பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! - பகுதி 1

விடுதலையின் பாதையில் பெண்கள்... பல நூற்றாண்டுப் பழமை விலங்குகளை சத்குரு உடைத்தெறிகிறார்.

சத்குரு:

உடல்ரீதியாக ஆண்களைவிடவும் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால், பெண்களை உளவியல் ரீதியாகவும் வலிமை இழந்தவர்களாக்கி, ஆன்மீகத்திலும் அவர்களை பலவீனப்படுத்தி, பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல் ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். இந்த நிலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவை எல்லாமே ஆண்களைவிட பெண்கள் உடல்ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான். வேறெந்த விதத்திலும் ஆண்கள், பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. கொஞ்சம் கூடுதலான வலிமையிருக்கிறது. அவ்வளவுதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது மிகவும் நீளமானதொரு காலம் என்றே கருதுகிறேன். இது பற்றி, கவனம் கொண்டு மக்கள் எதையாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை, அவன் தன்னைத்தானே உணர வாய்ப்பேயில்லை. ஏனெனில், அவனின் பாதியே பெண்மைதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மீகத்தில் பெண்கள்

அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன்கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோயிலுக்குத்தான் செல்வான்.

இந்திய ஆன்மீக உலகில், தன்னை உணருகின்ற விழிப்பு நிலையின் உச்சத்தைத் தொடுதலில், ஆண்களும், பெண்களும் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். உள்நிலையைப் பொறுத்தவரையில் ஆணிற்கு இணையான தன்மை பெண்ணிற்கும் உண்டு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலேயிருக்கிற தோலைத்தான் ஆண் என்றும், பெண் என்றும் பிரிக்கிறோமே தவிர உள்ளே இருக்கிற தன்மை ஒன்றுதான். ஆண் தோலா? பெண் தோலா? என்பதுதான் பேதம். உங்கள் ஆன்மீக சக்தியை நிர்ணயிக்கக்கூடியவை இந்த தோல்கள் அல்ல. வேண்டுமானால் உடல்கூற்று அளவில் சில பின்னடைவுகள் பெண்களுக்கு இருக்கலாம். ஆனால் உளவியல் ரீதியில் அவர்கள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றவர்கள். வேத காலங்களிலிருந்தே பெரிய முனிவர்களாக பெண்கள் திகழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டு முறையின் தொடக்கமே பரம்பொருளை ஒரு அன்னையாக வணங்குவதில்தான் தொடங்கியது. விலையில்லாத இறைத்தன்மையை அன்னையாகத்தான் பார்த்தார்கள். அன்று முதல் இன்று வரை கூட அது தொடர்கிறது. இன்றுகூட பெண்தெய்வ வழிபாடு என்பது ஆண்தெய்வ வழிபாட்டைவிட அதிகம் இருக்கிறது. அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன்கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோயிலுக்குத்தான் செல்வான்.

பூணூல் அணிந்த பெண்கள்

வேத காலங்களில், அந்தணர் அணிகிற பூணூலை, பெண்களும் அணிந்திருந்தார்கள். பூணூல் அணிகிற தகுதி அவர்களுக்கு இருந்தது. ஏனென்றால், பூணூல் இல்லாமல் வேதங்களையோ, இதிகாசங்களையோ படிக்கக் கூடாது என்கிற ஒரு விதிமுறை அன்றைக்கு இருந்தது. ஆன்மீகம் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல, பெண்களுக்கும்கூட என்பதால் பூணூல் அணிவிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயி போன்ற பெண் முனிவர்கள் நிறைய பேர் அன்று வாழ்ந்தார்கள்.

வெற்றி பெற்ற மைத்ரேயி

ஜனக மஹாராஜாவின் அரண்மனையில் ஒருமுறை ஆன்மீக விவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் பங்கேற்க எல்லா முனிவர்களும், ஞானிகளும், சாதுக்களும் கூடியிருந்தார்கள். எது உண்மை, எது பொய் என்று கண்டறிவதற்கான போட்டி என்றுகூட அதைச் சொல்லலாம். ஜனக மஹாராஜா தன்னை உணர்ந்த ஒருவர், தன்னுள் இருக்கும் உண்மையை உணர்ந்த ஒரு அரசர். எனவே இப்படியொரு விவாதத்தை ஏற்படுத்தி நாட்டில் ஆன்மீகப்பாதையில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் பங்கேற்கும் விதமாக அமைத்திருந்தார். விவாதம் தொடரத் தொடர சூட்சும நிலையில் அது நடைபெறத் தொடங்கியது. தொடக்கத்தில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேருமே ஆன்மீக விவாதத்தில் பங்கேற்றார்கள். ஆனால் நேரம் போகப்போக பலர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. அந்த அளவுக்கு விவாதங்கள் சூட்சுமமாகப் போய்க் கொண்டிருந்தன. இரண்டே இரண்டு பேர்தான் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் யாக்ஞவல்கியர், இன்னொருவர் மைத்ரேயி.

இந்த இருவருக்கும் இடையிலான விவாதம் நாட்கணக்கில் தொடர்ந்து நடைபெற்றது. உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் விவாதம் நடந்துகொண்டேயிருந்தது. எல்லோரும் உட்கார்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்கு சூட்சும நிலையிலே விவாதங்கள் போய்க் கொண்டிருந்தன. இறுதியில் மைத்ரேயி கேட்ட ஒரு கேள்விக்கு யாக்ஞவல்கியரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆன்மீகப் பாதையில் செல்வதற்காக அரசையே துறந்துவிட்டு வந்த மனிதர், கூர்மையான மதிக்கு மிகவும் புகழ் பெற்றிருந்த அவர், கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத நிலையிலிருந்தார். கோபமும், பதட்டமும் அடைந்தார். மைத்ரேயியிடம் சொன்னார், "இன்னும் ஒரு கேள்வி கேட்டால் நீ துண்டு துண்டாக வெடித்து விடுவாய்" என்று. ஜனக மஹாராஜா தலையிட்டார். யாக்ஞவல்கியரிடம் சொன்னார், "உங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்துக்குள் அவையெல்லாம் வராததால் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை" என்றார். பிறகு, குழுமியிருந்த அத்தனைபேர் மத்தியிலேயும் மைத்ரேயிக்கு அவர் உரிய மரியாதைகள் செய்தார்.

அடுத்த வாரம்...

யக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் என்ன சொல்லியிருப்பார்? அதன் பின் என்ன நடந்தது? அடுத்த வாரம் தெரிந்துகொள்வோம்...

பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! தொடரின் பிற பதிவுகள்