ஞானோதயம் அடைய என்னென்ன செய்ய வேண்டும்?
சத்குரு, ஞானமடைவது என்பது ஒரு தொடர் முயற்சியா? அல்லது ஒரு நிலையா?
Subscribe
சத்குரு:
ஞானோதயம் என்பது படிப்படியாக நடக்கிற தன்மை அல்ல. அது வாயிற்படி தாண்டுவதைப்போல ஒரே படிதான். ஆனால் வாயிற்படி வருவதற்கு எத்தனையோ படிகள் இருக்கலாம். அதனை அடைவதற்கான வளர்ச்சி படிப்படியாக நடக்கலாம். ஆனால் ஞானோதயம் என்பது படிப்படியாக நிகழ்வதில்லை. உதாரணமாக ஒரு மாமரம் வளர்ப்பதற்கு பல படிகள் உள்ளன. ஆனால் பழத்தை எடுத்து சுவைப்பது என்பது ஒரேபடிதானே? அதனை வாயில் வைக்கும்போதுதான் இனிப்பு என்பதை உணர முடியும். உங்களுடைய மாமரம்தான் உலகிலேயே முதலாவது மரம் என்று வைத்துக் கொள்வோம். அதுவரை நீங்கள் மாம்பழம் சுவைத்ததே கிடையாது. அது உங்கள் நாவில் விழுகிற வரைக்கும் மாம்பழம் என்பதே கிடையாது என்றாலும் மாமரம் வளர்ப்பதற்கு அநேக படிகள் இருக்கிறது.
இதேவிதமாக, தன்னை உணருதல் என்ற தன்மைக்கு எத்தனையோ படிகள் இருக்கலாம். ஆனால் தன்னை உணர்வது என்பது ஒரே படிதான் அல்லது அதற்கான படியே கிடையாது என்று கூறலாம். உள்நோக்கிய பயணம் என்பது படிகளற்றது. நம்முடைய இருப்பு உள்ளேதான் என்றாலும் வெளியில் எங்கோ இருப்பதாக ஒரு பிரமையில் இருந்து கொண்டிருக்கிறோம். இப்போது நீங்கள் அங்கே அமர்ந்திருப்பதாகவும், சத்குரு இங்கே இருப்பதாகவும் ஒரு பிரமையில் இருக்கிறீர்கள். ஆனால் நான் இருப்பது உங்களுக்குள்தான். ஆகவே, அவர் இங்கே அமர்ந்திருக்கிறார் என்பது பிரமைதானே? இங்கே நீங்கள் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது அனைத்தும் உங்களுக்குள்ளேதானே நிகழ்ந்திருக்கிறது? இதேவிதமாக உள்நோக்கிப் போவது என்பது ஒரு படி அல்ல. அங்கேதான் இருக்கிறோம். உள்ளேயே இருப்பவரை மேலும் உள்ளே அனுப்புவதென்பது கிடையாது. ஏற்கனவே நீங்கள் உள்ளேதான் இருக்கிறீர்கள்.
அமெரிக்க தொலைக்காட்சிக்கு என்னை நேர்முகம் செய்த பெண் என்னைக் கண்டு ஆச்சரியத்துடன் கேட்டார், "நான் 30 வயது முதல் எத்தனை முயற்சி செய்தபோதிலும் ஏதும் நிகழவில்லை. நீங்கள் கல்லின் மீது அமர்ந்தவுடன் உங்களுக்கு மட்டும் எப்படி இது நிகழ்ந்தது? இது எப்படி நியாயமாகும்?" (சிரிக்கிறார்) 30 வருடம் என்றில்லை. 300 வருடம் கழிந்தாலும் இது நிகழாது. ஏனென்றால், அதற்கு என்ன செய்யத் தேவையோ, அதைச் செய்தால் மட்டுமே இது மலரும். மற்றபடி தேவையற்ற செயல்கள் எவ்வளவு செய்தாலும் அது மலராது. நமக்கு வீட்டில் மாமரம் வளர்க்கும் ஆசை ஏற்பட்டுவிட்டால், நாம் மாம்பழம், மாம்பழம் என்று கூறிக்கொண்டே இருந்தால், அது நிறைவேறிவிடாது. அதற்குத் தேவையான உரம், மண், தண்ணீர், சூரிய வெளிச்சம் இவற்றில் கவனம் வைத்து, செயல் நடத்தினோம். மாம்பழம் பற்றிய நினைவேயில்லை. ஒருநாள் மாம்பழம் கீழே விழுந்தது. சரி என்று வாயில் வைத்துப் பார்த்தோம். இனிப்பு வந்துவிட்டது. இப்படித்தானே நடக்க முடியும்? இனிமை வேண்டும் என்றால், நம் வாழ்க்கையில் தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.
நீங்கள் படைத்தவனை உணர விரும்பி மேலே, கீழே என்று பார்த்தால் கழுத்துதான் வலிக்கும். நம்முடைய எந்த ஒரு அனுபவமும் நமக்குள்ளே தானே நிகழ்கிறது? எதையேனும் உணரும் பொருட்டு இந்த உடலை விட்டு, உடல் தாண்டி எங்காவது சென்றீர்களா? இந்த உடல் என்கின்ற சிறைக்குள்தானே நாம் இருக்கிறோம், இங்கேயும் படைத்தல் நிகழ்கிறது என்றால், படைத்தவன் உள்ளேதான் இருக்க வேண்டும். இந்த உடற்சிறைக்குள் நம்முடன் அவனும் சிக்கிப் போய்விட்டான். நீங்கள் தூங்கிவிட்டாலும், உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நடந்தவண்ணம் இருக்கின்றதென்றால், உள்ளேயிருக்கும் படைத்தவன்தானே செயல்படுகிறான். அவனே தூங்கிவிட்டால், நீங்கள் இருக்க முடியுமா? ஆகவே, இந்தவிதமாக உள்ளிருந்தே செயல்பட்டிருக்கின்றபோது, இதனை உணர்தல் மிகவும் சுலபம்.
நீங்களும், அவனும் ஒரே எல்லைக்குள் கூட்டாளியாக இருக்கிறீர்கள். 'நீங்கள்' என்று அடையாளப்படுத்தி உள்ளவைகளையெல்லாம் மட்டுப்படுத்தி வைத்திருந்தால், மிகவும் எளிதாக அவனை கண்டு கொள்ள முடியும். நீங்கள் உங்களையே பெரிதுபடுத்திவிட்டால், தேடுதல் மிகவும் அதிகமாகிவிடும். சிறியதாக இருந்தால், எந்த முயற்சியும் தேவையில்லை. உடல், உணர்வு, மனம், சக்தி ஆகியவைகளைச் சரியான சமநிலைக்குக் கொண்டு வந்தால், நாம் படைத்தவனிடமிருந்து விலகிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. அண்ட வெளியில் எங்கும் தேடத் தேவையில்லாதவாறு இங்கேயே மூலமானவன் இருக்கிறான்.