‘நதிகளை மீட்போம்’ - சத்குருவுடன் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் உரையாடல்!
‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தை முன்னிறுத்தி சத்குரு மேற்கொண்ட பயணமும் முன்னெடுப்புகளும் பாரத அளவில் பல்வேறு தரப்பிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், தற்போது உலகளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிசம்பர் 19ம் தேதியன்று சத்குருவுடன் ஐ,நாவுக்கான சுற்றுச்சூழல் தலைவர் மேற்கொண்ட ஆலோசனைகள் குறித்து சில துளிகள் உங்களுக்காக!
Global Landscapes Forum (GLF) என்பது முறையான நிலவள பயன்பாடு தொடர்பான உலகின் மாபெரும் கருத்தரங்கமாகும். இதில் ஐ,நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் கடந்த டிசம்பர் 19 அன்று சத்குருவுடன் கலந்துரையாடினார். ஜெர்மனியில் பான் நகரில் நிகழ்ந்த உலகளாவிய நிலவமைப்பு மாநாட்டில் (GLF – 2017), நீராதாரம் பற்றாக்குறையாகும் அபாயத்தை சுட்டிக்காட்டி, பாரதத்தின் நதிகளைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் பற்றியும் சத்குரு பேசினார்.
“நாம் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தைப் பின்பற்றி, காடுகள் அழிப்பைத் தடுத்து, வறண்ட நிலங்களை பசுமையாக்கினால், பருவநிலை சீர்கேட்டிற்கான ஒரு பங்குதாரர் என்ற நிலையிலிருந்து நாம் பருவநிலைக்கான தீர்வாக மாறமுடியும்.” -எரிக் சோலெம்
‘நதிகளை மீட்போம்’ இயக்கமானது உலக அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஒரு முன்னுதாரணமாக அமைவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் களம் அமைந்தது.
தான் சத்குரு குறித்து முன்பே படித்தறிந்துள்ளதாக தனது பேச்சைத் துவங்கிய எரிக் சோலெம் அவர்கள், சத்குருவிடம் தங்களுக்கு சுற்றுச்சூழல் மீது ஆர்வம் வந்தது எப்படி என்ற கேள்வியை முன்வைத்தார். தான் சிறு வயதில் காவிரியில் ரப்பர் ட்யூப்கள் மற்றும் சிறிது மூங்கில்களைக் கட்டிக்கொண்டு தொடர்ந்து ஆற்றில் சில நாட்கள் பயணம் செய்திருப்பதாகவும் ஆனால் தற்போது காவிரி பெரும்பாலான சமயங்களில் கடலைத் தொடுவதே இல்லை என்பதையும் அவர் பதிவு செய்தார்.
இந்தியாவின் 60% ஜீவநதிகள் தற்போது பருவகால நதிகளாக மாறியுள்ளதை அவர் வருத்தத்துடன் தெரிவித்ததோடு, ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் மூலமாக மாணவர்களுக்கு மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுவதையும், தற்போது தங்கள் பகுதியில் ஆங்காங்கே பல்வேறு குழுக்கள் மரம் நடும் பணிகளை ஆர்வத்துடன் மேற்கொள்வதையும் அவர் கூறினார். ஆனால், என்னதான் தனியார் அமைப்புகள் அளவில் செயல்கள் நிகழ்ந்தாலும் அரசாங்கம் முன்வந்து தேவையான சட்டங்களை இயற்றினால்தான் நதிகளை மீட்கும் முயற்சி வெற்றியடையும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். தற்போது பாரத பிரதமர், ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் பரிந்துரைகளை பரிசீலிப்பதற்காக வேண்டி ‘நிதி ஆயோக் (NITI Aayog)’ எனும் அமைப்பிடம் ஒப்படைத்திருப்பது குறித்த மகிழ்ச்சியையும் அவரது உரையில் காணமுடிந்தது!
மேலும், விவசாயிகள் மரப்பயிர் வேளாண்மைக்கு மாறுவதற்கு சட்டதிட்டங்களிலும் அணுகுமுறைகளிலும் சில மாறுதல்களைக் கொண்டுவர வேண்டுமென்பதை அவர் விளக்கினார். மெகஸ்தனிஸ் போன்ற வரலாற்றுப் பயணிகள் எழுதியுள்ள இந்தியா பற்றிய குறிப்பில் இந்தியர்கள் பழ உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டதை பதிவு செய்துள்ளதாகவும், ஆனால், தற்போது வெறும் 4% பேர் மட்டுமே இந்தியாவில் பழ உணவுகளை உட்கொள்கின்றனர் என்றும் அந்த 4% பேரும் கூட உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதை பார்க்கமுடிகிறது என்பதையும் சத்குரு குறிப்பிட்டார். எனவே, எதிர்காலத்தில் பழ உணவுகள் உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்பதையும் அரங்கத்தில் தெரிவித்துக்கொண்டார்.
Subscribe
உலகின் மாபெரும் அறிவியல் தலைமைகள், நில பயன்பாடு குறித்த பல்வேறு துறைசார்ந்த அமைப்புகள், உலக தலைவர்கள், சீரற்ற பருவநிலை குறித்து செயலாற்றுபவர்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள், குடிமக்கள் மற்றும் ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் மாபெரும் அளவில் ஒன்றுகூடி, நிலவளத்தை சீரான விதத்திலும், பாகுபாடின்றியும், பயனடையும் விதமாகவும் மற்றும் பருவநிலையோடு இயைந்துபோகும் விதமாகவும் உருவாக்குவதற்கு ஆவன செய்தவற்கான முன்னெடுப்புகளை இந்த மாநாட்டில் ஆராய்ந்தனர். 3000க்கும் மேற்பட்ட அமைப்புகளிலிருந்து 25000க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் 110 நாடுகள் இந்த GLFஉடன் செயல்படுகின்றனர். ஜெர்மன் அரசால் வழங்கப்படும் பிரதான நிதி ஆதாரத்தைக்கொண்டு, GLF தற்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு உள்நாட்டு சமூக தளங்களில் செயல்பாடுகளைத் துவங்க உள்ளது!
ஐ,நா சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ந்து நிலவளத்தை முறையாகப் பயன்படுத்துவது குறித்து மகத்தான செயல்களைச் செய்துவருவதோடு, காடுகள் அழிப்பை தடுத்தல், காடுகளை மீட்டுருவாக்குதல் மற்றும் நிலவமைப்புகள் குறித்த செயல்பாடுகளில் 30 சதவிகிதத்திற்கு மேல் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது!
எரிக் சோலெம் அவர்கள் சொல்லும்போது, “பருவநிலை செயல்பாடுகளில், நிலங்களைக் கையாளும் விதம் என்பது இன்னமும் பெருமளவில் அறிந்திராத ஒரு சாத்தியக்கூறாக உள்ளது!’ என்றார். மேலும் சொல்லும்போது, நாம் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தைப் பின்பற்றி, காடுகள் அழிப்பைத் தடுத்து, வறண்ட நிலங்களை பசுமையாக்கினால், பருவநிலை சீர்கேட்டிற்கான ஒரு பங்குதாரர் என்ற நிலையிலிருந்து நாம் பருவநிலைக்கான தீர்வாக மாறமுடியும் என்றும் நாம் இப்போதும் கூட ஒவ்வொரு வருடமும் போர்ச்சுக்கல் அளவிலான வனப்பகுதியை இழந்து வருகிறோம்” என்றும் சொன்னார்.
இந்த உரையாடலின் வீடியோ பதிவு
‘நதிகளை மீட்போம்’ இயக்கம் பற்றி…
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘நதிகளை மீட்போம்’ பேரணி சத்குரு அவர்களால் கடந்த செப்டம்பர் 3ம் தேதியன்று கோவையில் துவங்கி தேசம் முழுக்க 16 மாநிலங்கள் வழியாக பயணித்து அக்போடபர் 2 காந்தி ஜெயந்தியன்று புதுடெல்லியில் நிறைவுற்றது! நதிகளை மீட்டு புத்துயிரூட்டுவதற்கான திட்ட வரைவுக் கொள்கைகளை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் சத்குரு அக்டோபர் 3 அன்று ஒப்படைத்தார்.
‘நதிகளை மீட்போம்’ பேரணி நிறைவுற்று ஒரு மாதம் ஆன நிலையில், மத்திய அரசின் NITI Aayog அமைப்பின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டது. நீர்வளத் துறை, சுற்றுச்சூழல், வேளாண்மை, ஊரக வளர்ச்சித்துறை, கிராமப்புற மேம்பாடு, குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை என இது தொடர்பான ஆறு துறைகளைச் சார்ந்த அமைச்சகங்களிலிருந்து செயலாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
வற்றாத ஜீவநதிகள் பல இன்று குறிப்பிட்ட காலத்தில் மட்டும் ஓடும் நதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பல சிறு நதிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. இந்தியாவில் பனிக்கட்டிகள் உருகுவதால் ஓடும் நதிகளில் மிகப் பெரியது கோதாவரி நதி, இன்று அது தன் இயல்பான நிலையிலிருந்து 20% வற்றிவிட்டது. கிருஷ்ணா, நர்மதா போன்ற பிற மகாநதிகள் 60% வற்றிவிட்டன. காவிரி ஆறு 40% வற்றிவிட்டது. WWF நிறுவனத்தின் அறிக்கைப்படி உலகில் வேகமாக அழிந்துவரும் 10 நதிகளில் ஒன்றாக கங்கை நதி உள்ளது.
‘நதிகளை மீட்போம்’ திட்ட வரைவு அறிக்கையானது, நதிகளுக்கு புத்துயிரூட்டுவதோடு, நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மண்ணில் தொடர்ந்து குன்றிவரும் கரிமவளத்தை மீட்கும் வகையிலான மண்வள மேம்பாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டு ஒரு முழுமையான செயல்திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது! ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் பிரதான அம்சமாக முன்வைக்கப்படுவது என்னவென்றால், நதிகளின் இரு கரைகளிலும் 1 கி.மீ அகலத்திற்கு மரங்கள் நடுவதாகும். நதிக்கரைகளிலுள்ள நிலங்கள் அரசு நிலமாக இருக்கும்பட்சத்தில் அங்கு காடு உருவாக்கமும், வேளாண் நிலங்களாக இருக்கும்பட்சத்தில் அங்கு மரப்பயிர் வேளாண்மையும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய திட்டவரைவாகும்.
இதன் மூலம் நதிப்படுகைகள் ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருப்பது உறுதி செய்யப்படும். மேலும், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை கட்டுப்படுத்தப்படுவதோடு மண்ணரிப்பு தடுக்கப்படும். குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வகையில், வருமானம் முன்பைவிட குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பதாகவும் இருக்கும்.