சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 11

பொதுவாக, உலகின் பல பகுதிகளில், மக்கள் 'தெய்வீகம்' என்று குறிப்பிடுபவை நற்குணங்கள் உடையவற்றைத்தான். ஆனால் 'சிவ புராண'த்தை படித்தால், நீங்கள் சிவனை நல்லவர் எனவும் சொல்ல முடியாது, கெட்டவர் என்றும் சொல்ல முடியாது. சிவனை விட மோசமாக யாராலும் இருக்க முடியாது! ஏன் இப்படி என்பதை இக்கட்டுரையில் காண்போம். அதுமடுமல்லாமல் சிவன் ஏன் கைலாயத்தை தேர்ந்தெடுத்தார் என்பதையும் அறிந்துகொள்வோம்...

சத்குரு:

சிவன் எப்படிப்பட்டவன்?

சிவன்...

அவர் சுந்தரர், அழகற்றவரும் கூட. எல்லாவற்றையும் துறந்துவிட்ட மாபெரும் துறவி, சம்சாரியும் கூட. ஒழுக்கசீலர் ஆனால் மதுபானம், போதைப் பொருள் உட்கொள்பவரும் கூட. அவர் நர்த்தகர், ஆனால் அசைவின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவரும் கூட. தெய்வங்கள், பிசாசுகள் உட்பட பல வகையான உயிரினங்கள் அவரை வழிபடுகின்றன. அவரைப் பற்றி மிக மோசமான விஷயங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன.

சிவன் ஒரு அகோரி - எல்லா பயங்கரத்தையும் கடந்தவர்.

சிவன் தன் மீது மனிதக் கழிவுகளை பூசிக் கொண்டதாகக் கூடச் சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் எதையெல்லாம் தாண்டி வர முடியுமோ அவை எல்லாவற்றையும் தாண்டி வந்தவர் அவர். நாகரிகக் கலாச்சாரம் என்ற பெயரில், சிவனை ஏற்றுக்கொள்ள தங்களுக்கு இடைஞ்சலான விஷயங்களை அப்புறப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது. ஆனால், சிவனின் சாரமும், சிறப்பும், இவர்கள் மறைக்க நினைக்கும் அக்குணங்கள் தானே!

இப்படைப்பில் இருக்கக்கூடிய முரண்பாடான குணங்கள் எல்லாவற்றையுமே சிவன் ஒருவருக்கு கொடுத்திருப்பதன் காரணம், இவர் ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், வாழ்வையும் நீங்கள் முழுவதாய் ஏற்றுக் கொண்டுவிடுவீர்கள். எது அழகு எது அசிங்கம், எது நல்லது எது கெட்டது என்று எப்பொழுதுமே பாகுபடுத்திக் கொண்டே இருப்பதுதான், நம் வாழ்வில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. நீங்கள் விரும்புவது, விரும்பாதது, என எல்லாக் குணங்களையும் ஒருசேரக் கொண்டுள்ள இந்தப் பயங்கரமான ஒரு மனிதரை நீங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்றால், வேறு எதனோடும் உங்களுக்குப் பிரச்சனை இருக்காது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"அகோரி"யான சிவன்...

எதுவுமே அவருக்கு அருவருப்பை உண்டு செய்யாது. சிவன் ஒரு சவத்தின் மீது அமர்ந்து, சாதனாவில் ஈடுபட்டார் - 'அகோரி'யாக. 'கோரா' என்றால் பயங்கரமானது. 'அகோரி' என்றால் பயங்கரத்தை கடந்தது/தாண்டியது. சிவன் ஒரு அகோரி - எல்லா பயங்கரத்தையும் கடந்தவர். பயங்கரங்கள் அவரிடத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை, எதுவுமே அவருக்கு அருவருப்பை உண்டு செய்வதில்லை. அவர் எல்லாவற்றையுமே அரவணைப்பவர். மனதில் ததும்பும் கருணையினால் அல்ல, வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அவரும் அப்படியே! வாழ்க்கை என்பது இயல்பாகவே எல்லாவற்றையும் அரவணைப்பது தானே?

உங்களால் யாரையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியும், யாரையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது, உங்கள் மனம் சார்ந்த பிரச்சனைதானே தவிர, அது வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. இவ்வளவு ஏன், உங்கள் எதிரி உங்கள் அருகிலேயே அமர்ந்திருந்து, அவர் வெளிவிடும் மூச்சுக்காற்றை நீங்கள் உள்ளிழுக்க நேர்ந்தால் உங்கள் உடலிற்கு பாதிப்பு வருமா என்ன? அப்படி ஒன்றும் இல்லை. நண்பனின் மூச்சுக்காற்று, உங்கள் எதிரியின் மூச்சுக்காற்றை விட எவ்விதத்திலும் உயர்ந்தது அல்ல. பிரச்சனை உங்கள் மனத்தில் மட்டுமே, படைப்பில் பிரச்சனை ஏதுமில்லை.

உலகின் இப்பகுதியில் ஆன்மீகம் என்ற பெயரில் அன்போ, கருணையோ அல்லது அதுபோல் வேறு எதுவுமோ சொல்லித் தரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவை எல்லாம் ஆன்மீகம் கூடக் கிடையாது, இவை சமூகத்தின் அடிக்கோடுகள், அவசியங்கள். அன்பாய் இருப்பது, காண்போரிடத்து குறுநகை பூப்பது போன்றவை குடும்ப, சமூக அத்தியாவசியங்கள். இதை எல்லாம் ஒரு மனிதனுக்கு கற்றுத்தரத் தேவையில்லை, குறைந்தபட்சம் அவ்வளவேனும் அவனுக்கு சுயஅறிவு இருக்கும் என்பது நம் கலாச்சாரத்தில் இருக்கும் பொதுப்படையான எதிர்பார்ப்பு. அதனால் இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை.

சிவன் ஏன் கைலாயத்தை தேர்ந்தெடுத்தார்?

யோக விஞ்ஞானம் உலகெங்கும் பரவுவதற்கு வழிவகுத்த சிவன், அதன்பின் சிறிது காலத்தில், தன் ஞானம் முழுவதையும் கைலாய மலையிலே பதித்தார்.

சிவன் நல்லவரா? கெட்டவரா?, Shivan nallavara kettavara?
சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் ஞானத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் முழுமையாக கிரகித்துவிட்டதை உணர்ந்த ஆதியோகி, ஞானத்தின் ஏழு பரிமாணங்களையும் ஒருசேர கிரகிக்கக் கூடிய ஒரு மனிதன் கிடைக்காதபடியால், தான் அறிந்தவற்றை எல்லாம் கைலாய மலையில் பதித்து வைத்தார். அதன்பின், உலகின் மிகப்பெரிய ஆன்மீக நூலகமாக கைலாய மலைமாறியது.

யோக விஞ்ஞானம் உலகெங்கும் பரவுவதற்கு வழிவகுத்த சிவன், அதன்பின் சிறிது காலத்தில், தன் ஞானம் முழுவதையும் கைலாய மலையிலே பதித்தார்.

ஒரு மனிதன் ஞானமடைந்து, அவரது கிரகிக்கும் திறன் சாதாரணமானவர்களுக்கு இருப்பதைவிட ஆழமாகும்போது, அவர் கிரகித்தது அனைத்தையும் எல்லா நேரங்களிலுமே சுற்றி இருப்பவர்களுக்கு அவரால் வழங்கிட முடியாது. மிகக் குறைந்த சிலவற்றை மட்டுமே அவரால் வழங்கிட முடியும். தன்னையே அவர் முழுமையாக வழங்கினாலும், அதையெல்லாம் கிரகித்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு திறமையான சிஷ்யர்கள் ஒரு ஆசானுக்கு அமைவது மிக மிக அரிது.

அதனால், பொதுவாக இந்தியாவின் யோகிகளும் ஞானிகளும், மக்கள் பொழுதுபோக்க வந்துபோக முடியாத வகையில் அமைந்திருக்கும் மலை உச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் தங்கள் ஞானத்தை சக்தி வடிவில் பதித்து வைத்தனர். அம்மலைகள் யாரும் அணுகமுடியாத வகையில் இருக்காது. ஆனால், அடைவதற்கு கட்டாயம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு இடம்தான் கைலாய மலை.

சிவனிற்குப் பின் பலர் தங்கள் ஞானத்தை கைலாயத்தில் பதிக்க ஆரம்பித்தனர். புத்தர்களின் வழியில் மூன்று முக்கியமானவர்கள், ஜைனர்களின் வழியில் முதலாவது தீர்த்தங்காரர் ரிஷப், தமிழ்நாட்டின் நாயன்மார்கள், என இன்னும் பற்பல ஞானிகள் கைலாயத்தில் தங்கள் ஞானத்தைப் பதித்தனர். தென்னிந்தியாவின் மாபெரும் அகஸ்திய முனிவரும், தன் ஞானத்தை கைலாயத்தின் தென்முகத்தில் பதித்துச் சென்றதால், இன்றும் கைலாயத்தின் தென்முகப்பில் அகஸ்தியர் வாழ்வதாக வழங்குவர்.

கைலாயத்தை அதன் முழுமையில் யாருமே உள்ளடக்கிக் கொள்ள முடியாது. அதிகமாக உள்வாங்கிக் கொள்ளலாம், ஆனால் எல்லாவற்றையும் உள்வாங்கிட முடியாது. அங்கிருக்கும் ஞானம் மிக மிக அதிகம். கைலாயத்தை, அதன் முழுமையில் கிரகிப்பதற்கு ஒரே வழி, அதனுடன் கரைந்து போவதுதான்.

இவ்வுலகில் நான் பற்பல சக்திவாய்ந்த கோவில்களுக்கும், புனிதத் தலங்களுக்கும் சென்றிருக்கிறேன். பற்பல உயர்ந்த உயிர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்களை எல்லாம் நான் உண்மையிலேயே வணங்குவேன், ஆனால்...என் குருவை எப்படி வணங்குவேனோ அதைவிட சற்று குறைவாகத்தான் அவர்களை வணங்குவேன். அது கேதார்நாத்தாக இருந்தாலும் சரி, கௌதம புத்தராக இருந்தாலும் சரி, என் முன்னே வரும் வேறு யாராக இருந்தாலும் சரி. அதுதான் உண்மை. ஆனால், கைலாயத்தை வணங்கும்போது, என் குருவை எப்படி வணங்குவேனோ, அதேபோல் தான் வணங்குவேன். இதுபோல் என் வாழ்வில் எவரையும், எதையும் இப்படி பரிபூரணமாய் நான் வணங்கியது இல்லை. ஆனால், கைலாயத்தைப் பொறுத்தவரை, அவரை எப்படி வணங்குவேனோ அதைப் போலவே வணங்கினேன்.

உள்நிலையைப் பொறுத்தவரை உங்களுக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ, அவை அனைத்தும் கைலாயத்தில் உள்ளது. அதை எப்படி உள்வாங்குவது, அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை மட்டும் நீங்கள் அறிந்திருந்தால், உங்களைப் பற்றி, உங்கள் பிறப்பைப் பற்றி, உங்களின் வாழ்வைப் பற்றி, உங்கள் முக்தி பற்றி என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ, அவை எல்லாமே அங்கே இருக்கிறது. ஞானத்தின் எல்லா வகைகளையும் அங்கே நீங்கள் காணலாம். எல்லாக் கலாச்சாரமும் தங்கள் ஞானத்தை இங்கே பதித்திருக்கின்றன. அவை இன்றும் அங்கு நமக்குக் கிடைக்கப் பெறும் வகையில் இருக்கிறது. தங்களின் உள்வாங்கும் திறனை குறிப்பிட்ட அளவிற்கு உயர்த்துவதற்கு மட்டும் ஒருவர் முயற்சித்தால், அது எல்லாமே தெள்ளத் தெளிவாய் அங்கே இருக்கிறது.

ஒரு ஆன்மீக சாதகருக்கு, கைலாயத்தை தொடுவது, இப்புவியின் மிக மிக அடிப்படையான மூலசக்தியையே தொடுவதுபோல். அத்தனைப் புனிதமானது, உயர்வானது அந்த அனுபவம். மறைஞானத்தை அறிந்திடும் ஆர்வம் உடையோர்க்கு, கைலாயமே அடைக்கலம். இதுபோல் வேறு இடம் கிடையாது.

அடுத்த பதிவில்...

சிவனின் அடையாளங்களாகக் கருதப்படும் பிறைநிலவு, திரிசூலம், பாம்புகள், நந்தி மற்றும் மூன்றாவது கண், ஏன் அவரது அடையாளங்களாயின?

சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்

ஓவியர் பிரியேந்த்ர சுக்லா அவர்களுக்கு நன்றிகள்