சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள்!
ஒரு பொருளையோ அல்லது ஒரு வெற்றிடத்தையோ பிரதிஷ்டை செய்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்... ஆனால் ஒலிகளைப் பிரதிஷ்டை செய்வது என்பது நமக்குப் புதிதாய் இருக்கின்றது. என்றாலும் இது பலகாலமாய் நம் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்கிறார் சத்குரு! மேலும் படிக்க...
ஒரு பொருளையோ அல்லது ஒரு வெற்றிடத்தையோ பிரதிஷ்டை செய்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்... ஆனால் ஒலிகளைப் பிரதிஷ்டை செய்வது என்பது நமக்குப் புதிதாய் இருக்கின்றது. என்றாலும் இது பலகாலமாய் நம் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்கிறார் சத்குரு! மேலும் படிக்க...
சத்குரு:
Subscribe
இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒருவிதமான அதிர்வு. ஒலிகளும் அவ்வாறே. அவ்வகையில் பார்த்தால் ஒலியும் ஒருவிதமான பொருள் தான், ஆனால் அதன் பிரதிஷ்டை சற்றே வித்தியாசப்படும். உதாரணத்திற்கு நம் நாட்டின் எல்லா திசைகளிலும் பொதுவாக உபயோகப் படுத்தப்படும் மந்திரம் 'ஷிவ'. இங்கு எல்லோருமே 'சிவ, சிவ' என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த மந்திரத்தைக் குறிப்பிட்ட ஒரு வகையில் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே, அதை உச்சரிக்கும் போது மிக ஆழமான நிலைகளை அடைகிறார்கள்.
சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள்
இதன் மற்றொரு கோணத்தில், ஒருசில இடங்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால், உச்சரிப்பது யாராக இருந்தாலும் சரி, திடீரென அந்த மந்திரம் முற்றிலும் வேறுவிதமான சக்தியை வெளிப்படுத்தும். இது போல் சில குறிப்பிட்ட ஒலிகள் மிக அதிகமாக சக்தி வெளிப்படுத்தும் விதத்தில் நம் கோவில்கள் ஒருகாலத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் குறைந்துபோக, அத்துடன் தொடர்ந்து நடந்தேறிய படையெடுப்புகள் நம் கலாச்சாரத்தை குலைத்திட, இந்த விஞ்ஞானம் நலிவடைந்தது. இருந்தாலும், இன்றளவிலும் இந்த ஒலி மிக அதிகமாக சக்தி வெளிப்படுத்தும் பல இடங்கள் உள்ளன. இதற்குக் காரணம் அவ்விடங்கள் இந்த ஒலிக்கு மிக சாதகமான வகையிலே அமைக்கப்பட்டிருப்பதால், அவை இந்த ஒலியை பன்மடங்காக பெருகச் செய்கின்றன.
நம் ஈஷா யோக மையம் மேற்கு மலைத்தொடர்ச்சியின் ஓர் முனையிலே அமைந்திருக்கிறது. இங்கு பனிமூட்டம் அதிகமாக இராவிட்டாலும், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இப்பிரம்மாண்டமான மலைகளினூடே உள்ளே செல்லச்செல்ல மூடுபனி மிக அதிகமாகவே இருக்கும். இதை முதல்முறை நான் அனுபவித்தபோது, நான் அசந்து போய்விட்டேன். எனது மோட்டார் சைக்கிளில் மூடுபனி விளக்குகளை போட்டுக்கொண்டு சென்றாலும் கூட எட்டடி, பத்தடிக்கு மேல் ஒன்றும் தெரியாது.
இதுபோல் பனிமூட்டம் மிக அதிகமாக இருந்த ஒருநாள், இரவு ஒருமணிக்கு நான் மலையின் அடிவாரத்திலே நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோது, முழு மலையும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. மிக விரைவாக மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொள்ளும் என்பதால், அதை மெதுவாக, கவனமாக ஓட்டிக் கொண்டு, நிலைமை என்னவென்று பார்க்கச் சென்றேன். நான் மலையின் மீது செல்லச்செல்ல, அந்தத் தீயும் விலகிச்சென்று கொண்டே இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில், நான் மலை உச்சியை அடைந்துவிட்டேன். அங்கு ஒரு லாரி பழுதடைந்து நின்றிருந்தது. அந்த லாரியின் ஓட்டுனர் ஒரு பாட்டிலை எண்ணெய் விளக்காக மாற்றி, வெளிச்சத்திற்காக அதை ஏற்றி வைத்திருந்தார். இந்த தீபத்தின் ஒளிதான் நான் பார்த்த தீயின் உண்மையான முழுமையான வடிவம். ஆம்... பனிமூட்டம், ஆயிரமாயிரம் கண்ணாடிப் பட்டகமாய் அந்த சிறு ஒளியை பெருக்கிப் பிரதிபலிக்க, அந்த முழு மலையுமே தீப்பற்றி எறிவதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் அங்கே உருவாகி இருந்தது. இப்படியும் சாத்தியமோ என்று நான் பிரமித்துப் போனேன்.
ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கினால், எதை வேண்டுமானாலும் பன்மடங்காகப் பெருக்கலாம். ஒரு வகையில் பார்த்தால், பிரதிஷ்டை என்பதும் கூட இது போல் 'பன்மடங்காகப் பெருக்கும்' ஒரு தொழில்நுட்பம் தான். அதில் வாழ்வைப் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டுகிறோம்... அப்போதேனும் அதை புறக்கணிக்க முடியாமல் நீங்கள் அதைக் கவனிப்பீர்கள் என்று!