காதல், பரவசம், பக்தி... நாம் புரிந்துகொள்ள வேண்டியது?
உங்களது எதிர்பார்ப்புகள் என்னவாக இருந்தாலும், அத்தனையும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே உங்களது காதல் உறவு தொடரும். இல்லையென்றால் உங்கள் காதல் உறவு முடிந்துவிடும். பக்தியானது அதைப் போன்றதல்ல. அது நிபந்தனையற்றது. அதனுடைய அழகே அதுதான்.
சத்குரு:
ஒரு பக்தர், தீவிர பித்து உணர்வு கொண்டவர். நீங்கள் உண்மையாக யாரையாவது காதலிக்கும்போது, இயல்பாகவே நீங்கள் பக்தியுடன் இருப்பீர்கள். பக்தி இல்லாமல் எப்படி உங்களால் இருக்க முடியும்? நீங்கள் காதலிக்கும் நபருடன் பக்தியாக இல்லை என்றால், உண்மையில் அங்கே காதல் இல்லை -அது ஒரு பரஸ்பர உதவித் திட்டமாக மட்டுமே இருக்கும். காதல் என்ற வார்த்தை, அங்கே சமூகரீதியாக ‘தேர்ந்தெடுத்த’ வார்த்தையாக மட்டுமே இருக்கிறது. ஒவ்வொருவரும், “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று கூறுவதாலேயே, நீங்களும் அதைக் கூறக்கூடும்.
காதல் என்பது முக்கியமாக பக்தியாகவே இருக்கிறது. ஆனால் சாதாரணமாக, இரண்டுக்கும் இடையே நாம் வேறுபடுத்த வேண்டுமென்றால், காதலுக்கு இன்னமும் அதிக நிபந்தனைகள் உண்டு என்பதை நம்மால் கூறமுடியும். உங்களது எதிர்பார்ப்புகள் என்னவாக இருந்தாலும், அத்தனையும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே உங்களது காதல் உறவு தொடரும். இல்லையென்றால் உங்கள் காதல் உறவு முடிந்துவிடும். பக்தியானது அதைப் போன்றதல்ல. அது நிபந்தனையற்றது. அதனுடைய அழகே அதுதான். காதல் கூட, அது நிபந்தனையற்றதாக இருந்தால் மட்டுமே, எந்த மனிதருக்கும் முழுமையையும், உயிரோட்டத்தையும் அளிப்பதாக இருக்கிறது. அது நிபந்தனையானதாக மாறும் கணத்திலேயே, அது ஒரு வியாபாரமாகிறது. உடல்நிலையில், உணர்ச்சிநிலையில் மற்றும் காரண அறிவு நிலையில் நடக்கும் சில மனிதர்களின் வியாபாரங்கள் காதல் என்று குறிப்பிடப்படுகிறது. அவைகள் உபயோகமானவை. “நீ என்னுடைய தேவையைப் பூர்த்தி செய், நான் உன்னுடைய தேவையை பூர்த்தி செய்வேன்” இது பயன்பாட்டு நோக்கம் உடையது. ஆனால் அதை உள்ளபடி ஒரு வியாபாரமாகப் பார்க்க மக்கள் விரும்புவதில்லை. ஏனெனில் மக்களின் வாழ்க்கையை அது அவலட்சணம் ஆக்கிவிடுகிறது. அவர்கள் அதற்கொரு அழகான பெயர் கொடுக்க விரும்புகின்றனர். ஆகவே அதை அவர்கள் வழக்கமாக ‘காதல்’ என்று அழைக்கின்றனர்.
நீங்கள் கோவிலுக்கு, தேவாலயத்திற்கு, மசூதிக்கு அல்லது அப்படிப்பட்ட வேறு ஏதோ ஒரு இடத்திற்குப் போகும்போது, மக்கள் அதை பக்தி என்றழைக்கின்றனர். ஆனால் நீங்கள் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால், அதில் பக்தி அரிதாகவே காணப்படுகிறது. ஒருவரிடமும் பக்தி இல்லை என்று நான் கூறமாட்டேன். நிச்சயமாக சிலர் பக்தியோடு உள்ளனர். ஆனால் பொதுவாக அங்கு வியாபாரம்தான் நடக்கிறது. கடவுள் உங்களிடமிருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை அவருக்கு செய்கிறீர்கள். அதற்குப் பதிலாக உங்களுக்காக பல விஷயங்களை கடவுள் செய்து தர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால்கூட, உங்களது பிரார்த்தனை என்னவாக இருக்கிறது? உங்கள் வேண்டுதலில் பயமும், பேராசையும்தான் அடித்தளமாக உள்ளது என்பதை தயவு செய்து பாருங்கள் -“எனக்கு அது கொடுப்பா, இது கொடுப்பா, காப்பாத்துப்பா.” இதுகூட ஒருவிதமான வியாபாரம்தான். இது ஒரு ஒப்பந்தம். ஆனால், இது மிகவும் நியாயமற்ற ஒரு ஒப்பந்தம். ஏனென்றால் பொதுவாக மனிதன் கடவுளுக்கு வழங்குவதும், பதிலாக அவன் கடவுளிடமிருந்து எதிர்பார்ப்பதும் சமநிலையில் இன்றி அநியாயமான முரண்பாடாக இருக்கிறது.
ஆங்கிலத்தில் கூறப்படுகின்ற, “காதலில் வீழ்வது” என்பது உண்மையிலேயே பொருத்தமாகவும், வெகு அழகாகவும் உள்ளது. அவர்கள் காதலில் விழுவது பற்றியே எப்போதும் பேசினார்கள். காதலில் நிற்பது அல்லது காதலில் ஏறுவது அல்லது காதலில் பறப்பது பற்றி ஒருவரும் எப்போதும் பேசுவது கிடையாது. ஏனெனில் ‘நான்’ என்று நீங்கள் கருதியிருப்பது விழும்போது, காதலின் ஆழமான ஒரு உணர்வு உங்களுக்குள் நிகழ முடியும்.
பக்தியும் காதலும் இரண்டு வித்தியாசமான விஷயங்கள் அல்ல. ஆனால் நம் வாழ்வில், பொதுவாக அவற்றை தனித்தனியாகவே பார்க்கிறோம். ஏனென்றால், ஒன்று உயர்ந்த நோக்கத்திற்கானது என்று கருதப்படுகிறது. மற்றொன்று தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கானது என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டையும் பிரிக்கத் தேவையில்லை என்றே நான் கூறுவேன். காதல் என்பது பக்தி. பக்தி என்பது காதல் மட்டுமே. காதல் இல்லாமல், எப்படி ஒருவரால் பக்தி செலுத்த முடியும்? நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் நம்பிக்கையை சார்ந்துள்ள காரணத்தினால் மட்டும் நீங்கள் ஒரு பக்தராகிவிடுவதில்லை. ஒரு பக்தரால் எதற்கும் தன்னைச் சார்புபடுத்த முடியாது. அவர் வெறுமனே பக்தியில் ஈர்க்கப்பட்டு விடுகிறார்.
Subscribe
நான் உங்களுக்கு ஒரு உதாரணம் கூற வேண்டும். இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் பெரும்பகுதியும் ஒரு மிகத் தீவிரமான பக்தராக வாழ்ந்தார். அவர் ஒரு பித்துப்பிடித்த பக்தராக இருந்தார். பித்தராக இல்லாத பக்தர் ஒருவருமில்லை. ஒருவர் பித்தரல்ல என்றால், அவர் ஒரு பக்தர் அல்ல. ஏனெனில், பக்தி என்பது பித்து நிலை -மிக அழகான பித்துநிலை. ஆனால் அது பித்துப்பிடித்த நிலைதான். ஆகவே, இராமகிருஷ்ணர் ஒரு பரவசம் மிகுந்த, பித்தரான மனிதர்.
இப்போது இத்தனை காலங்களுக்குப் பிறகு, ‘அவர் பரமஹம்சர்’ என்று கூறுவது மிகவும் எளிது. ஆனால் நீங்கள் அவருடன் வாழ்ந்தால் அது மிகுந்த வித்தியாசமாக இருக்கும். ஏனெனில், உங்கள் பக்கத்து வீட்டில் ஒருவர், நடுநிசியில் உங்கள் தோட்டத்திற்குள் தாவிக் குதித்து வந்து உங்களது மரத்தைக் கட்டியணைத்துக் கொண்டு, கூக்குரலிட்டு அழுவதற்குத் தொடங்கினார் என்றால், அவர் ஞானமடைந்துவிட்டார் என்று நீங்கள் எண்ணுவீர்களா அல்லது அவர் மது போதையில் உளறுகிறார் என்று எண்ணுவீர்களா? இராமகிருஷ்ணர் இதைத்தான் செய்து கொண்டிருந்தார். எந்த இடத்திலும் அவர் கண்ணீர் விட்டுக் கதறி, ஒரு குழந்தை போல அழுவார். அவர் ஒரு மரத்தைப் பார்த்தால், ஒரு மேகத்தைப் பார்த்தால், சூரியனையோ அல்லது சந்திரனையோ பார்த்தால், பித்தனைப் போல அழுவார். அவர் ஞானமடைந்தவர் என்று நீங்கள் எண்ணமாட்டீர்கள். அவருக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்றுதான் நிச்சயம் எண்ணுவீர்கள்.
இராமகிருஷ்ணர், காளியின் பக்தராக இருந்தார். அவருக்கு காளி ஒரு தெய்வ உருவம் அல்ல. காளி அவருக்கு உண்மையில் வாழ்கின்ற நிதர்சனமாக இருந்தாள். அவருக்கு முன்னால் அவள் நடனமாடினாள். அவரது கரங்களினால் அவள் உணவு உண்டாள். அவர் கூப்பிட்டபோது வந்தாள். அவரைப் பரவசத்தில் நனைத்துச் சென்றாள். இது உண்மையாகவே இருந்தது. இது நிஜத்தில் நடந்து கொண்டிருந்தது. அவர் பரவச உணர்வின் இரசாயனத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டார். ஒருநாள் அவர் ஹுக்ளி ஆற்றின் கரையில் அமர்ந்திருந்தபோது, ஒரு மகாயோகியும், அபூர்வமான யோகியுமான தோத்தாப்புரி அந்த வழியாக வந்தார். இராமகிருஷ்ணரின் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் பரவசத்தால் நனைந்திருந்தாலும், அவரது உயிர், இந்தப் பரவசத்தைக் கடந்து செல்ல பேராவல் கொண்டிருந்தது. ஏனெனில், இந்தப் பரவசமும் கூட ஒரு பிணைப்புதான் என்ற ஒரு விழிப்புணர்வு அவருக்குள் இருந்தது.
இருப்பினும், அவர் உணர்ந்த அந்தப் பரவசத்தின் இனிமையை அவரால் விட்டுச் செல்லமுடியாத அளவுக்கு அது அபரிமிதமாக இருந்தது. மதுவின் போதைக்கு அடிமையான ஒரு மனிதர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டவர் போன்றவர்களின் நிலையிலிருந்து, இது எந்தவிதத்திலும் வித்தியாசப்படவில்லை. இதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இராமகிருஷ்ணரின் பரவசத்திற்கும், போதைப் பொருட்களால் உண்டாகும் நிலைக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், மதுவும், போதைப் பொருட்களும் உடலைச் சீர்குலைத்துவிடும். ஆனால் இந்த பக்தியின் பரவசம் உடலைப் பாதிக்காது. ஏனெனில் இது உள்நிலையில் நிகழ்வது. அது அழகானது என்பதில் கேள்விக்கிடமில்லை. ஆனால் அதற்கு அடிமைப்படுவதும், அதன்மீது ஏற்படும் தீராத பற்றும் ஏக்கமும் இரண்டு விஷயங்களிலும் (பக்திப் பரவசம், மது மயக்கம்) ஒன்றுபோல இருக்கிறது. அவற்றின் எல்லைகளும் கூட ஒன்றுபோல இருக்கிறது. எப்போதெல்லாம் இராமகிருஷ்ணர், அவரது பக்தியின் அம்சமான காளியுடன் தொடர்பு கொண்டாரோ, அப்போதெல்லாம் அவர் பரவசத்தில் நனைந்திருப்பார். அதிலேயே அவர் மகிழ்ந்து நின்றுவிட்டார். தோத்தாப்புரி வந்தபோது, அவர்களிடையே இது வெளிப்பட்டது. தோத்தாப்புரி கூறினார், “இது மிகவும் எளிது, உனக்குத் தேவையான சக்தி உள்ளது. உன்னுடைய விழிப்புணர்வுக்கு சக்தி கொடு. நீ இப்போது உனது உணர்ச்சிக்கு சக்தி கொடுத்திருக்கிறாய், உனது உடலுக்கு சக்தி கொடுத்திருக்கிறாய், உனக்குள் இருக்கும் இரசாயனத்திற்கு சக்தி கொடுத்திருக்கிறாய், ஆனால் உனது விழிப்புணர்வுக்கு நீ சக்தி கொடுக்கவில்லை.
இராமகிருஷ்ணர் கூறினார், “சரி, என் விழிப்புணர்வுக்கு முழு ஆற்றல் கொடுத்து, அசைவில்லாமல் அமர்ந்திருப்பேன்.”
ஆனால், காளியின் காட்சி எழுந்த கணமே, அவர் மறுபடியும் கட்டுக்கடங்காத காதல் மற்றும் பரவச நிலைகளுக்குள் சென்றார். எத்தனைமுறை அமர்ந்து முயன்றாலும், காளியைக் கண்ட கணமே அவர் தன்னிலை மறந்து செயல்பட்டார்.
பிறகு தோத்தாபுரி கூறினார், “அடுத்த முறை காளி தோன்றியவுடன் நீ ஒரு வாள் எடுத்து, அவளை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும்.”
இராமகிருஷ்ணர் கேட்டார், “எனக்கு வாள் எங்கிருந்து கிடைக்கும்?”
தோத்தாபுரி மறுமொழி கூறினார், “உனக்கு காளி எங்கிருந்து காணக் கிடைக்கிறாளோ அதே இடத்திலிருந்து வாள் கிடைக்கும். காளியை முழுமையாக உன்னால் உருவாக்க முடியுமென்றால், அவளைத் துண்டிக்க ஒரு வாளை உருவாக்க முடியாதா? உன்னால் அது முடியும், தயாராக இரு.”
மீண்டும், காளி தோன்றிய மறுகணமே அவர் பரவசத்தில் வெடித்தெழுந்து, வாள், விழிப்புணர்வு போன்ற அனைத்தையும் மறந்து போனார்.
ஆகவே தோத்தாபுரி பிறகு அவரிடம் கூறினார், “இப்போது இங்கு உட்கார். காளி வரும் அந்தக் கணமே..... இதைப் பார்,” என்றவாறு ஒரு கண்ணாடித் துண்டை எடுத்துக் காட்டி, “நீ எங்கே தடைபடுகிறாயோ அந்த இடத்தில், இந்தக் கண்ணாடித் துண்டினால், நான் உன்னை கிழிக்கப் போகிறேன். நான் அப்படிக் கிழிக்கும்போது, வாள் உருவாக்கி காளியைத் துண்டாக்கு.”
ஆக, இராமகிருஷ்ணர் பரவசத்தின் விளிம்பைத் தொட்ட கணத்தில், அவரது காட்சிக்குக் காளி தோன்றியபோது, தோத்தாபுரி ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து, அவரது நெற்றியின் குறுக்காக, உண்மையிலேயே ஆழமாகக் கீறிவிட்டார். பிறகு இராமகிருஷ்ணர் வாள் ஒன்றை உருவாக்கி, காளியை வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு அவர் காளித்தாயிடமிருந்தும், அவளுக்கு உணவூட்டும் பரவச அனுபவங்களிலிருந்தும் விடுபட்டார். அப்போதுதான் அவர் உண்மையாகவே ஒரு பரமஹம்சராக மலர்ந்தார். அதுவரை அவர் ஒரு காதலனாக இருந்தார். ஒரு பக்தனாக இருந்தார், தானே உருவாக்கிய தெய்வத்தாய்க்கு ஒரு குழந்தையாக இருந்தார்.