மஹாபாரதம் பகுதி 25: துரியோதனன் - அழிவின் வழியில்
மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், யுதிஷ்டிரனின் நற்குணம் அவனது புத்திசாலித்தனத்தை விஞ்சுவதால் நாடே அவதிப்படுகிறது. அதேநேரம், கூட்டாட்சியில் விருப்பமில்லாத துரியோதனன் பல வஞ்சகத் திட்டங்களை தீட்டினாலும், குரு அரசவையில் அதற்கு ஆதரவு கிடைக்காமல் போகிறது.
தேசத்தை ஆள்வதற்கு தேவையான திறமையோ அல்லது போதுமான புத்திசாலித்தனமோ யுதிஷ்டிரனிடம் இல்லாமல் இல்லை. ஆனால், அளவுக்கதிகமாக நீதி நூல்களைப் படித்து, ஏட்டு கல்வியின் நற்குணங்களை மிக அதிகமாகவே தன்னில் சேர்த்துக் கொண்டது அவனது புத்திசாலித்தனத்தை செயல்பட விடாமல் செய்திருந்தது. தன் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்வதற்கு பதிலாக, தன் மனசாட்சிக்கு எது நல்லதாக தெரிந்ததோ அதைச் செய்தான். இதுவே அவன் தொடர்ந்து பிரச்சனைகளை ஈர்ப்பதற்கான காரணமாக அமைந்தது.
யுதிஷ்டிரனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர அவனைச் சுற்றியிருந்த மக்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், அதை பேரழிவாகவே மீண்டும் மாற்றிக்கொண்டான் - எந்த கெட்ட எண்ணத்துடனும் இல்லை, ஆனால் நல்லவனாக இருக்கவேண்டும் என்ற அவனது உந்துதலாலேயே இப்படிச் செய்து கொண்டான். நல்லவனாக இருக்க வேண்டும் என்ற உந்துதலால் யுதிஷ்டிரன் தன்னை சுற்றி இருந்த பலரது உயிருக்கும் அபாயங்களை உருவாக்கினான், சிலர் அவர்களது உயிரையும் இழக்க நேர்ந்தது.
ஒரு நல்ல மனிதன்
ஒரு நல்ல மனிதன்
அப்புறமும் ஒரு நல்ல மனிதன்தான்.
Subscribe
நல்லவர்களுக்கு மட்டுமே வாய்ப்பான் எனுமளவு நல்லவன்.
ஆனால் வாழ்க்கை சோதனையாகும்போது
நல்லவன் எங்கே என நீங்கள் தேடுவீர்கள்
துரியோதனனின் வஞ்சக திட்டங்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாண்டவர்களை விரட்டியடிக்க திட்டமிட்டான் துரியோதனன். இறந்து விட்டதாக கருதிய பாண்டவர்கள் மீண்டும் திரும்பியதிலிருந்து அவனது மனம் முழுவதும் ஒரே ஒரு எண்ணம்தான் இருந்தது - இந்த சகோதரர்கள் ஐவரையும் அழிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அது.
தனது தந்தை திருதராஷ்டிரனுடன் கர்ணன் முன்னிலையில் ஒரு சந்திப்பு நடக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தான் துரியோதனன். பொறாமை பற்றியெரிய இப்படிப் பேசத்துவங்கினான், "அரசாள பிறந்தவன் நான், வேறு யாரிடமிருந்தும் உத்தரவு கேட்டு நடக்கமாட்டேன். ஏதாவது செய்து பாண்டவர்களை துரத்தியடிக்க என்னை அனுமதிக்காவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்" என்று துவங்கிய துரியோதனன் தொடர்ந்து, "துருபதனுடன் அவர்களுக்கு நட்புறவு இருப்பதால்தான் அவர்கள் வலிமையானவர்கள் என்று தங்களை நம்புகிறார்கள். எனவே எந்த விலை கொடுத்தாவது நாம் துருபதனை நமது பக்கம் கொண்டுவர வேண்டும். துருபதனை நம் பக்கமாக சாய்த்துவிட்டால் அவர்களை பாதுகாக்க யாரும் இருக்கமாட்டார்கள். பிறகு அந்த ஐவரையும் நாம் வெளிப்படையாகவே கொன்றுவிடலாம்" என்றான்.
பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணர் இருப்பதைச் சுட்டிக்காட்டினான் கர்ணன். அத்துடன், போர்க்களத்தில் கிட்டத்தட்ட வெல்லவே முடியாதவர்களென பெயர் பெற்றிருந்த கிருஷ்ணரின் யாதவ வீரர்களும் அவர்கள் பக்கம் இருந்தார்கள். திரௌபதியின் சுயம்வரத்தில் கிருஷ்ணர், சத்யாகி, உத்தவன் மற்றும் சாதாரண யாதவ வீரர்கள் கூட இலக்கை வீழ்த்தும் வல்லமையுடன் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கிருஷ்ணர்தான் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுத்து இருந்தார் என்பதையும் கர்ணன் நினைவூட்டினான். அதுமட்டுமின்றி துருபதனின் மகளை பாண்டவர்கள் மணமுடித்திருப்பதால், தன் மருமக்களின் எதிரிகளிடமிருந்து கிடைக்கும் எந்த கையூட்டிற்கும் துருபதன் பணியும் வாய்ப்பே இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினான்.
இதை கேட்டதும் தனது திட்டத்தைக் கை விட்டான் துரியோதனன், ஆனால் அவன் கைவசம் இன்னும் பல திட்டங்கள் இருந்தது. புதிய திட்டத்தை விவரிக்கத் துவங்கினான். "அவர்கள் இங்கே அரண்மனையில்தான் வசிக்கிறார்கள் - நாம் மிகச் சுலபமாக அவர்கள் உணவில் விஷம் கலந்துவிடலாம்" என்றான். திருதராஷ்டிரனும் கர்ணனும் எந்த பதிலும் பேசவில்லை. இருவரும் இதை பாராட்டவில்லை என்பதைப் பார்த்ததும் தனது அடுத்த திட்டத்திற்கு தாவினான்.
"நாட்டிலேயே மிக அழகான பெண்களை நாம் அமர்த்துவோம், பாண்டவர்களை மயக்கி திரௌபதியை அவர்களுக்கு எதிராக திருப்புவோம். ஒரு குடும்பத்தை உடைப்பதைப் போல் எதுவும் இல்லை. அவர்கள் திருமணத்தை கெடுத்துவிட்டால் அத்தோடு அவர்கள் கதை முடிந்தது." இந்த திட்டத்தையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்த துரியோதனன், "நாம் மாதிரியின் புத்திரர்களான நகுல-சகாதேவனை தனியாக அணுகுவோம், எப்படியாவது நாம் அவர்களிடம் பேரம் பேசுவோம். அந்த இருவரையும் மற்ற மூன்று சகோதரர்களுக்கு எதிராக திருப்பிவிட்டால், நாம் அவர்களது கதையை முடித்துவிடலாம்." இதற்கும் மூத்தவர்கள் சம்மதிக்கவில்லை.
தொடர்ந்தான் துரியோதனன், "கிருஷ்ணனுக்கு பெண்கள் என்றால் ஒரு பலகீனம் இருக்கிறது - நாம் அவனை அந்த வழியில் மடக்கி விடுவோம். நான் திருமணம் செய்வதற்கு முன் பானுமதி மீது அவனுக்கு ஒரு மெல்லிய இடமிருந்தது எனக்கு தெரியும். நாம் ஏதாவது முயற்சி செய்யவேண்டும்" தன் மனைவியே பணயம் வைக்கும் அளவிற்கு இறங்கினான் துரியோதனன்.
திருதராஷ்டிரன் குறுக்கிட்டு, "என் மகனே, உன் இதயத்தில் நஞ்சிருக்கிறது. இது வேலை செய்யப் போவதில்லை. நாம் வேறு ஏதாவது தீர்வை யோசிப்போம். நாம் அவர்களைக் கொன்றுவிட்டால், மக்கள் ஹஸ்தினாபுரத்தை எதிர்த்து புரட்சி செய்யக்கூடும். அது நமக்கு நல்லதில்லை" என்றான். பாண்டவர்களைக் கொல்ல வேண்டாம் என்று தடுக்கவில்லை திருதராஷ்டிரன் - அந்தத் திட்டத்தின் செயல் வடிவ சாத்தியம் பற்றி மட்டுமே கவலைப்பட்டான். தொடர்ந்து, "இதையும் நீ நினைவில் வைத்திருக்க வேண்டும். குரு படையை ஏற்கனவே துருபதனும் பாஞ்சாலர்களும் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களும் யாதவர்களும் இணைந்து நமக்கெதிராக சண்டையிட்டால் நமக்கு வாய்ப்பே இல்லை. இது சரியான வழியாகத் தெரியவில்லை" என்றான். அவ்வளவு எளிதாக துரியோதனன் ஓய்ந்து விடுவானில்லை. பாண்டவர்களை அப்புறப்படுத்த வழி காண வேண்டும் என்பதில் அவன் முழுமூச்சாக இருந்தான்.
சமாதானப்படுத்தும் குரு அரசவையினர்
குரு வம்ச அரசவையின் ஜாம்பவான்களை சந்தித்தான் துரியோதனன் - பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார் மற்றும் விதுரர் அமர்ந்திருந்தார்கள். பீஷ்மர் துரியோதனனிடம், "உனது பங்காளிகளை அழிக்க வேண்டும் என்பது உன் மனதில் கடைசியாக வரவேண்டிய எண்ணம். ஏற்கனவே அரக்கு மாளிகைக்குள் அவர்களை வைத்து உயிரோடு எரிக்க நீ முயற்சித்ததில் உனக்கு மட்டுமல்ல, உனது தந்தைக்கு, இந்நாட்டின் அரசருக்கு, ஒட்டுமொத்த குரு வம்சத்திற்குமே பெரும் அவப்பெயரை நீ சேர்த்திருக்கிறாய். உடலிலிருந்து உயிர் பிரியும்போது மட்டும் ஒரு மனிதன் இறப்பதில்லை. தன்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை தொலைக்கும்போதே அவன் இறந்துவிடுகிறான். ஆனால் உன் அவப்பெயரை சரிசெய்துகொள்ள உனக்கு இன்னும் நேரம் இருக்கிறது. யுதிஷ்டிரனை அரசனாக இருக்க அனுமதி, அது போதும். அவன் நடுநிலையான மனிதன்; உன் மீது எந்த விதத்திலும் அவன் வஞ்சம் பாராட்ட மாட்டான். இப்போது அவன் என்ன செய்தான் பார்த்தாயா - நான் அவனுக்கு முடிசூட்டினேன், அவன் உனக்கும் சமபங்கு தருகிறான். தன் சகோதரனைப் போலவே அவன் உன்னையும் நடத்துவான். உன் சகோதரனைப் போல அவனோடு நடந்துகொள்ள நீ பழகிக்கொள். இது உன் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் திருப்புமுனையாக இருக்க முடியும். சரியான முடிவை நீ இப்போது எடுக்க வேண்டும்" என்றார்.
அந்த இடத்தில் மட்டுமல்ல, எப்போதெல்லாம் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய சூழல் வந்தாலும், அப்போதெல்லாம் துரியோதனன் வலுக்கட்டாயமாக தவறான திசையிலேயே திரும்பினான். தனது நலன் விரும்பிகள், நண்பர்கள், மூத்தோர்கள் என எத்தனை பேர் எத்தனை விதமாக அறிவுறுத்தினாலும், எப்படியாவது தவறான திசையில் செல்ல வேண்டும் என்பதிலேயே முனைப்புடன் இருந்தான் துரியோதனன்.
பீஷ்மர் தனது அறிவுரையை வழங்கியதும் துரோணாச்சாரியார் தொடர்ந்தார், "பாண்டவர்களை அவ்வளவு எளிதாக தோற்கடித்து விடமுடியாது, நீ என்ன தகிடுதத்தம் செய்தாலும் சரி. எனக்கு அர்ஜுனனை நன்றாகத் தெரியும் - அவனுக்கு பயிற்சி அளித்ததே நான்தான். எனக்கு சரிநிகர் சமமானவன் அவன். கண்ணை கட்டிக் கொண்டு கூட அவனால் உன் மீது அம்பெய்து கொன்றுவிட முடியும். அந்த அளவுக்கு ஆற்றலும் திறமையும் அவனுக்குள் இருக்கிறது. அப்படி ஏதும் முயற்சித்தால், உனக்கும் உனது சகோதரர்களுக்கும் மட்டுமல்ல, நம் அனைவருக்குமே மரணத்தை அழைப்பிதழ் வைத்து நீ வரவேற்கிறாய் என்று அர்த்தம்."
கிருபாச்சாரியார் கிட்டத்தட்ட இதுபோன்ற கருத்துக்களையே வெளிப்படுத்தினார். துரியோதனனை சமாதானப்படுத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை பார்த்த விதுரர், அதற்கு பதிலாக திருதராஷ்டிரனின் உணர்ச்சிகளைக் கிளறிவிட முயற்சித்தார். திருதராஷ்டிரன், விதுரர் மற்றும் பாண்டு மூவரும் பால்யத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த உறவுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்த விதுரர், "நமது குழந்தைப் பருவத்தில் நாம் எவ்வளவு அற்புதமாக இருந்தோம் என்பது உனக்கு ஞாபகமிருக்கிறதா! நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம். பாண்டுவை நீ எப்படி நேசித்தாய். இப்போது உன்னால் எப்படி பாண்டுவின் பிள்ளைகளுக்கு எதிரானதைச் செய்ய முடியும்? பாண்டு நிச்சயம் சொர்க்கத்தில் இருந்தபடி உன்னைப் பார்த்து உன்னையும் உன் மகன்களையும் நிரந்தரமாகச் சாபமிடுவான்."
திருதராஷ்டிரன் அதிர்ந்து போனது வெளிப்படையாகவே தெரிந்தது. தொடர்ந்து பாண்டுவின் மீதான திருதராஷ்டிரனின் உணர்ச்சிகளை பெருக்கிட முனைந்தார் விதுரர். ஆனால் தன் மகன் மீது மிக ஆழமான பற்று கொண்டிருந்த திருதிராஷ்டிரன், அதை மற்றவர்களிடமிருந்து மறைப்பதிலும் வல்லவனாக இருந்ததை அவர் குறைவாக எடை போட்டு விட்டார். திருதராஷ்டிரன் முடிவாக, "பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர் - ஒரு அரசனுக்கு மிகச்சிறந்த ஆலோசகர்களாக எந்த காலத்திலும் இவர்கள்தான் இருக்க முடியும், இவர்கள் அனைவரும் நம்மோடு இருக்கிறார்கள். குரு வம்சத்தின் நன்மைக்காகவே இதை சொல்கிறார்கள். என் மகனே, நீ நிச்சயம் சரியானதைச் செய்ய வேண்டும்" என்றான்.
துரியோதனன் வெளியேறுகிறான், உள் நுழைகிறார் கிருஷ்ணர்
ஒரு அரசனாக, "இதை நீ செய்" என்று மட்டுமே துரியோதனிடம் திருதராஷ்டிரன் பேசியிருக்க முடியும், ஆனால் அப்படிச் செய்யாமல் முடிவை துரியோதனனிடமே விட்டுவிட்டான். சட்டென அங்கிருந்து வெளியேறினான் துரியோதனன். அரசரும் மூத்தவர்களும் குரு அரசவையில் அமர்ந்திருக்கும்போது திடீரென வெளியேறுவது என்பது யாராலும் சிந்திக்கவே முடியாதது, ஆனால் அதைத்தான் துரியோதனன் செய்தான். எது எப்படி இருந்தாலும், பாண்டவர்கள் இறக்க வேண்டும் அல்லது அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதில் அவன் முடிவாக இருந்தான்.
இந்த சூழலில் கிருஷ்ணர் உள்ளே வருகிறார். அப்போது முதல், எது நடந்தாலும் அதில் கிருஷ்ணர் வெளிப்படையாகவே பங்கேற்றார். அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய கிருஷ்ணர், "எல்லோரும் இங்கே சேர்ந்திருக்க முடியாவிட்டால் பாண்டவர்களுக்கு சரிபாதி ராஜ்ஜியத்தை பங்கிட்டுக் கொடுத்து விடுவதுதான் சரியானது. துரியோதனனும் அவனது சகோதரர்களும் ஹஸ்தினாபுரத்தை ஆளட்டும், யுதிஷ்டிரனும் அவனது சகோதரர்களும் ராஜ்ஜியத்தின் மறு பாதியை எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அவர்களே அமைத்துக் கொள்ளட்டும்" என்றார்.
தொடரும்...