குறுகிய கண்ணோட்டம் கொண்ட சிலர், அப்பனைப் போலவே வந்து வாய்த்திருக்கிறான் என குழந்தைகளை மட்டம் தட்டுவதைப் பார்க்கிறோம். அப்பாவைப் போலவேதான் மகன் இருப்பான் என்ற நினைப்பு சரியா? இங்கே சத்குரு என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்!

சத்குரு:

வாத்தியார் பிள்ளை மக்கு என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்தோ, அதே போலத்தான் இதுவும். இதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அப்பன் திருடன் என்பதால், அவன் மகனையும் திருடனாக நினைப்பது ஒருதலைப்பட்சமான முடிவு.

உண்மையில் இந்த வாசகம் தந்தைகளுக்கு ஓர் எச்சரிக்கையாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உதாரணமாகத் திகழ்வது முக்கியம்.

குடிகாரத் தந்தை தன் மகன் குடிக்கும்போது அவனைத் தட்டிக் கேட்க முடியாது. பொய் சொல்லி வாழ்க்கையை நடத்தும் தகப்பன், மகனை உண்மை சொல்பவனாக வளர்க்க முடியாது. மற்றவரை மதிக்கத் தெரியாத அப்பாவால், மகனிடத்தில் மதிப்பு பெற முடியாது. தந்தையின் அருகாமையில், அவரைப் பார்த்துப் பார்த்து மகன் வளரும் சூழ்நிலைகளில், தந்தையின் குணங்களில் சில, மகனிடத்து ஒட்டிக்கொண்டிட வாய்ப்புகள் உண்டு.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உதாரணமாகத் திகழ்வது முக்கியம்.

வீட்டில் ஒரு குழந்தை உருவாகையில், அதை எப்படி வளர்ப்பது என்று எடுத்துக் கொள்ளும் கவனத்தை விட, நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்ற கவனம் தான் இன்னும் அதிகமாக அவசியம். உங்கள் வளர்ப்பில், உங்களின் குணங்கள் அவனிடம் தொற்றிக் கொள்வதற்கு தான் வாய்ப்புகள் அதிகம். நீங்கள் கடைபிடிக்கும் நெறிகள், உங்கள் குணம், உங்கள் பழக்கவழக்கங்கள், பண்பாடுதான் உங்கள் வாரிசுகள் மூலமும் தொடரும்.

நீங்கள் ஒழுக்கமற்றவராக இருந்துகொண்டு, உங்கள் மகனை ஒழுக்கமாயிருக்கச் சொல்லி வற்புறுத்தினால், அது எடுபடாது. அடுத்த தலைமுறைகளை உருவாக்குபவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் அறிவுரை வார்த்தைகளால் மட்டும் குழந்தையைச் செம்மைப்படுத்த முடியாது. நீங்கள் ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டினால்தான், அது குழந்தைகளிடத்தில் பிரதிபலிக்கும்.

இதை உணர்த்தும் விதமாக, தந்தைகளுக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மற்றபடி, தந்தைகளை வைத்து பிள்ளைகளைப் பற்றி தீர்ப்பே எழுத நினைப்பது முட்டாள்த்தனம். அபத்தம்.

ஹிட்லரின் அப்பா இன்னொரு ஹிட்லராக இருக்கவும் இல்லை. புத்தரின் அப்பா ஒரு புத்தராக வாழ்ந்த சரித்திரமும் இல்லை.

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!