ஜூன் 18ம் தேதி ஆரம்பித்த சத்குரு தரிசன நிகழ்ச்சி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றிய சில துளிகள் இங்கே உங்களுக்காக...

நேற்று நடந்த தரிசனத்தில் சத்குரு பேசிய ஆங்கில உரையின் சில துளிகள்...

குரு என்பவர் ஒரு மாபெரும் வாய்ப்பு!

மாலை 6.10 மணிக்கு ஆதியோகி ஆலயத்தில், 'சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா' இசைக் குழுவின் மெல்லிசையுடன் தொடங்கியது சத்சங்கம். தனது அருள் அதிர்வுகளால் அரங்கம் நிறைத்த சத்குரு, தனது உரையைத் துவங்கினார்.

"பொருள் உலகை வென்று விட நினைத்து நாம் சென்றால், அதற்கு முடிவே இருக்காது. அதற்கு மாவீரன் அலெக்ஸாண்டர் ஒரு உதாரணம். போர் புரிந்து உலகின் பெரும் பகுதியை வென்ற அலெக்ஸாண்டர், இறுதியில் இந்தியக் கொசு ஒன்று கடித்து, நோய் வந்து இறந்தான். அவனை மாவீரன் என்று சொல்வதற்குப் பதிலாக, மகாமுட்டாள் என்றே சொல்ல வேண்டும். இப்போது மக்களும் அவனைப் போலவே பொருள் வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி காண நினைக்கிறார்கள். உள்நிலையின் மூலம்தான் எல்லை கடந்த ஒரு பரிமாணத்தை அடைய முடியும்.

மனிதனின் புரிந்துகொள்ளும் தன்மை, எதையும் பிரித்துப் பார்த்து புரிந்துகொள்வதாகவே உள்ளது. ஐம்புலன்கள் மூலம் மனிதன் அனைத்தையும் நல்லது-கெட்டது, பிடித்தது-பிடிக்காதது, ஆண்-பெண் எனப் பிரித்து புரிந்துகொள்கிறான். இந்தப் பாகுபாடுகளைக் கடந்து வெறுமனே குருவுடன் அமரும்போது, குரு என்பவர் மாபெரும் சாத்தியமாகிறார்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தனது உரையை இன்னும் ஆழமாகமாகவும் விரிவாகவும் வழங்கிய சத்குரு, தரிசனம் என்றால் என்ன என்பதை விளக்கி, "இப்போது உண்மையான தரிசனத்தை ருசியுங்கள்!" என்று கூறி தனது சக்தி அதிர்வுகளின் மூலம் பங்கேற்பாளர்களை சில நிமிடங்களுக்கு தியான நிலைக்கு கூட்டிச் சென்றார்.

கேள்வி நேரம்...

Question: சத்குரு! நீங்கள் லிங்கபைரவி யந்திரத்தை வடிவமைத்து வழங்குகிறீர்கள். மற்ற யந்திரத்திற்கும் அதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

சத்குரு:

நாம் தேவைக்கு ஏற்ப பல்வேறு விதமான யந்திரங்களை உருவாக்கியுள்ளோம். சூரியகுண்டம் அல்லது சந்திரகுண்டத்திலுள்ள லிங்கம், அதிர்வுகளை வெறுமனே வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். யார் வருகிறார்கள் என்பதை அது அறியாது. நாயோ, குரங்கோ அல்லது மனிதனோ யார் வந்தாலும் அது ஒரேவிதமான அதிர்வுகளை வெளிப்படுத்தியவாரே இருக்கும்.

ஆனால், தியானலிங்கமோ உங்கள் கர்மவினைகளைக் கரைக்கும் நோக்கத்திலேயே செயல்படும். உங்கள் இன்றைய தேவை என்ன என்பதை அவர் அறியமாட்டார். அவர் உங்கள் கர்மாவை அழிக்கக் கூடியவர். லிங்கபைரவி, நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்களோ அதற்கேற்ப அவள் செயல்படுவாள். இன்று உங்கள் தேவை அல்லது ஏக்கம் எதுவோ அதற்கேற்ப அவள் செயல்படுவாள். நாம் வழங்கும் லிங்கபைரவி யந்திரத்தை ஒருவர் தனிப்பட்ட முறையில் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம்.

Question: திருமணம் செய்யலாமா வேண்டாமா?

இது திருமணம் குறித்து ஒரு இளைஞர் கேட்ட கேள்வி...

சத்குரு:

திருமணம் என்பது உங்கள் சமூக, பொருளாதார, உளவியல் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த தேவைகளைக் கவனித்து நீங்கள் முடிவெடுக்க வேண்டிய ஒன்று. இப்போது, ஃபேஸ்புக்கில் உங்களுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்கள் உள்ளார்கள். பொருளாதார ரீதியிலும் நன்றாகவே இருக்கிறீர்கள். எனவே சமூக மற்றும் பொருளாதார கட்டாயங்களுக்காக திருமணம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மனம் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த தேவைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதைப் பொறுத்து நீங்களே முடிவு செய்யுங்கள்!'

இன்னும் சில கேள்விகளை பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கேட்க, தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடனும் தெளிந்த ஞானத்துடனும் பதில் பகிர்ந்தார் சத்குரு.

அடுத்து 3 நாட்களுக்கு ஆங்கிலத்தில் நடக்கும் இந்த தரிசன நேரத்தில் தியான அன்பர்களும், பொது மக்களும் கலந்துகொள்ளலாம்.


ஈஷா யோகா மையத்தில் ஜுன் 18 முதல் நடைபெற்று வரும் சத்குருவின் தரிசன நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த சுமார் 12,000 பேர் கடந்த 4 நாட்களில் கலந்துகொண்டனர். மாலை 6.30 முதல் 8.30 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஈஷா தியான அன்பர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இந்த தரிசன நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்குரு தரிசனத்திற்கு முன், மாலை 4 மணி முதல் 5 மணி வரை யோகா மையத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் இலவசமாக ஈஷா கிரியா தியானம் கற்றுத்தரப்பட்டது. மேலும், யோக மையத்திற்கு வருகை தந்திருப்போர் பயன்பெறுமாறு பகல் நேரத்தில் சிறப்பு சூரிய கிரியா மற்றும் பூதசுத்தி வகுப்புகளும் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தன. பலரும் இந்நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்து பங்குகொண்டனர். இதையடுத்து மாலை 6.10 மணிக்கு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் களரி விளையாட்டுடன் தொடங்கியது சத்சங்கம்.

சத்சங்க நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் அனைவருக்கும் நிகழ்ச்சிக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. யோக மையத்திலிருந்து கோவை காந்திபுரம் வரை இரவு சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த தரிசன நிகழ்ச்சி முதல் 3 நாட்களுக்கு தமிழில் நடைபெற்றது. அடுத்த 4 நாட்களுக்கு ஆங்கிலத்திலும் நடைபெறவுள்ளது. அனைத்து நாட்களிலும், பங்கேற்பாளர்களின் உணவுக்கும் தங்கும் வசதிக்கும் மையத்தில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஏற்பாடும் வழிகாட்டுதலும் செய்துள்ளனர். ஜுன் 24ம் தேதி தியானலிங்கத்தின் 15வது ஆண்டு பிரதிஷ்டை தினம். அன்று தியானலிங்க வளாகத்தில் பிரதிஷ்டை தினம் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற இருப்பதால் அந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.