மஹாபாரதம் பகுதி 40: பாண்டவர்களின் அஞ்ஞானவாசம்
பாண்டவர்களும் திரௌபதியும் 12 வருட கால வனவாச வாழ்க்கையைப் பூர்த்தி செய்கிறார்கள். அடுத்ததாக, தங்கள் சுய அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஏதாவது ஒரு நகரில் மக்களோடு மக்களாக ஒரு வருட காலம் வாழ வேண்டும் என்பதே அவர்களுக்கான அடுத்த சவால். இதில் வெற்றி பெறுவதற்காக தங்கள் அடையாளம் மறையும்படி அனைவரும் மாறுவேடம் பூணுகிறார்கள்.
இதுவரை: தன் சகோதரர்கள் உயிர் இழப்பதற்கு காரணமான யட்சனை நேரில் சந்திக்கிறார் யுதிஷ்டிரன். யட்சனின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்து தன் சகோதரர்களின் உயிரை மீட்கிறார்.
பன்னிரண்டு வருடங்களின் முக்கியத்துவம்
கேள்வியாளர்: சத்குரு, பாண்டவர்களுக்கு பன்னிரண்டு வருட வனவாச வாழ்க்கை விதிக்கப்படுகிறது. பன்னிரண்டு வருட காலம் என்பதற்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் ஏதும் இருக்கிறதா?
சத்குரு: ஏன் பன்னிரண்டு வருடங்கள் என்றால், அதுதான் ஒரு சூரிய சுழற்சியின் கால அளவு. ஒரு ஆணுக்குள் குறிப்பிடத்தக்கபடி ஏதாவது நிகழ வேண்டும் என்றால் அதற்கு பன்னிரண்டு வருடகாலம் பிடிக்கிறது. பெண்களுக்கும் இந்த உண்மை பொருந்தும் என்றாலும், அது வெளிப்படுவது சற்றே லேசாக இருக்கும். ஒவ்வொரு பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட சுழற்சியை கடக்கிறது. இதற்கு காரணம் சூரிய சுழற்சியே. உங்கள் உடலமைப்பு, உங்கள் மனம், உங்கள் உணர்ச்சி, உங்கள் சக்தி, உங்கள் வாழ்க்கை சூழ்நிலை என எல்லாவற்றின் மீதும் சூரிய சுழற்சியின் தாக்கம் பலமாக இருக்கிறது. இது பன்னிரண்டு வருடகால அளவில் நிகழ்வதால், மக்களிடம் இதை கவனிக்குமளவு விழிப்புணர்வு இல்லை. என்னுடைய வாழ்க்கையில் அடுத்த பன்னிரண்டு வருட சுழற்சி எப்போது வருகிறது என்பதை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். குறிப்பிடத்தக்க அளவில் ஏதும் நிகழ வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சுழற்சியை சவாரி செய்வது போல வாழ வேண்டும். எனவேதான் எல்லா சாதனாவும் பன்னிரண்டு வருடகாலத்தை சுற்றியே வடிவமைக்கப்பட்டிருந்தது. நீங்கள் ஒரு குருவிடம் சென்றாலும் சரி அல்லது கானகம் சென்றாலும் சரி, அது எப்போதுமே பன்னிரண்டு வருடகால அளவாக இருந்தது.
Subscribe
இன்று, காட்டுக்குள் சென்று வாழ்வதை ஒரு தண்டனையாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள். அது தண்டனையல்ல, கற்றுக்கொள்ளும் செயல்முறை. பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும், பன்னிரண்டு ஆண்டுகளுடன் சேர்த்து இன்னுமொரு ஆண்டும் வழங்கப்பட காரணம், அவர்களுக்கு இது நன்றாக உறைக்கும் படி இருக்கட்டும் என்பதற்காகத்தான். பன்னிரண்டு வருட வனவாசத்திற்கு பிறகு அவர்கள் மேலும் ஒரு வருடகாலம் அஞ்ஞான வாசம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது, அவர்கள் ஏதாவது ஒரு நாகரிகமடைந்த இடத்தில் வாழ வேண்டும், ஆனால் மற்றவர்களுக்கு அவர்கள் யார் என்ற அடையாளம் தெரியக்கூடாது. ஆனால், யார் வேண்டுமானாலும் அவர்களை மிக எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடலாம் என்பது போல இருந்தார்கள். அரச களை தவழும் கம்பீரமான ஐந்து ஆடவர்களுடன் அதிஅழகான ஒரு பெண் - இப்படி தனித்துவமாக தெரிபவர்களை நீங்கள் எப்படி மறைத்து வைப்பீர்கள்? அவர்கள் எங்கே சென்றாலும் தனியாக தெரிந்தார்கள். இதுதான் மிகப்பெரிய சவாலான காலமாக இருந்தது. இந்த ஒரு வருட காலத்தில் அவர்களை யாரும் அடையாளம் கண்டுவிட்டால், மேலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும்.
புதிய அடையாளங்கள் வார்க்கப்படுகிறது
பாண்டவர்களுடன் இருந்த அர்ச்சகர் தௌம்யரும், முனிவர் லோமசாவும் இணைந்து, பாண்டவர்களும் திரௌபதியும் யாராலும் அடையாளம் கண்டுபிடித்து விடாதபடி இந்த கடைசி ஒரு வருட காலத்தை கழிப்பதற்கு ஒரு திட்டம் வகுத்தார்கள். பதின்மூன்றாம் ஆண்டு நெருங்கவே, துரியோதனன் தன் உளவாளிகளை எல்லா தேசங்களுக்கும் முன்னதாகவே அனுப்பி வைத்து, பாண்டவர்கள் எந்த நகருக்குள் நுழைந்தாலும், அவர்களை அந்த கணமே அடையாளம் கண்டுபிடித்துவிட தயாரானான். ஒரு வருட காலத்திற்குள் எப்படியும் தன் உளவாளிகளால் அவர்களை அடையாளம் கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையும் அவனிடம் இருந்தது. பாண்டவர்களும் திரௌபதியும் கானகத்திற்குள்ளேயே தங்கிவிடவும் முடியாது, அவர்கள் ஏதாவது ஒரு நகருக்குள் சென்றே ஆகவேண்டும். மொத்தமே சுமார் இருபது நகரங்கள் மட்டுமே குறிப்பிடத் தகுந்தவையாக, சில ஆயிரம் மக்கள் வாழ்பவையாக இருந்தன. துரியோதனனின் உளவாளிகள் ஒவ்வொரு இராஜ்ஜியத்திற்குள்ளும் புகுந்து எல்லா பக்கமும் பரவி, பாண்டவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
முனிவர்களின் அறிவுரைப்படி, ஐந்து சகோதரர்களும் அரசர் விராடர் ஆட்சி செலுத்திய மத்ஸ்ய தேசம் சென்றார்கள். நகருக்கு அருகில் வந்ததும் பல்வேறு விதங்களில் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டார்கள். யுதிஷ்டிரன் தன்னை ஒரு பிராமணனாக உருமாற்றிக் கொண்டான். பீமன் சமையல் கலைஞராக உருமாறினான். அர்ஜுனன் நபும்சகனாக தன்னை உருமாற்றிக் கொண்டான். அதற்கு பெரிதாக முயற்சி எதுவும் செய்ய வேண்டிய தேவையே ஏற்படவில்லை அர்ஜுனனுக்கு. ஏனென்றால் ஏற்கனவே அவனது உருவம் அப்படி மாறியிருந்தது. ஊர்வசியின் சாபம் இந்த நேரத்துக்கு அவனுக்கு மிக உதவியாக வந்து சேர்ந்தது. அர்ஜுனனின் கம்பீரமான ஆண் உருவம் மாற்றமடைந்து விட்டதால், இப்போது அவன் ஒரு பெண்ணுக்கு உரிய உடைகளை மட்டும் அணிந்து கொண்டால் போதுமானதாக இருந்தது. நகுலன் தன்னை குதிரை லாயத்தை பார்த்துக் கொள்பவராகவும், சகாதேவன் தன்னை ஒரு மாடு மேய்ப்பவர் போலவும் உருமாற்றிக் கொண்டார்கள். ஆனால் திரௌபதியை உருமாற்றுவதுதான் பெரும் சிரமமாக இருந்தது. திரௌபதியின் கம்பீரமான அழகைக் குறைத்து, யாரும் அடையாளம் கண்டறிய முடியாதபடி நகருக்குள் எப்படி அழைத்துச் செல்வது? ஒரு வேலைக்காரியை போல் திரௌபதி உடையணிந்து கொண்டாலும், அந்த ராஜ களையையும், அழகையும் திரௌபதியால் மறைக்க முடியவில்லை. யார் வேண்டுமானாலும் திரௌபதியை அடையாளம் கண்டுபிடித்து விட முடியும் என்று எல்லோருமே பயந்தார்கள். அதோடு, சிறப்பு குணமாக முன்கோபம் வேறு இருந்தது திரௌபதியிடம். இது திரௌபதி தான் என்று மக்கள் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு வேறு யாரிடமும் பொதுவாக பார்க்க முடியாத ஒரு தனி அடையாளம் தெறித்தது அவளது கோபத்தில்.
குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளிக்குள் ஒவ்வொருவராக நகருக்குள் எப்படிச் செல்வது என்பதைப் பற்றி நகருக்கு வெளியே அமர்ந்து பேசி ஒரு திட்டம் வகுத்தார்கள் பாண்டவர்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு வேறு பெயர்களை சூட்டிக்கொள்ள முடிவு செய்தார்கள். யுதிஷ்டிரன் கங்கன் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்; பீமன் பாலவா என்று தன்னை அழைத்துக் கொண்டான்; அர்ஜுனன் பிருஹன்னளை ஆனான்; நகுலன் தாமகிரந்தி என்றும்; சகாதேவன் தந்திரிபாலா என்றும், திரௌபதி சைராந்திரி என்றும் தங்களை அழைத்துக் கொண்டார்கள். இப்படியாக, வேறு பெயர்களோடு, அடையாளங்களோடு ஒவ்வொருவராக அரசவைக்கு வந்து சேர்ந்தார்கள். முதலில் யுதிஷ்டிரன் அரசர் விராடரை சந்தித்து தனது சேவையை வழங்க முன்வந்தான். ஒரு நல்ல தாயம் விளையாடுபவனாக மாறவேண்டும் என்பது யுதிஷ்டிரனின் பெரும் கனவாக இருந்தது. வனவாசத்தின்போது ஒருமுறை யுதிஷ்டிரன் பிரகதஷ்வா என்ற முனிவரை சந்தித்தான். தாயக்கட்டைகளை உருட்டும் போது, யுதிஷ்டிரன் விரும்பும் எண் விழும்படியான ஒரு ரகசிய மந்திரத்தை அவர் உபதேசித்து அருளியிருந்தார். இப்போது அந்த மந்திர சக்தியின் உதவியால், யாரை வேண்டுமானாலும் வென்றுவிட முடியும் என்ற நிலைக்கு முன்னேறி இருந்தான் யுதிஷ்டிரன். அநேகமாக, ஒரு நாள் சகுனியுடன் மோதி வெல்ல வேண்டும் என்ற கனவு கூட அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவன் விராடரின் தேசம் செல்ல வேண்டியிருந்தது. அன்றைய காலகட்டத்தில் தாயம் விளையாடுவது என்பது மக்களுக்கு மிக விருப்பமானதாக இருந்தது. ஏனெனில், அப்போது பெரிதாக வேறு எந்த பொழுதுபோக்கும் இருக்கவில்லை, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதைத் தவிர.
யுதிஷ்டிரனின் தாயம் விளையாடும் திறனைப் பார்த்து அரசர் விராடர் அசந்து போனார். இதுதான் யுதிஷ்டிரனுக்கு மிகச்சிறப்பான மாறுவேடமாக இருந்தது. ஏனென்றால், அவன் எவ்வளவு மோசமான தாயம் விளையாடுவான் என்பது எல்லாப் பக்கமும் பரவியிருந்தது. இப்போது தாயக் கட்டைகளை வைத்துக்கொண்டு அவன் மாயாஜாலம் காட்டுவான் என்பதை யாராலும் கற்பனை கூட செய்ய முடியவில்லை. இத்திறன் அவனுக்கு முன்னமே வாய்த்திருந்தால் தன் இராஜ்ஜியத்தை இழந்திருக்க மாட்டான். யுதிஷ்டிரன் விராடரின் அரசவையில் ஒருவனாக ஐக்கியமானான். யுதிஷ்டிரனின் மதியூகமும், புத்திசாலித்தனமும் அரசர் விராடரைக் கவரவே, அரசரின் ஆலோசகராக உயர்ந்தான் யுதிஷ்டிரன். அரண்மனையின் சமையலறைக்குள் தனக்கான இடத்தை பிடித்தான் பீமன். ஏற்கனவே நல்ல ஒரு சமையல் கலைஞனாக இருந்த பீமனால், அரசவையின் உணவுப் பிரியர்கள் மத்தியில் மிக எளிதாக பிரபலமடைந்து விட முடிந்தது.
இந்திரனின் அமராவதியில் தங்கியிருந்த போது கற்றுக்கொண்டிருந்த கலைகள் இப்போது ஒரு நாட்டியக் கலைஞராகவும், பாடகராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அர்ஜுனனுக்கு கை கொடுத்தது. கந்தர்வன் சித்திரசேனன் ஆசிரியராக அமர்ந்து கலைகளை கற்று கொடுத்திருந்ததில், அர்ஜுனன் நடனத்தில் மாயம் காட்டுபவனாகவும், அற்புதமான பாடகராகவும் உருமாறி இருந்தான். இந்த திறமைகளைக் கொண்டு அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் இடம் பிடித்த அர்ஜுனனை, விராடரின் மகளான உத்தரா தன் நடன ஆசிரியராக அமர்த்திக் கொண்டாள். வழக்கமான பரிசோதனைகளை செய்து, அவன் உண்மையிலேயே ஒரு நபுன்சகன் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, அவனை அந்தபுரத்தில் தங்க அனுமதிப்பதில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. அவனது உடல் நபும்சகனாக இருந்தது, ஆனால் மனம் ஒரு ஆணுக்குரியதாக இருந்தது. நூற்றுக்கணக்கில் பெண்கள் வாழும் அந்தபுரத்தில் தங்குவதற்கு தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள சிறிது காலம் பிடித்தது அர்ஜுனனுக்கு. நகுலன் அரசரின் குதிரை லாயத்தில் தனக்கான இடத்தை பிடித்தான்.
குதிரைகளை கொண்டு நகுலன் மாயம் செய்து காட்டுவான் என்று கூறப்படுகிறது. குதிரைகளோடு நகுலன் எந்த அளவுக்கு இணக்கமாக இருந்தான் என்றால், அரசரின் குதிரைப்படையின் திறம் சட்டென்று வேறு ஒரு நிலைக்கு உயர்ந்தது. குதிரைகள் நன்றாக உணவு அளிக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்படுவதையும், அவைகளின் திறன் வெளிப்படும் விதம் முன்னேறியிருப்பதையும் அரசர் உடனே கவனித்தார். இந்த மாற்றங்கள் அனைத்தும் நகுலன் கொண்டுவந்தது. ஏனென்றால் நகுலன் பிறந்ததே சிறு தெய்வங்களில் ஒருவராக கருதப்படும் தேவலோகத்தை சார்ந்த குதிரை செலுத்துபவரான அஸ்வின் மூலமாகத்தான். சகாதேவன் அரசரின் கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வந்த பகுதியில் தன்னை இணைத்துக் கொண்டான். பசுக்களோடு மிக அற்புதமான ஒரு சூழலை சகாதேவன் ஏற்படுத்தவே, கால்நடைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பசுக்களையும் காளைகளையும் பிடித்து வந்து பழக்கப்படுத்தினான் சகாதேவன். கால்நடைகளின் எண்ணிக்கை பெருகுவதற்கேற்ப அரசரின் செல்வவளம் பெருகியது. இப்படியாக, சகோதரர்கள் அனைவரும் அரண்மனையில் தங்களுக்கான இடத்தைப் பிடித்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளக் கூடாது என்ற ஒரு விதிமுறையும் விதிக்கப்பட்டு இருந்தது.
நகருக்குள் நுழைவதற்கு முன்னால், தங்களது புகழ்பெற்ற ஆயுதங்களை, அர்ஜுனனின் காண்டீபம் உட்பட அனைத்தையும் எடுத்துச்சென்று, மயானத்தில் இருந்து கொண்டு வந்திருந்த ஒரு அழுகிய பிணத்தோடு சேர்த்து ஒரு பழைய போர்வையில் சுற்றி, ஒரு மரத்தின் கிளையில் மூட்டையாக கட்டித் தொங்க விட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சில பழங்குடியினரிடம், தங்களில் இறந்தவர்களை எரிப்பது அல்லது புதைப்பது போன்ற வழக்கமில்லை. இறந்தவர்களை அப்படியே ஒரு மரத்தில் தொங்க விட்டுவிடுவார்கள், பறவைகளுக்கு உணவாகட்டும் என்பதற்காக. அது ஒரு இறந்த உடல் என்பதை அறிந்த மக்கள் அதன் அருகில் கூட செல்ல மாட்டார்கள். அவர்களின் ஆயுதங்கள் தொலைந்து விடாமல் இருப்பதற்காக அது ஒருவிதமான பாதுகாப்பு ஏற்பாடாக இருந்தது. நகருக்குள் கடைசியாக நுழைந்தாள் திரௌபதி. இப்படி ஒரு திகைக்க வைக்கும் அழகு பொருந்திய ஒரு பெண், கிழிந்த உடைகளை உடுத்திக்கொண்டு, ஆணின் துணையின்றி, தனியே அரண்மனையை நோக்கி தெருவில் நடந்து வருவதை மக்கள் பார்த்தார்கள். ஆண்கள் கூட்டம் கூடியது, அவளை வெறித்துப் பார்த்தார்கள். "நீ யார்?" என்று அவர்கள் கேட்டார்கள். திரௌபதி எதுவும் பேசவில்லை. அவர்கள் சீண்டுவது, கிள்ளுவது என வம்பிழுக்க துவங்கினார்கள். திரௌபதியை அபாயம் சூழ்ந்தது.
அதே நேரத்தில், அந்த வழியாக ஒரு பல்லக்கில் வந்து கொண்டிருந்த நாட்டின் அரசி, திரௌபதி சிரமமான சூழ்நிலையில் இருப்பதை பார்த்து, தன்னுடன் அரண்மனைக்கு அழைத்து வந்தார். அரண்மனைக்குள் அழைத்து வந்து திரௌபதியை பார்த்த அரசி அசந்து போனார். அவருக்கு திரௌபதியைப் பார்த்தால் அரசியைப் போலவும், தான் அரசி இல்லை என்பது போலவும் தோன்றியது. "நீ யார்?" என்று கேட்டார் அரசி. தன்னை ஒரு பூ கட்டும் பெண் என அறிமுகம் செய்து கொண்டாள் திரௌபதி. "திரௌபதியின் கூந்தல் அலங்காரம் மற்றும் மலர் அலங்காரத்தை நான்தான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பாண்டவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை இழந்து விட்டதால் இப்போது எனக்கு வேலை இல்லை. நான் அப்படியே சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இப்போது வேறிடம் சென்றிருக்கிறார்கள். அவர்கள் திரும்ப வரும் வரை எனக்கு புகலிடம் வேண்டும். அவர்கள் எப்படியும் ஒரு வருடத்தில் திரும்பி வந்துவிடுவார்கள்," என்றாள். மலர்களைத் தொடுப்பதில் திரௌபதியின் திறமையைப் பார்த்து அசந்து போனார் அரசி. எனவே தன் சிகை அலங்காரத்தை கவனித்துக்கொள்ள அனுமதித்தார். திரௌபதி அரசியின் சிகை அலங்காரத்தில் தன் திறனைக் காட்ட, தனக்கு ஒரு பெரும் பரிசு கிடைத்திருப்பதாக நினைத்து, திரௌபதியை தன்னுடனேயே தங்க வைத்துக்கொண்டார் அரசி.
தொடரும்...