தியானலிங்கத்திற்காக சத்குருவுடன் கர்ம யாத்திரை
சத்குருவுடன் சேர்ந்து, அந்த இரண்டு பேரில் ஒருவர் பிரதிஷ்டையில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என்ன காரணம்; பிரதிஷ்டைக்காக மேற்கொண்ட கர்ம யாத்திரையில் நிகழ்ந்த அதிசயங்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கமாக எடுத்துரைக்கிறது இந்த வாரப்பகுதி...
தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 12
சத்குருவுடன் சேர்ந்து, அந்த இரண்டு பேரில் ஒருவர் பிரதிஷ்டையில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என்ன காரணம்; பிரதிஷ்டைக்காக மேற்கொண்ட கர்ம யாத்திரையில் நிகழ்ந்த அதிசயங்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கமாக எடுத்துரைக்கிறது இந்த வாரப்பகுதி...
பட்டுக்கோட்டை பிரபாகர்:
தியானலிங்க பிரதிஷ்டைக்காக அமைக்கப்பட்ட முக்கோணச் சக்தி வியூகத்தில், ஒரு முனை... சத்குரு. மற்ற இரண்டு முனைகளில் ஒருவர் சத்குருவின் இல்லத்தரசி விஜி. மற்றொரு முனையாகத் தேர்வானவர் பாரதி அவர்கள்.
இந்த இருவருமே வெவ்வேறு தன்மைகொண்டவர்கள். இரு துருவங்களைப் போன்றவர்கள். ஒருவர் அன்புமயமானவர். மற்றொருவர் தர்க்க அறிவு சார்ந்தவர். எதிரெதிர் குணங்கள் கொண்ட இவர்களை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தபோது, எல்லாத் தன்மைகளும் கொண்ட ஓர் அற்புதமான உயிரைப் போல அவர்கள் அமைந்தார்கள்.
Subscribe
இந்த இருவரையும் சக்தி நிலைகளில் ஒருவித உறுதிக்குக் கொண்டுவந்து தயார்ப்படுத்த ஒன்றரை ஆண்டுகளாகும் என்று சத்குரு நினைத்திருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் சில வாரங்களிலேயே தயார் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
தியானலிங்கப் பிரதிஷ்டைக்கு சக்திபூர்வமாக அர்ப்பணித்துக் கொள்ள அவர்கள் இருவருக்கும் சில கர்மவினைகளின் கட்டமைப்புகள் தடையாக இருந்தன. அந்த கர்மவினைகள் அவர்களை ஒரு
எல்லைக்கு மேல் போகவிடாமல் தடுத்தன. ஆகவே, ஒரு கர்ம யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. மூன்று பேரின் கடந்த பிறவிகளில் அங்கம் வகித்த பல இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.
ஒரிசா, கடப்பா போன்ற இடங்களுக்கு அவர்கள் மூவருமே இந்தப் பிறவியில் சென்றதே இல்லை. ஆனால் அந்தந்த இடங்களை நெருங்கும் முன்பே, சத்குருவால் முன்கூட்டி அந்த இடங்களின் அமைப்பை நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. நிகழ்ந்த சில சம்பவங்களும் மனதில் தவழ்ந்தன. 370 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள்கூட நினைவடுக்குகளில் கிளறப்பட்டன.
ஓர் ஊருக்குள் நுழையும் முன்பாகவே, அந்த ஊருக்குள் இந்த மாதிரி அமைப்பில் சில ஆலயங்கள் இருக்கும், சில பழைய வீடுகள் இருக்கும் என்று துல்லியமாக சத்குரு சொல்வார். ஊருக்குள் சென்று பார்த்தால், அவர் சொன்னது போலவே கொஞ்சமும் மாறாமல் அப்படியப்படியே இருக்கும். முன் ஜென்மங்களின் நினைவுகளின் அதிர்வுகள் அவரை மட்டுமல்ல, அவருடன் பயணம் செய்த மற்ற இருவரையும்கூட சரியாக வழி நடத்தின. ஆறு நாட்களில் 5,200 கிலோ மீட்டர் தூரம் காரிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள்.
கர்ம யாத்திரை முடிந்து திரும்பிய பிறகு, அந்த ஆன்மீகப் பயணம் மற்ற இருவருக்கும் அதிகமான மனோபலத்தையும் சக்தியையும் வழங்கியிருந்தது. பிரதிஷ்டைக்கான முன்னேற்பாடுகள் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் முடிந்திருந்த சமயத்தில்தான் அந்த மிகப் பெரிய, எதிர்பாராத தடை நிகழ்ந்தது.
சத்குருவின் மனைவி விஜி மஹாசமாதி அடைந்தார். ஆத்ம சாதனையின் உச்சம் என்று மஹாசமாதி அடைவதைச் சொல்கிறார்கள். மிகப் பெரிய யோகிகளால்தான் அது சாத்தியமாகி இருக்கிறது. இத்தனைக்கும் விஜி நிபுணத்துவம் வாய்ந்த ஒரு யோகி அல்ல. ஆனாலும் ஆத்ம சாதனைகள் செய்வதில் தீவிரமான எண்ணங்கள் கொண்டிருந்தார்.
அன்று ஜனவரி 23ம் தேதி, பௌர்ணமி தினம். தைப்பூச நாள். அன்று கிரகங்கள் வழக்கத்துக்கு மாறாக மிக அதிசயமானதொரு நிகழ்வாக ஒரு வினாடியில் ஒன்று சேர்ந்து அறுகோண நட்சத்திரத்தை உருவாக்கின. அதே நாளில், ஜுபிடர், யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் 200 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேர்கோட்டில் சேர்ந்தன. அந்த நாளை பல ஞானிகள் தங்கள் மஹாசமாதிக்கான நாளாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். அதே நாளை விஜியும் தேர்வு செய்திருந்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
இன்னும் ஒரே ஒரு வாரம் அவர் உயிருடன் இருந்திருந்தால், தியானலிங்கத்தின் பிரதிஷ்டை நிகழ்ந்திருக்கும். அந்தத் திருப்பம் காரணமாக பிரதிஷ்டைக்கான பணிகள் துவங்கிய இடத்துக்கே வந்துவிட்டன. ஓர் ஓட்டப்பந்தய வீரன் வெற்றி இலக்கைத் தொட இரண்டடி தூரமே இருக்கும்போது தவறி விழுந்தது போன்ற நிலை.
மீண்டும் ஓட்டத்தை அதன் ஆரம்பக் கோட்டிலிருந்து துவங்க வேண்டிய சூழ்நிலை. மீண்டும் பிரதிஷ்டைக்குத் தயார் நிலைக்கு வர... அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆயிற்று. இப்போது முக்கோணச் சக்திநிலையின் இரண்டு முனைகளுக்கும் சேர்த்து சத்குருவே செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்னொரு நபரை விஜி பங்கு வகித்த இடத்துக்குத் தயார்செய்வதற்குச் சிரமமாக இருந்ததால் அந்தப் பங்கையும் சத்குருவே ஏற்றுக்கொண்டு செயல்படத் தீர்மானித்தார். ஆனால் அப்படிச் செய்வது மிகப் பெரிய சவாலான காரியம் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
அடுத்தவாரம்...
விஜி அவர்களின் மஹாசமாதிக்குப் பிறகு, பிரதிஷ்டையில் அவரது பங்கையும் தானே மேற்கொண்ட சத்குருவின் உடல்நிலை என்னவானது? என்னென்ன நோய்களுக்கு அவர் ஆளானார்? பிரதிஷ்டையில் ஒருவேளை உயிர் துறந்தால், செய்ய வேண்டிவையாக சத்குரு செய்து வைத்த ஏற்பாடுகள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காணக் காத்திருங்கள், அடுத்த வாரம் வரை!
இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை