ஜென்கதையில் உள்ள பிழை... கண்டறிய இயலாத சீடர்கள்!
உண்மையான கருணை என்பது பாரபட்சம் பார்க்காது. ‘இவனுக்குக் கருணை காட்டலாம், அவன் அதற்குத் தகுதியானவன் அல்ல’ என்று நினைத்த மாத்திரத்திலேயே கருணை என்ற அந்தஸ்தை அது இழக்கிறது. உதவி என்பதற்கு பாரபட்சம் இருக்கலாம். ஆனால், கருணைக்கு இருக்க முடியாது.
ஜென்னல் பகுதி 43
ஜென் மடத்தில் குருவைச் சுற்றி சீடர்கள் கூடியிருந்தனர். “நான் சொல்லும் கதையைக் கவனமாகக் கேளுங்கள்” என்று குரு சொல்லலானார்:
"ஒருமுறை புத்தர் கண்மூடி அமர்ந்திருந்தபோது, ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று பெரும் கூக்குரல் ஒன்றைக் கேட்டார். அது நரகத்தில் பாழுங்கிணற்றில் விழுந்து தத்தளிப்பவனின் குரல் என்று உணர்ந்தார். வாழ்ந்த காலத்தில் அவன் கொலை, கொள்ளை என்று பல குற்றங்களைப் புரிந்தவன் என்பதால் இந்த தண்டனை அவனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அவர் புரிந்துகொண்டார். அவன் மீது கருணை கொண்டு உதவ விரும்பினார்.
அவன் வாழ்நாளில் ஏதாவது ஒரு நற்செயல் செய்திருக்க மாட்டானா என்று கவனித்தார். ஒருமுறை சிலந்தி ஒன்றை மிதிக்காமல் அவன் கவனமாகத் தாண்டிச் சென்றிருந்தான்.
புத்தர் அந்தச் சிலந்தியை அவனுக்கு உதவச் சொன்னார்.
தான் வலைபின்னும் உறுதியான இழையைச் சிலந்தி நீளமாக அந்தக் கிணற்றுள் இறக்கியது.
அந்த இழையைப் பற்றிக் கொண்டு அவன் மேலேற ஆரம்பித்தான். அவனோடு தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த வேறு சிலரும் அதே இழையைப் பிடித்துக் கொண்டு மேலேறப் பார்த்ததும், அவன் பதற்றமடைந்தான்.
“அது எனக்காக அனுப்பப்பட்ட உதவி. இத்தனை பேர் பற்றிக்கொண்டு தொங்கினால், இழை அறுந்துவிடும். எல்லோரும் விலகுங்கள்” என்று கோபமாகச் சொன்னான். அந்தக் கணத்தில் இழை அறுந்தது. அவன் மீண்டும் கிணற்றில் விழுந்தான்.
‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று மறுபடியும் கத்தலானான். புத்தர் இந்த முறை அவன் கூக்குரலைப் பொருட்படுத்தவில்லை.
கதையைச் சொல்லி நிறுத்திய குரு “இந்தக் கதையில் என்ன குற்றம் இருக்கிறது?” என்று சீடர்களிடம் கேட்டார்.
Subscribe
“மனிதனின் பாரத்தைத் தாங்கும் சக்தி சிலந்தி இழைக்கு இல்லை” என்றான், ஒரு சீடன்.
“சொர்க்கம், நரகம் என்று எதுவும் இல்லை” என்றான், மற்றொருவன்.
“புத்தர் கண்மூடி தியானத்தில் இருக்கையில் அவருக்கு வேறு ஒலி கேட்காது” என்றான், வேறொருவன்.
“எல்லோரும் முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டீர்கள்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு குரு எழுந்து போய்விட்டார்.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
உண்மையான கருணை என்பது பாரபட்சம் பார்க்காது. ‘இவனுக்குக் கருணை காட்டலாம், அவன் அதற்குத் தகுதியானவன் அல்ல’ என்று நினைத்த மாத்திரத்திலேயே கருணை என்ற அந்தஸ்தை அது இழக்கிறது. உதவி என்பதற்கு பாரபட்சம் இருக்கலாம். ஆனால், கருணைக்கு இருக்க முடியாது.
நரகத்தில் தவிக்கும் ஒருவனை புத்தர் காப்பாற்ற விரும்பினால், அவனுடைய ஒரு சுயநலச் செயலால் தன் மனதை மாற்றிக்கொண்டிருக்க மாட்டார்.
புண்ணியம், பாவம், சரி, தவறு என்பதெல்லாம் ஒழுக்க விதிகள் கொண்டு எழுதப்பட்டவை.
விதிமுறைகள், சட்டதிட்டங்கள், போதனைகள் இவற்றின் வீச்சுக்கு அப்பாற்பட்டது கருணை. யாருக்கு வழங்கலாம், யாருக்கு வழங்கக் கூடாது என்று கருணையால் தேர்ந்தெடுக்க இயலாது.
ஜென் குரு சீடர்களிடம் சொன்னது யாரோ கற்பனை செய்த ஒரு நீதிபோதனைக் கதை. மற்றவர்களைப் பற்றி கவலையில்லாமல் முற்றிலும் சுயநலமாக விளங்குபவனை புத்தர் கூடக் காப்பாற்ற மாட்டார் என்று சொல்லி சமூகத்தின் செயல்முறைகளை நிர்ணயிக்கவும், வழி நடத்தவும் பார்க்கும் கதை இது.
உண்மையான ஞானி அவசியமும், வாய்ப்பும் இருக்கும்போது, கருணை காட்டத் தயங்கமாட்டார். தேர்ந்தெடுப்பது, நிராகரிப்பது என்ற நிர்ப்பந்தங்களிலிருந்து விடுபட்டு, முற்றிலும் சுதந்திரமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றவரே புத்தராக இருக்க இயலும்.
ஆனந்தமான நிலையில் இருப்பவரால் கருணையான நிலையில்தான் இருக்க முடியும். கசப்பும், காமமும் இருக்கும் இடத்தில்தான் புத்தி பாரபட்சம் பார்க்கும். ஆனந்தமான நிலையில், புத்தியைத் தாண்டியிருப்பதால் தான் ஒருவர் ‘புத்தா’ என்று அழைக்கப் பெறுகிறார்.
மற்ற மதங்களைப்போல, புத்தருடைய மதத்தைப் பரப்ப வேண்டும் என்ற முயற்சியில், இம்மாதிரி கதைகளை இட்டுக்கட்டி, சில பௌத்த மதவாதிகள், நீதிபோதனைகளை மக்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்.
அதனாலேயே இக்கதையில் குற்றம் இருப்பதாக ஜென்குரு சொன்னார்.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418