நாம் படித்தவை, கேட்டவை, பார்த்தவைகளை வைத்துதான் நம் மனதில் கேள்விகளும், சந்தேகங்களும் உதிக்கின்றன. சிலவற்றிற்கு விடை கிடைக்கும், பலவற்றிற்கு கிடைக்காது. சத்குருவிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விகள் உங்கள் மனதிலும் தோன்றியிருக்கலாம்...

Question: இறந்த உயிர்களை அணுகுவது எப்படி?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

சில விஷயங்களை அனுபவத்தில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். அனுபவப்பாடம் கற்க பலரும் தயாராக இருப்பதில்லை. கண்களை மூடிக்கொண்டால் என்னைப் பார்க்க முடியாது, இருந்தும் நீங்கள் இருப்பது உங்களுக்கு புரிகிறதல்லவா? கண்கள் என்னும் ஜன்னல் மூலம் என்னைப் பார்க்க முடிகிறது, அந்த ஜன்னலை மூடினாலும் உங்களை உங்களால் உணர முடிகிறது. அப்படியென்றால், உடல் பரிமாணத்தையும் மீறிய விஷயங்கள் இருக்கிறதென்று புரிகிறதல்லவா? இது எளிமையான உதாரணம். இதுவரை நீங்கள் கிரகிக்காத பரிமாணத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்தப் பரிமாணத்தைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துங்கள். தற்சமயம், நீங்கள் எதையெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மட்டுமே உங்களால் கற்பனை செய்ய முடியும். நீங்கள் அறியாத பரிமாணத்தை பற்றி கற்பனை செய்ய இயலாது. அதனால் உங்களையும் மீறிய ஒரு பரிமாணத்தை கிரகித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தால், தற்சமயம் நீங்கள் இருக்கும் நிலையை உணர்வது அவசியம், அபரிமிதமான கற்பனைகளை வைத்துக் கொண்டு அதனை ஊதிப் பெரிதாக்குவது உதவாது. மனம் என்னும் பரிமாணம் உங்களுக்கு பரிச்சயமான விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ள மட்டுமே உதவும். அதனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றொரு பரிமாணத்தைப் புரிந்துகொள்ள உங்கள் கிரகிப்புத் திறனை உயரங்களுக்கு உயர்த்துவது அவசியம்.

Question: எதனை நீங்கள் அதிர்ஷ்டம் கெட்ட முகம் என்பீர்கள்?

சத்குரு:

விஜயநகர ராஜ்ஜியத்தில் இது நடந்தது. ரெட்டப்பா என்றொரு சவரத் தொழிலாளி இருந்தார். பொதுவாக, ஒரு சவரத் தொழிலாளியின் முகத்தை பார்ப்பதை துரதிருஷ்டமாக அன்றைய சமூகம் கருதியது. இன்றும் பல இடங்களில் இந்த நம்பிக்கை நிலவுகிறது. இதனால், ரெட்டப்பா மிக கவனமாக இருந்தார். காலையில் தனக்கு சவரம் செய்ய ஒரு மனிதர் தேவைப்பட்டாலும் அவரது முகத்தில் முழிப்பது மட்டும் பாவமாக கருதும் மக்கள் இருக்கத்தான் செய்தனர். ஒருநாள், அரசர் காட்டில் முகாமிட்டிருந்தார். அங்கு தன் காலைக் கடன்களை கழிக்க சென்றிருந்தார் ரெட்டப்பா. அரசரும் அதே வேலைக்கு அந்தப் பக்கம் வந்திருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர். “காலையில் முதல் முதலாக உன் முகத்திலா முழிப்பேன். நீ எனக்கு துரதிருஷ்டத்தை கொண்டு சேர்த்துவிட்டாய். உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன்” என்று கூறிச் சென்றார் அரசர். ரெட்டப்பாவிற்கு நேர்ந்த அநீதியைப் பற்றி கேள்விப்பட்ட தெனாலிராமன், “இன்று அரசன் கழுவில் ஏற்றப்படுகிறார், இது அரசனுடைய கட்டளை” என்று போஸ்டர் அடித்து நாடெங்கும் ஒட்டினார். தெனாலிராமன் என கையெழுத்திடப்பட்ட போஸ்டர்களை கண்ட அரசன் சீற்றமடைந்தான். “என்ன முட்டாள்தனம் செய்திருக்கிறாய், தெனாலிராமா?” என்றான் அரசன். அதற்கு தெனாலிராமன், “ரெட்டப்பாவின் முகத்தைப் பார்த்ததால் உங்களுக்கு துரதிருஷ்டம் ஏற்பட்டது, ஆனால் பாருங்கள் இன்னொரு துரதிருஷ்டக்காரன் இருக்கிறான்; அவனைப் பார்த்ததும் ரெட்டாப்பாவிற்கு மரணமே நிகழப் போகிறது. அப்படியென்றால், ரெட்டப்பா பார்த்தவன் எப்பேர்ப்பட்ட துரதிருஷ்டக்காரனாய் இருப்பான்!” என்றார். அதனால், எது துரதிருஷ்டமான முகம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Question: இன்று எங்கு பார்த்தாலும் இரவு வேலை செல்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்களே...?

சத்குரு:

இது நம் தேசத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க நடக்கும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. இங்காவது இரவு வேலைக்கு செல்கிறார்கள், அமெரிக்காவில் இரவுநேர பார்ட்டிக்குச் செல்கிறார்கள். அதேபோல், அதிகாலை பார்ட்டி எனும் விஷயமும் அங்கு பிரசித்தி பெற்று வருகிறது. இரவு கண்விழிக்க இயலாதவர்களுக்காக அதிகாலை பார்ட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒரு பெண் ஒரு காலை பார்ட்டிக்கு அழைக்கப்பட்டார். பத்திரிகையிலேயே என்ன உணவு என்பதையும் இவர்கள் அச்சடித்து விடுவது வழக்கமாக இருக்கிறது. ஏனெனில், இவர்கள் அபாரமான உணவுப் பிரியர்களாகவும் இருக்கிறார்கள். உணவுப் பட்டியலைப் பார்த்த இந்தப் பெண்மணிக்கு பார்ட்டிக்கு போக ஏக விருப்பம் ஏற்பட்டது. ஏற்பாட்டாளர்களை அழைத்து, “எனக்கு இந்த பார்ட்டிக்கு வர வேண்டும் என விருப்பம், ஆனால் என்னால் வர இயலாது” என்றார். “ஏன்?” என்றனர். “எனக்கு ட்ராபிக் லைட் சின்ட்ரோம்’ உள்ளது என்றார். ‘‘அப்படி என்றால் என்ன?” என்றனர். ‘‘காலையில் நான் வெளியே வந்தால் என் கண்கள் சிவந்துவிடும், தோல் மஞ்சளடித்துவிடும், உடலெங்கும் பச்சை போர்த்தியது போல் உணர்வேன்” என்றார். இந்தளவிற்கு அங்கு இரவு பார்ட்டி மோகம் மக்களை பீடித்திருக்கிறது. பகல் நேரத்தில் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் அவதிப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.