Question: சத்குரு, ஒவ்வொரு மனிதரின் தலைக்குப் பின்னாலும் ஒரு ஒளிவட்டம் இருக்கும் என்கிறார்களே, என்னால் பிறரின் ஒளிவட்டத்தைப் பார்க்கமுடியுமா? உண்மையில் ஒளிவட்டம் என்றால் என்ன?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தக் கிரகத்திலுள்ள ஒவ்வொரு பொருளைச் சுற்றியும் ஒரு குறிப்பிட்ட சக்திநிலை நிலவுகிறது. இந்த முழு பிரபஞ்சமும் சக்தியின் வெளிப்பாடு என்பது விஞ்ஞான உண்மை. ஒரு பொருளில் உள்ள சக்திநிலை வெவ்வேறு அளவிலான அதிர்வுகள் கொண்ட சக்தியால் ஆனது. இதில், அதிக அதிர்வுகளுடைய சக்தி ஒரு வடிவமாக வெளிப்படும். குறைந்த அதிர்வுகளுடைய சக்தி, தெளிவான வடிவம் ஏற்கும் அளவு திரானியில்லாமல் வலுவற்றுத் தென்படும். அதனால் அதிக அதிர்வுகள் கொண்ட சக்தி ஏற்கும் வடிவத்தை தான், அந்தப் பொருளின் ஒளிவட்டம் என்று குறிப்பிடுவோம்.

‘ஆரா’(aura) என்று வழங்கப்படும் இந்த ஒளிவட்டம் மனிதனின் வெளிப்புற எல்லை. இந்த வெளிப்புற எல்லையைக் கொண்டு ஒரு மனிதனைப் பார்ப்பதை விட அவரின் ‘ஆழ்ந்த உள் தன்மை’ யைப் பார்க்க வேண்டும்.

இருண்ட கருமையான ஒளி வட்டத்திலிருந்து மிகத் தெளிவான வெண்மையான ஒளிவட்டம் வரை இலட்சக்கணக்கான நிறங்களில் ஒளிவட்டங்கள் உள்ளன. உடலளவில், மனதளவில், உணர்ச்சி நிலையில், சக்திநிலையில் தற்சமயம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை ஒரு வகையில் உங்கள் ஒளிவட்டம் வெளிப்படுத்துகிறது. அதைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்கள் தற்போது கூறப்பட்டு வருகின்றன. அதில் பல கட்டுக் கதைகளாக இருந்தாலும் சில உண்மைகளும் உள்ளன.

அது எப்படி இருப்பினும், இந்த விஷயங்களில் நீங்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை. மனிதர்களுடைய ஒளிவட்டத்தைப் பார்ப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். ‘ஆரா’(aura) என்று வழங்கப்படும் இந்த ஒளிவட்டம் மனிதனின் வெளிப்புற எல்லை. இந்த வெளிப்புற எல்லையைக் கொண்டு ஒரு மனிதனைப் பார்ப்பதை விட அவரின் ‘ஆழ்ந்த உள் தன்மை’ யைப் பார்க்க வேண்டும். இந்த மேல்பரப்பு விஷயங்கள் வைத்தியர்கள் பார்க்க வேண்டியது. இதை கவனித்தால், ஒருவருடைய உடலில் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களால் வைத்தியம் செய்ய முடியும். ஆன்மீகத் தேடல் உள்ளவரின் நோக்கம் மேலோட்டமாக இருக்கக் கூடாது. அதிலும் நீங்கள் கேட்கும் இந்த 'ஆரா', மனித உடலின் வெளி எல்லையை நிர்ணயிக்கும் தோலையும் தாண்டி வெளியில் நிலவுவது.

அழகு என்பது தோல் சார்ந்தது என்று மக்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். ஆமாம். குறிப்பிட்ட ஒரு வகையான அழகு தோலைச் சார்ந்ததுதான். தோலோடு இருந்தபோது அழகாகத் தெரிந்த ஒருவரின் தோலை உரித்துவிட்டு அவரைப் பார்த்தால், தோல் உரித்த நிலையில் அவர் அழகாகத் தெரியமாட்டார். அந்த வகையில் அழகு தோலைச் சார்ந்தது தான். ஆனால் 'ஆரா' விற்கு தோலின் கனம் கூடக் கிடையாது. அதில் காலத்தை செலவழிப்பது வீணான விஷயம். மக்களின் ‘ஆரா’வை பார்ப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் முற்படுவது முட்டாள்தனமான விஷயம்.

உங்களின் ‘உள்வாங்கும் திறன்’ மேம்படும்போது, இதுவரை நீங்கள் உணர்ந்திராத பல விஷயங்கள் உங்களுக்குப் புலப்படும். அப்போது, இந்த ஒளிவட்டம், ‘ஆரா’வையும் கூட நீங்கள் பார்க்க முடியலாம்.

ஆன்மீகப் பாதையில், 'ஆரா' என்பதை தவிர்ப்பது நல்லது, அது உங்களுடையதாக இருந்தாலும் சரி, அடுத்தவருடையதாக இருந்தாலும் சரி. அதை விடுத்து, மனிதரின் மையத்தை, அதாவது அவரின் ஆழ்ந்த உள் தன்மையை, கவனிக்கப் பழகுங்கள். உங்கள் உள் தன்மையில் கவனம் வைத்து, அது இன்னும் அழகாக மாறுவதற்கும், மலர்வதற்கும் முயற்சி செய்தால், உங்கள் ‘ஆரா’ தானாகவே மிக அற்புதமாக இருக்கும். உங்கள் கவனம் மேல்மட்டத்திலேயே இருந்தால், உங்கள் ‘ஆரா’வும் அதற்கேற்ப மோசமாகவே இருக்கும். எனவே உங்கள் ‘ஆரா’விலோ, அடுத்தவருடைய ‘ஆரா’விலோ கவனம் செலுத்துவதை விடுத்து, உங்களின் ‘உள்தன்மை’யையும், பிறரின் ‘உள்தன்மை’யையும் பார்க்கப் பழகுங்கள். உங்கள் ‘உள்தன்மையில்’ நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தாலே, அடுத்தவரைப் பார்க்கும் போதும், அவரின் ‘உள்தன்மை’யை தான் கவனிப்பீர்கள். ஆழ்ந்த உள்நிலையில் 'அது-இது' 'அவர்-இவர்' என்ற பிரிவினைகள் கிடையாது - எல்லாமே ‘ஒன்று’ மட்டும் தான். மேலோட்டமாக பார்க்கும்போது மட்டும் தான் 'அது இது' என்ற பிரிவினைகள் இருக்கும்.

உங்களின் ‘உள்வாங்கும் திறன்’ மேம்படும்போது, இதுவரை நீங்கள் உணர்ந்திராத பல விஷயங்கள் உங்களுக்குப் புலப்படும். அப்போது, இந்த ஒளிவட்டம், ‘ஆரா’வையும் கூட நீங்கள் பார்க்க முடியலாம். தெரிபவற்றை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. அதை ஆராய்ந்து, இல்லாத விஷயங்களை தேடிப் பார்க்க ஆரம்பித்தால், பித்துப் பிடிப்பது நிச்சயம். தன்னைத் தானே ஆன்மீகவாதி என்று கூறிக்கொள்ளும் பல கிறுக்கர்கள், இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதால், பலர் ஆன்மீக வழிக்கு வரத் தயங்குகின்றனர். இந்தக் கிறுக்கர்கள் ‘ஆன்மீகப்’ பாதையில் இருப்பதாக கூறிக் கொள்வதால், ஓரளவு விவேகம் உள்ளவர்களும் கூட ‘ஆன்மீகம்’ மூடர்களுக்கே என்று எண்ணி அதில் ஈடுபட விரும்புவதில்லை.

அதனால் ஒருவரின் ஒளிவட்டத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து, அவரின் மையத்தை (அ) உள்தன்மையை கவனிக்கப் பழகுங்கள்.