கேள்வியாளர்: அச்சம் எங்கிருந்து வருகிறது?

சத்குரு: இந்த பூமியில், உங்கள் அனுபவத்தில், நீங்கள்தான் முதல் நபர், நீங்கள் மட்டுமே தற்போது இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பு கோடிக்கணக்கான மக்கள் பூமியில் வாழ்ந்திருக்கக் கூடும் என்றாலும், இப்போது நீங்கள் ஒரே நபராக, முதல் மனிதராக இருக்கும் நிலையில், அண்ணாந்து மேலே பார்க்கிறீர்கள். சூரியன் பிரகாசிக்கிறது, அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அது உங்களைச் சுட்டெரிக்கிறது. திடீரென்று ஒரு பெரு முழக்கம், தொடர்ந்து இடிச்சத்தம் கேட்கிறது, பிறகு மழை பொழிகிறது. இது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. திடீரென்று புயல் காற்று வீசுகிறது. திடீரென்று எரிமலை வாய் திறக்கிறது. திடீரென்று ஒரு நாள் பூமி அதிருகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பம் எது, முடிவு எது என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு சிறிய உயிரினமாக இருக்கிறீர்கள். “எனக்கு என்ன நிகழும்?” என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஆகவே ஒரு திரைக்குப் பின்னால் தொடர்ந்து அச்சம் குடி கொண்டுள்ளது. அந்தத் திரையை நீங்கள் சிறிது விலக்கினாலும், அச்சவுணர்வு தன் முகத்தைக் காட்டும்.

உங்களை சிறிய உடலாக மட்டும் அடையாளம் கொண்டு நீங்கள் வாழ்ந்திருக்கும்வரை, அச்சம் தவிர்க்க முடியாதது. உங்கள் உடல் எப்போதும் கணத்துக்குக் கணம் ஆபத்தில் இருக்கிறது. எந்த நேரத்திலும் இந்த உடல் பிரிந்து விழலாம். ஆகவே உங்கள் வாழ்க்கையை ஒரு உடல் என்ற நிலையில்தான் நீங்கள் உணர்கிறீர்கள் என்றால், அதன் விளைவு அச்சம்தான். உங்களது வாழ்வின் அனுபவம், உடல் தன்மையைக் கடந்தால் மட்டுமே, நீங்கள் அச்சத்திலிருந்து விடுபட முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

உங்கள் வாழ்வின் அனுபவம் உடல் தன்மையின் வரையறைகளைக் கடந்தால், உடல் தன்மையைத் தாண்டிய ஒரு பரிமாணம் உங்கள் அனுபவத்தில் வரும். அப்படி உள்நிலை அனுபவங்கள் உங்களுக்கு விழிப்புணர்வாக நிகழும்போது, உங்களுடைய அமைதி, உங்களுடைய ஆனந்தம், உங்களுடைய பரவசம் அனைத்துமே 100% உங்களுடையதாகிறது. வேறு எவரும் அல்லது வேறு எதுவும் அதற்கு அச்சுறுத்தலாக இருக்க முடியாது. நீங்கள் உங்களையே இந்த மாதிரி உருவாக்கிக்கொண்டால், “எனக்கு என்ன நிகழ்ந்துவிடுமோ?” என்ற கேள்வி மறைந்து போகும். இந்தக் கேள்வி மறைந்துவிட்டாலே, அச்சமும் மறைந்துவிடும்.

“ஆனால் அது மிகவும் கடினமான செயல்போலத் தோன்றுகிறதே. அப்படிப்பட்ட ஒரு விஷயம் என் வாழ்க்கையில் எனக்கு நிகழுமா? அதற்கு நான் இமாலயக் குகைகளுக்குச் செல்ல வேண்டுமா?” தினமும், சிறிதளவு நேரத்தை மட்டும் மூலதனம் செய்ய நீங்கள் சம்மதித்தால், அந்த நிலையை நீங்கள் அடையமுடியும். அதற்காக உங்கள் தற்போதைய வாழ்க்கை முறையை விட்டு, வேறு எங்கோ செல்ல வேண்டிய தேவையில்லை. இப்போது இங்கே என்ன பிரச்சனை என்றால், மூலதனம் செய்யாமலேயே நீங்கள் பலனை எதிர்பார்க்கிறீர்கள்.

தினமும் 25 நிமிடங்களை மூலதனம் செய்ய நீங்கள் முன்வந்தால், அது பலனளிக்கும். ஒருமுறை இந்த அச்சம் காணாமல் போய்விட்டால், பிறகு வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான பரிமாணமாக உருவெடுக்கிறது. இந்த பயம் மறைந்தால்தான் பிழைப்புக்கான உந்துதலை குறைத்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்வின் உயர்ந்த சாத்தியக் கூறுகளை உண்மையாகத் தேடவும், உங்கள் ஆற்றலை உண்மையாக வெளிப்படுத்தவும் முடியும். ‘எனக்கு என்ன நேருமோ?’ என்ற பயம் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் அரைகுறையாகத்தான் அடியெடுத்து வைப்பீர்களேயன்றி, முழுவீச்சில் அடியெடுக்க மாட்டீர்கள். நான் போதனை பற்றியோ அல்லது நம்பிக்கை முறை பற்றியோ பேசிக் கொண்டிருக்கவில்லை. நான் ஒரு தொழில்நுட்பம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். உள்முகமாகத் திரும்பி, உங்களைப் பற்றிய சில விஷயங்களை நிர்ணயிப்பதற்கான ஒரு எளிய வழி குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் உங்களுக்குள் வாழ்க்கை ஒரு புதிய பரிமாணத்தை அடையும்.

உங்கள் ஊரிலும், அருகாமையிலும் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறும் ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களைப் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.​