இது பெண்தன்மையின் தினம்! - சத்குரு
மார்ச் 8 - ஆண்டுதோறும் பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில் சத்குரு சொல்லும் செய்தி என்ன? தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம்...
மார்ச் 8 - ஆண்டுதோறும் பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில் சத்குரு சொல்லும் செய்தி என்ன? தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம்...
சத்குரு:
மனித மனம் செய்யும் பிரிவினை...
இன்று பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும், ஆண்களுக்கு இணையான மரியாதையையும் சமநிலையையும் அடைய இத்தனை வருடங்களாக ஒருவிதமான போராட்டம் நடந்துவருகிறது. இந்த நிலை முற்றிலும் அபத்தமாக இருக்கிறது. ஏனென்றால் மனித இனத்தில் மட்டும்தான் ஆணும் பெண்ணும் அவர்கள் ஏதோ தனித்தனி இனம் போல செயல்படுகிறார்கள். வேறு எந்த உயிரினத்திலும் இதுபோன்ற பிரச்சனை இல்லை. மனித அறிவு எதையும் பிரித்துக் கொண்டே போகிறது. முதல்படியாக நான் ஆண், நீ பெண் என்று பிரிக்கிறது. பின்னர் மதம், இனம், சாதி, கொள்கை அடிப்படையில் பிரிவினை தொடர்கிறது. ஆனால் உங்களுடைய இனம் எதுவானாலும், சாதி எதுவானாலும், கொள்கை எதுவானாலும், இந்த பாலின வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரமான செயல்கள் நம்பமுடியாதவை. இதற்கு யாரை குறைகூறுவது என்பது கேள்வியல்ல.
பிரச்சனை என்னவென்றால், நாம் ஒரே பரிமாணத்தை கொண்ட சமூகங்களையே தொடர்ந்து உருவாக்க முயற்சிப்பதுதான். இலட்சியம், வெற்றி மற்றும் போர், ஆக்கிரமிப்பு என்று ஒரு பரிமாணத்திலேயே இந்த சமூகங்கள் இயங்கிவருகின்றன. இலட்சியம், வெற்றி என்ற ஒரே பரிமாணத்தில் இயங்கும்போது, பெண்தன்மைக்கு இடமே இல்லாமல், ஆண்தன்மை மிகவும் முக்கியமாகிறது. நம்முடைய வெற்றி அடைவதற்கான கருத்துக்களும் ஆண்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. நம் இலட்சியங்களும் பொருளாதார மேம்பாட்டைக் குறித்தே இருக்கிறது. எனவே பெண்கள், தாங்கள் ஆண்தன்மை கொள்வதுதான் விடுதலை என்று நினைத்து மெல்ல மாறி வருகிறார்கள்.
Subscribe
ஆண்தன்மையும் பெண்தன்மையும்
ஆண் என்பது ஆண்தன்மையின் வெளிப்பாடு. பெண் என்பது பெண்தன்மையின் வெளிப்பாடு. யாரும் 100 சதவீதம் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் ஆண்தன்மையும் இருக்கிறது, பெண் தன்மையும் இருக்கிறது. பொருளாதார மேம்பாடு என்பது நமது பிழைப்பு குறித்தது. எப்போது பிழைப்பு மட்டுமே முக்கியமாக இருக்கிறதோ அப்போது அங்கு பெண்மை இருக்க முடியாது. எப்போது பிழைப்பு சரியாக பார்த்துக்கொள்ளப்படுகிறதோ, அப்போது அடுத்ததாக நம் வாழ்க்கையை எப்படி அழகாக உருவாக்குவது என்று சிந்திப்போம். அப்போது பெண்தன்மைக்கு உகந்த இடம் இருக்கும்.
நீங்கள் எப்போதுமே பிழைப்பு என்னும் செயல்முறையில் மட்டுமே இருந்தால், அது பெண்தன்மைக்கு ஏற்றதாக இருக்காது. பிழைப்பு என்பது இருவேளை உணவு என்று மட்டும் கிடையாது. இன்று இந்த நாட்டில் ஒரு போருக்கான சூழ்நிலை உருவானால், பிழைப்பு என்பதற்கே பிரச்சனை வருமானால், பெண்கள் திடீரென ஒரு இடைஞ்சலாகத் தோன்றுவார்கள். நாம் எவ்வளவு ஆண்கள் இருக்கிறோம் என்று மட்டுமே கணக்கெடுப்போம். ஒரு போரோ அல்லது சச்சரவோ நடக்கும்போது பெண்களும் குழந்தைகளும் இடைஞ்சலாக இருப்பார்கள். எனவே எப்போது சமூகங்கள் பிழைப்பு சார்ந்த செயல்முறைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிறதோ அப்போதுதான் பெண்தன்மை முக்கியமானதாக மாறுகிறது.
பிழைப்பு என்பது சமூகத்திற்கு சமூகம் மாறுபடுகிறது. இந்த உலகின் மிகப் பெரிய செல்வந்தரும் கூட இன்னமும் பிழைப்பிற்காக போராடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். பிழைப்பு செயல்முறைகள் தளர்வடைந்தால் மட்டுமே பெண்மை, பெண்மையின் முக்கியத்துவம், பெண்மையின் தேவை ஒரு சமூகத்தில் மலரும், இல்லையென்றால் பெண்தன்மை அழிந்துவிடும்.
இன்று வெற்றியடைவதற்கான நம்முடைய கருத்துக்கள் எல்லாமே ஆண்தன்மையைச் சார்ந்தே இருப்பதால் நம்முடைய கல்வியும் இயற்கையாகவே 100% ஆண்தன்மை கொண்டதாக இருக்கிறது. மெதுவாக திட்டமிட்டு நாம் இந்த கிரகத்திலிருந்து பெண்தன்மையை வெளியேற்ற செயல்புரிந்து கொண்டிருக்கிறோம். ஒரு சமயம் இந்த கிரகத்தில் ஒரு சில மதங்கள் பெண்மையை வேரோடு சாய்ப்பதற்கான செயல்களை செய்தன. ஒரு மதத்தின் காரண அறிவிற்கு பொருந்தாத ஒரு சில தன்மைகளை வெளிப்படுத்தியபோது, சூனியக்காரிகள் என்று இலட்சக் கணக்கான பெண்கள் எரிக்கப்பட்டார்கள்.
"மாத்ரு தேவோ பவ"
இந்த கலாச்சாரத்தில் பெண்மை எப்போதுமே தெய்வீகமாக வணங்கப்படுகிறது. நாம் நம்முடைய குழந்தைகளுக்கு ‘மாத்ரு தேவோ பவ’ என்று சொல்லிக்கொடுக்கிறோம். பெண்ணை தெய்வமாக கொண்டாடுகிறோம். பெண் தெய்வம் இல்லாமல் ஒரு வசிப்பிடம்கூட இல்லை. இது ஒரு உண்மை. மற்றொரு உண்மை என்னவென்றால், இந்தக் கலாச்சாரத்திலேயே, ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு எதிராக கற்பழிப்பு, கலகங்கள், வன்முறைகள் என்று நடக்கின்றன. ஏனென்றால் பெண்தெய்வங்களை நாம் வணங்கியபோதும், பிழைப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கும்போது, நாம் செயல்படும் விதம் இயற்கையாகவே ஆண்தன்மையாக இருக்கிறது. இந்த உலகில் பெண்மை மலர வேண்டுமென்றால் நம்முடைய பிழைப்பு செயல் முறைகளை எளிமையாக்கிக் கொள்வது மிக மிக முக்கியமானதாகும்.
கணிதம், அறிவியல் மற்றும் பிரபஞ்சவியல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போல் கலை, இசை, ரசனை போன்றவற்றிற்கும் நாம் நம்முடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் அளிக்கவில்லையென்றால் பெண்தன்மை இல்லாமல் போய்விடும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய கல்விமுறைகள் ஆண்தன்மையை உயர்த்திக் காட்டுவதாகவும் பெண்தன்மையை குறைப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கல்விமுறையிலும் உள்ளுணர்வின் மூலம் செயல்படுவதற்கு இடமே கொடுக்கப் படவில்லை. எல்லா கல்வி முறைகளுமே கொலைப்பாதகமான காரணஅறிவு தொடர்பாகவே உள்ளன.
பிழைப்பு செயல்முறைகளை நாம் புறக்கணிக்க முடியாது. அது கவனித்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதை மிக உயர்வாக கருதி நம் வாழ்நாள் முழுவதும் அந்த ஒன்றை மட்டுமே அடைய விரும்பக்கூடாது.
பாதி பெண்ணான சிவன்
ஆதியோகியான சிவன் முழுமையான ஆண்தன்மையின் வெளிப்பாடாக இருக்கிறார். ஆனால் அவருடைய ஒரு பாதி பெண்தான். இது அவர் யார் என்பதற்கான அழகான ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. நீங்கள் உங்களுக்குள் ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை இரண்டையுமே சமவிகிதத்தில் வைத்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் எப்போதுமே வளர்ச்சியடைய முடியாது என்பதை அது குறிக்கிறது.
பெண்கள் தற்போது அனுபவிக்கும் எந்த ஒரு சிறு சுதந்திரமும் அவர்களுடைய விடுதலை இயக்கங்களாலோ அல்லது ஆண்களின் பரந்த மனப்பான்மையினாலோ வரவில்லை. இது முக்கியமாக தொழில்நுட்பத்தின் மூலம்தான் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் போது, வலுவான தசைகளுக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும். வலுவான தசைகளுக்கு முக்கியத்துவம் குறையும்போது, பெண்தன்மை செழிப்படைய வழி ஏற்படும்.
நான் குறிப்பாக லிங்கபைரவியை பல இடங்களுக்கும் கொண்டுசெல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் பெண் தன்மைக்கு தலைவணங்க கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பெண்ணின் கர்ப்பப் பையில்தான் ஒவ்வொரு உயிரும் பாதுகாப்பாக வளர்கிறது. அதற்கு எப்படி தலை வணங்குவது என்று ஒருவருக்குத் தெரியாவிட்டால், அடிப்படையான ஒரு தன்மை அந்த நபரிடம் இல்லாமல் இருக்கும். உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஆண் தனக்குள் இருக்கும் பெண் தன்மையினால் பண்படவில்லை என்றால் அவனுக்கும் ஒரு விலங்கிற்கும் அதிக வேறுபாடு இருக்காது.
நீங்கள் ஒரு ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ இருப்பது உங்களுடைய உடலுறுப்புகளை பொறுத்துதான். நீங்கள் உங்களுடைய உடலுறுப்புகளுடன் உறுதியாக அடையாளப்பட்டிருந்தால், உங்களுக்கு அதுவே ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஏனென்றால் உடலுறுப்புகளுடன் அடையாளப்பட்டிருப்பது அறியாமையின் அடிப்படை. ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை இந்த இரண்டும் உங்களுக்குள் மலர்ந்தால், நீங்கள் ஒரு ஆணா அல்லது ஒரு பெண்ணா என்பதை பற்றி பிரச்சனையில்லை. இந்த நிலை மட்டுமே நீங்கள் விழிப்புணர்வின் உச்சநிலைக்கு செல்ல உங்களுக்கு நிலையான அடித்தளமாக இருக்கும்.
சமத்துவம் என்றால்...
ஒரு சில சமூகங்களில் மட்டுமே இன்னமும் பெண்கள் போராட வேண்டியிருக்கிறது. மற்ற சமூகங்களில் இருக்கும் பெண்கள் தங்களுடைய போராடும் மனப்பான்மையையும், விடுதலை இயக்கங்களையும் கைவிடவேண்டும். வெற்றியடைவதன் பெயரிலோ, சமத்துவம் என்ற பெயரிலோ, பெண்மை பலியாகி விடக்கூடாது. இது மிகவும் முக்கியமானது. அவர்கள் எப்போதும் பெண்மைக்கு காவலாக இருக்கவேண்டும். சமத்துவம் என்பது அனைவரையும் ஒரே மாதிரி செதுக்குவதல்ல. ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருக்கலாம். அப்போதும் உங்களுக்கு இந்த உலகில் ஒரு இடம் இருக்கும்‘ என்றால், இதுதான் சமத்துவம். எனவே இப்போது சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினத்தை இனி ‘பெண்கள் தினம்‘ என்று அழைப்பதற்கு பதிலாக ‘பெண்தன்மையின் தினம்‘ என்று அழைக்கப்பட வேண்டும்.