேவலோகம் செல்கிறார். இந்திரனின் அரசவையில் அவர் அமர்ந்திருக்கும்போது, அங்கே வரும் கங்கையின் மேலாடை, விழிப்புணர்வு இல்லாத ஒரு ஷணத்தில் தவறுகிறது. அப்போதைய சரியான நடைமுறை என பின்பற்றப்பட்டு வந்த வழக்கப்படி அனைவரும் தங்கள் பார்வையை வேறுபக்கமாக திருப்பிக் கொள்கிறார்கள். தேவலோகத்திற்கு புதிதாக வந்த மகாபிஷேக் மட்டும் தொடர்ந்து தன் பார்வையை கங்கையின் மீதே பதித்திருக்கும் முறையற்ற செயலை கவனிக்கும் இந்திரன், "நீ தேவலோகத்தில் இருக்கத் தகுதியில்லை.. மீண்டும் பூமிக்கு சென்று நீ மனிதனாக பிறக்கவேண்டும்" என்கிறார். மகாபிஷேக்கின் கவனம் தன் மீது இருப்பதை கங்கையும் ரசிப்பதை கவனித்த இந்திரன், "இது முற்றிலும் சரியில்லாத செயல். உன் மீது கவனம் விழுவதை நீயும் ரசிப்பதாக தெரிகிறது. எனவே நீயும் திரும்பி சென்று மனிதனாக பிறக்கவேண்டும். மனிதனாக இருப்பதால் ஏற்படும் எல்லா வலிகளையும் சுகங்களையும் அனுபவித்து, இந்த கர்வம் அழிந்தபின் மீண்டும் இங்கே திரும்பி வரலாம்" என்கிறார். எனவே சாந்தனு கங்கையை சந்திக்கவேண்டி இருக்கிறது. ஆனால் தனது முந்தைய பிறவி பற்றிய நினைவுகள் எதுவும் இல்லாததால் சாந்தனுவிடம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் கங்கை தன் நினைவுகளை தக்கவைத்துக் கொண்டதுடன் சாந்தனுவையும் தன்பக்கமாக ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். ஆனால் அரசனாக இருந்ததால் ஓரிடத்தில் நிலையாக தங்காமல் எல்லா இடங்களையும் சுற்றி வந்துகொண்டே இருந்தான் சாந்தனு.
வேட்டையாடுவதில் திறமைசாலியான சாந்தனுவுக்கு வேட்டை துவங்கினால் அதிலேயே ஒன்றிவிடுவது வழக்கமாக இருந்ததுடன் பூஜைக்குரிய ஒன்றாகவும் இருந்தது. ஒருமுறை வாரக்கணக்கில் கங்கை நதிக்கரை ஓரமாக வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்த போதும், சாந்தனுவின் கவனம் நதியின் பக்கம் திரும்பவேயில்லை. அரசனாக இருந்ததால் அவனது தாகத்தை கவனித்துகொள்ள, உணவுக்காக என எப்போதும் மக்கள் உடனிருந்தார்கள். ஒருநாள் தாகம் மிகுந்தபோதுதான் தன்னைச் சுற்றிலும் யாரும் இல்லை என்பதையே கவனித்த சாந்தனு, அருகில் நதி இருப்பது நினைவுக்கு வந்து நதியை நோக்கி வந்தார். அந்த ஷணமே கங்கை நதி பெண் உருவில் வெளிப்பட்டாள். சாந்தனு தன் முதல் பார்வையிலேயே கங்கை மீது முழுமையாக காதலில் விழுந்தான். தன்னை மணம் புரிந்துகொள்ள கெஞ்சிய சாந்தனுவிடம் "நான் என்ன செய்தாலும் என்னை எப்போதும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது" என்ற நிபந்தனையுடன் சம்மதித்தாள் கங்கை.
இப்படிப்பட்ட நிபந்தனைகளை பெண்கள் விதிப்பதற்கு வரலாறே இருக்கி்றது. குரு வம்சத்தின் அரசனான புரு, தேவ கன்னிகையான ஊர்வசி மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்ள கேட்கிறான். அப்போது இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறாள் ஊர்வசி. "எனக்கு பிரியமான ஆடுகள் சில இருக்கிறது. அவற்றை எப்போதும் நீ பாதுகாக்க வேண்டும். தேவைப்பட்டால் உன் முழு படைபலத்தை பயன்படுத்தியாவது அவற்றை பாதுகாக்க வேண்டும். இரண்டாவது நிபந்தனை, வேறு யாரும் எந்த காரணத்துக்காகவும் உன்னை ஆடையில்லாமல் பார்க்கக்கூடாது."
ஊர்வசி திரும்பி வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைத்த தேவர்கள், ஊர்வசியும் புருவுமும் அவர்களின் படுக்கையில் இருந்தபோது ஊர்வசியின் ஆடுகளை திருடிச்சென்றனர். "என் ஆடுகளை யாரோ திருடிச்செல்கிறார்கள்" என கூவினாள் ஊர்வசி. திருடர்களை பிடிக்க எழுந்து ஓடினான் புரு. தனக்கான வாய்ப்பு கிடைத்ததை உணர்ந்த இந்திரன் மின்னலை வரவழைத்தான். மொத்த இடமும் மின்னல் ஒளிவெள்ளத்தில் மிதக்க, ஆடைகளின்றி இருந்த புருவின் உருவம் மற்றவர் கண்ணில் பட்டது. "நீ உன் வாக்கை மீறிவிட்டாய்.. இப்போதே நான் கிளம்புகிறேன்" என்ற ஊர்வசி அத்துடன் அங்கிருந்து அகன்றாள்.
காலம் செல்லச்செல்ல குறிப்பிட்ட மாற்றங்களுக்கு பிறகு, ஏற்கமுடியாத மற்றும் ஏற்கக்கூடிய நிபந்தனைகளை ஆணிடம் விதிக்கும் திறனை பெண்கள் இழப்பதை நாம் வரலாற்றில் பார்க்கலாம். மஹாபாரதத்திலேயே, தாய்வழியில் இருந்து எப்படி மெதுவாக ஆணாதிக்கத்திற்கு சமுதாயம் மாறுகிறது என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
நாம் இப்போது மீண்டும் சாந்தனுவை சந்திக்கப் போகிறோம். கங்கையின் மீது கண்மூடித்தனமான காதலில் இருந்த சாந்தனு கங்கை சொன்னதற்கெல்லாம் தலையாட்டினான். எனவே கங்கை சாந்தனுவின் அழகான, அற்புதமான மனைவியாக வாழத் துவங்கி தாய்மையும் அடைந்தாள்.
தொடரும்...
ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடர்! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!