எது அழகு?
நீ நடந்தால் நடையழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு, நீ பேசும் தமிழகு என்பதெல்லாம் காதலில் விழுந்தவர்க்குத்தான் சாத்தியம். உண்மையில் எது அழகு? சத்குருவின் பார்வையில்...
நீ நடந்தால் நடையழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு, நீ பேசும் தமிழகு என்பதெல்லாம் காதலில் விழுந்தவர்க்குத்தான் சாத்தியம். உண்மையில் எது அழகு? சத்குருவின் பார்வையில்...
அழகு என்பது எங்கே இருக்கிறது? எந்த உருவம் அழகானது? எந்த உருவம் அழகற்றது? என்ற கேள்வி உங்களுள் எழலாம்.
Subscribe
உருவம், ஒரு உருவமாகவே இருக்கிறது. அதில் அழகும் இல்லை, அசிங்கமும் இல்லை. நீங்கள் ஆனந்தமான நிலையில் இருக்கும்போது எல்லாமே அழகுதான். நீங்கள் உங்களுக்குள் ஆனந்தம் இல்லாமல் இருக்கும்போது எதுவுமே அழகில்லை. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்கு அடிமையாக உங்கள் மனம் இருப்பதால், குறிப்பிட்டவிதமான உருவங்கள் அழகாகவும் மற்றவை அழகற்றும் தெரிகிறது.
உங்கள் குழந்தை, உங்களுக்கு அழகாகத் தெரிகிறது. ஆனால் மற்றவர்களுக்கோ அப்படியில்லை. உங்கள் கடவுள், உங்களுக்கு மிக அழகானவர், வேறு கலாச்சாரத்திலுள்ள மனிதனுக்கு, உங்கள் கடவுள் அசிங்கமானவராக்த் தெரியலாம். எனவே அழகு என்பது கலாச்சாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. இதை மனதின் கட்டுப்பாடு என்றும் சொல்லலாம்.
சின்னஞ்சிறு புல்லை எடுத்துப் பார்த்தாலும், அந்தப் புல்லினை உருவாக்கிய சக்தி எதுவாயிருந்தாலும் சரி, அந்தப் புல் மிகுந்த கவனத்தோடு உருவாக்கப்பட்டதை காணமுடியும். படைப்பினை நிகழ்த்தும் சக்தி, ஒரு புல்லைக்கூட எந்த அளவிற்கு ஈடுபாட்டோடும் கவனத்தோடும் உருவாக்கியிருக்கிறது, பாருங்கள்!
அதே அளவு ஈடுபாட்டுடனும் கவனத்தோடும்தான் நீங்களும் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். அதேவிதமான ஈடுபாட்டுடன் இருந்தால் நீங்கள் எல்லாவற்றையும் அழகாகத்தான் பார்ப்பீர்கள், எதுவும் அசிங்கமாகத் தெரியாது.
ஈடுபாடு இல்லாததால்தான் அது நமக்கு அசிங்கமாய்த் தெரிகிறது. நம் அனுபவத்தில் எதனோடு முழுமையாக ஈடுபட்டிருக்கிறோமோ அது மிகவும் அழகாக இருக்கிறது. அடிப்படையாக நீங்கள் ஓர் ஆனந்தமான மனிதராக இருந்தால் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்.