இதுவரை: வனவாசம் முடிவை நெருங்கும் வேளையில், யுதிஷ்டிரனை தவிர்த்து பாண்டவ சகோதரர்கள் அனைவரும் அலட்சியத்தால் அபாயத்தில் சிக்குகிறார்கள். தன் நீதியுணர்வு மற்றும் தர்ம உணர்வை வெளிப்படுத்தி அவர்களை மீட்கிறார் யுதிஷ்டிரன்.

சத்குரு: வனவாசத்தில் இருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு செல்கிறார்கள். சற்று நேரத்திற்கு பிறகு, தாகமும், களைப்பும் அடைகிறார்கள். அப்போது ஒரு அந்தணர் அவர்களிடம் ஓடி வந்து, தான் வழிபடுவதற்காக சேகரித்திருந்த புனிதமான புற்கள் சிலவற்றை காய்வதற்காக உலர்த்தியிருந்ததாகவும், அந்த வழியாக வந்த ஒரு மானின் கொம்புகளில் புற்கள் சிக்கிக்கொள்ள, அந்த மான் அப்படியே புற்களோடு ஓடிவிட்டதாகவும் கூறுகிறார். தொடர்ந்து அந்தணர் பாண்டவர்களிடம், "தயவு செய்து அந்த புனிதமான புற்களை எனக்காக திரும்ப கொண்டு வாருங்கள், நான் வழிபாடு செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. எனது வழிபாடு தடைபட நான் விரும்பவில்லை. நீங்கள் தீரம் மிகுந்த ஷத்ரியர்களாக தோன்றுகிறீர்கள்; நீங்கள் நிச்சயமாக எனக்கு உதவ வேண்டும்" என்றார்.

யுதிஷ்டிரன் தன் சகோதரர்களை வெவ்வேறு திசைகளில் மானை தேடிச் செல்லுமாறு பணிக்கிறார். அவர்கள் எங்கு தேடியும் மான் அகப்படவில்லை. ஏற்கனவே தாகமும் களைப்பும் அடைந்திருந்தவர்கள் மேலும் சோர்வடைகிறார்கள். எனவே யுதிஷ்டிரன், அருகில் ஏதும் குடிநீர் கிடைக்குமா என்று பார்த்து வர நகுலனை அனுப்புகிறார். ஒரு குளத்தை சென்றடைகிறான் நகுலன். குளத்திலிருந்த நீரை குடிக்க எத்தனிக்கையில், ஒரு குரல் "என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தண்ணீரை குடிக்காதே" என்கிறது. அதை புறக்கணித்து தண்ணீரை குடிக்கும் நகுலன் இறந்து விழுகிறான்.

நகுலன் திரும்பி வராததால் சகாதேவனை அனுப்பி பார்த்து வரச் சொல்கிறார் யுதிஷ்டிரன். சகாதேவன் தன் சகோதரனை தேடியபடி அந்த குளக்கரையை அடைகிறான். அப்போது ஒரு குரல், "எனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தண்ணீரை பருகாதே" என்கிறது. சகாதேவன், "முதலில் என் தாகத்தை தணித்துக் கொள்கிறேன் பிறகு உனது கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்" என்றபடி தண்ணீரை பருகுகிறான், உடனே இறந்து விழுகிறான். இருவருமே திரும்பாததால், தனது இளைய சகோதரர்கள் ஏதோ அபாயத்தில் இருக்கிறார்கள் என்பதை உணரும் யுதிஷ்டிரன், பீமனையும் அர்ஜுனனையும் அனுப்பி தேடுகிறார். அவர்களும் குளத்தை அடைகிறார்கள். குளத்தில் இருந்து தண்ணீரை குடிக்க அவர்கள் தயாராகையில் மீண்டும் அதே குரல், "சற்று பொறுங்கள்! என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அந்த தண்ணீரை குடிக்காதீர்கள்" என்கிறது. அர்ஜுனன், "நீ யார்? முதலில் உன்னை வெளிப்படுத்து" என்கிறான். பீமன், "விடு அர்ஜுனா, நாம் தண்ணீரை குடிப்போம்" என்று கூறவே இருவரும் தண்ணீரை பருகுகிறார்கள், இறந்து விழுகிறார்கள்.

பீமனும் அர்ஜுனனும் கூட திரும்பவில்லை என்பதால் யுதிஷ்டிரன் தானே அனைவரையும் தேடிப் புறப்படுகிறார். அவரும் அதே விதமாக குளக்கரைக்கு வந்து தன் சகோதரர்கள் இறந்து கிடப்பதை பார்க்கிறார். அந்தக் குளத்தைப் பார்த்து, "தண்ணீரே! நீதான் இதற்கெல்லாம் காரணமா? என் சகோதரர்களின் உயிர்களை எடுத்தது நீதானா? என் உயிரையும் எடுத்துக்கொள்!" என்கிறார். அப்போது ஒரு குரல், "நில்! என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அந்த தண்ணீரை அருந்தாதே" என ஒலிக்கிறது. "நீ யார்? நீ எங்கே இருக்கிறாய்? முதலில் உன்னை வெளிப்படுத்து" என்கிறார் யுதிஷ்டிரன்.

தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஒரு யட்சன் யுதிஷ்டிரனிடம் வந்து, "இந்த குளம் எனக்கு சொந்தமானது. எனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் உனது சகோதரர்கள் இந்த குளத்து நீரை பருகினார்கள், எனவே அவர்கள் இறக்க நேரிட்டது. நீயும் அதே விதியை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?" என்று கேட்டது. "எனக்கு சொந்தம் இல்லாத எதையும் நான் எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை. உனது கேள்விகளை கேள், என்னால் முடிந்த அளவுக்கு சிறந்த பதிலை கூறுகிறேன்" என்றார் யுதிஷ்டிரன்.

கேள்வி: இந்த மண்ணை விட எது மிக முக்கியமானது?

யுதிஷ்டிரன்: ஈன்றெடுத்த தாய்.

கேள்வி: சொர்க்கத்தை விட உயர்வானது?

யுதிஷ்டிரன்: ஒருவரின் தந்தை.

கேள்வி: காற்றை விட வேகமானது எது?

யுதிஷ்டிரன்: மனம்.

கேள்வி: புல்லின் இலைகளை விட அதிக எண்ணிக்கையில் இருப்பது?

யுதிஷ்டிரன்: மனதில் தோன்றும் எண்ணங்கள்.

கேள்வி: தர்மத்தின் உயர்ந்தபட்ச சரணாலயம் எது?

யுதிஷ்டிரன்: சுதந்திர பாங்கு.

கேள்வி: புகழின் உயர்ந்தபட்ச சரணாலயம்?

யுதிஷ்டிரன்: ஒரு பரிசு.

கேள்வி: சொர்க்கம் பற்றி?

யுதிஷ்டிரன்: உண்மை.

கேள்வி: மற்ற அனைத்தையும் விட போற்றப்பட வேண்டியது எது?

யுதிஷ்டிரன்: திறமை.

கேள்வி: மிக மதிப்பான சொத்து?

யுதிஷ்டிரன்: அறிவு.

கேள்வி: எது மிகப்பெரிய செல்வம்?

யுதிஷ்டிரன்: ஆரோக்கியம்.

கேள்வி: மட்டற்ற மகிழ்ச்சி தருவது?

யுதிஷ்டிரன்: போதுமென்ற மனம்.

கேள்வி: உயர்ந்தபட்ச தர்மம் என்பது?

யுதிஷ்டிரன்: உயிருள்ள எவற்றையும் காயப்படுத்தாதிருப்பது.

கேள்வி: கட்டுப்படுத்தப்பட வேண்டியது?

யுதிஷ்டிரன்: மனம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேள்வி: ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் எதை கைவிட வேண்டும்?

யுதிஷ்டிரன்: பெருமை.

கேள்வி: எதை கைவிட்டால் ஒரு மனிதன் செல்வந்தனாவான்?

யுதிஷ்டிரன்: ஆசை.

கேள்வி: வருந்தாமல் விட்டொழிக்கப்பட வேண்டியது?

யுதிஷ்டிரன்: கோபம்.

கேள்வி: மகிழ்ச்சியை பெறுவதற்கு விட்டுக்கொடுக்க வேண்டியது?

யுதிஷ்டிரன்: பேராசை.

கேள்வி: எது பாதையை உருவாக்குகிறது?

யுதிஷ்டிரன்: நல்லவர்களே பாதையை ஏற்படுத்துகிறார்கள், உண்மையில் அவர்களே வழியாக இருக்கிறார்கள்.

கேள்வி: பக்திமான் என்பவர்?

யுதிஷ்டிரன்: எப்போதும் நம்பிக்கைக்குரியவராக இருப்பவர்.

கேள்வி: உண்மையான கட்டுப்பாடு என்பது?

யுதிஷ்டிரன்: மனதால் ஏற்படுத்தப்படுவது.

கேள்வி: உண்மையான மன்னிப்பு என்பது?

யுதிஷ்டிரன்: தொடர்ந்து பகைமையை சகிப்பவர் உண்மையாக மன்னிப்பார்.

கேள்வி: உண்மையான அறிவு என்பது எது?

யுதிஷ்டிரன்: கடவுள் பற்றிய அறிவு.

கேள்வி: அமைதி என்றால்?

யுதிஷ்டிரன்: இதயம் நிச்சலனம் அடைவது.

கேள்வி: கருணை என்றால்?

யுதிஷ்டிரன்: எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க ஒருவர் விருப்பம் கொள்வது.

கேள்வி: எளிமை என்பது?

யுதிஷ்டிரன்: முழு அமைதியில் இதயம்.

கேள்வி: கண்ணுக்குத் தெரியாத எதிரி?

யுதிஷ்டிரன்: கோபம்.

கேள்வி: தீரா நோய்?

யுதிஷ்டிரன்: பேராசை.

கேள்வி: நேர்மையான மனிதன் என்றால்?

யுதிஷ்டிரன்: உயிர் வாழும் அனைத்தும் ஆனந்தமாயிருக்க விரும்புபவன்.

கேள்வி: நேர்மையற்றவர் யார்?

யுதிஷ்டிரன்: கருணையே இல்லாதவன்.

கேள்வி: அறியாமை என்பது?

யுதிஷ்டிரன்: தன் தர்மத்தை அறியாதிருப்பது.

கேள்வி: பெருமை என்பது?

யுதிஷ்டிரன்: வாழ்க்கை தன்னால்தான் நடக்கிறது என ஒரு மனிதன் நினைத்துக் கொள்வது.

கேள்வி: சோகம் என்பது?

யுதிஷ்டிரன்: அறியாமை மட்டுமே.

கேள்வி: எப்போது ஒரு மனிதன் பொறுமைசாலி ஆகிறான்?

யுதிஷ்டிரன்: தன் புலன்களை மட்டுப்படுத்தும் போது.

கேள்வி: உண்மையான தூய்மை என்பது?

யுதிஷ்டிரன்: இதயம் பரிசுத்தமடைவது.

கேள்வி: ஈகை என்பது?

யுதிஷ்டிரன்: எல்லா உயிர்களையும் காப்பது.

கேள்வி: துரோக குணம் என்பது?

யுதிஷ்டிரன்: மற்றவர்களைப் பற்றி புறம் பேசுதல்.

கேள்வி: ஒரு மனிதன் எப்போது ஏற்றுக்கொள்ளப் படுகிறான்?

யுதிஷ்டிரன்: ஏற்றுக்கொள்ளும்படி பேசும்போது.

கேள்வி: தனக்கு வேண்டியதை ஒருவன் பெறுவது எப்படி?

யுதிஷ்டிரன்: பகுத்தறிவோடு செயல்பட்டு.

கேள்வி: மேலுலகில் நீ எப்படி ஆனந்தத்தை அடைவாய்?

யுதிஷ்டிரன்: இப்போது நீதி நெறியோடு வாழ்ந்து.

கேள்வி: இந்த உலகிலேயே ஆச்சரியகரமானது எது?

யுதிஷ்டிரன்: மனித வாழ்வு நிலையற்றது என்றாலும், எல்லோருமே தாங்கள் ஏதோ இங்கே நிரந்தரமானவர்கள் என்பது போல நினைத்து வாழ்வதே அனைத்திலும் ஆச்சரியமானது.

கேள்வி: உண்மையான மனிதன் என்பவன் யார்?

யுதிஷ்டிரன்: ஒருவரின் நற்செயல்கள் பற்றிய நல்வார்த்தை சொர்க்கத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. அந்த வார்த்தை நிலைத்திருக்கும் வரை, அவன் மனிதன் என்று அழைக்கப்படுவான்.

கேள்வி: எல்லாவிதமான சொத்துக்களும் யாரிடம் இருக்கிறது யுதிஷ்டிரா?

யுதிஷ்டிரன்: இன்பம்-துன்பம், அதிர்ஷ்டம்-துரதிருஷ்டம், கடந்த காலம்-எதிர்காலம் என எல்லாவற்றையும் சமமாக பார்க்கிறவனிடம் மட்டுமே.

யக்ஷன்: யுதிஷ்டிரா, இந்த உலகிலேயே நீதான் மேதமை நிறைந்தவன் நேர்மையான உணர்வுள்ளவனும் கூட. உனக்கு ஒரு வரம் வழங்க விரும்புகிறேன். உன் சகோதரர்களில் யாராவது ஒருவரை மட்டும் உயிர்ப்பித்து தருகிறேன், உனக்கு யார் உயிரோடு வேண்டும்?

யுதிஷ்டிரன்: (சற்று சிந்தித்த பிறகு): எனக்கு நகுலனை உயிர்ப்பித்துக் கொடுங்கள்.

யக்ஷன்: என்னை ஆச்சரியப்படுத்துகிறாய். மற்ற அனைவரையும் விட பீமனே உனக்கு மிகவும் பிரியமானவன் என்று எனக்கு தெரியும். அடுத்து வரப்போகும் போரை வெல்வதற்கு நீ அர்ஜுனனை பெரிதும் நம்பி இருக்கிறாய். இருந்தாலும், அனைவரிலும் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டும் என நீ எப்படி தேர்ந்தெடுத்தாய்?

யுதிஷ்டிரன்: எனக்கு இரு அன்னையர்கள் இருக்கிறார்கள், குந்தி மற்றும் மாதிரி. குந்தியின் மகன் நான் உயிரோடு இருக்கிறேன். அதேவிதமாக, மாதிரியின் மகன் ஒருவனும் நிச்சயமாக உயிரோடு இருக்க வேண்டும்.

யக்ஷன்: ஆஹா! நீ ஒரு அற்புதமான உயிர். உன்னைப்போல் உயர்வான இன்னொருவரை இனி நான் எக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை. நகுலனின் உயிரை மட்டுமல்ல, உன் சகோதரர்கள் அனைவரையும் நான் உயிர்ப்பித்து தருகிறேன்.

சகோதரர்கள் அனைவருக்கும் யக்ஷன் உயிரூட்டினார்.

அந்த யக்ஷன் வேறு யாருமல்ல, யுதிஷ்டிரனனின் தந்தையான தர்மர் தான் அது.

யக்ஷனுடனான் யுதிஷ்டிரனின் சந்திப்பில் முக்கியமான அம்சம் இதுதான்: முன்னர் கௌரவர்களுடனான சதுரங்க விளையாட்டில் தன் சகோதரர்களை பணயம் வைக்கும் சூழல் வந்தபோது, யுதிஷ்டிரன் முதலில் நகுலன், சகாதேவனை பணயமாக வைத்தான். அவனது சிற்றன்னையின் பிள்ளைகளை இழப்பதற்கு அவனுக்குள் எங்கேயோ ஓரிடம் தயாராக இருந்தது. இப்போது கானக வாழ்க்கைக்கு பிறகு, இந்த ஞானம் அவனுக்குள் மலர்ந்திருந்தது, தன் சகோதரர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை வந்தபோது நகுலனை தேர்ந்தெடுத்தான். இந்த சம்பவம் எதை வெளிப்படுத்துகிறது என்றால், கானக வாழ்க்கையில் பாண்டவர்கள் எந்த விதமாக மாற்றமடைந்து இருக்கிறார்கள் என்பதுதான். இந்த பன்னிரண்டு வருடங்களும் அவர்களுக்கு ஒரு சாபமாக இருக்கவில்லை. அவர்களை இன்னும் மேம்பட்ட மனிதர்களாக உருமாற்றி இருந்தது. பிற்காலத்தில் இன்னும் சிறப்பான அரசர்களாக ஆட்சி செலுத்த தயார் படுத்துவதற்காக கிருஷ்ணன் நடத்திய லீலை இது.

தொடரும்...