சத்குருவின் இதயத்துடிப்பு, தூக்கம், பைக் பயணம்... சில Rapid Fire கேள்விகள்!
தனது கேள்வி அம்புகள் மூலம் சத்குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை பதிலாக கேட்கிறார் Cisco நிறுவனத்தின் உயர் அதிகாரி VC கோபால்ரத்னம். மனம் திறந்து, நம்மை இன்னும் நெருக்கத்தில் அழைத்துச்செல்லும் விவரங்களை, தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடனும், கூர்மையுடனும் நெஞ்சை அள்ளும் பதில்களாக அளிக்கிறார் சத்குரு...

உங்களிடம் சில ‘நறுக்’ கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.. முடிந்தவரை ஒரே வரியில் பதில் சொல்லவேண்டும்.
கேள்வி : ‘சுருக்’ பதில்தான் வேண்டும். ஒரே வரியில் இந்தியாவை விளக்குங்கள்.
சத்குரு : நிகழும் அதிசயம்
கேள்வி : உங்களைப் பொருத்தவரை யோகா என்றால் என்ன?
சத்குரு : எனக்கு யோகாதான் எல்லாமே. யோகாவின் அர்த்தமும் இதுதான். யோகா என்றால் ஒன்றிணைதல் - தனித்திருக்கும் உயிர் பிரபஞ்சத்துடன் இணைவது. இதற்காகவே இத்தனையும்.
கேள்வி : எது முக்கியம் - திட்டமிடுவதா அல்லது செயல்படுவதா?
சத்குரு : இலக்கை நோக்கி முன்னேற உங்கள் இடதுகால் முக்கியமா அல்லது வலதுகால் முக்கியமா என்று கேட்டால் எப்படி?
கேள்வி : நல்ல பதில். சரி... எதாவது செய்து நகர்ந்துகொண்டே இருக்க வேண்டுமா, நிறைவாக செய்ய வேண்டுமா..?
சத்குரு : இரண்டுக்கும் பொதுவான அம்சம் செயல் நடக்கிறது என்பது மட்டுமே.
கேள்வி : இரண்டில் எது முக்கியம்..?
சத்குரு : நிறைவாக என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போது இருக்கும் நிலையைத் தாண்டி வளர வேண்டும் என்பதே எப்போதும் உயிர் இயல்பாக இருக்கிறது. மனிதனுக்கு துல்லியமாக நடப்பது இறப்பு மட்டுமே. யாரும் அரைகுறையாக இறப்பதில்லை. இதுவரையில் யாரும் எல்லா வகையிலும் கனகச்சிதமாக வாழ்ந்ததும் இல்லை.
கேள்வி : நேர்மை அல்லது நம்பகத்தன்மை உங்கள் பார்வையில்..?
Subscribe
சத்குரு : நம்பகத் தன்மையாக இருப்பது நேர்மை இல்லையா?
கேள்வி : ஓகே. புத்திசாலித்தனம் - உணர்ச்சி வசப்படுவது, அடிப்படையாக மினி IQ (Intelligence Quotient) அல்லது EQ (Emotional Quotient)?
சத்குரு : பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பிரிவினைக்கும் காரணம் மனித அறிவு. அறிவு எனும் கத்தியை வைத்து எல்லாவற்றையும் பிரித்துப் பார்ப்பதால், எல்லாமே துண்டுதுண்டாகத் தெரிகிறது. உங்கள் அறிவு வேறு, உணர்ச்சி வேறு என்று நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் கவனித்து பாருங்கள், நீங்கள் உணரும் தன்மைக்கு ஏற்பவே உங்கள் எண்ணங்கள் அமைகிறது.
நீங்கள் அற்புதமான மனிதர் என்று நினைத்தால், உங்கள் மீது இனிமையான உணர்வு என்னுள் எழும். நீங்கள் அபாயமான மனிதர் என நான் நினைத்தால், என் உணர்ச்சிகளும் அதற்கேற்ப மாறும். அபாயகரமான மனிதர் என நினைத்துக்கொண்டே உங்கள்மீது இனிமையான உணர்வை என்னுள் உருவாக்க முடியுமா? அல்லது அற்புதமான மனிதர் என்று நினைக்கும்போது உருவாகும் இனிமையை தடுக்கத்தான் முடியுமா? உங்கள் எண்ணங்கள் எல்லாமே, நீங்கள் உணரும் தன்மையில் இருக்கிறது. எனக்குள் இதை நான் வெவ்வேறாக பார்ப்பதில்லை.
கேள்வி : ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்குவீர்கள்? ஓய்வாக இருக்கும்போது உங்கள் இதயத் துடிப்பு எவ்வளவு?
சத்குரு : எவ்வளவு நேரம் தூங்குவேன்... இதை நாம் முடிவு செய்வதில்லை - உலகம் முடிவு செய்கிறது. சராசரியாக இரண்டரை மணிநேர தூக்கமே 25 ஆண்டுகளாக நமக்கு கிடைத்தது. இப்போது கொஞ்சம் சோம்பேறித்தனம் வருகிறது என்று நினைக்கிறேன். நான்கு முதல் நான்கரை மணி நேரம் தூங்குகிறேன். எல்லா நாளும் இப்படி இல்லை. சில நாட்களில் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும். சில நாட்கள் தூங்காமலே இருக்க வேண்டிய சூழலும் இருக்கும். எனது இதயத்துடிப்பு ஓய்வாக இருக்கும்போது முப்பத்திரண்டு, முப்பத்தி மூன்று என ஒரு சமயத்தில் இருந்தது. இடைவிடாத பயணங்கள், சரியான உணவை தேர்ந்தெடுக்காமல் மக்கள் எது கொடுத்தாலும் உண்பது, போதுமான சாதனா இல்லாதது எனப் பல காரணங்களால் இப்போதைய இதயத்துடிப்பு முப்பத்தாறில் இருந்து நாற்பத்திரண்டு வரை இருக்கும் என நினைக்கிறேன்.
கேள்வி : வாவ்.. அப்படியானால் களைப்பு என்பதே உடலளவில் உங்களுக்கு எப்போதும் இல்லை..!!
சத்குரு : ஒவ்வொரு நாளின் முடிவிலும் இறந்துவிடுவது என் வழக்கம்!
கேள்வி : நீங்கள் எதில் தேர்ச்சி அடைந்து இருக்கிறீர்கள்?
சத்குரு : என்னில் என நினைக்கிறேன்.
கேள்வி : முதன்முறையாக ஒருவரை காணும்போது நீங்கள் பார்ப்பது?
சத்குரு : நான் அன்பை பார்க்கிறேன், வெளிச்சத்தை பார்க்கிறேன், வாய்ப்பை பார்க்கிறேன்.. இப்படிப்பட்ட வழக்கமான பதில்கள் ஏராளம். ஆனால், நான் மக்களை அப்படி பார்ப்பதில்லை. இணைந்து ஒரு செயல் செய்யவேண்டும் எனும்போது அவர்களை வேறுவிதமாக பார்ப்போம். மற்ற நேரங்களில் யாரைப் பார்த்தாலும் அங்கே ஒரு மனிதர் இருக்கிறார் என்று பார்ப்பதில்லை, வெறுமனே ஒரு உயிராக மட்டுமே பார்க்கிறோம். இது ஒரு சிலருக்கு ஏமாற்றமாக, ஏன், அவமதிப்பாகக்கூட தோன்றும். ஆனால், ஒரு மரம், மாடு, நாய் அல்லது யானை என எல்லா உயிர்களையும் பார்க்கும் அதேவிதமாகவே மக்களையும் பார்க்கிறேன். எந்த உயிரினத்தை பார்க்கும்போதும் அதை வெறும் உயிராகவே பார்க்கிறேன். மனிதர்களுடன் செயல் செய்ய வேண்டியபோது மட்டும் அவர்களுடன் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று பார்ப்போம். மற்ற நேரங்களில் யாரை பார்த்தாலும், என்னளவில் அது இன்னொரு உயிர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், ஒரு எறும்பைவிட நீங்கள் முன்னேறி இருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் நீங்கள் எந்தவிதத்தில் எறும்பைவிட முன்னேற்றமாக இருக்கிறீர்கள்? உங்களைவிட அவர்கள் நேர்த்தியாக வரிசையாக பயணிக்கிறார்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அவர்கள் வாழும் முறையும் இருக்கிறது. இதற்காகத்தானே இப்போது நீங்கள் பெருமுயற்சி செய்கிறீர்கள்? என் பார்வையில் ஒரு உயிர், உயிராக மட்டும் இருக்கிறது. செயல் நடக்கவேண்டும் எனும்போது மட்டும் என்னை கொஞ்சம் இலகுவாக்கி, ஒவ்வொருவரையும் தனித்து பார்க்கிறேன். மற்ற நேரங்களில் எனக்கு எல்லாமே உயிர்தான்.
கேள்வி : கடைசியாக எப்போது, யார் மீது கோபப்படும் சூழ்நிலை வந்தது?
சத்குரு : எவர் மீதும் கோபப்பட்டேன் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில், மக்கள் இப்படி இருக்கிறார்களே, வாழ்க்கையை இப்படி நடத்துகிறார்களே, மற்றவர்களுடன் இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற ஆற்றாமை இருக்கும். ஆனால் அதை கோபம் என்று சொல்ல முடியாது.
இந்த உலகில் நடைபெறும் சில செயல்களை பார்க்கும்போது, ஒருசில சமயங்களில் நம்மைச் சுற்றிலுமே நடக்கும் சிலவற்றை பார்க்கும்போது, ஒருவருக்கு ஒருவர் இப்படி உணர்ச்சியற்று இருப்பதும், செயல்படுவதும் வருத்தமாக இருக்கும். இந்த வேதனை ஏற்படுவதையும்கூட, இதனால் ஒரு நல்ல தீர்வு வரும்வழியாக பார்ப்பதாலேயே அனுமதிக்கிறோம். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களால் தீர்வை கொண்டு வரமுடியாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக எனக்குள் கோபம் நிகழ நான் அனுமதிப்பதில்லை. என் வாழ்க்கை எப்படி நடக்க வேண்டும் என்பது நூறு சதவிகிதம் என்னிடம் இருக்கிறது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
ஓரளவுக்கு என்னில் ஆதங்கம் ஏற்பட நான் அனுமதிப்பது, ரொம்பவும் லா-லா-லா என நாம் இருக்கக்கூடாது என்பதால்தான். எனக்குள் எப்போதுமே லா-லா நடக்கிறது. ஆனால் இந்த உலகில் சில செயல்களை செய்ய லா-லா வை கொஞ்சம் குறைத்து, கொஞ்சம் ஆற்றாமையை ஏற்படுத்திக் கொண்டால், அப்போதைய சூழ்நிலைக்கு எது தேவையோ அதைச் சுலபமாக செய்ய முடிகிறது.
கேள்வி : நீங்கள் யார்? தமிழரா? கன்னடரா? தெலுங்கரா?
சத்குரு :என்னை சிக்கலில் சிக்க வைப்பதுதான் உங்கள் லட்சியமா?
கேள்வி : இந்த கேள்வியை சாய்ஸ்ல் விட்டுவிடலாமா?
சத்குரு : இருக்கட்டும். எனது தாய்மொழி தெலுங்கு - பெருமையாக இருந்தாலும் கொஞ்சமாகவே பேசத்தெரியும். கர்நாடகாவில் வளர்ந்ததால் கன்னடத்துடன் வளர்ந்தேன். ஆனால், தமிழ்நாட்டிற்கு வருவதை தேர்வு செய்தேன். நீங்கள் பிறக்கும்போது உங்களுடன் இருப்பதைவிட, உங்கள் தேர்வுதானே உங்களுக்கு மேலானதாக இருக்கும்.
கேள்வி : புதிதாக ஒன்றை, கடைசியாக எப்போது செய்தீர்கள்?
சத்குரு : உங்கள் கேள்விக்கு இது சரியாக பொருந்தாது. ஆனாலும், முப்பது ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில்தான் மைசூர் நகரில் மோட்டார் சைக்கிள் ஓட்ட முடிந்தது. இது முதல் முறையல்ல என்றாலும், முப்பது ஆண்டுகள் என்பது அடுத்த பிறவியைப்போல இருக்கிறது. இது அதே உடல் இல்லை என்பதும் தெரிகிறது. முன்பு இரவு, பகல் என இடைவிடாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஓட்டி இருக்கிறேன். தூக்கமும் ஓய்வும் தேவையே இல்லாமல் தொடர்ந்து பயணம் செய்வேன். அப்போது எனக்கு ஓய்வு தேவைப்படாது. மோட்டார் சைக்கிளுக்குத்தான் தேவைப்படும்.
அதனால் இப்போது மூன்று மணிநேரத்திற்கு மேலாக மைசூர் நகருக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டியது புதிதாக வண்டி ஓட்டுவதுபோல இருந்தாலும், பழைய நினைவுகளுடன் சேர்ந்தே பயணித்தோம்.
கேள்வி : உங்களை பற்றியதில் எது பெரும்பாலான மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது?
சத்குரு : எல்லாமேதான்.
கேள்வி : கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமாக இருப்பது தெரியும். எங்கள் நிறுவன CIOவும் (தன்னையே குறிப்பிடுகிறார்) கோல்ஃப் ஆர்வமுள்ளவர். தேர்ந்த விளையாட்டு வீரர்போல விளையாடக் கூடியவர். டைகர் வுட்ஸ், ஜாக் நிக்லாஸ் இருவரில் யார் நன்றாக விளையாடுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
சத்குரு : ஜாக் நிக்லாஸ் இன்றும் நன்றாக விளையாடுகிறார். டைகர் வுட்ஸ் யாருடனும் ஒப்பிட முடியாத சிறந்த வீரர். சில சமயங்களில் அவரது திறமைக்கு ஏற்ப விளையாடாமல் இருந்தாலும், இப்போது மீண்டும் சிறப்பாக விளையாடுகிறார்.