நகைச்சுவைக்கு சிரிப்பதற்கும் ஆனந்தமாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?
சார்லி சாப்ளின் முதல் நம்ம ஊர் வடிவேலுவரை காமெடி நடிகர்கள் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நகைச்சுவைக்கு சிரிக்கும் மனிதர்களெல்லாம் எப்போதும் ஆனந்தமாக இருப்பதில்லையே?! எப்போதாவது சிரிக்கும் நிலையிலிருந்து ஆனந்தமே நம் இயல்பாக மாறும் நிலை பற்றி சத்குரு பேசுகிறார்.
சத்குரு:
ஆனந்தம் என்பது ஒரு உணர்ச்சி அல்ல. இன்னதென்று சொல்லமுடியாத ஒருவிதமான இனிமை உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி நிறைந்து இருந்தால், நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனந்தமாக இருப்பது என்றால், ஏதோ நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து சிரித்து மகிழ்வது அல்ல.
Subscribe
அப்படி சிரிப்பது ஒன்றும் தவறு இல்லை; ஆனால் இந்த ஆனந்தம் நம்மிடம் நீடித்திருப்பது அந்த ஒரு கணம் மாத்திரம்தான். மறுகணம் காணாமல் போய்விடும். நாள் முழுவதும் நம்மால் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து, சிரித்துக் கொண்டிருக்க முடியாது; இல்லையா?
இசையோ, நடனமோ, விளையாட்டோ அல்லது உறவோ... ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எந்த செயலில் ஈடுபட்டாலுமே, சலிப்பு வந்துவிடும். ஆனால் உங்கள் உயிர்த்தன்மை ஒரு போதும் சலிப்படைவதே இல்லை. வாழ்வின் ஆதாரமே இதுதான்... உங்கள் உயிர்த்தன்மையோடு உங்கள் உடல், மனம், உணர்ச்சி இவை நன்றாக ஒருங்கிணைந்து இருந்தால், ஆனந்தம் என்பது உங்கள் இயல்பு நிலை என்பதை உணர்வீர்கள்.
அதன்பிறகு அதை வெளியில் எங்கும் தேடி அலையமாட்டீர்கள். ஆனந்தத்தை உங்களுக்குள்ளே உணர ஆரம்பித்த பிறகு, ஆனந்தம் தேடி உறவுகளை நோக்கி ஓடமாட்டீர்கள். அவர்களிடமிருந்து ஆனந்தத்தை பிழிந்து எடுக்கவோ அல்லது பிச்சை எடுக்கவோ முயற்சிக்கமாட்டீர்கள். மாறாக, உங்கள் ஆனந்தத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்குவீர்கள்.
இப்படி ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்வதால், உங்கள் வாழ்வின் தரம் மற்றும் உங்கள் உறவுகளின் தரமே மாறிவிடும். இது மிகப் பெரிய மாற்றம். இப்படி நீங்கள் வாழும்போது, மிகவும் சுதந்திரமாக, என்ன செயல் தேவையோ அதை மட்டுமே செய்வீர்கள். தேவை இருக்கிறதோ இல்லையோ... ஆனால் கட்டாயமாக செயல் செய்தே ஆகவேண்டும் என்கிற நிர்பந்தம் ஒழிந்துவிடும்.