கட்டுப்பாடுகளை கடக்க உதவுமா கலைகள்?
சத்குரு கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சில ஓவியங்களைத் தீட்டியிருந்ததை நாம் அறிவோம். கவிதை, ஓவியம், கட்டிடக் கலை, சமையல் என பல்வேறு கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் சத்குரு, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை எவ்விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதை இப்பதிவில் தெளிவுபடுத்துகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, கலையில் ஈடுபடுகின்ற ஒருவராக, என்னுடைய கலையானது, என்னுடைய கட்டுப்பாடுகளை கடந்து என்னை கொண்டுபோக முடியுமா என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்...
சத்குரு: யாரு இது எனக்கு போட்டியா?
கேள்வியாளர்: இல்லை, கலையை வெளிப்படுத்தினால், இது கட்டுப்பாடுகளை அதிகரிக்குமா? கலையை அணுகுவதற்கு சரியான வழி எது?
சத்குரு: இப்போது தான் 1 டஜன் கேன்வாஸ் பிரேம்கள் வந்து இறங்கின. ஏனென்றால் இன்னும் அடுத்த சில நாட்களுக்கு நான் ஓவியம் தீட்ட இருக்கிறேன். இப்பொழுது போட்டி வந்து விட்டது. இப்போது, இந்த கலை எனது வெளிப்பாடாக இருக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதோ ஒன்றாக இருக்க வேண்டுமா? மிகுந்த சித்திரவதைக்கு உள்ளான மக்கள் கலை வேலைப்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆம். அவர்களை நான் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், கலையின் சரித்திரம் இப்படி தான் இருந்திருக்கிறது என்று சொல்கிறேன். ஒரு சில கலை ஓவியங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.Subscribe
மனதின் வலியை கலை வெளிப்படுத்த வேண்டுமா?
ஒரு வசதியான வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். பெரிய வீடு. இந்த ஓவியம் 5 அடிக்கு 5 அடி ஓவியம். அதன் பின்னால் சில வண்ணங்கள், இங்கும், அங்குமாக, எந்த குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் பூசப்பட்டிருந்தன. அதோடு, கிட்டத்தட்ட 7 அங்குலம் நீளமுடைய, தடிமனான 200 ஆணிகள் ஆங்காங்கே அறையப்பட்டிருந்தன. நான் இந்த வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் வலது பக்கம் இது இருந்தது. இந்த ஆணிகள்... இதெல்லாம் என்ன என்று கேட்டேன். இல்லை, இது ஒரு கலை வெளிப்பாடு என்று சொன்னார்கள். இதுதான் உங்கள் மனதில் நடக்கிறது என்றால் நீங்கள் எதுவுமே வெளிப்படுத்தக்கூடாது. அப்படியென்றால் ஒரு மனிதர் தனக்குள் எதிர்கொள்ளும் போராட்டங்களை வெளிப்படுத்தக்கூடாதா? வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் சென்று ஒரு காட்டிலோ, பாலைவனத்திலோ உட்கார்ந்து, அவர்கள் இதயத்தில் இருக்கும் வலி அனைத்தையும் பாடி தீர்க்க வேண்டும். அதை நீங்கள் சமூகத்துக்குள் சிந்தக்கூடாது. ஏற்கனவே சமூகத்தில் போதுமான பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களிடம் நேர்மறையான ஏதோ ஒன்று இருந்தால், சொல்வதற்கு அற்புதமான ஏதோ ஒன்று இருந்தால் சொல்லலாம். இல்லை நீங்கள் சமூகப் போராட்டங்களை சித்தரிக்கிறீர்கள் என்றால் செய்யலாம். ஆனால், உங்களுடைய குப்பை தேவையில்லை.
நான் வாழ்க்கையை இப்படிதான் பார்க்கிறேன். எனக்குள்ளே ஏதோ ஒரு குப்பை மேலெழுந்தால், அதை வேறு யார் மீதும் சிந்தாமல் இருப்பது என்னுடைய வேலை. உங்களுக்கு கொஞ்சம்... அந்த வைரஸ் அல்ல, வேறு ஏதோ கொஞ்சம் கபம் வந்துவிட்டால், துப்ப வேண்டும் என்று இருந்தால், யாரோ ஒருவர் மீது துப்பி விடுவீர்களா? நீங்கள் இருமும் போதும், வறட்டு இருமலாக இருந்தாலும், இந்த வைரஸ் உங்களுக்கு சளி தொந்தரவு கொடுக்காது. உங்களுக்கு கொஞ்சம் சளி இருந்தால்? இப்போது நீங்கள் வெளிப்படுத்துவது இதை தான். அப்படி என்றால் உங்கள் அருகில் அமர்ந்திருப்பவர் மீது துப்புவீர்களா? அது எந்த மாதிரியான வெளிப்பாடு? அதனால் இது உங்கள் தொண்டையில் இருக்கும் கபமாக இருந்தாலும், உங்கள் மனதில் இருக்கும் கபமாக இருந்தாலும், என்னுடைய கருத்தில் இவை அனைத்தும் ஒன்று தான்.
கலை, படைப்பின் சிறு பிரதிபலிப்பு
அதனால் கலை உங்களுக்குள் நடப்பதன் வெளிப்பாடாக இருக்க வேண்டுமா? உங்களுக்குள் நிகழ்வது அழகானதாக இருந்தால் தயவுசெய்து செய்யுங்கள். இல்லை என்றால், கலை என்பது பொதுவாக, படைப்பின் ஒரு சிறு பிரதிபலிப்பு. நீங்கள் அதனுடைய ஏதோ ஒரு அழகான பகுதியை உங்களுக்குள் உணர்ந்தால்… இதை உங்களால் முழுமையாக உணர முடியவில்லை. ஆனால், படைத்தவனை சிறிதளவேனும் நீங்கள் உங்களுக்கு தெரிந்த விதத்தில் காட்ட விரும்புகிறீர்கள். அண்டம் முழுவதையும் நீங்கள் கைப்பற்ற முடியவில்லையென்றாலும், ஒரு சிறு துளியை நீங்கள் கையில் பிடித்தாலும், நீங்கள் ஒரு இலையையோ, மலரையோ, பறவையையோ, ஏதோ ஒன்றை வரைந்திருக்கலாம். இது உண்மை வடிவமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேடிக்கையான வடிவமாக கூட இருக்கலாம். இது கார்ட்டூன் போன்ற ஓவியமாக இருக்கலாம். இது தெளிவாக புலனாகாத அப்ஸ்ட்ராக்ட் ஓவியமாக இருக்கலாம். வேறு ஏதோ ஒன்றாக இருக்கலாம், அது பரவாயில்லை. ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் உங்களை சுற்றி இருக்கக்கூடியதில் இருந்து நீங்கள் சேர்க்கும் காட்சிகள் இவை. இது உங்களுக்கு வேறு எதுவும் இல்லை..
அதனால், இது முக்கியம். குறிப்பாக, நீங்கள் பிரபலமான ஓவியரா, இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. எல்லோரும் இதை பார்க்கப் போகிறார்கள். இதனால் மக்களுக்குள்ளே சரியான விஷயங்களை உருவாக்குவது முக்கியம். அவர்களின் வாழ்க்கையை இது மேன்மைப்படுத்த வேண்டும். அது அவர்களுக்குள் ஏதோ ஒரு பைத்தியத்தை உருவாக்கக் கூடாது. இந்த ஆணிகள் வைத்து செய்த ஓவியம், இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் அதன் முன் நின்று புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். நான் ஏதாவது தவிர விட்டுவிட்டேனா? இதில் ஏதேனும் ஒரு ஆழமான அர்த்தம் இருக்கிறதா? அதனால், கலை என்பது, படைத்தவன் மீது நமக்கு கொஞ்சம் பொறாமை வந்ததால், நாமும் ஏதோ ஒன்று படைக்க விரும்புகிறோம். எல்லாமே மிகவும் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் இதற்கு கவனம் கொடுக்கவே ஒரு ஜென்மம் போதாது. ஆனால், நாமும் கொஞ்சம் அது போல இருக்க விரும்புகிறோம். அது பரவாயில்லை. மனிதர்களுக்கு அதை செய்யும் உரிமை இருக்கிறது. ஆனால் நீங்கள் மனிதராக இருந்தால், உங்கள் வேதனைகளை மற்றவர்கள் மீது கொட்டாதீர்கள்.
வேதனைகளை மறைத்து நான் நடிக்க வேண்டுமா?
நீங்கள் வேதனையில் இருந்தால், நீங்கள் எல்லாவற்றில் இருந்தும் பின்வாங்க வேண்டும். இதுதான் நான் சொல்வேன். நான் இப்போது அனைத்தில் இருந்தும் பின்வாங்கினால், என்னுடைய வேதனை அதிகமாகுமே? ஒன்று இது அதிகமாகும், இல்லை என்றால்; நீங்கள் குணமடைவீர்கள். இந்த இரண்டில் ஒன்று நிச்சயமாக நடக்கும். இதை நாம் புரிந்து கொள்வது முக்கியம். ஒரு சமூக சூழ்நிலையை எடுத்துக் கொண்டால், இது குடும்பம் என்கிற சிறு அமைப்பாக இருந்தாலும், பெரிய சமூகமாக இருந்தாலும், தேசம், உலகமாக இருந்தாலும், மனிதர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது குடும்பத்துக்குள் இருந்தாலும், சமூகத்துக்குள் இருந்தாலும், ஒரு நிறுவனத்துக்குள் இருந்தாலும், இது எங்கு இருந்தாலும், நம்முடைய சிறந்த முகத்தை எல்லோருக்கும் வெளிப்படுத்துவது முக்கியம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது முக்கியம்.
அப்படியானால் நான் நடிக்க வேண்டுமா? இல்லை. உங்களை நீங்களே சரி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நீங்கள் மிகுந்த வேதனையில் இருக்கும் போது, எல்லாவற்றையும் பார்த்து புன்னகை செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களை சரிசெய்யுங்கள் என்று சொல்கிறேன். எதற்காக நீங்கள் நடிக்க வேண்டும்? உங்களின் எண்ணத்தை, உணர்ச்சியை, உங்கள் வேதனையை நீங்கள் சரி செய்ய முடியவில்லை என்றாலோ, வேறு யாரோ உங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றாலோ, நீங்கள் அதை சரி செய்ய முடியாது. அவர் தான் உங்களை சரிக்கட்ட பார்ப்பார். இந்த ஆணிகள் ... ஆனால், உங்களை நீங்களே கொடுமைபடுத்தி கொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்களால் நிறுத்த முடியும். அது அவ்வளவு சாதாரணமா? ஆம். எதனால் என்னுடைய வாழ்க்கையை வீணாக்கி, நான் உங்களுக்கு இந்த ஈஷா யோகாவை, எல்லா இடங்களிலும் கற்று கொடுத்து கொண்டு இருக்கிறேன் என்று எண்ணுகிறீர்கள்? ஏன் என்றால் உங்களை நீங்களே சரிசெய்து கொள்வீர்கள் என்று நான் நினைத்தேன். உங்களை நீங்களே சரிசெய்யத் தேவையான அனைத்துமே இதில் இருக்கிறது.
நான் என்னுடைய துயரங்களை பற்றி பேச வேண்டுமா? பல வருடங்களுக்கு முன்னால், 39 வருடங்களுக்கு முன்னால் திடீர் என்று பரவசமாக இருக்க எதுவும் தேவையில்லை என்று நான் உணர்ந்தேன். நானே என்னை குழப்பிக்கொள்ளவில்லை என்றால், என்னுடைய மனதை உழற்றி கொள்ளவில்லை என்றால், நான் பரவசமாக இருக்கிறேன். அப்போது நான் இரண்டரை ஆண்டுகளில் உலகம் முழுவதையும் பரவசமாக மாற்றிவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் மக்கள் அவர்களின் வேதனைகளில் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்று நான் புரிந்து கொள்ள எனக்கு சிறிது காலம் எடுத்தது. அவர்களின் பாழாய் போன துயரங்களை பெரிய சொத்து போல சுமந்து கொண்டு இருக்கிறார்கள். உங்களுடைய வேதனைகள் சொத்து இல்லை. அது குப்பை என்று புரிய வைப்பதற்கே அத்தனை பாடுபட வேண்டி இருக்கிறது. அதனால் உங்கள் கலை வேலைப்பாடுகளில் அதை கொண்டுவராதீர்கள். உங்கள் குப்பையை கொண்டு வராதீர்கள். உங்கள் குப்பையை மற்றவர்கள் மேல் வீசாதீர்கள். உங்களுடைய துயரம், உங்களுடைய குப்பை. உங்களுக்கு இது பிடித்தாலும் சரி, பிடிக்கவில்லை என்றாலும் சரி.... எனக்கு தெரியும், சினிமா, கலை, இது, அது என இவர்கள் அனைவரும் துயரத்தை வானம் வரை உயர்த்தி இருக்கிறார்கள். மதங்கள் வலியை மிகப் பெரிய விஷயமாக உண்டாக்கி இருக்கிறது.
சங்கரன்பிள்ளையின் கார் பயணம்
ஒருமுறை இப்படி நடந்தது. சங்கரன்பிள்ளையும், அவரது மனைவியும் காரில் சென்று கொண்டு இருந்தார்கள். 600 BHP சக்திதிறன் கொண்ட போர்டு முஸ்டங் என்ற காரை அப்பொழுது தான் அவர்கள் வாங்கி இருந்தார்கள். அவர்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாழ்ந்து வந்தார்கள். இது மிகவும் வேகமாக போகும். அதற்கு ஃபெராரி காரில் இருக்கும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கிடையாது. இது அதே அளவுக்கு சக்தி ஆற்றல் உள்ளது. ஆனால், அதே அளவு கன்ட்ரோல் கிடையாது. ஆனால், சங்கரன்பிள்ளை தனது மனைவியை ஈர்க்க வேண்டும் என்று மிகவும் வேகமாக காரை ஓட்டி சென்றார். டாப் கியர் போவதற்கு முன்பே அவர்கள் சொர்க்கம் சென்று சேர்ந்தார்கள். சொர்க்கத்தில் அவர்களை வரவேற்றார்கள். அவர்கள் சுற்றி பார்த்த போது எல்லாமே அழகாக இருந்தது. அப்போது அவர்களை விசாரித்தார்கள். சொர்க்கத்தில் கோல்ப் விளையாட்டு இருக்கிறதா என்று கேட்ட போது ஆம் என்று சொன்னார்கள். அதை நாங்கள் பார்க்க முடியுமா என்று கேட்டபோது பார்க்கலாம் என்று சொன்னார்கள். அற்புதமான இடம், அற்புதமான தோட்டங்கள், அற்புதமான கோல்ப் கோர்ஸ் எல்லாம் இருந்தன.
இந்த தம்பதியினரை அந்த அழகான இடம் முழுக்க தேவதைகள் கூட்டி போய் சுற்றி காண்பித்தனர். அப்போது ஒரு குழி முழுக்க நெருப்பு இருந்தது. அதில் சிலர் எரிந்தபடியே கதறி கொண்டு இருந்தனர். அவர் இது என்ன என்று கேட்டார். உங்களுக்கு மத நம்பிக்கையுடைய மக்கள் தெரியுமா? அவர்களுக்கு இப்படி தான் பிடிக்கும் என்று சொன்னார்கள். சொர்க்கம் என்பது உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை கொடுக்கும்.
வலியை விட, பரவசத்தன்மை ஆழமானது
வேதனை இல்லாமல் இந்த விஷயங்கள் வேலை செய்யாது. அதனால் வலியை போற்றி கொண்டாடுவது மிக அதிகமாக நடந்திருக்கிறது. மதம்தான் முதல் குற்றவாளி. அடுத்து வருவது கலை. அடுத்து இசை. இவை அனைத்துமே வேதனைப்படுவது நல்ல விஷயம் என்பது போல செய்திருக்கிறார்கள். இலக்கியம். குறிப்பாக ஐரோப்பிய இலக்கியம், புத்தி கூர்மையை வெளிப்படுத்துவதில் இது அற்புதமாக இருக்கிறது. நான் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், கேமஸ், கஃப்கா, எத்தனை வேதனை? சொல்லமுடியாத வேதனை. மக்கள் எப்படியும் இந்த வேதனையை போற்றி கொண்டாடுகின்றனர். வலி மட்டும் தான் நீங்கள் ஆழமான நிலையில் இருப்பதற்கு ஒரே வழி என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் வலி மட்டும் தான் ரொம்ப ஆழமானது. அவர்கள் மகிழ்ச்சி அவ்வளவு ஆழமாக இல்லை. அன்பு அவ்வளவு ஆழமாக இல்லை. அவர்கள் பரவசத்தன்மையின் ஆழத்தை ருசித்ததே இல்லை. வலிதான் அவர்களுக்கு ரொம்ப ஆழமானது.
நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லையென்றால், ஒரு ஊசியை எடுத்து உங்களை நீங்களே குத்திக்கொள்ளுங்கள். இது ரொம்ப ஆழமானது. உதாரணத்துக்கு உங்களுடைய நெருக்கமான நண்பர் வெறுமனே ஊசியை எடுத்து உங்களை இப்படி குத்திவிட்டார்கள் என்றால், உங்கள் நட்பு காற்றில் கரைந்து விடும். ஒரே ஒரு தடவை இப்படி குத்தினாலும் சரி. இதை மறுபடியும் சரிசெய்வதற்க்கு நீங்கள் நிறைய வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் காணாமல் போய் விடும். ஒரு ஊசியால் குத்தினாலும் போதும், அந்தளவுக்கு வலி ஆழமானது. உங்கள் பரவசத்தை, வலியைவிட ஆழமானதாக மாற்ற, உங்கள் மேல் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். அதனால் தான் ஈஷா யோகாவுடைய கருவிகளை உங்களுக்கு வழங்கினோம்.
பரவசத்தின் ஆழத்தை உணர
தினமும்... எனக்கு தெரியும், இன்று தரிசன நாள். நீங்கள் ஏதோ பயிற்சி செய்து என் முன் வந்து அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால் தினமும் ஈஷா யோகாவின் அனைத்து பரிமாணங்களையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதும் பயிற்சி செய்தீர்களானால், அப்போது பரவசத்துடைய ஆழத்தை உணர்வீர்கள். இது வலியை விட மிக ஆழமானது. ரொம்ப ரொம்ப ஆழமானது. அதனால் தான் அவர் ஒரு தேள் தன்னை கொட்ட அனுமதிக்கிறார். வலி இல்லை என்று இல்லை. தேள் கொட்டினால் உங்கள் நரம்பு மண்டலம் முழுக்க தெறிக்க ஆரம்பித்து விடும். தேள் விஷம் உங்களுக்குள் ஏறிவிட்டால் இப்படி ஆகும். ஆனால், உங்கள் பரவசம் அதைவிட ஆழமாக இருப்பதால் அது இன்னும் ஒரு விஷயம். அவ்வளவு தான். அதனால் இதற்கு கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். . அது நடக்கும் வரைக்கும் நான் சொல்வது என்னவென்றால், உங்கள் கலை, உங்களுடைய வேலைப்பாடாக இருக்கக்கூடாது, இயற்கையுடைய சில அம்சங்களை, மக்களை, என ஏதோ ஒன்றை பாராட்டுவதாக இருக்க வேண்டும். உங்களுக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். பல கலைஞர்களுக்கு இது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், நானும் ஒரு கலைஞன் தான். இது என்னுடைய கருத்து. எனக்கு என்று கருத்து இருக்க முடியும். புது ஓவியர், ஆனால் ஓவியர்தான். நானும் ஒரு ஓவியத்தை விற்றிருக்கிறேன். இன்னும் நிறைய காண்பீர்கள்.