ஏன் அவர் பெயர் கணபதி?
அந்த நாள் முதல் இந்த நாள் வரை அனைத்து காரியங்களைத் துவக்கும்போதும் முதலில் செய்வது கணபதி பூஜைதான். யானை முகம் கொண்டவராக சித்தரிக்கப்படும் இவர் கணபதியா அல்லது கஜபதியா? கணபதிக்கு இந்தப் பெயர் வரக் காரணம் என்ன? குட்டிக் கதை மூலம் விளக்குகிறார் சத்குரு...
அந்த நாள் முதல் இந்த நாள் வரை அனைத்து காரியங்களைத் துவக்கும்போதும் முதலில் செய்வது கணபதி பூஜைதான். யானை முகம் கொண்டவராக சித்தரிக்கப்படும் இவர் கணபதியா அல்லது கஜபதியா? கணபதிக்கு இந்தப் பெயர் வரக் காரணம் என்ன? குட்டிக் கதை மூலம் விளக்குகிறார் சத்குரு...
சிவன் பார்வதியை மணந்து கொண்டபோது, அவளுடன் அவர் அவ்வப்போது மட்டுமே வாழ்ந்து வந்தார். சில நேரங்களில் அவர் ஒரு கிரஹஸ்தர் போலவும், மற்ற நேரங்களில் ஒரு கடுந்துறவியைப் போலவும் காணப்பட்டார்.
பார்வதியோடு சில காலம் இருந்துவிட்டு, திடீரென்று சில காலம் மறைந்துவிடுவார். பிறகு மீண்டும் அவர் மானசரோவர் ஏரிக்கரைக்கு வருவார். அவருடைய நண்பர்களான கணங்களுடன், பத்து பனிரெண்டு வருடங்களுக்கு அவர் அப்படி சென்றுவிடுவார்.
புராணங்களில் கணங்களை, நேர்த்தியற்ற உருவமுடைய உயிரினங்கள் என்றும், யாராலும் புரிந்து கொள்ள முடியாத அபஸ்வரமான ஒலிகளை எந்நேரமும் எழுப்பிக் கொண்டிருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் கைகால்களில் எலும்புகள் கிடையாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சிவன் ஒரு யக்ஷன் என்பதால் பார்வதியால் சிவனின் குழந்தையை அவளது கருவில் சுமக்க முடியவில்லை. அவரால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்ணின் மூலம் ஒரு குழந்தையை உருவாக்க முடியாது. இதனால் பார்வதியின் தாய்மைக்கான ஏக்கம் மேலோங்கி இருந்தது.
அவள் மானசரோவரின் கரைகளில் தனிமையில் இருந்தபோது, அவள் உடல் மேல் பூசியிருந்த சந்தனத்தை எடுத்து, ஏரிக்கரையில் இருந்த மண்ணுடன் குழைத்தாள். அந்தக் கலவையை ஒரு குழந்தை போல் உருவம் பெறச் செய்தாள். தனது யோக சக்தியின் மூலம் அதற்கு உயிர் கொடுத்தாள். அந்த குழந்தை உயிர் பெற்றது, வளர்ந்தது. அந்தக் குழந்தையை அவள், தான் பெற்ற குழந்தையாகவே பாவித்து வளர்த்தாள்.
Subscribe
அந்த சிறுவனுக்கு பத்து வயதாகி இருந்தபோது, சிவன் தனது கூட்டத்துடன் மீண்டும் மானசரோவர் வந்து சேர்ந்தார். அப்போது அந்த சிறுவனை வெளியே காவலுக்கு வைத்துவிட்டு, பார்வதி குளித்துக் கொண்டிருந்ததாள். அந்த சிறுவனும் கையில் ஈட்டியுடன் தன் தாய்க்கு காவல் காத்திருந்தான்.
சிவன் வந்தபோது, அந்த சிறுவனை கவனிக்காமல் நேரே உள்ளே செல்ல முற்பட்டார். அதுவரையில் அவரை பார்த்திராத இந்த சிறுவன் அவரை தடுக்க முற்பட்டான். "நீங்கள் உள்ளே செல்ல முடியாது" என்று உரக்க கூவினான்.
சிவன் அவனைப் பார்த்து, "நீ யார்?" என்று கேட்டார். அதற்கு அவன், "நான் யார் என்பது முக்கியமில்லை, நீங்கள் உள்ளே செல்ல முடியாது" என்று கூறினான். சிவன் உடனே தனது மழுவை (கோடாலி) எடுத்து அந்த சிறுவனின் தலையை வெட்டி வீழ்த்தினார். அந்த சிறுவன் செத்து விழுந்தான்.
அவள் பிள்ளையின் வீரத்தை அறிந்திருந்த பார்வதிக்கோ சிவன் அவனை மீறி உள்ளே வந்தது சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரிடம், "எப்படி உள்ளே வந்தீர்கள்?" என்று வினவினாள்.
"அவன் உங்களை உள்ளே நுழைய அனுமதித்தானா?" என்று கேட்டாள்.
"யார் என்னை உள்ளே அனுமதிக்க வேண்டும்?" என்றார் சிவன்.
"என் மகன். அவன் உங்களை உள்ளே அனுமதித்தானா?" மீண்டும் கேட்டாள்.
"எந்த மகன்? நான் அவன் தலையைக் கொய்துவிட்டேனே?" என்றார் சிவன்.
இதைக் கேட்ட பார்வதி துக்கத்தில் மூழ்கினாள். "எப்படி அவன் தலையை நீங்கள் சீவலாம்? அவன் என் மகன். நான் அவனுக்கு உயிர் கொடுத்தேன்" என்று சிவன் மேல் அடங்கா சினம் கொண்டாள். இதற்கு ஏதாவது செய்யுமாறு அவள் சிவனை வற்புறுத்தினாள். "எப்படியாவது அவனை மீண்டும் உயிர்ப்பித்துவிடுங்கள்" என்று கதறினாள்.
சிவன் அவனை உயிர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவனுடைய மூளை இறந்துவிட்டதால், சிறுவனுக்குப் பொருத்துவதற்கு சிவனுக்கு இன்னொரு தலை தேவைப்பட்டது. கணங்களின் தலைவனாக இருந்தவரின் தலையை எடுத்து, சிவன் அந்த சிறுவனின் உடலின் மேல் பொருத்தினார். இப்படித்தான் அந்த சிறுவன் கணங்களின் தலைவனாக ஆனான்.
அவனுடைய முகத்தில் எலும்புகள் இல்லாமல் ஒரு கை இருந்தது. சிவன் அவனுக்கு கணபதி என்று பெயரிட்டார்; அவனை கணங்களின் தலைவனாக ஆக்கினார். காலப்போக்கில் மக்கள் அவனுடைய முகத்தில் இருந்த ஒரு கையைப் பற்றி பேசியதைக் கேட்ட ஓவியர்கள், அதை ஒரு யானை முகம் என்று கற்பனை செய்து, யானைத் தலையை வரைந்துவிட்டனர். இந்த 'தலை மாற்றத்தினால்' கணபதியின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும்.
திடீரென கணபதி மிகவும் புத்திசாலியாகிவிட்டார். அவர் பிருஹஸ்பதி ஆகிவிட்டார்.
பிருஹஸ்பதி என்றால் முழுமையான அறிவுடையவர் என்று பொருள். இந்த நாட்டில் இருக்கும் அத்தனை இலக்கியங்களையும் எழுதியவர் பிருகஸ்பதிதான்.
நாட்டில் நாம் காணும் அத்தனை அறிவு வளங்களையும் ஒருங்கிணைத்தவர் அவர்தான். அவை அனைத்தையும் அவர் கிரஹித்துக் கொண்டு எழுதி வைத்தார். அவருடைய ஆசிகள் உங்களுக்குத் தேவை ஏனென்றால், அவர்தான் அனைவரிலும் சிறந்த புத்திசாலியாக கருதப்படுகிறார். மனித உடலும், வேற்றுகிரக உயிரினத்தின் தலையும் உடையவர் அவர். இன்றும் கூட ஒரு குழந்தைக்கு கல்விப் பயிற்சியைத் துவக்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் கணபதியைத்தான் வழிபட வேண்டும்.
இந்த அற்புதமான பண்டிகை இத்தனை ஆயிரம் வருடங்களாக இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. கணபதி இந்தியாவின் மிகப் பிரபலமான கடவுள்களில் ஒருவராகிவிட்டார்.
அவர் மிகவும் புத்திசாலியாக, மிகப் பெரிய அறிஞராக இருந்தாலும், அவருக்கு உணவு என்றால் கொள்ளை விருப்பம். பொதுவாக அறிஞர் பெருமக்கள் ஒல்லியாகத்தான் இருப்பார்கள். ஆனால் நன்றாக சாப்பிட்டு கொழுகொழுவென்று இருக்கும் இந்த அறிஞரைப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.