சத்குரு: கிருஷ்ணரும் அர்ஜுனனும் பல ஜென்மாந்திரமாக நர-நாராயணராக இணைந்தே இருப்பவர்கள். இந்த பிறவியில், இந்திரபிரஸ்த நகருக்கு புலம் பெயர்ந்த பிறகு, இருவரும் குதிரை சவாரி செய்வது, நதிக்கரையில் அமர்ந்திருப்பது, அர்ஜுனன் புரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களை குறித்து அளவளாவுவது என இணைந்து நேரத்தை செலவிடுவது அதிகரிக்கிறது. இப்போதுதான் அர்ஜுனன் விழிப்புணர்வாக மீண்டும் கிருஷ்ணருடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான். 

ஒரு நாள், அடர்ந்த வனப்பகுதியான கந்தவபிரஸ்தத்தில், யமுனை நதிக்கரையோரமாக வளர்ந்திருந்த அழகான மரத்தின் நிழலில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது கிருஷ்ணர், "பல்வேறு கட்டமைப்புகளை நிறுவி நகரை விரிவுபடுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்காக இந்த வனத்தை தீக்கிரையாக்க வேண்டி வரும்" என்றார். "இவ்வளவு அழகாக, உயிர் துடிப்போடு இருக்கும் இந்த வனத்தை நாம் எப்படி தீயிட்டு எரிப்பது?" என வினவினான் அர்ஜுனன். கிருஷ்ணர், "அரசனாக வாழ வேண்டும் என்பதை இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்து இருப்பதால், நீங்கள் தான் இந்த இடத்தை நாகரீகமாக்க வேண்டும். இந்த பொறுப்பும் சுமையும் இல்லாமல் ஒரு அரசனாக உங்களுக்கு புகழ் கிடைக்காது" என்றபடியே அர்ஜுனனுடன் இணைந்து வனத்தை தீக்கிரையாக்க தயாரான கிருஷ்ணர் தொடர்ந்து, "நெருப்பிலிருந்து தப்ப முயற்சிக்கும் எல்லா உயிரினத்தையும் நீ கொல்ல வேண்டும்" என்றார். "ஏன் கொல்ல வேண்டும்?" அடுத்த ஷணமே அர்ஜுனன் கேள்வியை கேட்டிருந்தான். கிருஷ்ணர், "இந்த தேசத்தில் நீ அமைதியாக வாழ்ந்து அரசாள வேண்டுமென்றால், உன் எதிரிகளை தப்ப விடாதே. இன்று நீ அவர்களை பிழைத்துப் போக அனுமதித்தால் அவர்கள் நாளை மீண்டும் திரும்பி வருவார்கள்" என்றார்.

கிருஷ்ணரும் அர்ஜுனனும் பல ஜென்மாந்திரமாக நர-நாராயணராக இணைந்தே இருப்பவர்கள்.

இரக்கமே இல்லாதவராக கிருஷ்ணர் நடந்து கொண்டதை அன்றைய காலகட்டத்தின் வரலாற்றுப் பிண்ணனியோடு புரிந்து கொள்ளத் தேவையிருக்கிறது. இது நடந்தது ஐயாயிரமாண்டுகளுக்கு முன்பு. இந்த நிலப்பரப்பு முழுவதும், இமாலய சிகரங்களின் மலையடிவாரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் முழுவதும் அடர்ந்த வனங்களால் சூழப்பட்டு வன விலங்குகள் மிகுதியாக வாழ்ந்து வந்தன. மனிதர்கள் வாழ தேவையான குடியிருப்புகளை அமைப்பதற்கு வனங்களை தீக்கிரையாக்கி விலங்குகளை கொல்வது அப்போது அவசியமான ஒன்றாக இருந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையே அப்போது தோன்றியிருக்கவில்லை, ஏனென்றால் அன்றைய சூழலே இன்றிருப்பதிலிருந்து முற்றிலும் வேறாக இருந்தது.

மாய அரங்கம்

மனிதர்களுக்கு வாழ்விடங்களை அமைப்பதற்காக கிருஷ்ணரும் அர்ஜுனனும் கிட்டத்தட்ட அங்கிருந்த எல்லா உயிர்களையும் கொன்றிருந்தார்கள். ஒரேயொரு குறிப்பிட்ட நாகமும் - இது பிற்பாடு மீண்டும் திரும்பி வந்து சிக்கலை ஏற்படுத்தியது, அதன் நண்பனான அசுர அரசன் மாயாசுரனும் மட்டுமே தப்பினார்கள். கிருஷ்ணரிடமும் அர்ஜுனனிடமும் சரணடைந்த மாயாசுரன் கெஞ்சினான், "நான் ஒரு சிறந்த கட்டிட கலைஞன். எனது ஆற்றலை பயன்படுத்தி அற்புதமான ஒரு அரங்கை நிர்மாணித்து தருகிறேன், இதுபோன்ற ஒன்றை இங்கிருக்கும் மனிதர்கள் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். என் உயிரை எடுத்து விடாதீர்கள்" என வேண்டினான். கேள்வியோடு அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்தான். "இருக்கட்டும் விடு. இவன் உனக்கு பயன்படுவான்" என்றார் கிருஷ்ணர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாய சபை எனும் அரங்கை ஒவ்வொரு விதத்திலும் தனித்தன்மையானதாக, வேறெங்கும் இல்லாத ஒரு அமைப்பில் நிர்மாணித்தான் மாயாசுரன். படிகாரத்தை கொண்டு மிக மெல்லியதான திரை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தினான். தடுப்புக்கு அந்தப் பக்கத்தில் உள்ளவை துல்லியமாக தெரியும்படி, இடையே தடுப்பு இருப்பதே பார்ப்பவர்களுக்கு தெரியாதபடி நுட்பமானதாக அது இருந்தது. அப்போது யாரும் கண்ணாடியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. விருந்தினர்கள் யார் வந்தாலும், எது வழி எது தடுக்கப்பட்ட பகுதி என்று தெரியாமல் அந்த திரை தடுப்புகளில் சென்று முட்டிக் கொண்டார்கள். மற்ற எல்லோருக்கும் நேர்ந்த இதே கதை ஒரு நாள் துரியோதனனுக்கும் நேர்ந்தது. தன்னைப் பற்றிய பெருமை மிகுந்தவனான துரியோதனன் எதிர்பாராமல் எங்காவது சென்று தன் தலையை முட்டிக் கொண்டாலும், ஒருவேளை அதை நீங்கள் கட்டமைத்து இருந்தால், சிக்கல் உங்களுக்குத்தான்.

இந்திரபிரஸ்தம் வருகிறார் நாரதர்

மிக அழகாகவும் வளம் கொழிக்கும் நகரமாகவும் வளரத் துவங்கிய இந்திரபிரஸ்தம் நோக்கி மக்கள் வரத் துவங்கினார்கள். ஹஸ்தினாபுரத்திலிருந்து கிட்டத்தட்ட பாதி மக்கள் தொகை - நகரிலேயே மிக திறமையானவர்களும், செல்வாக்கானவர்களும் இந்திரபிரஸ்தத்திற்கு வந்து சேர்ந்தனர். தன் கண்முன் தன் நகரை விட்டு இத்தனை மக்களும் வெளியேறுவதைக் கண்ட துரியோதனன் நெஞ்சில் பாண்டவர்கள் மீதான வெறுப்பும் ஆத்திரமும் மீண்டும் பொங்கத் துவங்கியது. இந்திரபிரஸ்தத்தை நேரில் சென்று பார்க்க அவனது சொந்த சகோதரர்களே விரும்புவதை அறிந்ததும் துரியோதனன் மிகுந்த ஆவேசமடைந்தான்.

நாரதர் வழங்கிய அறிவுரை இது: "இப்போது உங்களுடைய சொந்த ராஜ்ஜியத்தை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள், கிருஷ்ணரும் தர்மத்தை நிலை நாட்ட உங்களுடன் இருக்கிறார், இதுதான் நீங்கள் ராஜசுய யாகத்தை செய்ய வேண்டியதற்கான நேரம்."

இப்போதுதான் தவிர்க்க முடியாத ஒன்று நிகழ்ந்தது - பாண்டவர்களை சந்திக்க நாரதர் வந்தார். நாரதர் தோன்றும் இடத்தில் எல்லாம், நல்லதைப் போன்றே தோன்றும் உருவில் சிக்கலும் எப்போதும் கூடவே வரும். ஐந்து சகோதரர்களும் நெடுஞ்சாண்கிடையாக நாரதரின் பாதம் பனிந்தார்கள். நாரதர், "இப்போது நீங்கள் வளமாக வாழத் துவங்கிவிட்டீர்கள்" என்றபடியே சுந்தன் - அசுந்தன் என்ற பெயரோடு வாழ்ந்த இரு ராட்சச சகோதரர்கள் பற்றிய கதையை சொல்லத் துவங்கினார்.

இரு சகோதரர்களும் தங்கள் வலிமையால் மகத்தான சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்கி இணைந்து ஆட்சி புரிந்து வந்தனர். இருவரிடமும் சகோதர பாசம் பொங்கியதைப் போலவே அவர்களின் அதிகாரமும் வலிமையும் தொடர்ந்து பொங்கிப் பெருகியது. அவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் ஒரு கந்தர்வ பெண்ணை அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அவள் பெயர் திலோத்தமை‌. அதி அழகு வாய்ந்த திலோத்தமை இரு சகோதரர்களையும் தன் வசம் ஈர்க்கும்படி நடந்து கொண்டாள். பொறுமையாக காத்திருந்த திலோத்தமை தக்க சமயம் வந்ததும், "உங்களில் யார் பலசாலியோ அவரைத்தான் நான் மணந்து கொள்வேன்" என்றாள். உடனே இரு சகோதரர்களும் தங்களுக்ள் யுத்தமிட துவங்கினார்கள். இருவருமே சம வலிமையோடு இருந்ததால் இருவருமே ஒருவரையொருவர் கொன்று வீழ்ந்தார்கள்.

இந்த கதையை சொல்லி முடித்ததும் நாரதர் பாண்டவர்களை எச்சரித்தார், "திலோத்தமையும் பாஞ்சாலியைப் போலவே கருமையான பேரழகு வாய்ந்தவள்தான். நீங்கள் இருவரல்ல - ஐவர் இருக்கிறீர்கள்‌. உங்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பிரச்சனை வந்தது, அதனால் உங்களுக்குள் மோதல் இல்லை. உங்கள் வாழ்வு உயரங்களை எட்டிப்பிடித்து முன்னேறிச் செல்லும் போது இந்த பெண்ணால் மோதிக் கொள்வீர்கள். இதை தவிர்க்க உங்களுக்கு இருக்கும் ஒரே வழி, உங்களின் திருமணத்தின் போது கிருஷ்ணர் வகுத்துத் தந்த விதியை கடைபிடிப்பது தான்" என்றார். ஒவ்வொரு சகோதரனுடனும் பாஞ்சாலி ஒரு வருடம் மனைவியாக வாழ வேண்டும் என்றும், அந்த சமயத்தில் மற்ற நான்கு சகோதரர்களும் பாஞ்சாலிக்கு அருகில் நெருங்கக்கூடாது என்றும், இந்த விதியை மீறுபவர் வனவாசம் செல்ல வேண்டுமென்றும் கிருஷ்ணர் தீர்வு வழங்கியிருந்தார்.

அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் வாழ்ந்த காலத்தில் சிக்கல்களும், அரசியலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்ததால், இந்த விதியை அப்படியே பின்பற்றி வாழவில்லை. இப்போது அவர்கள் தங்களுக்கென ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டு சூழ்நிலை சமநிலையாக இருக்கும் இந்த நிலையில், நாரதர், கிருஷ்ணர் முன்னிலையில் அந்த விதியை பின்பற்றுமாறு பாண்டவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்திரபிரஸ்தத்தில் எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் நகரம் அழகுற விரிவடைந்து கொண்டே சென்றது. எல்லாப்பக்கமும் செயல்கள் இடையறாது நடந்து கொண்டிருந்தன, திறமைசாலிகள் வந்து குவிந்தார்கள். பிரம்மாண்டமான அரண்மனையும், மாயாசுரன் வடிவமைத்த அரசவை அரங்கமும் அதிஅற்புதமாக இருந்தது. இந்த அதிசயமான அரசவையை நேரில் பார்ப்பதற்காகவே மக்கள் நீண்ட தூரங்களில் இருந்து வந்தார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் நாரதர் வழங்கிய அறிவுரை இது: "இப்போது உங்களுடைய சொந்த ராஜ்ஜியத்தை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள், கிருஷ்ணரும் தர்மத்தை நிலை நாட்ட உங்களுடன் இருக்கிறார், இதுதான் நீங்கள் ராஜசுய யாகத்தை செய்ய வேண்டியதற்கான நேரம்."

ராஜசுய யாகம்

ஒரு அரசனை சக்கரவர்த்தியாக மாற்றும் செயல்முறையே ராஜசுய யாகம். இந்த தேசத்தின் அரசன் அரசர்க்கெல்லாம் அரசனாக, சக்கரவர்த்தியாகுமளவு பலமும் ஆற்றலும் பெற்றவனாக இருக்கிறான் என்ற செய்தியை எல்லா தேசத்திற்கும் அனுப்புவார்கள். செய்தி கிடைத்த அரசர்கள் அதை ஏற்றுக்கொண்டு சக்கரவர்த்திக்கு கட்டுப்பட வேண்டும், ஏற்க மறுத்தால் நீங்கள் அவர்களுடன் போர் செய்வீர்கள். யுதிஷ்டிரன், "இப்போது என்ன அவசியம் வந்தது? நாங்கள் இந்திரபிரஸ்தத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாங்கள் ஏன் மற்ற தேசத்தின் மீது படையெடுத்துச் செல்ல வேண்டும்? அவர்கள் எங்கள் ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ள ஏன் அதிகாரத்தையோ பலத்தையோ பிரயோகிக்க வேண்டும்? எனக்கு அப்படி எந்த லட்சியமும் இல்லை" என்றான்.

பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒரு அரசனுக்கு போதுமான பலமும் முக்கியத்துவமும் கிடைத்து, ராஜசுய யாகத்தை தன்னால் மேற்க்கொள்ள முடியும் என்று அறைகூவல் விடுக்க முடிந்தது. ஒரு ஷத்திரியனின் வாழ்வில் இதுவே மாபெரும் நிகழ்வாக இருந்தது.

"இது உன்னைப் பற்றியது அல்ல. உனது தந்தையார் இன்னும் சொர்க்கம் சென்று சேரவில்லை. அவர் இன்னும் யமலோகத்தில் தான் இருக்கிறார். அவரது புதல்வர்களான நீங்கள் ராஜசுய யாகம் செய்தாலேயன்றி உங்கள் தந்தையால் தேவர்களின் உலகான சொர்க்கலோகம் சென்று சேர முடியாது" நாரதர் இப்படிப் பேசியது யுதிஷ்டிரனை ராஜசுய யாகத்திற்கு சம்மதிக்க வைத்தது.

பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒரு அரசனுக்கு போதுமான பலமும் முக்கியத்துவமும் கிடைத்து, ராஜசுய யாகத்தை தன்னால் மேற்க்கொள்ள முடியும் என்று அறைகூவல் விடுக்க முடிந்தது. ஒரு ஷத்திரியனின் வாழ்வில் இதுவே மாபெரும் நிகழ்வாக இருந்தது. அனைவருக்கும் அழைப்பு அனுப்பினார்கள். மறுத்தவர்களின் தேசங்களுக்கு தங்கள் படையை அனுப்பினார்கள். மற்ற நான்கு சகோதரர்களும் பீமன், அர்ஜுனன்‌, நகுலன், சகோதேவன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் படையுடன் சென்று அனைத்து தேசங்களையும் வென்று பெரும் செல்வத்தோடு திரும்பி வந்தார்கள். சரணடைந்த அரசர்களிடமிருந்து பரிசாகப் பெற்ற தங்கம், ஆபரணங்கள் மற்றும் வைரவைடூரியங்களை யானைகளில் சுமந்து எடுத்து வந்தார்கள். அவர்கள் விட்டுவைத்த ஒரே ராஜ்யம் கௌரவர்களுடையாதாக இருந்தது, பங்காளிகள் என்பதால் அவர்களை மட்டும் விட்டு வைத்தனர். தங்கள் குடும்பமாக கருதி ராஜசுய யாகத்தில் பங்கேற்க அழைத்திருந்த அழைப்பை கௌரவர்களால் மறுக்க முடியவில்லை.

துரியோதனனின் நெஞ்சில் ஆவேச கனல் எரிந்து கொண்டிருந்தது. அவனால் தாங்க முயியவில்லை. அரக்கு மாளிகைக்குள் வைத்து நெருப்பு மூட்டினான் - அவர்கள் சாகவில்லை. பாலைவனத்திற்கு அனுப்பினான் - அதை சொர்கபுரியாக உருமாற்றி பெரும் நகரை கட்டமைத்து விட்டார்கள். இப்போது ராஜசுய யாகம் வேறு நிகழ்த்த இருக்கிறார்கள். ஒரு தலைமுறையில் ஒரு அரசனால் மட்டுமே ராஜசுய யாகம் நடத்த முடியும். அப்படியானால் துரியோதனன் வாழ்வில் அந்த வாய்ப்புக்கே இடமில்லை - யுதிஷ்டிரன்‌ இறந்தால் தவிர. அந்த ஷணம் முதல் இதுவே துரியோதனனின் ஒரே லட்சியமானது.

தொடரும்...