இப்படியும் வாழ்ந்தான் கிருஷ்ணன்... உங்களுக்கு தெரியுமா?
கிருஷ்ணனை ஒரு பாலகனாக, லீலைகள் செய்பவனாக, கீதையை உபதேசித்தவனாகத்தான் நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவன் ஒரு பிரம்மச்சாரியாக இருந்து கடைபிடித்த வாழ்க்கை என்பது முற்றிலும் வித்யாசமான ஒன்று. இதைப் பற்றி சத்குருவின் பார்வையில் இங்கே...
கிருஷ்ணனை ஒரு பாலகனாக, லீலைகள் செய்பவனாக, கீதையை உபதேசித்தவனாகத்தான் நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவன் ஒரு பிரம்மச்சாரியாக இருந்து கடைபிடித்த வாழ்க்கை என்பது முற்றிலும் வித்யாசமான ஒன்று. இதைப் பற்றி சத்குருவின் பார்வையில் இங்கே...
சத்குரு:
கிருஷ்ணனுக்கு பிரம்மச்சரிய தீட்சை...
கிருஷ்ணன் தர்மத்தின் சக்கரவர்த்தியாக விளங்கினான். தர்மத்தை நிலை நாட்ட நாடு முழுவதையும் பல முறை சுற்றினான். ஆனால் அவனுக்கென்று சொந்தமாக ராஜ்ஜியம் எதுவும் இல்லை. அரசாளுவதற்குண்டான அத்தனை திறமைகளும், தகுதிகளும் இருந்த போதிலும் அவன் எந்த ராஜ்ஜியத்தையும் அரசாளவில்லை!
கிருஷ்ணனுடைய பதினாறாவது வயதில் இவ்வாறெல்லாம் நிகழ்ந்தன. அப்போதே அவன் தன்னை ஓர் உன்னதமான தலைவனாக நிலை நிறுத்திக் கொண்டு விட்டான்.
இந்தச் சமயத்தில் குலகுருவான கர்காச்சாரியார் அவனைத் தேடி வந்தார். "கிருஷ்ணா! விதிக்கப்பட்டுள்ளபடி நீ உருவாவதற்கு உனக்குக் கல்வி தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு நீ நடக்கவேண்டும். ஆகவே குரு சாந்திபாணியிடம் மாணவனாகச் சேர்" என்றார்.
கிருஷ்ணன் சாந்திபாணியிடம் மாணவனாகச் சேர்ந்தான். கிருஷ்ணன் எங்கு சென்றாலும் அவனுக்கு ஓரடி பின்னாலேயே செல்லும் பலராமனும் அவனுடன் சென்றான். கிருஷ்ணனுக்கு அங்கே பிரம்மச்சரிய தீட்சை வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அங்கு சில அரசகுமாரர்களும் இருந்தார்கள்.
அவர்களும், பலராமனும் கிருஷ்ணனிடம், "நீயோ முறையற்ற, விளையாட்டுத்தனமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாய். நீ எவ்வாறு பிரம்மச்சாரியாக ஆக முடியும்?" என்று சிரித்தபடி கேட்டார்கள்.
அதற்கு கிருஷ்ணன் "நான் செய்தவை அனைத்தும் நான் செய்தவையே! மறுக்கவில்லை. ஆனால் ஒன்று! நான் எப்போதும் பிரம்மச்சாரியாகவே இருந்திருக்கிறேன். இப்போதும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு அதை நான் முழுமையாகக் கடைப்பிடிக்கப் போவதை நீங்கள் காணத்தான் போகிறீர்கள்." என்று கூறினான்.
குருகுல வாசம்...
அதன்பின் கிருஷ்ணன் சாந்திபாணியின் சிஷ்யனாக ஆறு ஆண்டுகள் பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்ந்தான். அவன் கல்வி பயின்றது ஒரு நாடோடி குருகுலத்தில். குருவின் ஆசிரமம் எப்போதும் ஒரே இடத்தில் நிலை பெற்றிராமல் புலம் பெயர்ந்து கொண்டேயிருந்தது. அங்கு பயின்ற மாணவர்கள் தங்களுடைய உணவை பிச்சை எடுத்துப் பெற்றுத்தான் உண்ண வேண்டும்.
Subscribe
குருகுலத்தில் வாசம் செய்த ஆறு வருட காலத்துக்கு கிருஷ்ணனும் மற்ற பிரம்மச்சாரிகளைப் போல் பிச்சை எடுத்தே உண்டான். இறங்கி, தனக்கு என்ன இடப்பட்டாலும் சரி என்ற நிர்மலமான மனதுடன், "பிச்சை போடுங்கள்.." என்று உரத்த குரலில் இரந்து கொண்டே சென்றான்.
பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியவர் தனக்கான உணவை ஒரு போதும் தீர்மானிக்க முடியாது. உணவின் தராதரத்தைப் பற்றியும் கவலைப்பட முடியாது. என்ன இடப்பட்டதோ அதுதான் உணவு! அது நல்லதோ, கெட்டதோ பிச்சை எடுப்பவர்கள் அதனை ஏற்று நன்றியுடன் உண்ண வேண்டும். இதுதான் பிரம்மச்சரிய விதி!
'நான் ஒரு பிரம்மச்சாரி' என்று எவனொருவன் அறிவிக்கிறானோ அவன் புனிதப்பாதையில் செல்வதாகப் பொருள். அவன் தனக்கு வழங்கப்பட்ட உணவில் போதுமான சத்து இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க இயலாது. பிரம்மச்சாரிக்கான சத்து வேறொன்றே அன்றி நிச்சயமாக உணவு இல்லை. அந்தச் சத்து வேறெங்கிருந்தோ அவனை வந்தடையும்.
நூறு சதவீதமும் உணவையே ஆதாரமாகக் கொண்டவர்கள் பிரம்மச்சாரியாக ஆகவே முடியாது. அதனால் கிருஷ்ணன் முழுமையான பிரம்மச்சாரியாக மாறினான்!
கிரீடமும், மயிலிறகும், பட்டுப் பீதாம்பரமும் தரித்து எப்போதுமே நேர்த்தியாகக் காட்சியளிக்கும் அந்த உத்தமன், மான் தோல் பட்டையை இடுப்பில் சுற்றிக் கொண்டு, பிரம்மச்சரிய விரதத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.
இந்த உலகானது அதற்கு முன் அவ்வளவு அற்புதமானதொரு பிச்சைக்காரனைப் பார்த்ததில்லை. மயக்கும் அழகு, வசீகரமான நளினம், முழுமையான அர்ப்பணிப்பு, குவிந்த கவனம் ஆகியவற்றுடன் தனக்காகவும், குருவுக்காகவும், சக சன்னியாசிகளுக்காகவும் சிறிது உணவைச் சேகரிப்பதற்காக அவன் தெருவில் நடந்ததைக் கண்டு மக்கள் வியப்பின் உச்சத்துக்குப் போனார்கள்.
'பிச்சை இடுங்கள்' என்று இரந்து நின்ற அந்தப் பொழுதில் அவன் நினைத்திருந்தால் ஒரு சக்கரவர்த்தியாகவே ஆகியிருக்கலாம். ஆனாலும் அவன் ஆறு ஆண்டு காலம் பிச்சை எடுத்தபடி தெருத்தெருவாக அலைந்தான்.
வாழ்க்கையை, ஒரு கொண்டாட்டமாகவும், ஆனந்த விளையாட்டாகவும் உணர்ந்து வளர்ந்த அற்புதமான பாலகர்கள் அனைவரும் பிரம்மச்சரிய விரதத்தை வெகு தீவிரமாகக் கடைப்பிடித்து பூர்த்தி செய்தார்கள்.
புலம் பெயர்ந்து கொண்டே இருந்த சாந்திபாணியின் ஆசிரமத்தில், ஆறு ஆண்டு காலம் கிருஷ்ணன் பிரம்மச்சரிய விரதம் பூண்டு கல்வி பயின்றான். கிருஷ்ணனின் உறவினனும், நண்பனுமான உதவனும், சகோதரன் பலராமனும், மற்றும் சில மாணாக்கர்களும் அப்போது அவனுடன் சேர்ந்து கல்வி பயின்றார்கள்.
உணவு துறப்பதா பிரம்மச்சரியம்?
"இங்கே ஈஷாவில் இருக்கும் பிரம்மச்சாரிகள் எல்லாம் நாள் முழுவதும் கழுதை போல் உழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குச் சரியாக உணவு கிடைப்பதில்லை.. பாவம்!" என்று ஒரு சிலர் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டார்கள்.
ஒரு பிரம்மச்சாரியானவன் தான் உண்ணும் உணவினால் மட்டுமே உயிர் தரித்திருக்கிறான் என்பது வெட்கக்கேடான விஷயம்.
உணவு வேண்டியதுதான். ஆனால் பிரம்மச்சாரியின் போஷாக்கு அவன் உண்ணும் உணவில் மட்டுமே இல்லை. ஒரு பிரம்மச்சாரி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உணவு உட்கொள்ளாது போனாலும், அவன் இருபத்து நான்கு மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். என்ன பணி ஆற்ற வேண்டுமோ அதனை ஆற்ற வேண்டும். அவ்வாறு இருப்பவன்தான் உண்மையிலேயே பிரம்மச்சாரியாக இருக்கிறான் என்று பொருள்.
கௌதம புத்தர் தனது சிஷ்யர்களிடம் ஒருமுறை இவ்வாறு சொன்னார். "நீங்கள் பசியுடன் இருக்கும் போது, உங்களது உடல் உணவுக்கு ஏங்கும் வேளையில், உங்களுக்கான உணவை வேறு யாருக்கேனும் ஈந்துவிட்டால் நீங்கள் மேலும் வலிமை பெற்று விளங்குவீர்கள். உடல்ரீதியாக மட்டுமல்லாது, ஆன்மரீதியாகவும் வலுவுள்ளவர்களாக மாறுவீர்கள்."
பல்வேறு பாரம்பரியங்கள், பல்வேறு நெறிமுறைகள் மனித வர்க்கம் உயர்நிலையை அடைவதற்கு பல்வேறு வழிகளை வகுத்து வைத்துள்ளன. பிரம்மச்சரியம் என்பது முற்றிலும் வேறொரு நெறிமுறை.
வெறுமனே வயிறார உணவு உண்பதோ, நேர்த்தியாக உடுத்துவதோ பிரம்மச்சரியம் அல்ல. எந்தெந்த வழிகளில் இயலுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் உடலையும், மனதையும் இழப்பதே பிரம்மச்சரியம்! அனைத்தில் இருந்தும் நம்மை இழப்பதுதான் இப்போது நிகழ வேண்டிய ஒன்று.
நீங்கள் மந்திரங்களை உச்சரித்தாலும், பஜனை செய்தாலும், நடனம் ஆடினாலும், உண்டாலும், பாடினாலும், எதைச் செய்தாலும் சரி, நீங்கள் உங்களை இழந்து அடிமையாக விளங்க வேண்டும். அதனால்தான் நீங்கள் பெண்மையுடன் துலங்க வேண்டும் என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
பெண்மையின் இயல்பே அடிபணிவதுதான்! எது வரினும் முழுமையாகப் பெற்றுக் கொள்வது! மற்றவற்றோடு கலந்து தன்னை இழப்பது! தான் என்பதே இல்லாது ஒழிவது!
நிலவுக்கென்று சுயமாக எந்த குணமும் கிடையாது. சூரியனின் ஒளியை உள்வாங்கிப் பிரதிபலிப்பது மட்டுமே அதன் செயல். ஆனால் அதனாலேயே அது எவ்வளவு அழகாக மாறிவிடுகிறது?
நிலவு சுயமாக எதையாவது செய்திருந்தால் இவ்வளவு அழகு பொருந்தியதாக, அற்புதமான ஒன்றாக மாறியிருக்காது!
சூரியனைக் காட்டிலும், நிலவுதான் பூமியில் நிறைய கவிதைகள் பிறக்கக் காரணமாய் இருந்திருக்கிறது. நிலவுக்கு சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதைத் தவிர வேறு எந்த குணமும் கிடையாது.
நீங்கள் தெய்வீகத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில் இது ஒன்றுதான் வழி! உங்களுக்கென்று தனிப்பட்ட எந்த குணமும் இருக்கக் கூடாது. வெறுமனே பிரதிபலியுங்கள். நீங்கள் பிரதிபலிப்பவராக மட்டுமே மாறினால் எதைப் பிரதிபலிப்பீர்கள்? எது முடிவற்றதோ, எது அழிவற்றதோ, எது என்றும் நிலையானதோ அதைத்தான் பிரதிபலிப்பீர்கள்.
லீலா என்பது நம்மையே அர்ப்பணிப்பது. லீலா என்பது நம்மையே இழப்பதற்கான ஒரு வாய்ப்பு!