ஒரு குருவிற்கு ஏன் எழுத்தறிவு தேவையில்லை?
எழுதப் படிக்கத் தெரியாதபோதும், அந்த குரு உயிரின் மூலத்துடன் தொடர்பு வைத்திருப்பதால்தான், ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்கிறார்கள்.
ஜென்னல் பகுதி 31
ஜென் குருவிடம் பெண் சீடர் ஒரு புத்தகத்தின் பக்கத்தைத் திறந்து காட்டினாள். “பல வருடங்களாகப் படித்தும் நிர்வாணா குறித்த இந்தச் சூத்திரங்கள் எனக்குப் புரியவில்லை. அவற்றுக்கு விளக்கம் அளிப்பீர்களா?”
குரு சொன்னார்: “எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சூத்திரத்தைப் படி. உதவ முடிகிறதா என்று பார்க்கிறேன்!”
பெண் சீடர் அதிர்ந்தாள். “எழுதப் படிக்கத் தெரியாதவரால் அர்த்தத்தை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? இதை அறியாமல், நீங்கள் சொல்வதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடுகிறார்களே!” என்றாள் அவள்.
குரு நிலவைக் சுட்டிக்காட்டினார். “இந்த விரல் இல்லை என்றாலும், அந்த நிலவை நீ பார்க்க முடியும் அல்லவா?”
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
நிர்வாணா என்பதும் முக்தி என்பதும் எல்லாவற்றையும் கடந்துவிட்ட ஒன்றுமற்ற நிலை.
ஏதோ ஒன்று இருந்தால், அதை விளக்க படிப்பு தேவைப்படலாம். எது இல்லாததோ, எது படைத்தலைத் தாண்டி இருக்கிற தன்மையோ, அந்த ஒன்றுமற்ற தன்மையைப் புரிந்துகொள்ள, பெரிய படிப்பு எதற்கு? கண்களை மூடி அமைதியாக இருந்தாலே புரிந்துகொள்ளக் கூடியது அது. அதற்கு எழுத்தும் படிப்பும் வேண்டாம். உயிர் பற்றிய உணர்வு போதும்.
சூத்திரம் என்று சில வார்த்தை அமைப்புகளில் சிக்கிவிட்டால், வெளியே வர முடியாமல் போகலாம். எழுதியதைப் படித்து மனதில் நூறு அர்த்தங்கள் பண்ணிக் கொள்ளலாம். ஆனால், அதில் எதுவும் சரியாக இருக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.
உயிரையும், அதன் மூலத்தையும் புரிந்துகொண்டவருக்கு எழுத்தும், படிப்பும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே வருவது இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதபோதும், அந்த குரு உயிரின் மூலத்துடன் தொடர்பு வைத்திருப்பதால்தான், ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது எதுவோ, அதை அவர் புரிந்து கொண்டு விட்டபின், எழுதப் படிக்கத் தெரிந்தாலும் ஒன்றுதான், தெரியாவிட்டாலும் ஒன்றுதான்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418