தியானலிங்கத்தில் சக்திநிலையை சத்குரு எப்படி பூட்டினார்?
விஜி அவர்கள் பிரதிஷ்டையின்போது சூட்சுமமாக அமர்ந்திருந்தாரா? தியானலிங்கத்தில் நிலை நிறுத்திய சக்திநிலையை எதற்காகப் பூட்ட வேண்டும்? சத்குரு அதை எப்படிப் பூட்டினார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாய் இந்த வாரப் பகுதி!
தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 15
விஜி அவர்கள் பிரதிஷ்டையின்போது சூட்சுமமாக அமர்ந்திருந்தாரா? தியானலிங்கத்தில் நிலை நிறுத்திய சக்திநிலையை எதற்காகப் பூட்ட வேண்டும்? சத்குரு அதை எப்படிப் பூட்டினார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாய் இந்த வாரப் பகுதி!
பட்டுக்கோட்டை பிரபாகர்:
விஜி அவர்கள் சூட்சும வடிவில் உணரப்பட்டது எப்படி என்ற பாரதி அவர்களின் கேள்விக்கு சத்குருவின் பதில்: ‘‘மலர் இல்லாமல் போகலாம். ஆனால் அதன் மணம் இன்னும் இருக்கக்கூடும். மலரின் மணம் நிலையானது. அது தொலைந்து போவதில்லை, காற்றில் கரைந்து போவது. காற்றில் உள்ள பல வாசனைகளுடன் அது கலந்துபோவதால் அதைப் பிரித்து நுகர்ந்து பார்க்கும் நுட்பம் உங்களிடம் இல்லை. ஆனால் அந்த மணம் காற்றில் கலந்திருப்பதென்பது உண்மைதானே!
அதுபோல, மனிதரின் ஸ்தூல நிலையும் அதன் வாசனையும் காணாமல் போகலாம். ஆனால் அந்த ஸ்தூல உடலின் சக்தி நிலையை யாராலும் அகற்ற முடியாது. அது காற்றில்தான் இருக்கிறது. அதை உணரும் நுட்பம் உங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் தியானலிங்கத்தின் முன் அமரும்போது, அதை ஒரு முழுமையான மனிதராக உணர முடியும். அது அதிர்வுகள் கொண்ட ஒரு தன்மையோ, ஒரு தியான சக்தியோ மட்டுமல்ல, ஏழு சக்கரங்களும் உச்சநிலையில் செயல்படுகிற ஒரு முழுமையான மனிதத்தன்மை!’’
Subscribe
பிராணப் பிரதிஷ்டை நிகழ்ந்து முடிந்து மூன்று நாட்களுக்கு சத்குரு உடலளவில் மிகுந்த பலவீனத்துடன் இருந்தார். அவரால் பேசவும் இயலவில்லை. எழுந்து நிற்கவும், அமரவும் பிறரின் உதவிகள் தேவைப்பட்டது. அதன்பிறகு பலரின் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்துவிட்டார் என்றாலும், இன்றும்கூட அவர் உடலில் சில சிக்கல்களும் பலவீனமும் இருந்து வருகிறது.
தியானலிங்கத்தில் நிலைநிறுத்திய சக்திநிலையை எதற்காகப் பூட்ட வேண்டும்? அதென்ன அலமாரியா? அதைப் பூட்டுவதென்றால் என்ன அர்த்தம்? அதற்கென்று சாவி ஏதாவது உள்ளதா? சத்குரு அதை எப்படிப் பூட்டினார்? இந்த மாதிரியான அடிப்படையான கேள்விகளுக்கு எளிமையான விளக்கம் தந்தார் சத்குரு.
‘‘ஒரு மனித உடல் என்பது வெறும் ஸ்தூல உடல் மட்டும் கொண்டது அல்ல. அதனுடன் பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் இவையெல்லாம் சேர்ந்த ஒரு வடிவம்தான் மனித உடல். இவை எல்லாம் இணைந்திருப்பதற்குக் காரணம் மனிதனின் கர்ம வினைகள். ஒருவேளை இந்தக் கர்மவினைகள் அகற்றப்பட்டால் ஆழ்நிலையில் இருக்கின்ற விஞ்ஞானமய கோசமும், ஆனந்தமய கோசமும் உருகிக் கரைந்துவிடும்.
உதாரணமாக... ஒரு கடல். அதிலிருந்து ஒரு வாளி கடல் நீரைத் தனியாகப் பிரித்து எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இது என்ன? இதுவும் கடலே. கடலின் ஒரு பகுதி. அதாவது மூலத்தின் ஒரு பகுதி. இப்போது அந்த வாளி உடைந்துவிட்டால் என்னவாகும்? அந்தச் சிறிய பகுதி கடல் நீர், மீண்டும் கடலுடன் இணைந்துவிடும்.
பிராணப் பிரதிஷ்டைக்கென்று தேர்வு செய்யப்பட்ட பாரதி, விஜி இவர்களின் கர்மவினைகள் முதலில் கரைக்கப்பட்டன. இந்த நோக்கத்திற்காகத்தான் கர்ம யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. தவிரவும் பல யோக சாதனைகள் அளிக்கப்பட்டன. அவர்களின் சக்தி நிலையை உயர்த்த பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்களின் சக்திநிலையுடன் சத்குரு தனது சக்திநிலையை உருவாக்கி அதைத்தான் தியானலிங்கத்துக்குள் உள்ள ஏழு சக்கரங்களில் நிலைபெறச் செய்தார்.
அந்த சக்தி நிலை மீண்டும் அதன் மூலத்துடன் கலந்துவிடாமல் பிரித்துவைக்கிற ஒரு வாளி தேவையல்லவா? அப்படி வாளியாக பிராண சக்திகொண்டு சக்கரங்களில் சக்தியைப் பூட்டுவது அவசியமாகிறது. லிங்கத்துக்கு மனித உடலில் இருப்பது போல கர்மவினை எதுவும் இல்லை என்பதால், அதனால் சக்கரங்களில் நிலை நிறுத்தப்பட்ட சக்தியை தானாகவே தக்கவைத்துக்கொள்ள இயலாது. ஆகவேதான் சக்தி நிலை ஒவ்வொரு சக்கரத்திலும் பூட்டப்படுதல் முக்கியமாகிறது. மூன்று பிராண சக்தியை ஒரு கயிறு போலப் பயன்படுத்தி சத்குரு சக்தியைப் பூட்டினார்.
இந்த தியானலிங்கம், ஆசியாவிலேயே மிகவும் அடர்த்தியாகக் கிடைக்கும் கல்லால் உருவாக்கப்பட்டது. 4200+ யூனிட்களைக் கொண்டது இந்த கல். லிங்கமும், கௌரிப்பீடமும் வெவ்வேறு கற்களால் ஆனவை. பிராணப் பிரதிஷ்டை நிகழும் சமயம் பலவிதமான மோசமான விளைவுகளையும் சத்குரு எதிர்பார்த்திருந்தார்.
மிக உச்சமான சக்தி நிலையை லிங்கத்துக்குள் உருவாக்கிய பிறகு... அதை அங்கு நிலை நிறுத்தும் வழிமுறைகள் நிகழும்போது ஏதாவது எதிர்பாராத காரணங்களினால் பிராணப் பிரதிஷ்டை தடைப்பட்டாலோ, அல்லது உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் தாமதமானாலோ, உருவாக்கப்பட்ட சக்தியை நிறுத்திவைக்க இயலாமல் லிங்கம் வெடித்துச் சிதறும் ஒரு அபாயம் இருப்பதை யோசித்திருந்தார் சத்குரு. அப்படி எதுவும் நிகழ்ந்துவிடாமல் தடுப்பதற்காக முன்கூட்டியே தியானலிங்கத்தில் ஒரு நுண்ணிய கோடு போன்றதொரு விரிசலை ஏற்படுத்தினார். இதை இயந்திரம் கொண்டு செய்யவில்லை. தனது சிறு கரவொலி மூலம் இதைச் செய்தார் சத்குரு!
அடுத்த வாரம்...
தியானலிங்கத்தில் எதற்காக அப்படி ஒரு விரிசலை சத்குரு தம் கரவொலியால் ஏற்படுத்தினார்? அதற்கு அவசியம் என்ன? அதைத் தம் கரவொலியால் எப்படி நிகழ்த்தினார்? ஏற்கனவே போபாலில் ஒரு யோகி மேற்கொண்ட தியானலிங்க உருவாக்கம் என்ன ஆனது? காத்திருங்கள் விடை தெரிந்துகொள்ள!
இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை