தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 14

தியானலிங்க பிரதிஷ்டை செயல்முறையில், மூலாதார சக்கரத்தைப் பூட்டியபோது சத்குரு உடலை விட்டு வெளியேறினார். அப்படியானால், இப்போது எப்படி உயிருடன் உள்ளார்? அவர் மீண்டும் உடலில் சேர்வதற்காக என்னென்ன நிகழ்ந்தன? அந்த படபடக்கும் தருணத்தை இந்தப் பகுதியில் விவரிக்கிறார் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

தியானலிங்கத்தின் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ந்து கொண்டு இருந்தது. தியான அன்பர்களின் முன்னிலையில், சத்குரு, பாரதியின் துணையுடன் உச்சமான சக்தி நிலையை லிங்கத்தின் ஏழு சக்கரங்களிலும் அதற்கென்ற வழிமுறைகளின் படி செயல்பட்டு பூட்டிக்கொண்டு இருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
“பிராணப் பிரதிஷ்டை வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்துவிட்டது. நான் நலமாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி” என்கிற பொருளில் சத்குருவின் செய்தியைக் கொண்டு வந்து வாசித்தார்கள்.

மூவர் கொண்டு அமைக்கப்பட்ட முக்கோண சக்தி அமைப்பில் திடீரென்று விஜி சமாதி அடைந்த காரணத்தினால், விஜி செயலாற்ற வேண்டிய பணிகளையும் சத்குருவே பொறுப்பேற்றுச் செயலாற்ற வேண்டிய சூழ்நிலை. ஆகவே மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் முன்னேற்பாடுகளுடன் செய்துகொண்டு இருந்தார் சத்குரு. அது ஒரு சவாலான விஷயமாகவும் சத்குருவின் உடல் சக்தியை மீறிய விஷயமாகவும் இருந்தது. ஒவ்வொரு சக்கரமாக சக்தி நிலையைப் பூட்டிய சத்குரு, மிக முக்கியமான மூலாதார சக்கரத்தைப் பூட்டியபோது யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென்று வெட்டிய வாழையாகச் சரிந்து கீழே விழுந்தார். விழுந்த அந்த விநாடியே சத்குரு தன் உடலைவிட்டு வெளியேறியும் இருந்தார்.

இந்த மாதிரியான பின்னடைவை சத்குரு எதிர்நோக்கியிருந்ததால், இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக குறிப்புகள் தந்திருந்தார். ஆகையால் தொண்டர்கள், தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அவரை ஏற்றி ஈஷா யோக மையத்திலுள்ள தியான அறைக்கு அவரை கொண்டு சென்றார்கள்.

இங்கே பிராணப் பிரதிஷ்டையை நேரில் காண ஆர்வத்துடன் திரண்டிருந்த அன்பர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. என்ன நடந்தது என்று புரியாத பதட்டம். தியான மண்டபத்தில் தொண்டர்கள் சத்குரு சொல்லியிருந்த குறிப்புகளின்படி பலவிதமான காரியங்களில் உடனடியாக ஈடுபட்டார்கள்.

“பிராணப் பிரதிஷ்டை வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்துவிட்டது. நான் நலமாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி” என்கிற பொருளில் சத்குருவின் செய்தியைக் கொண்டு வந்து வாசித்தார்கள். அதன் பிறகுதான் அங்கு வந்திருந்த தொண்டர்களுக்கு பதட்டம் நீங்கியது. அந்தச் சிலிர்ப்பான அனுபவத்தை நேரில் அடைந்தவர்களால் அந்த நாளை தம் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இது ஏதோ மாயாஜால வித்தைபோலவும், ஏசு உயிர்த்தெழுந்தார் என்பது போலவும் பலருக்குத் தோன்றலாம். தீவிரமான யோகப் பயிற்சியில் ஒரு நபர் தன் உடலைவிட்டு சுலபமாகப் பிரிய வாய்ப்பு இருக்கிறது என்பதே ஆன்மீக உண்மை. இது தீவிரமான விருப்பத்துடன் நிகழும்போதுதான் அதை சமாதி அடைவது என்கிறார்கள். விஜி தன் உடலுடன் உள்ள தொடர்பை அப்படித்தான் தீவிரமான விருப்பத்துடன் துண்டித்துக் கொண்டு சமாதி அடைந்தார். இது போல பல ஞானிகள் தங்கள் உடலுடனான தொடர்பை இந்த நாளில், இந்த மணித்துளியில் என்று காலம் அறிவித்துவிட்டு நீக்கியிருக்கும் உதாரணங்கள் நிறைய உண்டு.

ஆனால்... சத்குருவுக்கு நிகழ்ந்தது அவர் விரும்பிச்செய்ததல்ல. அவரின் உடலின் சக்தி எல்லைக்குமேல் அவரின் செயல் இருந்ததால் இது நிகழ்ந்தது. ஒரு உடலைவிட்டுப் பிரிந்த உயிரை மீண்டும் அந்த உடலில் சேர்த்தல் என்பது விஞ்ஞான ரீதியில் சாத்தியமா என்கிற கேள்வி முக்கியமானது. சாத்தியம் என்பதே ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. உடல் அற்ற ஒரு உயிரை மீண்டும் ஒரு வடிவத்துக்குள் கொண்டு வருதல் கூட ஆன்மீகச் சாத்தியமே என்பதே சத்குருவின் கருத்து. இது அவர் கருத்து மட்டுமல்ல. அதற்கான சாத்தியங்களையும் தெளிவாக விளக்குகிறார்.

தியானலிங்கத்தின் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ந்து முடிந்த பிறகு நடைபெற்ற ஒரு சத்சங்க நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட உயிர், உடல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, பல செய்திகளைச் சொல்கிறார் சத்குரு.

பிராணப் பிரதிஷ்டையில் ஒரு முக்கிய அங்கம் வகித்த பாரதி அந்த சத்சங்க நிகழ்ச்சியில் இப்படிக் கேட்டார்: ‘‘சத்குரு! விஜி சமாதி அடைந்து விட்டதால், அவர் இப்போது நம்மிடையே இல்லை. ஆனால் பிராணப் பிரதிஷ்டையின் போது, அந்த முக்கோணக் கட்டமைப்பில் அவரின் தேவை இருந்தது. அப்போது அவரின் இருப்பை நான் மிகத் துல்லியமாக உணர்ந்தேன். அவர் ஸ்தூல வடிவில் அருகில் அமர்ந்திருந்தது போலவே இருந்தது. இது எப்படிச் சாத்தியம்?’’


அடுத்த வாரம்...

பாரதி அவர்களின் கேள்விக்கு சத்குரு அளித்த விளக்கம் என்ன? தியானலிங்கத்தில் நிலை நிறுத்திய சக்திநிலையை எதற்காகப் பூட்ட வேண்டும்? அதென்ன அலமாரியா? அதைப் பூட்டுவதென்றால் என்ன அர்த்தம்?; சத்குரு அதை எப்படிப் பூட்டினார்? இத்தனை கேள்விகளுக்கும் விடையாய் அடுத்தவாரப் பகுதி!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை