சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 2

திருமணம் ஆகாதவர்கள் எல்லோரும் “நான் இன்னும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறேன்” எனச் சொல்லிக் கொள்வதுண்டு. உண்மையில், பிரம்மச்சரியம் என்பது எப்படிப்பட்டப் பாதை? பிரம்மச்சாரியாக இருப்பதென்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அமைகிறது இந்த உரையாடல். இந்தித் திரைப்பட இயக்குனர் திரு.சேகர் கபூர் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடியதிலிருந்து...சேகர் கபூர்:
சத்குரு, நேற்று பிரம்மச்சாரிகள் மந்திர உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு சென்றிருந்தேன். அவர்களின் உச்சாடணம் மிகவும் தனித்தன்மையாக இருந்தது. தூரத்தில் இருக்கும்போதே அந்த சக்திநிலை முகத்தில் அடிப்பது போல் வலிமையாக இருந்தது. எனவே பிரம்மச்சரியம் என்றால் என்ன என்பதை சொல்லுங்கள். பிரம்மச்சரியம் என்றால் ஒவ்வொன்றையும் மறுப்பது என்ற அளவில்தான் நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். மேலும் இங்கு ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் ஒன்றாக ஒரே ஆசிரமத்தில் இருக்கிறார்கள்.
இறுதிநிலைக்கான பாதையில் அவர்கள் இருப்பதால் மற்றவர்கள் முக்கியம் என நினைக்கும் விஷயங்களில் கூட மனதை செலுத்தாமல் ஒரே நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.

சத்குரு: (சிரிக்கிறார்) யாரோ எவரெஸ்ட் ஏறத் திட்டமிடுகிறார்கள். அதற்காக வருடக்கணக்காகத் திட்டமிட்டு உழைக்கிறார்கள். பிறகு சாதாரண வசதிகளைக் கூடத் துறந்து, குடும்பம், நண்பர்கள் ஆகியோரை விட்டு விலகி, அந்த கடும் பனியில், உயிரை துச்சமாக மதித்து மலை ஏறுகிறார்கள்.

எவரெஸ்ட் ஏறுவதற்காக மற்றவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதியையும் இவர்கள் துறக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் உண்மையிலேயே ஒவ்வொன்றையும் தங்களுக்கு மறுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது நீங்கள் கற்பனையும் செய்ய முடியாத ஒரு சாத்தியத்தை, உச்சத்தை, தனது வாழ்க்கையில் உண்மையாக்கிக் காட்டுவதாக நினைப்பீர்களா? எப்படி நினைப்பீர்கள்? உண்மையில், இதுதான் பிரம்மச்சரியம்.

‘பிரம்மன்’ என்றால் உச்சநிலை. ‘சாரியா’ என்றால் வழி. எனவே பிரம்மச்சரியம் என்றால் உச்சநிலைக்கான பாதை. எனவே பிரம்மச்சாரிகள் உச்சநிலைக்கான பாதையில் இருக்கிறார்கள். அல்லது வேறு விதமாக சொல்வதானால், அவர்கள் தனது வாழ்க்கையில் சிறிய விஷயங்களுடன் திருப்தி அடைந்து விடுவதில்லை. எனவே வாழ்க்கையில் சாதனை நிகழ்த்துபவர்கள் எல்லோருமே மற்றவர்கள் அனுபவிக்கக் கூடிய சிறியசிறிய இன்பங்களை மறுப்பவர்கள்தான். நீங்களே ஒரு சினிமா தயாரிக்கும்போது, சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இருப்பீர்கள். குடும்பத்தினருடன் மற்றவர்கள்போல் பொழுதைக் கழிக்க நேரம் இருக்காது. இல்லையா?

சேகர் கபூர்: ஆமாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இதுதான் உண்மை. பிரம்மச்சரியமும் இதே போல்தான். இறுதிநிலைக்கான பாதையில் அவர்கள் இருப்பதால் மற்றவர்கள் முக்கியம் என நினைக்கும் விஷயங்களில் கூட மனதை செலுத்தாமல் ஒரே நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.

சேகர் கபூர்: பிரம்மச்சாரிகளிடம் நான் இன்னொரு விஷயமும் கவனிக்க முடிந்தது. உடலளவில் கூட அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதைப் பார்த்தேன். நான் தூங்கப் போகும்போது கூட அவர்கள் செயல்கள் செய்தவாறு உள்ளனர், அதேபோல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து புத்துணர்வுடன் மீண்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

நான் அவர்களுடன் ஃபுட்பால் விளையாடினேன். அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த விளையாட்டு வீரர்களாக இருந்தார்கள். (சத்குரு சிரிக்கிறார்). அவர்கள் என்னை விட இளையவர்கள்தான். இருந்தாலும் நான் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுபவர்களை வெளியில் நெருக்கமாக கவனித்திருப்பதால் சொல்கிறேன். மேலும் சாப்பிடும்போது கூட இவர்கள் குறைவாகத்தான் சாப்பிடுவதைக் கவனித்தேன். எனவே இவர்களுக்கு இந்த சக்தி எங்கிருந்து வந்தது?

சத்குரு: இப்போது உங்களுக்கு இருக்கும் சக்தி அனைத்தும் நீங்கள் உண்ணும் உணவிலிருந்து மட்டும் வரவில்லை. உங்கள் சக்தியில் 60 சதவீதத்திற்கும் மேல் சூரியஒளி, காற்று மற்றும் நீர் ஆகியவற்றிலிருந்துதான் கிடைக்கிறது. நான் இதைச் சொன்னால் மக்கள் மிகவும் தவறாகத்தான் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இந்த மனித இனம் தவறான திசையில்தான் தனது சக்தியை செலவு செய்து கொண்டிருக்கிறது. நாம் எப்போதும் சக்தியை ஊட்டச்சத்து என்ற அளவில் மட்டுமே பார்க்கிறோம். ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு இரும்புச் சத்து இருக்கிறது, எவ்வளவு மெக்னீசியம் இருக்கிறது, எவ்வளவு கால்சியம் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சேகர் கபூர்: மேலும் அதில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருகிறது.

சத்குரு:
அது தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. ஊட்டச்சத்து என்பதை நான் குறைவாக மதிப்பிடவில்லை. ஊட்டச்சத்து நிச்சயமாகத் தேவைதான். ஆனால் உங்கள் சக்திநிலையை அது நிர்ணயிக்கப் போவதில்லை. சாப்பிடும் உணவை சக்தியாக மாற்றக்கூடிய உங்கள் திறன்தான் உங்கள் ஆற்றலை நிர்ணயிக்கிறது.

நீங்கள் முன்பு அம்பாசடர் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது அது ஒரு லிட்டருக்கு 5 கி.மீட்டர் கொடுத்தது. அது அப்போது சரியாக இருக்கலாம். ஆனால் அது இன்றைக்கு ஒரு குற்றம். ஏனென்றால் அதே ஒரு லிட்டருக்கு 40 கி.மீட்டர் கொடுக்கக்கூடிய திறனுள்ள கார்கள் இன்று வருகின்றன. எனவே பிரம்மச்சரியம் என்பது சக்தியை முழுமையாகவும் திறமையாகவும் பயன்படுத்துவது பற்றியது.

ஒரு பிரம்மச்சாரி பலவிதமான ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்கிறார், மேலும் தன் கட்டமைப்பை தன் நோக்கத்திற்கு தகுந்த வகையில் பராமரிப்பதால் சக்தி எதுவும் விரையமாவதில்லை. எனவே அவர்களுக்குள் நிறைய சக்தி சேமிக்கப்படுகிறது. எனவே உணவு குறைந்தாலும் தூக்கம் குறைந்தாலும் அது அவர்களைப் பாதிப்பதில்லை.

நான் மூன்று தினங்களுக்குத் தூங்காமல் இருந்தால்கூட என்னில் நீங்கள் எந்த வித்தியாசத்தையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எல்லா வேலைகளும் செய்து கொண்டிருப்பேன். கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தேன். 5 நாட்கள் மட்டும் அங்கிருந்தேன். அங்கு ஒரு 5 நாள் வகுப்பு நடத்தி விட்டு உடனே இங்கு திரும்பிவந்தேன். நான் இங்கு வந்த அதே தினத்திலிருந்து இன்னொரு 5 நாள் வகுப்பு ஆரம்பித்து விட்டது.

ஜெட்லேக் (நேர வேறுபாடு) காரணமாக அமெரிக்கா போனவுடன் என்னால் தூங்க முடியவில்லை. ஜெட்லேக் செட்டில் ஆவதற்குள் மீண்டும் இந்தியாவிற்கு வந்துவிட்டேன். இப்போது மீண்டும் ஜெட்லேக். எனவே தூங்கவில்லை.

ஆனால் இதை ஏதோ ஒரு மனிதரின் மகத்தான சாதனையாகக் கொள்ளக் கூடாது. மனிதராக இருப்பதே ஒரு மகத்தான விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்தவர்களுக்கு இது ஒரு சாதனையே கிடையாது. மனிதராக இருப்பதென்பது ஒரு சாதாரண விஷயமில்லை. மனிதன் சக்தியின் உச்சத்தில் இருக்க முடியும்.

தொடரும்…அடுத்த வாரம்...

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்லும் நாம், அதே சமயத்தில் பாம்பை வழிபடவும் செய்கிறோம். பாம்புகள் குறித்தும், ஈஷாவில் உள்ள நந்தி சிலையின் தனித்துவம் பற்றியும் சேகர் கபூரின் கேள்விக்கு சத்குரு என்ன சொல்கிறார்...?! அடுத்த வாரப் பதிவில் காணாலாம்!