Question: தெருவுக்குத் தெரு பிச்சைக்காரர்களின் தொந்தரவு பெருகிவிட்டது. 'உழைத்துப் பிழைக்காமல், இப்படிக் கையேந்துபவர்களுக்குக் காசு போட்டு ஆதரிக்காதே' என்று சொன்னால், என் மனைவி கேட்பதில்லை. 'இது தர்மம், புண்ணியம்' என்கிறாள். பிச்சைக்காரர்களை ஆதரிப்பது தர்மமா அல்லது தவறா? சோம்பேறிகளை உருவாக்கும் முட்டாள்தனமா?

சத்குரு:

குழந்தைகளைத் திருடி அவர்களின் கண்களைக் குருடாக்கி, கை கால்களை முடமாக்கிப் பிச்சையெடுக்க வைத்து பிழைப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். சந்தேகமே இல்லை. ஆனால், அதை நானோ, நீங்களோ செய்ய முடியாது. அரசு செய்ய வேண்டும்.

ஒருவர் பிச்சையெடுக்கிறார் என்றால், பொருளாதார ரீதியாகத் தன்னைக் கவனித்துக் கொள்ளும் திறமையை அவர் இழந்துவிட்டார் என்று அர்த்தம்.

மற்றபடி, உலகில் பிறந்த அத்தனை மனிதர்களும் ஒரேவிதமான திறமையோடு இருப்பதில்லை. உடல்ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ பலவீனமாகிப் போனவர்கள், மற்றவர்களை உந்தித் தள்ளிக் கொண்டு முன்னேறும் திறனின்றிப் பின்தங்கிவிடுகிறார்கள். சமூக அமைப்பும், குடும்பமும் ஆதரிக்காத நிலையில், அவர்களின் தெருவுக்கு வந்துவிடுகிறார்கள்.

தன் கைகளைப் பிறர் முன் நீட்டி யாசிப்பது என்பது ஒரு மனிதனுக்கு எப்பேர்ப்பட்ட தலைகுனிவு! செல்வந்தர்களாக வாழ வேண்டும் என்று கனவு காண்பார்களே தவிர, பிச்சைக்காரர்களாக உலா வர வேண்டும் என்று யாராவது கனவு காண்பார்களா?

ஒருவர் பிச்சையெடுக்கிறார் என்றால், பொருளாதார ரீதியாகத் தன்னைக் கவனித்துக் கொள்ளும் திறமையை அவர் இழந்துவிட்டார் என்று அர்த்தம். பசியின் வேதனை அவரை மற்றவர்களிடம் கையேந்த வைக்கிறது. அவரைக் கருணையுடன் பார்க்க வேண்டும்.

Question: அப்படியானால், பிச்சைக்காரர்களுக்குக் காசு போடாமல் போவது தப்பா?

சத்குரு:

பிச்சையெடுப்பதை நான் ஆதரிக்கவில்லை. சமூக அளவில் மாற்றங்கள் கொண்டுவரும் வரை, பிச்சைக்காரர்களைத் தவிர்க்க முடியாது என்றுதான் சொல்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிச்சையெடுக்கும் ஒருவர் ஏமாற்றுக்காரர் போல உங்களுக்குத் தோன்றுகிறதா? அவருக்குக் காசு போட விருப்பமில்லையா? போடாதீர்கள். பத்துக் காசானாலும் சரி, பத்தாயிரம் ரூபாயானாலும் சரி. உங்கள் மனம் சம்மதித்தால் மட்டுமே போடுங்கள். அவர்கள் மீது காசை வீசியெறிவதல்ல தர்மம்.

அவர்களைக் கவனித்து, உங்களால் ஏதாவது மாற்றங்களை கொண்டு வர நேரமிருந்தால், அதைச் செய்யுங்கள். மற்றபடி, 'பிச்சையே போடமாட்டேன்' என்று கொள்கைரீதியாக எந்தத் தீர்மானமும் செய்யாமல், பிச்சையெடுப்பவரை அணுகுங்கள் என்கிறேன்.

Question: இந்துக் கோயில் வாசலில் பிச்சையெடுப்பவர்கள் சர்ச் வாசலிலும், மசூதி வாசலிலும் அந்தந்த மதத்துவர் போல தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டு பிச்சையெடுக்கிறார்களே, இது ஏமாற்று வேலை இல்லையா?

சத்குரு:

கோயிலுக்குள் மட்டுமல்ல, வெளியே இருப்பவர்களும் கடவுள்கள்தாம் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள அவர்கள் வழி செய்வதாக நினையுங்களேன்! உங்களுக்கும், எனக்கும் கூட நாளைக்கு இந்த நிலை ஏற்படலாம் என்பதைச் சுட்டிக்காட்ட அவர்கள் வெளியே உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற கவனத்தோடு அவர்களை அணுகுங்களேன்!

திருடுபவனைவிடப் பிச்சையெடுப்பவன் எவ்வளவோ மேல்! அவனாக எடுத்துக் கொள்ளாமல், கேட்டு வாங்கிக் கொள்கிறானே!

என் தாத்தாவின் வீட்டில் தினம்தோறும் கிட்டத்தட்ட இருநூறு பிச்சைக்காரர்களுக்கு ஒருவேளை உணவு வயிறாரக் கொடுக்கப்பட்டு வந்ததை நான் அறிவேன். பணக்காரர்கள் தாமாக முன்வந்து ஏழைகளுக்குக் கொடுத்து வந்த சமூக அமைப்புகள் பெரும்பாலும் வழக்கொழிந்து போய்விட்டன.

போர்களைச் சந்தித்த பல சமூகங்களில் நிலைமை சடாரென்று தலைகீழாக மாறியிருக்கிறது. வசதியாகவும், மதிப்புடனும் வாழ்ந்தவர்கள் திடீரென்று நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள். உணவுக்குக் கையேந்தியிருக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பல குடும்பப் பெண்கள் தங்கள் குழந்தைகளையும், குடும்பத்தையும் ஆதரிக்க வேறு வழி தெரியாது, பாலியல் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் பசிக் கொடுமைக்கு ஆளானால், அவன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகிவிடுகிறான். திருடுவதோ, பிச்சையெடுப்பதோ வயிற்றுப் பசிக்கு எதிரில் பெரிய குற்றமாகத் தோன்றாது.

திருடுபவனைவிடப் பிச்சையெடுப்பவன் எவ்வளவோ மேல்! அவனாக எடுத்துக் கொள்ளாமல், கேட்டு வாங்கிக் கொள்கிறானே! அதனால், பிச்சைக்காரர்களைக் கேவலமாகப் பார்க்காதீர்கள்.

சிவனே பிச்சைப் பாத்திரத்துடன்தானே அலைகிறான்? புத்தர் பிச்சைக்காரர்தான். அவரது எண்ணற்ற சீடர்கள் பிச்சையெடுத்துதான் புசித்தார்கள். பல ஞானிகளும், சந்நியாசிகளும் தங்கள் உணவைப் பிச்சையெடுத்துதான் உண்கிறார்கள்.

அவர்கள் தங்கள் வீட்டில் வந்து உணவைப் பெற்றுச் செல்ல மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிக் காத்திருப்பார்கள். சந்நியாசிகளுக்கு உணவளிப்பதைத் தங்கள் பேறாக நினைப்பார்கள். ஏன்?

பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது.

புத்தரைத் தேடி ஒருவர் வந்தார்.

"ஞானியே, தங்களுக்காக நான் பூக்கள் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார்.

புத்தர், "வீட்டெறியுங்கள்" என்றார். வந்தவர் அதிர்ந்தார்.

"நான் கொண்டு வந்த இந்தக் காணிக்கையையா விட்டெறியச் சொல்கிறீர்கள்?"

புத்தர் மறுபடியும், "விட்டெறியுங்கள்" என்றார். வந்தவர் பூக்களை கீழே எறிந்தார்.

புத்தர் தலையை அசைத்தார். "விட்டெறியச் சொன்னது இந்த அழகான பூக்களை அல்ல. 'நான்... நான்...' என்று சொன்னீர்களே, அந்த நானை! என்றார் புத்தர்.

பிச்சையெடுப்பது, 'நான்' என்ற அகங்காரத்தை விடுவதற்காகப் பயன்படும் ஒரு கருவி. இந்த காரணத்துக்காக, ஒவ்வொருவரும் வருடத்தில் ஒருநாளாவது பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்று நம் கலாச்சாரத்தில் ஒரு வழக்கமே இருந்திருக்கிறது.

வெளிப்படையாகத் தெரியும் விஷத்தை மட்டும் கவனிக்காமல், உள்ளே பொதிந்திருக்கும் அமுதத்தையும் கவனியுங்களேன்!