ஒரு பெண்ணிற்கு முக்தி சாத்தியமா?
மைத்ரேயி மற்றும் யாக்ஞவல்கியர் இருவருக்கும் இடையே நடந்த விவாதத்தின் முடிவு என்ன என்பதைப் பற்றி கூறும் சத்குரு அவர்கள், பண்டைய காலங்களில் இருந்த பெண்களின் நிலையையும் எடுத்துரைக்கிறார்....
பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! - பகுதி 2
மைத்ரேயி மற்றும் யாக்ஞவல்கியர் இருவருக்கும் இடையே நடந்த விவாதத்தின் முடிவு என்ன என்பதைப் பற்றி கூறும் சத்குரு அவர்கள், பண்டைய காலங்களில் இருந்த பெண்களின் நிலையையும் எடுத்துரைக்கிறார்....
சத்குரு:
Subscribe
கணவன் மனைவியாக வாழ்ந்த இருவர்...
யாக்ஞவல்கியர் தன் குறைகளை உணர்ந்து, மைத்ரேயியின் கால்களில் விழுந்து, தன்னையும் ஒரு சீடராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். மைத்ரேயி அவரைத் தன் கணவராக ஏற்கிறாள். மைத்ரேயி அவரிடம் சொல்கிறார், "நீங்கள் என் சீடராக இருக்க வேண்டாம், கணவராக இருங்கள்" என்று. ஏனென்றால் தன் ஆற்றலுக்கு ஓரளவு இணையாக வருகிற எந்த மனிதரையும் அவள் இதுவரை சந்தித்ததில்லை. அவள் உணர்ந்ததை அவர் உணராவிட்டாலும் கூட, ஓரளவுக்காவது இணையாக வருபவர் யாக்ஞவல்கியர் என்பதால் அவரைக் கணவராகக் கொள்வது என்று மைத்ரேயி முடிவெடுக்கிறாள். பல ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறாள். வேத காலங்களில் ஆண்களுக்கு இருந்த அனைத்து ஆத்ம சாதனைகளும் பெண்களுக்கும் இருந்தன. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு யாக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் வந்து, "இந்த உலக வாழ்க்கை போதும் என்று கருதுகிறேன். என்னிடம் இருப்பதெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு கானகங்களுக்குப் போய் என்னை நானே உணர முற்படுகிறேன்" என்று சொல்கிறார். உடனே மைத்ரேயி கேட்கிறார், "இதுபோன்ற சொற்ப விஷயங்கள் பின்னால் செல்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்? உண்மையான பொக்கிஷத்தைத் தேடி நீங்கள் போகிறபோது, இந்த சின்னச் சின்னப் பொருள்களைப் பெரிதென்று எண்ணி நான் இருந்து விடுவேனா?" என்று கேட்கிறார். பிறகு இருவருமே கானகத்துக்குப் போய், ஞானமடைந்த நிலையிலே வாழ்ந்தார்கள்.
பெண் எப்போது ஆளுமை செய்வாள்?
இதுபோல நிறைய கதைகள் உண்டு. இது நமக்கு உணர்த்துவது என்னவென்றால், வேத காலங்களில் ஆன்மீக வாழ்க்கையைப் பொறுத்த வரை, பெண்கள் சரிசமமாகக் கருதப்பட்டார்கள் என்பதுதான். இவை மிகவும் சீர்பட்ட சமுதாயங்களாகத் திகழ்ந்தன. சமூகம் சீராக இருந்தால் ஒரு பெண்தான் ஆதிக்கம் செலுத்துவாள். ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. எல்லாத் துறைகளிலும் சரிசமமாக அவள் திகழ்வாள். சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படுகிறபோதுதான், சமூக வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டு, இடப்பெயர்ச்சி நிகழ்ந்து, உயிர் வாழ்வதே முக்கியம் என்ற நிலை வரும்போதுதான் ஆணின் கை ஓங்குகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் ஒரு பெண் பெரிதும் ஆணையே சார்ந்து வாழ்கிறாள். வாழ்க்கை கடுமையாகும் போது ஆண் ஆளுமை செலுத்துவதும், வாழ்க்கை மிகவும் சூட்சும நிலையிலே இயங்குகிற போது பெண் ஆளுமை செலுத்துவதும் இயல்பு. அந்த நேரங்களில் ஒரு பெண்ணை சார்ந்துதான் ஒரு சமூகம் இருக்கும். ஒருவேளை இதனால்தான் ஆண்கள் சமூகத்தில் எப்போதும் குழப்பங்களை மேலும் மேலும் உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்களோ என்னவோ?
பெண்கள் இழந்த சுதந்திரம்
கி.மு. 3000த்திலிருந்தே வரலாறு நமக்குச் சொல்வது என்னவென்றால் ஆணும், பெண்ணும் சரிநிகராக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதுதான். அதற்குப் பிறகு மங்கோலியா, மத்தியசீனா, இந்தோசீனா போன்ற இடங்களிலிருந்து மூர்க்கத்தனமான படையெடுப்புகள் நம் நாட்டின் மீது நிகழ்ந்தபோது, கொள்ளையடித்து உண்டு வாழும் வாழ்க்கைமுறை பிரபலமானபோது, பெண் மெல்ல மெல்ல தன் சுதந்திரத்தை இழக்கலானாள். எது கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு போகிறவர்கள் வந்தவுடன், ஆண்கள் பாதுகாப்புப் பணிகளில் நாட்டம் செலுத்தத் தொடங்கினார்கள். இதற்குப்பின் வகுக்கப்பட்ட செயல்முறைகள் ஒருதலைப்பட்சமாகி, சாத்திரங்களும், சூத்திரங்களும் வழங்கிய விதிமுறைகள் மாற்றப்பட்டு, ஸ்மிருதிகளாக எழுதப்பட்டன.
பெண்ணிற்கு எப்போது முக்தி?
வேதங்கள் ஸ்ருதிகள். அவை வாழ்வின் இறுதிநிலை உண்மைகளைப் (ultimate reality) பற்றிப் பேசுகின்றனவே தவிர வாழ்க்கை குறித்த எந்த நிர்ணயமும் அவை வகுப்பதில்லை. எப்படி வாழ்வது என அவை சொல்வதில்லை. பிறகு தான் ஸ்மிருதிகளை எழுதினார்கள். 50லிருந்து 60 சதவீதம் வரை ஸ்மிருதிகள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதாகவே அமைந்தது. ஒருவேளை அதற்கான கட்டாயம் அப்போது இருந்தது என்று சொல்லலாம். வெளிச்சூழ்நிலை காரணமாக பெண் மீது சில தடைகள் வகுப்பப்பட வேண்டியிருந்திருக்கலாம். ஆனால், அவை நிரந்தரமான சட்டங்களாக மாறியது துரதிர்ஷ்டவசமானது. ஸ்மிருதிகளைப் பொறுத்தவரை பெண்ணுக்கு எதிராக செய்த முதல் மாற்றம், 'பெண்கள், ஆண்களைப் போல பூணூல் அணிய முடியாது' என்று நிர்ணயித்ததுதான். அது ஒரே நேரத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. படிப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கக்கூடும். மெல்ல அது மேலும் வளர்ந்து, ஒரு பெண் முக்தியடைய ஒரே வழி, அல்லது தன்னை உணர்வதற்கான ஒரே வழி, தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன் மூலமாகத்தான் என்று முடிவு செய்தார்கள்.
அடுத்த வாரம்...
வேத காலங்களில் பெண்களின் சுதந்திரம் எப்படி இருந்தது? காலப்போக்கில் அது எப்படி மாற்றமடைந்து சமூகத்தை பாதித்தது என்பதை அறிவோம்...
பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! தொடரின் பிற பதிவுகள்