காதல் திருமணம் கசப்பது ஏன்?
என்னுடன் வேலை பார்ப்பவரைக் காதலிக்கிறேன். நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில், எங்களைப் போல் காதலித்து மணந்த மூன்று ஜோடிகள் ஒரே வருடத்தில் திருமண வாழ்வு கசந்துபோய், விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டார்கள். எங்கள் வாழ்க்கையும் அப்படி ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எங்கள் காதல் தோற்காது என்பதை எப்படி நிச்சயித்துக் கொள்வது?
சத்குரு:
காதலில் அப்பழுக்கில்லாத அன்பை மட்டுமே செலுத்துவீர்களேயானால், அதை ஒரு முதலீடாக நினைத்து வாழ்க்கையைத் தொடங்க மாட்டீர்கள்.
காதல் என்பது அன்பின் ஒரு வடிவம். அதுதான் மனிதனைப் பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அடுத்தவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது!
உண்மையான காதலுக்கு நிரூபணம் எதுவும் தேவையில்லை. முகர்ந்து பார்த்து உணரும் திறன் இல்லாதவனிடம், ஒருமலர் எப்படி தன் நறுமணத்தை நிரூபிக்க முடியும்?
உங்களுக்கு வாழ்வில் ஒரு துணை தேவைப்படுகிறது. அது உடல் இச்சையால் இருக்கலாம். மனத் திருப்திக்காக இருக்கலாம். பொருளாதார வசதிக்காக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு தேவையின் பொருட்டுப் பிறப்பது உண்மையான காதல் ஆகாது.
காதல் என்பது நிபந்தனைகள் அற்றது. நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கிறீர்கள் என்றால், அவருடைய ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உங்கள் காதல் மாறுவதில் அர்த்தம் இல்லை.
Subscribe
காதலில் விழுந்தவர்களைப் பாருங்கள். கண்களிலும், முகத்திலும் சந்தோஷம் கொப்பளிக்கும். காதலின் அதிர்வுகள் அவர்கள் இருக்கும் சூழ்நிலையையே குதூகலமாக்கிவிடும்.
இப்படித் துடிப்பும், துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருக்கும் பல காதலர்கள், திருமணம் செய்து கொண்டபின் அசுர வேகத்தில் களை இழந்துவிடுகிறார்கள். எல்லாவற்றையும் தொலைத்து விட்டவர்கள் போல் உலர்ந்து விடுகிறார்கள். யாரைப் பற்றிய நினைப்பு ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அண்மையே இப்போது எரிச்சலாக மாறியிருக்கும்.
ஏன் இப்படி?
காதல் வயப்பட்டு இருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது. இதயம் மட்டுமே வேலை செய்தது. இருவர் வாழ்க்கையும் பிணைந்தபின், அங்கே எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன. "நான் இதைக் கொண்டு வருகிறேன், நீ அதைக் கொண்டு வா!" என்று வணிகம் நுழைந்துவிட்டது.
மனப் பொருத்தம் பற்றி யோசிக்காமல், மற்ற காரணங்களை உத்தேசித்து இரண்டு பேரை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதுதான், பெரும்பாலான திருமணங்கள் கசந்து போவதற்கான அடிப்படைக் காரணம்.
எல்லா நவீன வசதிகளும் கொண்ட ஒரு வசதியான சமையலறை இருக்கிறது. சமையலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் எல்லாம் முதல் தரத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், உங்களுக்குச் சமைக்கவே தெரியாது என்றால், என்ன ஆகும்? அப்படித்தான் காதலின் மேன்மையை உணராதவர்கள் கையில் அது சிக்கினால், அதன் ருசி கசந்து போகிறது. அது காதலின் தவறு இல்லை. காதலர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டவர்களின் தவறு.
சங்கரன்பிள்ளை களைத்துப் போய் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
"அது ஆரம்பிக்கும் முன், டிபன் கொடுத்துவிடு" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, டி.வி முன் உட்கார்ந்தார்.
மனைவி எரிச்சலுடன் காபிக் கோப்பையை அவர் முன் 'ணங்' கென்று வைத்தாள்.
"அது ஆரம்பிக்கும் முன், கொஞ்சம் காலைப் பிடித்துவிடேன்...!"
மனைவி பொறுக்க முடியாமல் வெடித்தாள்... "யோவ்! நீ பாட்டுக்கு வந்து டி.வி முன்னால் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்யத்தான் எனக்குத் தாலி கட்டினாயா?"
"அடடா! அது ஆரம்பித்துவிட்டது!" என்று பெருமூச்சுவிட்டார், சங்கரன்பிள்ளை.
திருமணம் என்பது, இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ள ஏற்பட்ட அமைப்பு, அதை மறந்து, அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன் - மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகிவிடும். கோர்ட் வரை போகாவிட்டாலும், குடும்ப அளவிலேயே திருமணம் தோற்றுவிடும்.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... காதலின் மேலோட்டமான இனிப்புப் பூச்சை மட்டுமே சுவைக்க விரும்பினால், ஆபத்துதான்!
ஒரே தொழில், வசதியான வாழ்க்கை என்பவற்றை மட்டுமே வாழ்க்கைப் பொருத்தங்களாக நினைத்துக் காதலில் இறங்கினால், காதலிலும், வாழ்க்கையிலும் தோற்றுப்போக நேரிடும்.
இருவருக்கும் இடையிலான உறவு இனிதாக இருக்க வேண்டுமானால், அங்கு ஆதாயக் கணக்குகளுக்கு இடம் இருக்கக்கூடாது.
காதல் மூலம் அடுத்தவரிடமிருந்து எதையாவது உறிஞ்சி எடுக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கணமே காதல் செத்துவிடும். அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல் சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும்.