குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்! பகுதி 2

சிலர் தங்களுக்கு முன்ஜென்ம ஞாபகங்கள் வந்ததாகச் சொல்கிறார்களே, இது சாத்தியமா? அப்படியென்றால் எல்லோருக்கும் ஏன் அதுபோன்ற ஞாபகங்கள் வருவதில்லை? முன்ஜென்ம ஞாபகங்கள் குறித்து சத்குரு பேசிய இந்த உரை, நமக்கு ஆச்சரியமூட்டுவதோடு, இயற்கையின் அற்புதத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

சத்குரு:

நீங்கள் முற்பிறவியில் வாழ்ந்த வாழ்வைப் பற்றி நினைவுகூர முடியும்போது, “இது என்னுடையது, அது என்னுடையது அல்ல” என்னும் நிலையில் இருந்தால், நிறைய பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள். மிகவும் அதிகமாக, உங்களால் சமாளிக்கமுடியாத அளவிற்கு பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வீர்கள். “அனைத்தும் என்னுடையது” அல்லது “எதுவுமே என்னுடையது இல்லை” என்ற இரண்டில் ஏதோ ஒரு நிலையை நீங்கள் அடைந்துவிட்டால், முற்பிறவிகளைப் பற்றிய ஞாபகம் வருவதில் தவறில்லை. இன்னும் சொல்வதென்றால், இந்நிலையில் முற்பிறவி ஞாபகங்கள் வருவது பயனுள்ளதாகக்கூட இருக்க முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நான்கு வயதிற்குப்பின் அவர்கள் இந்த வாழ்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டு விடுவார்கள். நான்கு வயது வரையில், அவர்களுடைய மனத்தில் பழைய நினைவுகள் ஓடுவது என்பது நடக்கக்கூடியது தான்.

எனவே, ஒரு ஆறு வயது சிறுவனுக்கு தற்செயலாக ஏதோ ஒன்று ஞாபகம் வந்துவிட்டது. சில சமயங்களில் இயற்கையின் நடைமுறைகளில் இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்துவிடுகிறது. இதுபோல் எப்பொழுதாவது நடப்பதுண்டு. இது மிக நுணுக்கமான அமைப்பாக இருப்பதால், எப்பொழுதாவது இதுபோல் நடக்க வாய்ப்பிருக்கிறது. இது ஒரு சிறிய தவறு. தேவையான ஒரு பாதுகாப்பு வளையம் அந்தக் குழந்தைக்கு உருவாகவில்லை. இருப்பினும், இக்குழந்தைகள் முழுவதும் வளர்வதற்கு முன்பே, முந்தைய வாழ்வைப் பற்றி நினைவு கூர்ந்தவற்றை மறந்து விடுவார்கள். பெரும்பாலான, நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முந்தைய பிறவியைப் பற்றிய ஞாபகம் தெளிவாகவே இருக்கும். ஆனால், நான்கு வயது முடியும் முன்பே அனைத்தும் மறைந்துவிடும். நான்கு வயதிற்குப்பின் அவர்கள் இந்த வாழ்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டு விடுவார்கள். நான்கு வயது வரையில், அவர்களுடைய மனத்தில் பழைய நினைவுகள் ஓடுவது என்பது நடக்கக்கூடியது தான்.

நான் சொல்லப்போவது உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. இந்தியாவில் பல காரணங்களுக்காக, இவ்வாறு சொல்வதுண்டு. “ஒரு குழந்தை நான்கு வயது வரை இறைவனுக்கே சொந்தம். அதன் பிறகே உங்களுடையது” என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், நான்கு வயது வரையில் ஒரு குழந்தை பல்வேறு நினைவுகள் நிரம்பி இருக்கும். எனவே அது யாருடையதும் அல்ல. பின்னர் மெதுவாக அந்தக் குழந்தைக்கு பழைய நினைவுகள் மறந்து போகும்போது, தன்னைச் சுற்றி உள்ளவற்றோடு அது தன்னை ஆழமாக சம்பந்தப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போதுதான் அந்தக் குழந்தை உங்களுடையதாகும்.

சொல்லப்போனால், குறைந்தபட்சம், அந்தக் குழந்தை உங்களுக்கே உரித்தானவன் போன்ற ஒரு போலி மயக்கத்தை, தவறான நம்பிக்கையை அப்போது உங்களுக்குக் கொடுக்கும் (சிரிக்கிறார்). எப்படியும் அவன் சில காலம் கழித்து 'அவன் உங்களுக்கே சொந்தம்' என்ற உங்கள் நம்பிக்கையை உடைப்பான். குழந்தைகள் இப்படி செய்கிறார்கள், நிஜம்தானே? ஏதோ ஒருவகையில் அந்த நம்பிக்கையை குழந்தைகள் உடைத்து விடுகிறார்கள் தானே?

இவ்வாறு நிகழலாம், நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக சில காலத்திற்குப் பிறகு இக்குழந்தைகள் அவற்றை எல்லாம் மறந்து விடுவார்கள். இந்தத் திறன், இதைப் பிழை என்றே சொல்ல வேண்டும், குழந்தைப் பருவத்தில் சில காலம் மட்டுமே இருக்கும். பிறகு தானாகவே மறைந்துவிடும்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, ஓரு குழந்தைக்கு, மிகவும் சிறிய வயதில் ஆன்மீக ஈடுபாடு ஏற்படாதபடி, இயற்கை பாதுகாப்பு அளித்திருக்கிறது. அப்படி வந்துவிட்டால், தொடர்ந்து வாழ்வதற்கு தேவையான விருப்பத்தை அக்குழந்தை உடலளவிலோ, மனதளவிலோ இழந்துவிடும். உடலுக்கென்று ஒரு உந்துதல் உண்டு. உடல் பூப்பெய்தும் காலத்தில் அது முழு வீரியத்தை அடைந்து, மென்மேலும் வளர்கிறது. இந்த நேரத்தில்தான் உடலின் விருப்பம் வலிமை பெறுகிறது. அதுவரை உடலுக்கு தானாக விருப்பம் என்று ஏதும் இருக்காது.

குழந்தை இறப்பு விகிதம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்களே? குழந்தைகள் சிறிய வயதிலேயே இறப்பதற்கு காரணம், இளம் உடலுக்கு விருப்பம், உந்துதல் ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை. நான் குறிப்பிட்டது போல, பொதுவாக நான்கு வயது வரையில் ஒரு குழந்தைக்கு விருப்பம் என்று எதுவும் கிடையாது. நான்கு வயது நிரம்பும் பொழுது ஓரளவு விருப்பம் ஏற்படுகிறது. நான்கு வயது முதல் பதினான்கு வயது வரை, அந்த விருப்பம் மேலும் சிறிது நிலைபெறுகிறது. பதினான்கு வயதில் இருந்து அந்த உடலுக்கு தனக்கென்று மிக வலுவான விருப்பம் நிலைத்துவிடும்.

மனத்தைப் பொறுத்த வரையும் கூட இது உண்மை என்றாலும், உடலளவில் இது இன்னும் அதிகமாக இருக்கும். ஒரு குழந்தை உடல் என்பதைத் தாண்டி மற்ற பரிமாணங்களை அனுபவிக்க நேர்ந்துவிட்டால், பிறகு இந்த உடலைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற மனவிருப்பம் அந்த குழந்தைக்கு இருக்காது. அந்த குழந்தையின் உடலுக்கு தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் சிறிதும் இருக்காது. உடல் தேவையில்லை என்று உதறிவிடும்.

'குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்!' தொடரின் பிற பதிவுகள்