குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்! பகுதி 5

பராஷர முனிவரிடம் சந்நியாசம் வேண்டி வந்த இளம் வியாசர், எப்படி ஒரு தீவிரமான சந்நியாசி ஆனார் என்பதை இதில் தெரிந்துகொள்வோம்...

சத்குரு:

தீவிரமான சந்நியாசி ஆன வியாசர்...

ஒரு பிரம்மச்சாரி அல்லது சந்நியாசி ஆவதற்கான முதல் கட்டம் என்பது உங்கள் உணவுக்கு நீங்கள் பிச்சை எடுக்க வேண்டும். இனிமேல் எதுவும் உங்களுக்குச் சொந்தம் அல்ல. அதைப் பின்பற்றி அச்சிறுவன் பிச்சை எடுக்கச் சென்றான், ஆனால் வெறுங்கையோடு திரும்பிவந்தான். பராஷரா அவனைப் பார்த்தபோது அவனுடைய பாத்திரம் காலியாக இருந்தது. ஆரம்பத்தில் இவ்வாறு நினைத்தார். “எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறானா? அல்லது அவன் என்னுடைய மகன் என்பதால் உரிமை எடுத்துக் கொள்கிறானா?” என்று நினைத்தார். பிறகு அச்சிறுவனின் முகத்தைப் பார்த்தார் அவன் சாப்பிடவே இல்லை. அவன் நாள் முழுவதும் சுற்றி வந்தபோதும் அவன் காலி பாத்திரத்துடனே திரும்ப நேர்ந்தது.

ஒரு குழந்தைக்கு நான்கு வயது ஆகும்போதே வயது வந்தவர்கள் செய்யும் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் காணப்படும்.

“என்ன நடந்தது?” என்று கேட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிறுவன் பதில் சொன்னான். “நான் எங்கு சென்றாலும், திருநீறு அணிந்திருப்பதாலும், சந்நியாசி உடை அணிந்திருப்பதாலும், என்னுடைய தாயார் இந்த ஊர் தலைவனின் மகள் என்பதாலும், நான் உங்கள் மகன் என்பதாலும் மக்கள் தொடர்ந்து என்னுடைய பாத்திரத்தில் மட்டும் உணவை நிரப்பி விடுகிறார்கள். மற்ற சந்நியாசிகளிடமும் இவ்வாறு நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. என்னுடைய பெற்றோர்கள் காரணமாகவும் என்னுடைய வம்சாவளி காரணமாகவும் நான் எங்கு சென்றாலும் என்னுடைய பாத்திரத்தைத் தொடர்ந்து நிரப்புகிறார்கள். தெருவில் மற்ற சிறுவர்கள் பசியுடன் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே நான் அவர்களுக்கு உணவைக் கொடுத்துவிட்டேன். நான் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிச்சை எடுத்து அனைத்தையும் கொடுத்துவிட்டேன்” என்றான்.

தந்தை சிந்திக்கலானார். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக எனக்கு வேலை இருக்கும் போலத் தெரிகிறது என்று நினைத்தார். “நல்லது, நீ உன்னுடைய உணவுக்கு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு சிறுவன் பதில் சொன்னான். “அதனால் பரவாயில்லை. நான் இன்று முதல் சபதம் செய்திருக்கிறேன். என்னுடைய வாழ்நாள் முழுவதும் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடும் வரை நான் ஒருபோதும் சாப்பிடமாட்டேன்” என்று.

இச்சிறுவன் சந்நியாசியாக ஆவதற்கான முறைகளைக் கடைப்பிடித்து சந்நியாசி ஆனார். பிறகு நீண்ட காலம் வாழ்ந்தார். அதற்குக் காரணம் பராஷாரா அவனுக்குக் கடுமையான யோகப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து அதன் மூலம் அவன் உடலைப் பலப்படுத்தி அளவுக்கு அதிகமாக தாங்கும் சக்தியை உண்டாக்கினார். அதனைத் தொடர்ந்து வேறு பல பயிற்சிகளையும் அளித்தார். இவ்வாறு செய்யாமல், இளம் வயது சிறுவர்களை சந்நியாசத்திற்கு தீட்சை செய்து வைத்தால், உடல் அளவில் அவர்கள் வாழ்நாள் குறைந்துவிடும்.

குழந்தைகள் ஆன்மீக உணர்வு உள்ளவர்களா?

எனவே சிறுவர்கள் ஆன்மீக உணர்வு உள்ளவர்களா? பொதுவாக, ஒரு குழந்தை குழப்பம் குறைவாகவும் நிலையான கருத்துக்கள் இல்லாமலும் இருக்கும். இந்த குணங்கள், குழந்தைகளை ஞானியாக ஆக்குவதற்கான வாய்ப்புகளை அதிகம் உருவாக்குகின்றன. நன்றாக உருவாக்கலாம். அதே சமயத்தில் ஒரு குழந்தையின் புரிந்து கொள்ளும் திறன், உங்கள் திறனைவிட அதிகம். அப்படி பார்த்தால் அதில் ஒரு பலமும் உண்டு, ஒரு பலவீனமும் உண்டு. ஒரு குழந்தை தன்னுடைய வாழ்நாளை உங்களைவிட வேகமாகக் கிரகிக்கும். அதற்குக் காரணம் அனைத்தும் அதற்குப் புதிதாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். எனவே அவனுக்கு சரியான சூழ்நிலையை ஏற்படுத்தினால், அது ஒரு மிகப்பெரிய சாத்தியமாக அமையும். இதுவே அவனைச் சுற்றி தவறானவற்றைத் தந்தால் காலப்போக்கில் அவன் மிகப்பெரிய பிரச்சினையாக ஆவான். ஏனென்றால், அந்த வயதில் எந்தவித விருப்பு வெறுப்பும் இல்லாததால், அனைத்தையும் அப்படியே கிரகித்துக் கொள்ளும்.

அப்படி என்றால் குழந்தைப் பருவம் என்பது வயது வந்தவர் என்னும் பருவத்தை விடச் சிறந்ததா? ஒரு சில வழிகளில் பார்த்தால் சரி என்று தோன்றும். ஆனால் ஒரு குழந்தை, தனது அந்தப்பருவத்தில், பெரியவர்கள் செய்யும் அத்தனை முட்டாள்தனமான செயல்களையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். அவை பயனற்றவை என்று புரிந்து கொள்ள நாளாகும். பல வயது வந்தவர்களுக்குக்கூட அவை பயனற்றவை என்று தெரியாது. அப்படித்தானே? இதனை குழந்தை இனிமேல்தான் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு பாதகமான நிலை ஆகும். ஒரு குழந்தைக்கு நான்கு வயது ஆகும்போதே வயது வந்தவர்கள் செய்யும் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் காணப்படும். வேகமாக வளர வேண்டும், யாராவது ஒருவரைப்போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்.

ஆனால் அவனைச்சுற்றி சரியான சூழலை ஏற்படுத்துவதன் மூலம் இதனைச் சரிசெய்துவிட முடியும். அதே மரங்கள், அதே செடிகள், அதே பூக்கள் அதே பழங்கள், அவை வளரும் சூழ்நிலையைப் பொறுத்து, பலதரப்பட்ட மணம்தரும் பூக்களையும் மாறுபட்ட சுவை தரும் பழங்களையும் தருவதில்லையா? விதை ஒன்றுதான், ஆனால் அதைச்சுற்றி நாம் உருவாக்கும் சூழலைப் பொறுத்தே அது பலன் தருகிறது.

(முற்றும்)

'குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்!' தொடரின் பிற பதிவுகள்