விரதத்தின்போது நெல்லிக்காய் எதற்கு?
நமஸ்காரம் சத்குரு, ஏகாதசியன்று நெல்லிக்காய் உண்ணும் வழக்கம் இருக்கிறது. இப்படிச் செய்வது வெறும் ஆரோக்கியத்திற்காகவா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா?
சத்குரு:
உணவுக்கு முன் எலுமிச்சை சாறினை ஏதாவது விருந்தில் பரிமாறினால், உங்கள் பசியை கொல்ல நினைக்கிறார்கள் என்று அர்த்தம். பலர் இதனை அறியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். எலுமிச்சை சாறு பசியினை குறைக்கிறது. நாம் 10,000 வருட தொன்மையான கலாச்சாரம் அல்லவா? மக்கள் கொஞ்சம் சாதுர்யமாக நடந்துகொள்ள பார்க்கின்றனர். சாதுர்யமான சமூகங்கள் முதலில் இனிப்பை பரிமாறும். இனிப்பை உண்டவுடன் பாதி வயிறு நிறைந்துவிடும்.
இந்தியாவில் விருந்தினர்களை உபசரிப்பது என்பது ஒரு கடமை. பொருளாதார காரணங்களுக்காகவும், விருந்தினர்களின் உடல்நலத்திற்காகவும் இதுபோன்ற பல பழக்கங்களை வழக்கத்திற்கு கொண்டு வந்தனர். இலவசம் எனும் பட்சத்தில், அதனை அள்ளிக் கொள்ளும் மனநிலையிலேயே இன்று நம் மக்கள் உள்ளனர். இதனாலேயே உணவிலும் இதே மனநிலை நிலவுகிறதோ என்னவோ? விருந்துகளில், மக்கள் அளவுக்கு அதிகமாய் உண்டு தங்கள் உடலையும் கெடுத்துக் கொள்கின்றனர்.
ஏகாதசி, விரதத்திற்கான ஒரு நாள். விரதமிருக்கும்போது, வாயில் ஒரு நெல்லிக்காயினை வைத்து சப்பிக் கொண்டு இருப்பது பசியைத் தணிக்கும். விரதத்தின்போது வயிற்றிலிருக்கும் ரசாயனங்கள் வேலை செய்யத் துவங்கி, சற்று நேரத்திற்குபின் உக்ரமாய் செயல்படத் துவங்கிவிடும். இந்தச் செயல் அதிகமாகும்போது பித்தநீர் சுரந்து, சிலர் வாந்தியெடுக்கவும் செய்வர்.
இதுபோன்ற சூழ்நிலையில், உடலில் துவர்ப்பு சுவையுள்ள புளி சேர்த்தால், குமட்டலின் தாக்கம் குறைந்துவிடும். நெல்லிக்காய் இதனைச் சிறப்பாக செய்கிறது, மேலும் பசியையும் தணிக்கிறது. எனவேதான் உடலை சிறப்பாய் புரிந்துகொண்ட நம் கலாச்சாரத்தில் ஏகாதசியன்று நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளும் வழக்கம் நிலவி வருகிறது. ஒரே ஒரு நெல்லிக்காய், 3, 4 மணி நேரத்திற்கு ஒருவரை பசியறியாமல் இருக்கச் செய்யும். அத்தனை வலிமையாய் அது பித்தநீரை கட்டுப்படுத்துகிறது. பிரசவத்தின்போது ஏற்படும் குமட்டலுக்கும் நெல்லிக்காய் சிறந்தது. அதனாலேயே விரதமிருக்கும்போது நெல்லிக்காய் உண்ணும் பழக்கம் வந்தது.
Subscribe