சுதந்திரம் என்றால், "நினைத்ததைச் செய்வது, ஜாலியாக இருப்பது" இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்திருப்போம். உண்மையில் எது சுதந்திரம்? சத்குருவின் பார்வையில் உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? தெரிந்துகொள்ள இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு:

நாம் எப்போதுமே சுதந்திரம் என்றால் “நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்வது” என்று தான் நினைத்துக் கொள்கிறோம். உங்களுடைய நிர்பந்தங்களுக்கு நீங்கள் சுதந்திரம் என்று பெயர் கொடுத்துள்ளீர்கள், இல்லையா? மிகவும் சுவாரஸ்யமான டிவி சீரியலை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் உங்கள் மகன் மற்றொரு சேனலுக்கு மாற்றினால்... “சே, இந்த வீட்டுல ஒரு டிவி சீரியல் பாக்க கூட சுதந்திரம் இல்லையா,” என்று ஆதங்கப்படுவீர்கள், அப்படித்தானே?

உண்மையிலிருந்து விலகுகிறீர்கள் என்றால் உங்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களால் அந்த டிவி சீரியலை பார்க்காமல் இருக்க முடியாது, ஆனால் அதை பார்ப்பதுதான் என்னுடைய சுதந்திரம் என்று கூறுகிறீர்கள். இப்படி உங்கள் வாழ்க்கையில் உள்ள நிர்பந்தங்களுக்கு சுதந்திரம் என்று பெயர் கொடுத்துள்ளீர்கள்.

நீங்கள் செய்ய நினைப்பதையெல்லாம் செய்வது பயங்கரமான ஒரு நிர்பந்தம்தான். நிர்பந்தங்களை நீங்கள் சுதந்திரம் என்று அழைக்க முடியுமா?

உங்களுக்கு பிடித்தது அல்லது பிடிக்காதது என்ற வரையறைக்குள் உள்ளவைகளை உங்கள் சுதந்திரம் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். அது அப்படி அல்ல. விருப்பு வெறுப்புதான் பந்தப்படுவதன் தொடக்கம். உங்கள் விருப்பு வெறுப்புதான் வாழ்வை உள்ளது உள்ளபடியே நீங்கள் உணர்வதிலிருந்து வேலியிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் உங்கள் குடும்பத்துடனோ அல்லது வேலையிலோ கூட, உங்களுடைய விருப்பு வெறுப்புகள் உங்களை முட்டாள்தனமான செயல்களை செய்ய வைக்கிறதுதானே?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்கு யாரோ ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அந்த மனிதர் அற்புதமான ஒன்றை செய்தாலும் உங்களால் அதனை பார்க்க இயலாது. நீங்கள் ஒருவரை விரும்பினால் அவர் அற்பமான செயலை செய்தாலுமே உங்களால் பார்க்க முடியாது. யாரோ ஒருவரை நீங்கள் விரும்பினால் நீங்கள் மிகைப்படுத்துவீர்கள், ஒருவரை நீங்கள் வெறுத்தாலும் மிகைப்படுத்துவீர்கள். எனவே மிகைப்படுத்துதல் என்றால் விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வில்லாமலோ உண்மையிலிருந்து நீங்கள் விலகுகிறீர்கள் என்று அர்த்தம்.

உண்மையிலிருந்து விலகுகிறீர்கள் என்றால் உங்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்று அர்த்தம். தனக்கு எதிராக வேலை செய்யும் ஒருவருக்கு எதிரியே தேவையில்லை. இதைத்தான் சுய உதவி என்கிறார்களோ என்னவோ?

நீங்கள் எப்போதுமே தன்னிச்சையான உயிராக இருக்கின்றீர்கள், இதுதான் வாழ்வின் அழகு. எனவே உங்கள் விருப்புகளும் வெறுப்புகளும் உங்கள் வேலிகளா அல்லது சுதந்திரமா? உங்களுக்கு பிடித்ததை மட்டுமே நீங்கள் செய்வதென்பது உங்கள் சுதந்திரமா அல்லது பிணைப்பா? சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை நான்
செய்வேன் என்பதுதானே சுதந்திரம்?

உங்களின் தவறான புரிதலால், விபரீதமான செயல்களை செய்வதை நீங்கள் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது பாதுகாப்பானது அல்ல. இது உண்மையானதுமல்ல. இது மீசை முளைக்கும் வாலிபத்தில் ஏற்படும் சுதந்திரம் பற்றிய உணர்வு அவ்வளவுதான். நீங்கள் வாலிபப்பருவத்தில் இருக்கும் போது விபரீதமான செயல்களை செய்வது சுதந்திரம் என்று நினைக்கிறீர்கள்.

அதுவே நீங்கள் சற்று பெரியவர் ஆகி வாழ்வை சற்று ஆழமாகப் பார்க்கும்போது, சுதந்திரத்தை பற்றி நீங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை என்பது புரியும். சுதந்திரம் என்றால் நீங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. நீங்கள் இங்கு சும்மா அமர்ந்திருப்பதே சுதந்திரம்தான்.

ஏதாவது செயல் தேவைப்படும்போது நீங்கள் துள்ளிக் குதித்து வேண்டியவற்றை செய்யலாம். எதுவும் தேவையற்றபோது நீங்கள் சும்மா அமர்ந்திருக்கலாம். இதுதான் சுதந்திரம். நான் எந்த செயலுமே செய்யத் தேவையில்லை, இதுதான் சுதந்திரம், அப்படித்தானே?

உங்களுக்கு விண்ணிற்கு செல்ல வேண்டும். இங்கு அமர்ந்து கொண்டு “வானம், வானம், வானம்“ என்று ஜபம் செய்தால் அது உதவுமா?

என் சொந்தத் தேவைகள் என்னை கட்டாயப்படுத்துகின்றன, “நான் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்,” இது சுதந்திரம் அல்ல. எனக்கு எதுவும் செய்யத் தேவையில்லை ஆனால் தேவை ஏற்படும் போது என்னால் என்னை முழுமையாக ஈடுபடுத்தி எந்த ஒரு காரியம் ஆனாலும் செய்ய முடியும்” என்றால் அதுதான் சுதந்திரம்.

சுதந்திரத்தை பற்றி பேசும்போது நான் ஒன்றைப் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது... நான் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன், அவர், “நான் பலகாலம் பறவையைப் போல் சுதந்திரமாக இருந்தேன், ஆனால் இப்போது...” என்று இழுத்தார்.

நாம் தரையில் சிக்கிப் போயிருப்பதாலோ என்னவோ பல பேருக்கு பறக்கும் பறவை சுதந்திரமானதாகத்தான் தெரிகிறது. ஒரு பறவையின் முகத்தைப் பார்த்தால் அது சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பது போல் தெரிகிறதா என்ன? அது தன் வேலையை பறந்துக் கொண்டே செய்கிறது, நீங்கள் உங்கள் வேலையை நடந்து கொண்டே செய்கிறீர்கள். நீங்கள்தான் பறவைகள் முழு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறீர்கள். பறப்பதால் ஒருவர் சுதந்திர உணர்வை அடைய முடியும் என்றால் வானில் பறக்கும் பைலட்டுகள் எல்லாம் முழு சுதந்திரத்துடன் இருக்க வேண்டும். ஆனால் நிதர்சனத்தில் சுதந்திரம் அப்படி அல்ல.

சுதந்திரமோ அல்லது விடுதலையோ நீங்கள் இதுவரையில் அறிந்திடாத ஒன்று. நீங்கள் கற்பனை செய்தால் ஒரு பறவையாக மாறுவதைத் தான் உங்களால் கற்பனை செய்ய முடியும். ஒரு மனிதன் பறவை ஆவது முன்னேற்றம் அல்ல. உங்களை நீங்களே படியிறக்கம் செய்வது போன்றது. எனவே உங்கள் அனுபவத்தில் இல்லாததைப் பற்றி நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். உங்களை தற்சமயம் எது பிணைத்து வைத்துள்ளதோ அதன் மேல் கவனம் செலுத்துங்கள்.

உங்களுக்கு விண்ணிற்கு செல்ல வேண்டும். இங்கு அமர்ந்து கொண்டு “வானம், வானம், வானம்“ என்று ஜபம் செய்தால் அது உதவுமா? நிச்சயமாக இல்லை. உங்களை பிணைத்துள்ள கயிறுகளை நீங்கள் அறுத்தால்தான் பயணம் செய்ய முடியும் என்பதனை நீங்கள் புரிந்துக் கொண்டால்தான் உங்களை நீங்களே அந்த பிணைப்பில் இருந்து விடுவித்துக் கொள்வீர்கள்.

எது உங்கள் விழிப்புணர்வில் உள்ளதோ அதிலிருந்து நீங்கள் விடுதலை அடைவீர்கள்...
உங்கள் உடல், மனம், உணர்வு ஆகிய எல்லாவற்றிலும் தடைகள் உள்ளன. அது இல்லாதது போல் நீங்கள் பாவனை செய்ய வேண்டாம். அதனை தடுக்க முயற்சி செய்யாதீர்கள், அதனை வேருடன் புதைக்காதீர்கள், அதனுடன் சண்டையிடாதீர்கள், அதன் மீது விழிப்புணர்வு கொண்டு வாருங்கள். உங்கள் விழிப்புணர்வு மென்மேலும் கூர்மையடைய அதிலிருந்து நீங்கள் விடுதலை அடைவதை காண முடியும்.

தேவையான தீவிரம் நமக்குள் உருவாகாத பட்சத்தில் நமக்குள் விழிப்புணர்வு ஏற்படாது. எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருப்பதற்கு உங்கள் உயிர்சக்தி தீவிரத்துடன் இருக்க வேண்டும். உங்கள் சக்தி நிலையை எப்போதுமே தீவிரமாக வைத்துக் கொள்ள பல ஆன்மீக செயல்முறைகள் உள்ளன. இதன் மூலம் உங்கள் விழிப்புணர்விற்கு நீங்கள் திறனளிக்க முடியும்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், இங்கு ஒரு 20 வால்ட் பல்ப் எரிந்தால் ஏதோ அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சிலர் மட்டும் உங்கள் பார்வையில் படுவார்கள். அதனை 50 வால்ட் ஆக்கிவிட்டால் நம் பார்வை இன்னும் சற்று தெளிவடையும். அதுவே 150 வால்ட்டேஜ் ஆக்கினால் நம் பார்வை வட்டம் விரிவடைந்து பலரைக் காண இயலும். விழிப்புணர்வும் இப்படித்தான்.

ஒருவேளை உங்களால் இங்கிருப்பவர்களில் ஒரு 20 பேரை மட்டுமே காண முடிகிறது, மற்றவர்கள் உங்கள் கண்ணில் தென்பட வில்லை என்றால் மற்றவர்கள் மேல் தட்டுத் தடுமாறி கீழே விழுவீர்கள். பெருங்கூட்டத்தில் யாரையும் தொடாமல் உங்கள் பாதையில் உங்களால் தெளிவாக செல்ல முடியும் என்றால் அது விழிப்புணர்வு.

வெளிச்சத்தில் நீங்கள் தெளிவாக காணும் பாதையை போன்றே, வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்த்தால், வாழ்க்கையில் எதிலும் சிக்கிப் போகாமல், தட்டுத் தடுமாறாமல் கடந்து போவீர்கள். நீங்கள் தெளிவாகப்பார்க்க முடியவில்லை என்றால் வழியெல்லாம் தடுமாற்றம்தான். நீங்கள் தெளிவாகப் பார்த்தால் எதிலாவது தடுமாறுவீர்களா என்ன? உங்கள் புத்திசாலித்தனம் உங்களை கவனித்துக் கொள்ளும்.