சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! - பகுதி 2

சந்திரனை சோமா என்று ஏன் அழைக்கிறார்கள்? சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்? தெரிந்துகொள்வோம் இப்பகுதியில்...

சத்குரு:

சந்திரனை சோமா என்பார்கள். சோமா என்றால் போதை மயக்கத்தின் ஆதாரம் என்று பொருள். நிலாக் காயும் நேரத்தில் நீங்கள் எங்காவது போயிருந்தால் அங்கு மின் விளக்குகள் இல்லை என்றால், நீங்கள் சந்திரனை சிறிது உற்றுப் பார்க்க நேர்ந்தால், மெல்ல மெல்ல மதிமயக்கம் ஏற்படுவதை உணர்வீர்கள். இப்படிப் பார்த்திருக்கிறீர்களா? நிலா ஒளியை நீங்கள் உள்வாங்கிக் கொள்வதற்காக சில வேலைகளைச் செய்தால், உண்மையில் குடிபோதை மயக்கம் ஏற்படும். நிலா ஒளியால் மட்டுமே இப்படி ஏற்படும். இது தர்க்க ரீதியானது அல்ல. நிலா ஒளி இல்லாமல்கூட நாம் இதைப் பெறலாம். இருப்பினும் நிலா ஒளி அதைச் சிறப்பாகச் செய்யும். எனவே இந்த காரணத்திற்காகவே சந்திரனை சோமா என்பார்கள். அதாவது சந்திரனை போதை மயக்கத்தின் ஆதாரம் என்றார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பேராசை கொண்ட யோகிகள்

நிலா ஒளியை நீங்கள் உள்வாங்கிக் கொள்வதற்காக சில வேலைகளைச் செய்தால், உண்மையில் குடிபோதை மயக்கம் ஏற்படும். நிலா ஒளியால் மட்டுமே இப்படி ஏற்படும்.

எப்போதும் மதிமயக்கத்திலேயே இருக்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியை இப்போது யோக விஞ்ஞானம் வழங்குகிறது. யோகிகள் மகிழ்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் சிறிய சிறிய மகிழ்ச்சிகளுடன் திருப்தியடைபவர்களாக இல்லை. அவர்கள் பேராசை மிகுந்தவர்கள். அவர்களுக்குத் தெரியும், ஒயின் ஒரு குவளை குடித்தால், இப்போது சிறிது போதை தரலாம், ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒன்றும் இருக்காது, நாளை காலையே தலைவலி மற்றும் வேறு சில சுகவீனங்களையும் கொண்டு வந்து சேர்த்து விடும் என்று. அதனால் அவர்கள் போதை வஸ்துகளுக்கு தயாரில்லை. யோகா மூலம் எப்போதும் மதி மயக்கத்திலேயே இருக்கக்கூடிய வித்தையை இப்போது அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் 100 சதவீதம் விழிப்புணர்வாகவும் இருக்க முடிகிறது. எதையோ குடிப்பதாலோ அல்லது ஏதாவது இரசாயனத்தை எடுத்துக் கொள்வதாலோ இது போன்று நீங்கள் இருக்கமுடியாது. இயற்கை உங்களுக்கு இது போன்ற ஒரு சாத்தியத்தை வழங்கியிருக்கிறது.

உடல் உற்பத்தி செய்யும் போதை

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானி முப்பது ஆண்டுகளாக ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தார். அவர் கண்டுபிடித்தது என்னவென்றால் மனித மூளையில் போதை மருந்துகளை ஈர்க்கும் பகுதிகள் இலட்சக்கணக்கில் அமைந்துள்ளன என்று. இதற்கு தர்க்க ரீதியாக விஞ்ஞானிகள் ஒரே ஒரு விளக்கம் என்ன கூறமுடியும் என்றால், முழு மனித சமுதாயமும் வரலாற்றில் ஒரு நேரத்தில் மரிஜுவானா என்னும் போதை வஸ்துவின் புகையை நுகர்ந்திருக்கிறது என்பதுதான். ஆனால் இது உண்மை அல்ல. அப்படி என்றால் மனித மூளையில் போதை மருந்துகளை ஈர்க்கும் பகுதிகள் இலட்சக்கணக்கில் ஏன் இருக்கின்றன? அதற்குக் காரணம் உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட முறையில் பாதுகாத்தால், உடல் தானாகவே போதைப்பொருளை உற்பத்தி செய்யும், மூளைப் பகுதியும் எப்போதும் அதை பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும். பல ஆண்டுகள் ஆழமான ஆராய்ச்சியின் விளைவாக இந்த விஞ்ஞானி என்ன சொன்னார் என்றால், மனித உடல் தானாகவே போதைப்பொருளை உற்பத்தி செய்வதால் அமைதி, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவை (வெளியிலிருந்து எந்தவித தூண்டுதலும் இல்லாமல்) உங்களுக்கு உள்ளேயே நிகழும். அதுவே உங்களுடைய மகிழ்ச்சி அல்லது பேரானந்த நிலை என்பதன் ரசாயனக் கலவை ஆகும்.

ஆனந்தமைடு உருவான கதை

எனவே இந்த விஞ்ஞானி, நம் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இந்த ரசாயனக் கலவைக்கு ஒரு பெயர் சூட்ட விரும்பினார். பொதுவாக விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் பெயர்களையே வைப்பார்கள். இருப்பினும் அவர் ஒரு பொருத்தமான பெயரைத் தேடினார். அதற்காக உலகில் உள்ள பல்வேறு வேதநூல்களையும் படித்துப் பார்த்தார். எந்தப் பெயரும் அவருக்கு திருப்தியாக கிடைக்கவில்லை. பிறகு அவர் இந்தியாவுக்கு வந்தார். இங்கு அவருக்கு “ஆனந்தா”(bliss) அல்லது பேரானந்தம் என்ற பெயர் கிடைத்தது. எனவே அதற்கு அவர் “ஆனந்தமைடு” (anandamide) என்ற பெயரை வைத்தார்.


அடுத்த வாரம்...

நாம் உள்ளுக்குள்ளே போதைப் பொருளை உருவாக்க முடியுமென்றால் அது நமக்கு என்ன விளைவைத் தரும்? தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரைக் காத்திருங்கள்...


சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! தொடரின் பிற பதிவுகள்