உள்ளுணர்வு என்பதன் பொருள் என்ன? (Intuition Meaning in Tamil)

கேள்வியாளர்: உள்ளுணர்வு என்றால் என்ன என்பதை விளக்குங்கள் சத்குரு. இது ஆன்மீகப் பாதையின் ஒரு அம்சமாக இருக்கிறதா?

சத்குரு: உள்ளுணர்வு என்பது என்ன? ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு மனிதர் செய்யும் ஒவ்வொரு செயலும், அவரவர் சேகரித்து வைத்துள்ள தகவலின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. தகவல் என்றால், நீங்கள் ஒரு புத்தகத்திலோ அல்லது வலைதளத்திலோ படித்தது என்று அர்த்தமல்ல. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது மற்றும் தொடுவதன் மூலமாக உங்களது ஐம்புலன்களும் இடையறாது தகவலை சேகரிக்கிறது. நீங்கள் உறங்கினால்கூட இது தொடர்ந்து நிகழ்கிறது.

இது குறித்து ஆராயும் நோக்கில், ஒருவர் நல்ல உறக்கத்தில் இருந்தபோது, அவருக்குப் புரியாத ஒரு மொழியில் பத்து வாக்கியங்கள் அவரிடம் கூறப்பட்டது. பிறகு, நீண்ட காலம் கழித்து, அவரை ஹிப்னாடிச மயக்கத்தில் ஆழ்த்தி சோதனை செய்தபோது, அவர் உறக்கத்தில் கேட்டிருந்த அந்தப் பத்து வாக்கியங்களையும், அவருக்கு தெரியாத மொழியாக இருந்தபோதிலும் அப்படியே திரும்ப கூறினார். அவர் விழிப்புடன் இல்லாதபோதும், ஒரு டேப் ரெக்கார்டரைப் போன்று தெள்ளத்தெளிவாக அந்தப் பத்து வாக்கியங்களும் அவரிடம் பதிவாகியிருந்தது.

எந்த விதமான தீர்மானங்களும் இல்லாமல், உங்கள் கவனம் எல்லா நேரமும் விழிப்புடன் இருந்தால் - வெறுமனே கவனம், எண்ணம் அல்ல, கவனமாக மட்டும் இருந்தால் - நீங்கள் இயல்பாகவே உள்ளுணர்வு கொண்டவராக இருப்பீர்கள்.

உங்களது கவனத்திற்கு வராத மிகப்பெரும் அளவிலான தகவல் உங்களுக்குள் இருக்கிறது. மிகக் குறைந்தபட்ச உதாரணமாக, உங்களால் நடக்கமுடிவதைப் பற்றி பார்ப்போம். நடப்பது மிகவும் எளிமையானது. ஆனால், இரண்டு கால்களால் நடப்பதற்கான வழிமுறையை நீங்கள் காரணரீதியாக ஆராய்ந்தால், அது ஒரு அதிசிக்கலான செயல்முறையாக இருக்கிறது.

உடலின் பாரம் எப்படி நகர்கிறது, தசைகளில் என்ன நிகழ்கிறது மற்றும் ஒட்டுமொத்தமாக நடப்பது எப்படி நிகழ்கிறது என்பது வியக்கத்தக்க சிக்கலான ஒரு செயல்முறையாக உள்ளது. இதனை நீங்கள் காரணரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கு பித்துப்பிடித்துவிடும். அதைப் பற்றி ஒரு ஆயுட்காலம் முழுவதும் நீங்கள் படித்தாலும்கூட நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. அது அவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது, ஆனால் நம் அனைவராலும் மிக எளிதாக நடக்கமுடிகிறது. இதை நாம் காரண அறிவில் இல்லாமல், உள்ளுணர்வாக அறிந்திருக்கிறோம்.

கார் ஓட்டுவதை இதற்கான ஒரு சிறந்த உதாரணமாக கூறலாம். நீங்கள் முதன்முதலில் கார் ஓட்டக் கற்றபோது, இக்னிஷனை ஆன் செய்தீர்கள், பிறகு கிளட்ச்சை அழுத்தினீர்கள், பிறகு முதல் கியர் போட்டு, மெல்ல கிளட்ச்சை விடுவித்தீர்கள், ஆனால் அதுவோ குதித்து, நின்றுவிடும் - நீங்கள் எத்தனை முறை முயற்சித்தாலும் அப்படியே நடந்தது. ஆனால் இப்போது, கடந்த பத்து வருடங்களாக நீங்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள், உங்கள் கைப்பேசியில் நீங்கள் பேசினாலும், எல்லாம் சரியாக நிகழ்கிறது. பத்து வருட அனுபவத்துக்குப் பிறகு இன்றைக்கும்கூட, நீங்கள் காருக்குள் அமர்ந்து, “எதை நான் சரிவரச் செய்யவேண்டும்? முதலில் இக்னிஷன், பிறகு கிளட்ச், பின்பு முதல் கியர், பிறகு கிளட்ச்….” என்று காரண அறிவைக் கொண்டு யோசித்தால், எப்படி கார் ஓட்டுவது என்பது மீண்டும் உங்களுக்கு தெரியாததாகவே இருக்கும்.

உள்ளுணர்வு vs காரண அறிவு

காரணரீதியாகப் பார்த்தால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயலுக்கும் பத்து படிகள் உண்டு. ஒன்று முதல் பத்து வரைக்குமான இந்தப் படிகளை கடந்து செல்வதற்கு பதில், நீங்கள் நேராக பத்தாவது படிக்கு தாவினால், அதையே உள்ளுணர்வு என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் உள்ளுணர்வு என்பது ஒருவரது உணரும் திறனின் (Perception) வித்தியாசமான பரிமாணம் அல்ல, அது ஒரு வித்தியாசமாக கணக்கிடும் பரிமாணம் மட்டுமே.

அதே தகவல்தான் இருக்கிறது, ஆனால் நீங்கள் கூடுதல் வேகத்துடன் கணக்கிடுகிறீர்கள். உங்கள் மூளையின் உள்ளுணர்வு இன்னும் அதிகமானால், உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் மேலும் நன்றாகப் பயன்படுத்தமுடியும். ஒரு சாதாரண செல்போனில் இருந்து, ஸ்மார்ட் போனிற்கும், ஒரு ஸ்மார்ட் போனிலிருந்து ஐபேடிற்கும் நகர்வதற்கு, நாம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. இருப்பதை இன்னும் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது என்று மட்டுமே நாம் கற்கிறோம். நீங்கள் உள்ளுணர்வுடன் இருக்கும்போது, உங்கள் மூளையுடனும் அதுதான் நிகழ்கிறது. ஆனால் அது உணர்திறனின் வேறொரு பரிமாணமல்ல.

உள்ளுணர்வும் ஆன்மீகமும்

உணர்திறனானது மற்றொரு பரிமாணத்தில் நிகழவேண்டும் என்றால், அதன் தற்போதைய எல்லைகளைத் தாண்டி நீங்கள் அதனை மேம்படுத்த வேண்டும். ஆன்மீகம் என்பது இதுதான் - உங்கள் உணர்திறனை மேம்படுத்துவது. அடிப்படையில், ஆன்மீகத்தில் இருப்பது என்பது, பொருள்தன்மையைக் கடந்து செல்வதைக் குறிக்கிறது. பொருள்தன்மை கடந்த ஒரு பரிமாணம் உங்களுக்குள் ஒரு வாழ்க்கை அனுபவமாக இருந்தால், நீங்கள் ஆன்மீகத்தில் இருக்கிறீர்கள். பொருள்தன்மை என்று நாம் கூறும்போது, அது உடலையும் மனதையும் மட்டும் குறிப்பதல்ல. புலனுறுப்புகள் ஐந்தின் வழியாக நீங்கள் உணரும் அனைத்துமே பொருள்தன்மையானவைதான். அதனை நீங்கள் கடந்தால், அல்லது ஐம்புலன்களின் எல்லைகளையும் உங்களது உணர்திறன் கடந்துவிட்டால், அப்போது நீங்கள் ஆன்மீகத் தன்மையானவர்.

உள்ளுணர்வு vs மனதிற்கு தோன்றுவது

Decision Making, முடிவு எடுத்தல்

கேள்வியாளர்: எதிர்பாராத ஒரு சூழ்நிலையின்போது மனதில் தோன்றுவதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்? இது உள்ளுணர்வுக்கு ஒப்பானதா?

சத்குரு: சட்டென்று மனதில் தோன்றுவதும் இருக்கிறது, மனக்கலக்கம் என்றழைக்கப்படுவதும் இருக்கிறது. எந்த வழியில் செல்வது என்று மக்கள் திகைக்கும்பொழுது, அவர்களது வயிறு கலங்குகிறது. அதை ஏதோ ஒருவித உள்ளுணர்வு அல்லது வாழ்வின் ஆழமான புரிதல் என்று புரிந்துகொள்ளாதீர்கள். அச்ச உணர்வை பெரும்பாலானவர்கள் மனதில் தோன்றுவதாக கருதுகின்றனர், எனவே நீங்கள் அதனைப் பின்பற்றி செல்லக்கூடாது.

ஒரே ஒரு சதவிகிதம் சந்தேகமாக இருந்தாலும், தர்க்க மனம் என்பது எவ்வளவு குறுகியதாகவே இருந்தாலும், அதனைப் பயன்படுத்துவதே சிறந்தது, ஏனெனில் அது அதிக நம்பகத்தன்மை உடையது.

சில தருணங்களில் உள்ளுணர்வு என்பதே மிக குழப்பமானதாக தோன்றும். பெரும்பாலானோர், “ஓ, என் மனக்குறளி இப்படி சொல்கிறது,” என்பார்கள். குறிப்பாக, குதிரைப் பந்தயங்களுக்கு செல்பவர்கள் இப்படி கூறுவதுண்டு! தொண்ணூறு சதவிகித நேரங்கள் அவர்கள் தோற்கிறார்கள், ஆனால் அப்போதும் அவர்கள் என் மனக்குறளி இப்படி சொல்கிறது என்பார்கள். ஏனெனில் அது ஒருமுறை வேலை செய்திருக்கிறது. அது ஒருமுறை பலனளித்தது. பத்து முறை தோற்க வைத்திருக்கிறது, ஆனாலும் அந்த ஒருமுறை பலனளித்ததை வைத்து அவர்கள் தொடர்ந்து பணம் செலுத்திக்கொண்டே இருக்கின்றனர். அதாவது, சில தருணங்களில் தற்செயலாக சில விஷயங்கள் நிகழக்கூடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எப்போதாவது உள்ளுணர்வு வேலை செய்வது மிகவும் ஆபத்தான விஷயம், ஏனென்றால், இது நூறு சதவிகிதம் சரியா தவறா என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வருவீர்கள்? இதனால் உங்களுக்குள் ஒரு பெரும் குழப்பம் நிகழும். உங்கள் தர்க்கரீதியான மனம் ஒரு விஷயத்தைக் கூறுகையில், உங்கள் உள்ளுணர்வு வேறெதையோ கூறுகிறது என்று நீங்கள் நினைப்பீர்கள். உள்ளுணர்வு நூறு சதவிகிதம் தெளிவாக இருக்கவேண்டும், இல்லையென்றால் உள்ளுணர்வு ஒரு தொந்தரவுதான். அதைக் கைவிட்டுவிட்டு, வெறும் காரணரீதியான செயல்முறையை சார்ந்திருப்பதே மேலானது. அதிக காலம் எடுத்துக் கொண்டாலும், குறைந்தபட்சம் நீங்கள் ஏதோ ஒரு இடத்தைச் சென்றடைவீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளுணர்வு இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், அது உங்களை எல்லா விதமான சூழ்நிலைகளுக்கும் ஆளாக்கிவிடக்கூடும்.

தங்களுக்கு உள்ளுணர்வு இருப்பதாக எண்ணிக்கொண்டு, வாழ்க்கை குறித்த எல்லா விஷயங்களிலும் எப்போதும் தவறான முடிவுகளை எடுக்கும் இந்த மாதிரியான மக்கள் பலர் இருக்கின்றனர். ஒரே ஒரு சதவிகிதம் சந்தேகமாக இருந்தாலும், தர்க்கரீதியான மனம் எவ்வளவு குறுகியதாகவே இருந்தாலும், அதனைப் பயன்படுத்துவதே சிறந்தது, ஏனெனில் அது அதிக நம்பகத்தன்மை உடையது. தர்க்கரீதியானதை நீங்கள் வேறுமுறையில் மறுஆய்வு செய்யலாம். உள்ளுணர்வை மறுஆய்வு செய்யமுடியாது.

இயந்திரங்களில் உள்ளுணர்வு - உள்ளுணர்வுடைய இயந்திரங்களை நாம் உருவாக்கமுடியுமா?

Robot, இயந்திர மனிதன்

Robot, இயந்திர மனிதன்

கேள்வியாளர்: மனித உள்ளுணர்வுகள், அடிப்படையில் நமது உடலின் இரசாயனங்களின் பதில்வினைகளாக இருக்கிறது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். இயற்கையான ஒரு உயிரி இரசாயன கணக்கீடு (Algorithm) உள்கட்டமைப்பு போன்றது அது. அப்படியானால், செயற்கை நுண்ணறிவானது மனித உணர்ச்சிகளை மீட்டுருவாக்கம் செய்யமுடியுமா? நமது உடலமைப்பில் நிகழ்கின்ற உயிரி இரசாயன செயல்பாட்டுடன் இணைந்து மனித புத்திசாலித்தனம் இயங்குகிறதா?

சத்குரு: நிச்சயமாக. நீங்கள் மனதளவில் சமநிலையாக இருப்பதற்கும், சமநிலையில்லாமல் இருப்பதற்கும், உறுதியாக அல்லது உறுதியில்லாமல் இருப்பதற்கும், மனதில் தெளிவாக அல்லது தெளிவில்லாமல் இருப்பதற்கும் ஒரு இரசாயன அடிப்படை உண்டு. மகிழ்ச்சியாக அல்லது மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கும், அன்பாக அல்லது அன்பில்லாமல் இருப்பதற்கும், ஆனந்தமாக அல்லது துன்பமாக இருப்பதற்கும்கூட ஒரு இரசாயன அடிப்படை உண்டு. நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்பொழுது, அமர்ந்திருக்கும் இந்த அனுபவத்தை நீங்கள் அழகானதாக்குவதோ அல்லது அசிங்கமாக்குவதோ என்பது அவரவர் புத்திசாலித்தனத்தைப் பொறுத்ததாக இருப்பதுடன் அது வேதியியலையும் பொறுத்தே இருக்கிறது. அவைகள் வெவ்வேறல்ல.

“என் ஒட்டுமொத்த உடல் மூலமாகவும் நான் சிந்திக்கிறேன், நீங்கள் உங்கள் மூளையைக் கொண்டு மட்டுமே சிந்திக்கிறீர்கள்”, என்று நாம் அவர்களிடம் கூறுவதுண்டு.
மக்கள் என்னிடம் வந்து, “சத்குரு, நீங்கள் குழப்பிக்கொள்ளாமல், மனவுறுதி இழக்காமல் எப்படி இவ்வளவு வேறுபட்ட செயல்களை முன்னெடுத்து செய்கிறீர்கள்?” என்று கேட்டவாறு உள்ளனர். “என் ஒட்டுமொத்த உடல் மூலமாகவும் நான் சிந்திக்கிறேன், நீங்கள் உங்கள் மூளையைக் கொண்டு மட்டுமே சிந்திக்கிறீர்கள்”, என்று அவர்களிடம் கூறுகிறேன். புத்திசாலித்தனத்தை, எண்ணம் என்று புரிந்துகொள்வது முற்றிலும் தவறானது. எண்ணம் என்பது புத்திசாலித்தனத்தின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே. நவீன சமூகங்கள் செய்துவிட்ட ஒரு முட்டாள்தனம் இது.

புத்திசாலித்தனத்தின் ஒரே வடிவம் எண்ணம் மட்டுமே என்று நவீனக் கல்விமுறை மக்களை நம்பச்செய்துள்ளது. புத்திசாலித்தனத்தின் ஒரே வடிவம் எண்ணம் என்றால், தரவுகளை சேகரிப்பது, தரவுகளை ஆராய்வது மற்றும் இந்தத் தரவுகளைக்கொண்டு, உங்கள் பகுப்பாய்வுக்கு தகுந்தாற்போல் முடிவெடுப்பதே புத்திசாலித்தனம் என்று நீங்கள் இயல்பாகவே புரிந்துகொள்வீர்கள். இது எந்தவொரு இயந்திரமும் செய்யக்கூடிய ஒரு செயல்முறை. பிரமிக்கத்தக்கதாக நீங்கள் நினைக்கும் அதிசிக்கலான எண்ணத்தைக்கூட, இன்றைக்கு உங்கள் கணினியால் எளிதில் செய்துவிட முடியும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளீர்கள்.

பெரும்பாலான குழந்தைகள், கணிதத்தை மிகக் கடினமான பாடமாகக் காண்கின்றனர். ஆனால் உங்கள் ஆசிரியரால் செய்யமுடிவதைவிட அதிகமான கணிதத்தை, ஒரு எளிய கால்குலேட்டரால் செய்யமுடியும். எந்தவொரு கணிதவியலாளரைவிடவும், மிக அதிகமான கணிதத்தை ஒரு கணினியால் செய்யமுடியும். மிகக் கடினமான காரணரீதியான செயல்முறையாக நீங்கள் நினைத்திருந்ததை, உங்களால் கற்பனை செய்யமுடிவதைவிடவும் மிக எளிதாக ஒரு இயந்திரம் செயல்படுத்துகிறது.

“கணிதம் என்பது வேறு, இலக்கியம், இசை என்பது வேறு”, என்று மக்கள் வாதிடுகின்றனர். அது அப்படி அல்ல. கணிதம் வெறுமனே எண்களாக இருப்பதால், அது மனிதருக்கு உட்படாமல் இருப்பதைப்போல் தோன்றுகிறது. பெரும்பாலும் மனித உணர்ச்சியின் பிரவாகமாக கருதப்படும் இலக்கியத்தையும், இசையையும்கூட ஒரு இயந்திரத்தால் இயற்றமுடியும். ஒருவேளை, அதை செய்வதற்குப் போதுமான சிறந்த இயந்திரங்களை இன்னமும் நாம் கட்டமைக்காமல் இருக்கலாம். ஆனால் பெருமளவில் இசை என்பது மின்னணுமயமாகி வருகிறது. இசையமைப்பாளர்கள் வெறுமனே உதட்டசைவுடன் ஒத்திசைவாக இயந்திரங்களை இசைக்கச் செய்கின்றனர், எல்லோரும் அதையே கேட்கிறார்கள். இசையின் அழகியலுக்குப் பழக்கப்பட்ட காதுகளுக்கு அது ரசனைக்குரிய ஒன்றாக தற்போது இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் இயந்திரங்கள் இன்னமும் அந்த அளவுக்குப் பரிணாமம் அடையவில்லை. ஆனால் சில வருடங்களில், உங்களால் வித்தியாசம் காணமுடியாத வகையில் அல்லது மிகத் துல்லியமாக இயந்திரங்கள் இசையமைப்பது தவிர்க்கவியலாத நிகழ்வாக இருக்கும்.

உள்ளுணர்வு என்பது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் காரணரீதியான செயல்முறை மூலம் செல்லவேண்டியிருக்காத வகையில், நீங்கள் கணக்கீடு செய்கிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் புத்திசாலித்தனத்தை இன்னும் அறிவார்ந்த வழியில் பயன்படுத்துவதாகும். ஒவ்வொரு முறையும் நீங்கள் காரணரீதியான வழிமுறை மூலம் செல்லவேண்டியிருந்தால், வாழ்வின் சிறிய அம்சங்களால் நீங்கள் இயல்பாகவே அலைக்கழிக்கப்படுவீர்கள்.

சமீபகாலமாக மக்கள் அதிக அழுத்தமாக உணர்வது எதனால் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் கல்வியறிவு பெற்றதுமே, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் காரணரீதியாக சிந்திக்கத் துவங்கிவிடுகிறீர்கள். உங்கள் வாழ்வை தர்க்கரீதியாக நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் அதை நியாயப்படுத்த முடிவதில்லை, அதனால் நீங்கள் அழுத்தத்துக்கு ஆளாகிறீர்கள். எதுவும் தவறாகப் போகவில்லை. சூரியன் உதித்துவிட்டது, காற்றில் பிராணவாயு இருக்கிறது, உங்கள் காலை உணவை உண்டுவிட்டீர்கள், இருந்தும் நீங்கள் அழுத்தமாகவும் உணர்கிறீர்கள். இது ஏனென்றால், உங்கள் முட்டாள்தனமான தர்க்கத்தில் இந்த நாளில் எது எப்படியிருக்கிறது என்பதை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் அதை நியாயப்படுத்த முடியாததால் நீங்கள் துன்பமாக இருக்கிறீர்கள்.

உள்ளுணர்வு என்றால் இதுதான், உங்கள் கணக்கீடுகள் பல்வேறு காரணரீதியான படிகளில் செல்லாமல், அப்படியே தாவிச்சென்று தீர்வை எட்டுகிறது. நிச்சயமாக இது உங்கள் வாழ்வை நடத்திச் செல்வதற்கான அதிஅறிவார்ந்த வழியாக இருக்கிறது. உள்ளுணர்வு என்பது, உயிரி இரசாயன கணக்கீடு வழிமுறை (Algorithm) மட்டும்தானா? ஆம், அது அப்படித்தான் இருக்கிறது. நாம் “உயிரி இரசாயன கணக்கீடு முறை”, என்று கூறும்பொழுது, அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதுடன், நீங்கள் விரும்பியவாறும் அதை அமைத்துக்கொள்ளலாம். மரபியல், கலாச்சாரம் மற்றும் வெளிச்சூழல்களின் தாக்கங்களினால் அது ஒருவிதமாக அமைக்கப்படுகிறது, ஆனால் நீங்கள் விழிப்புடன் இருந்தால், வேறொரு விதமாக நீங்கள் அதை அமைத்துக்கொள்ள முடியும். அது ஒரு இயந்திரவியல் நுட்பம். இந்த இயந்திரவியல் நுட்பம் விழிப்புடன் நடத்தப்படுகிறதா, இல்லையா என்பதுதான் கேள்வி.

உங்களிடம், ஒரு காரண அறிவும், ஒரு உள்ளுணர்வுப் பரிணாமமும், படைத்தலுக்கே அடித்தளமாக இருக்கும் ஆழமான நிலையிலான ஒரு புத்திசாலித்தனமும் பதியப்பட்டிருக்கிறது. படைப்பின் மூலத்திற்கு ஆதாரமாக இருக்கும் அந்த ஒரு பேரியக்க புத்திசாலித்தனமும்கூட உங்களுக்குள் பதிக்கப்பட்டுள்ளது. அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் கேள்விக்குரியது. எல்லோருக்கும் கைகள் இருந்தாலும், எல்லோரும் ஒரேவிதமாக தங்களது கைகளைப் பயன்படுத்தமுடியாது. ஒரு பந்தாட்ட வீரர் கைகளை ஒருவிதமாகப் பயன்படுத்துகிறார்; ஒரு எழுத்தாளர் வேறொரு விதமாகப் பயன்படுத்துகிறார்; ஒரு கலைஞர் மற்றொரு விதமாகப் பயன்படுத்துகிறார்; ஒரு யோகி இன்னொரு விதமாகப் பயன்படுத்துகிறார். உங்களை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் உயிரி இரசாயன கணக்கீடு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

உள்ளுணர்வை எப்படி வளர்த்துக்கொள்வது?

Intuition Meaning in Tamil, Intuition in Tamil, உள்ளுணர்வு

எல்லா நேரங்களிலும் வெறுமே யூகங்களை செய்துகொண்டு, அதையே உள்ளுணர்வு என்று மக்கள் தவறாக எண்ணிக்கொள்கின்றனர். உங்கள் உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ள விரும்பினால், வேறு எதைப்பற்றியும் யோசனை செய்யாமல், முழுமையான கவனத்துடன் இங்கே வெறுமனே அமர்ந்திருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதுதான் நீங்கள் செய்யவேண்டிய முதல் விஷயம். ஒருவர் என்னிடம், “சத்குரு நீங்கள் வாகனம் ஓட்டும்போது, எதைப்பற்றி சிந்திக்கிறீர்கள்?” என்று கேட்டார். நான் எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை, வாகனத்தை மட்டுமே செலுத்துகிறேன். எந்த விதமான தீர்மானங்களும் இல்லாமல், உங்கள் கவனம் எல்லா நேரமும் விழிப்புடன் இருந்தால் - வெறுமனே கவனம், எண்ணம் அல்ல, கவனமாக மட்டும் இருந்தால் - நீங்கள் இயல்பாகவே உள்ளுணர்வு கொண்டவராக இருப்பீர்கள்.

நமக்குத் தேவைப்படுவது கவனம்தான். மனிதரின் கவனத்தால், பிரபஞ்சத்தில் எந்தக் கதவையும் திறக்க முடியும்.

பெரும்பாலான மக்களின் உள்ளுணர்வானது, மின்னல் மின்னிய பிறகு கேட்பதாகத் தோன்றும் இடி முழக்கம் போலிருக்கும். அதாவது, விஷயங்கள் முடிந்தபிறகு அவர்களுக்கு உள்ளுணர்வு தோன்றுகிறது. அந்த உள்ளுணர்வு பயனற்றது, ஏனென்றால் அது எதற்கும் உதவப்போவதில்லை. அது உங்கள் காரணரீதியான சிந்தனையை பலவீனமாக்கத்தான் போகிறது. காரணரீதியான வழிமுறை மூலம் வாழ்வின் நுட்பமான சிக்கலை நீங்கள் புரிந்துகொள்ள முயற்சித்தால், உங்களுக்கு பித்துப்பிடிப்பது தவிர்க்க இயலாதது. பெரும்பாலான மக்கள் ஒருபோதும் தங்களை அந்த அளவுக்கு உட்படுத்திக் கொள்வதில்லை. அவர்களுடைய காரண அறிவானது, நான்கு படிகளைக் கடந்த பிறகு வேறு எங்கேயோ சென்றுவிடும்.

ஒரு இலை ஏன் பச்சையாக இருக்கிறது, மற்றொரு இலை ஏன் மஞ்சளாக மாறுகிறது - இதற்குக் காரணரீதியான வழியில் நீங்கள் விடைதேடினால், ஒரு பத்து இலட்சம் படிகள் உண்டு.

இதையெல்லாம் தர்க்கரீதியாக நீங்கள் புரிந்துகொள்ள முயற்சித்தால், உங்களுக்கு பித்துப்பிடிப்பதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் நீங்கள் கவனமாக, எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தால், அனுபவரீதியாக அதை நீங்கள் அறிகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அதனை உள்வாங்கியிருக்கிறீர்கள். இதுதான் மனித கவனத்தின் ஆற்றல்.

உங்களுக்குப் போதிய கவனம் இருந்தால், விழிப்புணர்வுடன் இருப்பது உங்களுக்கு இயற்கையாகவே வரும். நீங்கள் விழிப்புணர்வானால், உங்கள் உடலமைப்பின் உயிரி இரசாயன கணக்கீட்டை நீங்களே அமைக்கமுடியும். உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் நலனுக்காகவும் அது பயனளிக்கும் விதத்தில், நீங்கள் தாக்கத்தினை ஏற்படுத்துவீர்கள். இது உள்ளுணர்வு குறித்தது மட்டுமல்ல. உங்களது உயிரி இரசாயன அமைப்பை எப்படி நிர்வகிப்பது என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்களைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களிலும் நீங்கள் தாக்கத்தினை ஏற்படுத்தமுடியும்.

கவனம்!

கருநாகம் போன்ற விஷ ஜந்துக்கள் உங்களுக்குள் நிகழும் உயிரி இரசாயன செயல்பாடுகளை உணரும் திறனுள்ளவையாக இருக்கின்றன. வெறுமே கூர்மையான கவனம் செலுத்துவதனாலேயே, நமக்குள் நிகழ்கின்ற அடிப்படையான உயிர் செயல்முறையை அவைகளால் பகுத்துணர முடிகிறது. அவைகள் உயிர் பிழைத்திருப்பது எப்போதும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதால், அவைகள் குறிப்பிட்ட அளவு கூர்மையான கவனத்துடன் இருக்கின்றன. நவீன சமுதாயங்களில், பிழைத்திருப்போமா என்ற கேள்வியே எழுவதில்லை, அது ஒருவிதமான உத்தரவாதத்தில் இருக்கிறது, அதனால் நமது கவனத்தின் அளவு குறைந்துவிட்டதுடன், நமது எண்ணத்தின் செயல்பாடு பித்துப்பிடிக்கும் அளவுக்கு அதிகமாகிவிட்டது.

நமக்குத் தேவைப்படுவது கவனம்தான். மனிதரின் கவனத்தால், பிரபஞ்சத்தில் எந்தக் கதவையும் திறக்க முடியும். ஆனால் தீர்மானம் செய்தலிலிருந்து, கவனம் விடுபடவேண்டும். அதாவது, நீங்கள் சேகரித்துள்ள வரம்புக்கு உட்பட்ட தகவலில் இருந்து, உங்களைச் சுற்றியுள்ள அனைத்தைப் பற்றியும் தீர்ப்புகள் வழங்கிக்கொண்டே இருக்கக்கூடாது. ஏனென்றால் எல்லாவற்றையுமே அறிந்திருப்பதாக நீங்கள் நினைத்தாலும்கூட, நீங்கள் சேகரித்துள்ள தகவல் மிகவும் குறைவானது. ஒரு வாழ்நாள் முழுவதும் நீங்கள் கவனம் செலுத்துவதில் செலவழித்தாலும், அப்போதும் நீங்கள் மிகக் குறைவாகவே அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, உயிரி இரசாயன கணக்கீடுகளை நீங்கள் முடிவு செய்கிறீர்கள். அதாவது, உணர்தலின் இயல்பை நீங்கள் நிர்ணயம் செய்கிறீர்கள். ஆனால் இதைப்போன்ற இயந்திரங்களை நம்மால் உருவாக்கமுடியுமா? ஆம், நம்மால் முடியும்.

நமக்காக கணிதங்களைச் செய்து, கதைகள் எழுதி, இசை உருவாக்கக்கூடிய இயந்திரங்களை நம்மால் கட்டமைக்க முடிவதைப்போல், இயற்கையாகவே உள்ளுணர்வு கொண்ட இயந்திரங்களை நம்மால் உருவாக்கமுடியும். ஏற்கனவே, உங்களுடைய ஸ்மார்ட் போன்கள், ஒன்றைவிட மற்றொன்று அதிக உள்ளுணர்வுடையது என்று விளம்பரம் செய்யப்படுகின்றது. உங்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்கு தெரிவதற்கு முன்பே, குதித்தோடி வந்து இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கும் என்று வரிசைப்படுத்துகிறது. ஏனென்றால் நீங்கள் பயன்படுத்தும் விதத்திலிருந்து அது உங்களை ஓரளவுக்குப் புரிந்துகொண்டுள்ளது. சகமனிதர்களை நீங்கள் பகுத்து உணர்வதைப்போல, உங்கள் போன் நீங்கள் யார், எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை உங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதை விட அதிகமாகவே அது அறிந்திருக்கலாம். அது தன்னை உணர்ந்திருக்கவில்லை, ஆனால் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அது நன்றாக பகுத்து உணர்ந்துள்ளது.

உள்ளுணர்வு அல்லது உணர்ச்சியைப் பற்றி மட்டும் பேசுவதைவிட, இதை மிக ஆழமான தன்மையில் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை ஒரு உயிர் செயல்முறையாக பார்க்கவேண்டும், ஏனென்றால் உயிரின் செயல்முறைக்கு, புத்திசாலித்தனம், உள்ளுணர்வு, எண்ணம், இதயத்தின் துடிப்பு, கணைய செயல்பாடு, சிறுநீரக இயக்கம், பித்தப்பை அல்லது மூளையின் இயக்கம் என எந்தப் பாகுபாடும் இல்லை. இது அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரே செயல்முறையாக இருக்கிறது. அந்த விதமாக இதை உள்வாங்குவதுதான் மிகவும் முக்கியம், அப்பொழுதான் நீங்கள் உயிரை அல்லது வாழ்வை முழு அளவில் உணர்வீர்கள்.

இந்த உயிர், வாழ்க்கை குறித்து நீங்கள் வாயடைத்துப்போவதை அதன் பிறகு நீங்கள் பார்ப்பீர்கள். ஏனென்றால் இதைப்போன்ற ஒரு பிரமிப்புக்குரிய செயல்பாட்டை விவரிக்க வார்த்தையே இல்லை. வார்த்தைகள் வருவது ஏனெனில், நீங்கள் மனிதரின் தர்க்க அறிவு என்ற சாவி துவாரத்தின் வழியாக, எல்லாவற்றையும் சின்னச்சின்ன துணுக்குகளாகவே பார்த்தபடி, எல்லாவிதமான வியாக்கியானங்களையும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். வார்த்தை இல்லாதபொழுது, தீர்மானம் இல்லை. தீர்மானம் இல்லாதபொழுது, மரணம் இல்லை. இதுதான் விடுதலையின் வழி.

இயந்திரங்கள் உங்களைப் போன்றே உருவெடுக்கும், உங்களால் செய்யமுடிகின்ற எல்லாவற்றையும் அவற்றால் செய்யவும் முடியும், அனேகமாக உங்களைக்காட்டிலும் சிறப்பாக செய்யமுடியும். ஆனால் அவைகளால் விழிப்புணர்வு மட்டும் அடையமுடியாது. ஒரு இயந்திரத்துக்குள் விழிப்புணர்வை நாங்கள் கட்டமைப்போம் என்று சிலர் கூறுகின்றனர், அது நிகழப்போவதில்லை. விழிப்புணர்வு என்று நீங்கள் எதை அழைக்கிறீர்களோ, அதுதான் இந்த வாழ்க்கையின், உயிரின் சாராம்சமாக இருக்கிறது. விவரிக்கமுடியாத அந்த சக்திதான் எல்லாவற்றையும் நிகழச்செய்கிறது. அது ஒரு இயந்திரத்தில் நிகழமுடியாது.

உள்ளுணர்வை வளர்க்கும் யோகப்பயிற்சி

நாம் கற்றுக்கொடுக்கும் எளிமையான யோகப்பயிற்சியானது, காரண அறிவு மற்றும் உள்ளுணர்வு இரண்டையும் மேம்படுத்துகிறது. நான் தர்க்கரீதியான நபர்தான், ஆனால் எதையும் தர்க்கரீதியாக செய்வதில்லை; எனக்கு எல்லாமே உள்ளுணர்வுதான். என் வாழ்க்கையில் நான் கையிலெடுத்திருக்கும் செயல்பாடுகளின் அளவும், பன்முனைத்தன்மையும், மக்களை பித்துப்பிடிக்கச் செய்துவிடும். ஆனால் நான் அவைகளை காரணரீதியாக அணுகாத காரணத்தால், எல்லாவற்றையும் உள்ளுணர்வின்படி அணுகுவதால், பெரிதாக எந்த பிரயத்தனமும் இல்லாமல் அதன்போக்கில் நிகழ்கிறது.

உள்ளுணர்வானது, தகவல் இல்லாமல் செயல்படாது. உங்களுக்கு கட்டாயமாக தகவல்கள் தேவை, ஆனால் கணக்கீடுகள் இல்லை. ஒவ்வொரு கணமும் தகவல்கள் சேகரமாகிறது, ஏனெனில் ஐம்புலன்களும் தொடர்ச்சியாக தகவல்களை சேகரித்துக்கொண்டே இருக்கின்றன. மக்கள் என்னிடத்தில் ஆன்மீகம் மட்டுமல்லாமல், பலவிதமான விஷயங்களையும் கொண்டு வருகின்றனர். ஒருவர் கட்டிடம் எழுப்புகையில் பொறியியல் நுட்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் நம்மிடம் வருகிறார். யாரோ ஒருவர் இயந்திரத்தை நிர்மாணிப்பதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், நம்மிடம் வருகிறார். இதில் நாம் பயிற்சி பெற்றிருக்கிறோம் என்பதனால் அல்ல. அது என்னவென்றால், இந்தக் கட்டிடத்தை நீங்கள் பார்க்கையில், விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வு இல்லாமலோ, உங்கள் கண்கள் அதனை முழு அளவில் ஒரு படமாக பதிவு செய்திருக்கிறது. உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தெளிவு இருந்தால், நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் அதை மீண்டும் எடுத்து பார்த்துக்கொள்ள முடியும்.

இன்றைக்கு நாம் கார் ஓட்டுகையில், குறிப்பாக இமயமலைத் தொடரில், சாலையின் ஒவ்வொரு வளைவும், ஒவ்வொரு பாறையும் மற்றும் ஒவ்வொரு பெரிய மரமும் எங்கிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நான் வண்டி ஓட்டும்போது, அடுத்து வரவிருக்கும் வளைவு ஏற்கனவே என் மனதில் படமாக இருக்கும். நான் ஏன் அதிவேகமாக வண்டி ஓட்டுகிறேன் என்று மக்களுக்குப் புரிவதில்லை. மற்ற அனைவரும் மணிக்கு இருபத்து ஐந்திலிருந்து முப்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது, நான் காற்றாகப் பறப்பது ஏனென்றால், அடுத்த இரண்டு மூன்று வளைவுகளும் நேரில் தென்படுவதற்கு முன்னதாகவே என் மனக்கண்ணால் பார்த்து தயாராக இருக்கிறேன்.

சாலை அடுத்து எப்படி இருக்குமோ என்று நான் சிந்திக்கக்கூட தேவையில்லை, ஏனென்றால் சாலையின் வரைபடம் தெள்ளத் தெளிவாக என் மனதில் இருக்கிறது. சாலையின் வாகனப் போக்குவரத்தை மட்டும்தான் நான் கவனிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொருவருடைய மனதிலும் அது அப்படித்தான் இருக்கிறது, ஆனால் அவர்கள் மனதை அதிகமான குழப்பத்தில் வைத்திருப்பதால், அவர்களுக்குத் தேவைப்படும்பொழுது அந்தத் தகவலை மீண்டும் எடுக்கமுடிவதில்லை.

நீங்கள் யோகப்பயிற்சியைச் செய்துவரும்பொழுது, உங்கள் விழிப்புணர்வோடு நீங்கள் தொடர்பில் இருந்தால், மனம் விடுபட்ட நிலையிலேயே இருக்கிறது. அது எந்த அளவுக்கு விடுபடுகிறது என்றால், நீங்கள் நுகர்ந்த, சுவைத்த, ஸ்பரிசித்த, செவிமடுத்த, கண்ணுற்ற ஒவ்வொன்றும் அங்கே நிலையாக இருக்கிறது. நீங்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டியதில்லை. மிக இயல்பாகவே அவை அனைத்தும் அங்கேயே இருக்கிறது. வேண்டும்போது திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஞாபகம் என்பது நினைவில் வைத்திருப்பதைக் குறித்தது அல்ல. ஞாபகம் என்பது தகவலைத் திரும்பக் கொண்டுவரும் உங்களது திறனைக் குறித்தது.