சத்குரு:

 

நாம் இயேசு என்று குறிப்பிடுவது 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அல்ல; மாறாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கக்கூடிய சக்தியின் சாத்தியக் கூறுகள் பற்றியதாகும். அவனுக்குள் பரிமளிக்கும் இந்த குணத்தை மலரச் செய்வது இன்றியமையாத ஒரு விஷயமாகும். ஏனெனில் இன்றைய உலகம் மதத்தின் பெயரால் ஒருவரின் வாழ்க்கையை இன்னொருவரைக் கொண்டு ‘முடித்து’விட நினைக்கிறது. தெய்வீகத் தன்மையை அடைய வேண்டும் என்ற முனைப்பில் நாம் நம்மிடமுள்ள மனிதத் தன்மையை இழந்து கொண்டு இருக்கிறோம்.

கடவுளின் சாம்ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கும் ஆன்மீக நுழைவாயில் எங்கோ இருக்குமானால் அந்த பயணத்திற்கு ஆயத்தமாக பலர் முன்வர மாட்டார்கள். ஆனால் அந்த வழியானது இங்கே, இப்போதே திறந்து இருக்கும்போது அதைத் தவறவிடுவது மிகப்பெரிய சோகம் அல்லவா? கடவுளின் சாம்ராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கும்போது அதை நீங்கள் தேடிக் கண்டடைய வேண்டியது முக்கியமானதாகும். இதை இயேசு மிகத் தெளிவாக, எளிமையாக விளக்கியுள்ளார்.

 

இயேசுவின் போதனை

 

உறவுகளின் பாச உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் மிக முக்கியமான போதனையாகும். அவ்வாறு நடுநிலைத் தன்மையோடு இருப்பவர்களால்தான் கடவுளின் சாம்ராஜ்ஜியம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள முடியும். கடவுளின் சாம்ராஜ்ஜியம் உனக்குள்தான் இருக்கிறது. வேறெங்கும் இல்லை என்பதை இயேசு தெளிவாகச் சொன்னார். ஆரம்ப காலங்களில் அவர், “நான் உங்களை கடவுளின் சாம்ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்வேன்” என்று பிரசங்கம் செய்தார். ஆனால் அவரைப் பின்பற்ற நிறைய மக்கள் கூடிய பின்பு கடவுளின் சாம்ராஜ்ஜியம் உங்களுக்குள்தான் இருக்கிறது என்று தெளிவாக்கினார். இந்த செய்திதான் அவரது எல்லா போதனைகளின் மையப்புள்ளி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

99% மக்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய (இயேசு குறிப்பிட்ட) இந்த அற்புத ஆற்றலை தவற விட்டுவிடுகிறார்கள். கடவுளின் சாம்ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கும் ஆன்மீக நுழைவாயில் எங்கோ இருக்குமானால் அந்த பயணத்திற்கு ஆயத்தமாக பலர் முன்வர மாட்டார்கள். ஆனால் அந்த வழியானது இங்கே, இப்போதே திறந்து இருக்கும்போது அதைத் தவறவிடுவது மிகப்பெரிய சோகம் அல்லவா? கடவுளின் சாம்ராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கும்போது அதை நீங்கள் தேடிக் கண்டடைய வேண்டியது முக்கியமானதாகும். இதை இயேசு மிகத் தெளிவாக, எளிமையாக விளக்கியுள்ளார்.



“நம்பிக்கை” யைப் பற்றி…

 

நமக்குள் இருக்கும் சிருஷ்டியின் மூலமான இந்த பரிமாணத்தை அடைவதற்கு விஞ்ஞான பூர்வமான வழிகள் உள்ளன. நாம் சுமக்கும் இந்த உடல் அதன் உள்ளுக்குள் இருந்துதான் உருவாக்கப்பட்டுள்ளது. அதைத் தேடிப் பிடிக்கும் உள்முகப் பயணத்தைத்தான் நாம் இவ்வாறு குறிப்பிடுகிறோம். இயேசு கிறிஸ்துவுக்கு அவருடைய காலத்தில் இந்த விஞ்ஞானபூர்வமான வழிகளை விரிவாக ஆராய்ந்து பார்க்க நேரம் அமையவில்லை. எனவேதான் ‘நம்பிக்கை’ என்ற பரிமாணத்தின் மூலம், இலக்கை எட்டிவிடுகின்ற உடனடி வழியை அவர் பரிந்துரைத்தார்.

தியாகம், பக்தி, அன்பு போன்ற பல நற்பண்புகள் பற்றி இயேசு கூறியிருந்த போதிலும் “தேவனின் சாம்ராஜ்ஜியம் நமக்குள்தான் இருக்கிறது” என்பதே அவரது போதனையின் அடித்தளம்.

குழந்தைகள்தான் கடவுளின் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைவார்கள் என்று இயேசு குறிப்பிட்டது உண்மையில் சின்னஞ்சிறு குழந்தைகளை குறிப்பிட்டுச் சொன்னதல்ல. மாறாக குழந்தை மனதுள்ள மனிதர்களைத்தான். குழந்தைகளைப் போல முன் முடிவுகள் இல்லாத, பாரபட்சமற்ற மற்றும் களங்கமற்ற மனதுடையவர்களைத்தான். எது குறித்தும் உங்களுக்கு முன்னமே தீர்மானம் இருக்குமானால் அது பெரும்பாலும் தவறாகவே முடிந்துவிடுகிறது. ஏனெனில் நகர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கையின் நிகழ்வுகள் உங்கள் தீர்மானங்களுக்கோ, முடிவுகளுக்கோ கட்டுப்படுவதில்லை. தீர்மானங்களோடு பயணப்படுபவர்களுக்கு வாழ்வோ, வாழ்வின் மூலமோ பிடிபடுவதில்லை. உங்கள் முடிவுகளின் சுமையை கீழே இறக்கி வைத்துவிட்டு நடந்தால் வாழ்க்கைப் பயணம் எளிதாகிவிடுகிறது.

 

யார் இயேசுவுடன் அமர்வார்கள்?

 

அவருடைய வாழ்வு முடியும் தருணத்தில், இயேசுவை கொன்றுவிடப் போகிறார்கள் என்பது முடிவாகிவிட்ட பிறகு, அவருடைய சீடர்களின் மனங்களில் இருந்த ஒரே கேள்வி அவர் உடம்பை விட்டு பிதாவின் சாம்ராஜ்ஜியத்திற்கு சென்றவுடன் கடவுளின் வலதுபுறம் அமர்வாரா என்பதுதான். நாம் எங்கு அமரப் போகிறோம்? நமக்குள் எவர் அவரது வலக்கரத்தின் பக்கம் இருக்கப் போகிறோம்? என்ற தவிப்போடு சீடர்கள் இருந்தார்கள். அந்த சீடர்களின் பிதாமகன், கடவுளின் குழந்தையானவர் மிகவும் கொடுமையானதொரு மரணத்தை தழுவ உள்ள நிலையிலும் சீடர்களின் கேள்வி அவர் எங்கு சென்றமர்வார் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் இயேசுவின் தன்மையானது அவர் எங்கு நோக்கி இழுக்கப்பட்டாலும் ஒரேவிதமாகத்தான் இருந்தது. அவர் நினைத்த விதமாகவே அவரது பயணமும் அமைந்தது.

எனவேதான் அவர் சொன்னார், “இங்கே முதலில் நிற்பவர்கள் கடவுளின் சாம்ராஜ்ஜியத்தில் கடைசியாக இருப்பீர்கள். இங்கு கடைசியில் நிற்பவன் அங்கே முதலிடத்தில் இருப்பான்.” முண்டியடித்துக் கொண்டு சொர்க்கத்திற்கு வழிதேடும் வரிசை எண்ணத்தை அவர் உடைத்து எறிந்தார். எனவே முண்டியடித்துக் கொண்டு முக்தியடைய முயல்வதல்ல நாம் இங்கு விவாதிப்பது. மனிதனின் உள்நிலையில் மாசற்று இருக்கும் தன்மைதான் உண்மையில் வேண்டும்.

மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்க்கை எந்தவிதமாக இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் படைப்பின் மூலம் எனது உள்ளேதான் இருக்கிறது. அந்த மூலக்கூறு சரியாக செயல்பட்டால் சமாதானம் நிலவும் என்பதே அவரது போதனைகளின் அடிப்படை. தியாகம், பக்தி, அன்பு போன்ற பல நற்பண்புகள் பற்றி இயேசு கூறியிருந்த போதிலும் “தேவனின் சாம்ராஜ்ஜியம் நமக்குள்தான் இருக்கிறது” என்பதே அவரது போதனையின் அடித்தளம். மலர்வதற்கான சாத்தியக்கூறு உள்ளே இருப்பின் அதை அடைவதற்கான வழியே ஆன்மீகப் பயிற்சிகள்.

ஆன்மீக முயற்சி களம் என்பது குழுவோ, கூட்டமோ, தந்திரமோ, சபைகளோ அல்ல, அது தனிமனிதனின் உள்ளார்ந்த தேடுதல்; அதுவே “யோகா”, கீழை நாடுகளின் ஆன்மீக வழிமுறைகள், எல்லாம். துரதிருஷ்டவசமாக இயேசுவின் மிக முக்கியமான இந்த போதனை மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அவருடைய வார்த்தைகளில் ஒளிந்திருந்த “ஜீவனை” குறிப்பிட்ட மக்களுக்கு என்றில்லாமல் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கான நேரம் இதுதான்.