கேள்வி: அடிப்படையில், புற்றுநோய் என்றால் என்ன? அதைத் தடுக்க வழி உள்ளதா?

சத்குரு: நம் உடல் முழுக்க அணுக்கள் உள்ளன. நம் ஒவ்வொருவர் உடலிலும் 10,000 கோடிக்கும் அதிகமான அணுக்கள் உள்ளது என்று சொல்கிறார்கள். இந்த ஒவ்வொரு அணுவும் ஆரோக்கியமாக வாழும் அடிப்படையில்தான் இயங்குகின்றன, அப்படித்தான் அவை உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, அதன் பிழைப்பும், அது எந்த உயிரினத்தில் உள்ளதோ அதன் பிழைப்பும் நல்லபடியாக நிகழும் விதத்தில் அவை செயல்படுகின்றன. ஆனால் இதில் ஒருசில அணுக்கள் மட்டும் குறுக்குவழியில் செயல்படும். “அடுத்த அணு இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன?” என்று அவற்றிடமிருந்து தட்டிப்பறித்து அதையும் தன்னலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும். அதாவது அவை குற்றம் புரிகின்றன.

இப்போது ஒரு பிக்பாக்கெட் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது தொழில் என்ன? எதை சம்பாதிக்க உங்களுக்கு 1 மாதம் ஆனதோ, அது ஒரே நாளில் அவருக்கு வேண்டும். அவரும் நம் சமுதாயத்தில் நம்மோடு சேர்ந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார், பிடிபடும்வரை, இல்லையா?

நம் நாட்டில் இருக்கும் பிக்பாக்கெட்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து டில்லிக்கு வந்து விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அனைவரின் பணமும் பறிபோகும். ஏனெனில், இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதனால், புற்றுநோய் என்று எதைச் சொல்கிறீர்களோ, அது நம் ஒவ்வொருவர் உடலிலும் அணுக்களாய் உள்ளன. இவை அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றுகூடி ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்தால் அது பெரும் பிரச்சினையாக மாறும் - உயிரே போகும் அளவிற்கு பெரும் பிரச்சினையாக ஆகிவிடும்.

இதற்கு தீர்வு என்ன?

இதற்கு பல விஷயங்கள் சொல்லலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் முதலாக, ஒழுங்கில்லாத அமைப்பில்தான் குற்றம் பெருகும். எங்கு சட்ட ஒழுங்கு சரியாக செயல்படவில்லையோ, அந்த சமுதாயத்தில்தான் குற்றம் அதிகளவில் நடைபெறும். நம் உடலிலும் ஒரு பாதுகாப்பு அமைப்பு உள்ளது. அதை நாம் சரியான நிலையில் வைத்திருக்கிறோமா? அல்லது எல்லாவிதமாக போதைப்பொருட்கள், தூண்டுபொருள், இன்னும் மற்றவற்றை எல்லாம் உட்கொண்டுவிட்டு அதன்பிறகும் நம் பாதுகாப்பு அமைப்பு சரியாக செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமா? இது இப்படி வேலை செய்யாது. நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு போதைப் பொருளும், ஒவ்வொரு தூண்டுபொருளும் ஏதோ ஒருவிதத்தில் நம் பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்துகிறது.

ஒரு உணவிற்கும் அடுத்த உணவிற்குமான இடைவெளியை சரியான அளவிற்கு அதாவது 8 - 12 மணிநேரம் வரை நீட்டினால், இந்த புற்றுநோய் அணுக்கள் தாமாகவே இறந்துவிடும்.

இந்த பாதுகாப்பு அமைப்பு என்பது வெளியிலிருந்து வரும் கிருமித் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு மட்டும்தான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உள்ளிருக்கும் குற்றவாளிகளை கட்டுப்படுத்தி வைப்பதற்கும்கூட இந்த பாதுகாப்பு அமைப்பு செயல்படுகிறது. இதற்கு நம் யோக மரபில் ஒரு சாதாரணமான யோசனை வழங்கப்பட்டது. அது என்னவெனில், நம் உடலில் இருக்கும் இந்த புற்றுநோய் அணுக்களுக்கு மற்ற அணுக்களைவிட 27 - 28 மடங்கு அதிகமாக உணவு தேவைப்படும். அதனால், ஒரு உணவிற்கும் அடுத்த உணவிற்குமான இடைவெளியை சரியான அளவிற்கு அதாவது 8 - 12 மணிநேரம் வரை நீட்டினால், இந்த புற்றுநோய் அணுக்கள் தாமாகவே இறந்துவிடும். ஏனெனில், இவ்வளவு நேரம் உணவின்றி அவற்றால் வாழமுடியாது. மற்ற அணுக்கள் பிழைத்துக்கொள்ளும்.

இதன் அடிப்படையில்தான் நாம் இருவேளை உணவு என்று சொன்னோம். காலை ஒருவேளை, மாலை ஒருவேளை. நடுவில் எதுவும் உண்ணக்கூடாது என்பது நம் வழக்கத்தில் இருந்தது. இந்த புற்றுநோய் அணுக்களை கட்டுப்படுத்தி வைப்பதற்கு இது ஒரு எளியமுறை.

இது தவிர்த்து இன்னும் வேறு சில வழிகளும் உள்ளன. இது எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் மனதும் உடலும் ஓரளவிற்கு இறுக்கமின்றி இயல்பாக, தளர்வாக இருந்தால், இந்த புற்றுநோய் அணுக்களால் உங்கள் உடலில் வாழமுடியாது. அவ்வாறின்றி உங்கள் உடலும் மனதும் எப்போதும் ஏதோவொரு இறுக்கத்தில், போராட்டத்தில் உழன்று கொண்டிருந்தால், இதுபோன்ற சூழ்நிலையில் இந்த புற்றுநோய் அணுக்கள் நன்றாக வாழும். நன்றாக வாழ்வது மட்டுமல்ல, பெருமளவில் பெருகவும் செய்யவும்.

ஆசிரியர் குறிப்பு:

  • உங்கள் ஊரிலும், அருகாமையிலும் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறும் ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களைப் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.​
  • எளிய, சக்திவாய்ந்த ஈஷா கிரியா பயிற்சியை வழிகாட்டுதலுடன் இலவசமாக கற்றுக்கொள்ள சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.