போபால் தியானலிங்கம் என்ன செய்தது?!
கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? - இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!
தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 17
கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? - இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!
பட்டுக்கோட்டை பிரபாகர்:
போபாலில் அரைகுறையாக இருக்கும் கோயிலும் விரிசல்விட்ட நிலையில் உள்ள லிங்கமும் இப்போதும் அங்கு இருக்கிறது. இங்கு எந்த பூஜைகளும் நிகழ்வதில்லை. விளக்குகூட ஏற்றப்படுவதில்லை.
ஆயிரம் ஆண்டு காலம் ஆன பிறகும் அந்தக் குறைபட்ட லிங்கத்தில் இன்னும் முழுமையடையாத சக்தி உயிர்ப்புடன் இருப்பதை நுட்பமாகக் கவனிப்பவர்களால் உணர முடியும் என்கிறார் சத்குரு.
கர்மயாத்திரை மேற்கொண்டபோது, சத்குருவும் மற்றவர்களும் இந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். கோயிலை நெருங்க நெருங்க, சத்குருவின் முகத்தில் பல விதமான மாற்றங்கள் ஏற்பட்டன. எட்டு, ஒன்பது கி.மீ தூரத்தில் செல்லும்போதே தாங்க முடியாத வலி ஏற்பட்டது. கோயிலுக்குச் சென்றபோது, அவரால் காரை விட்டு இறங்க முடியவில்லை. தன் முதுகுத்தண்டில் வலியை உணர்ந்தார். இடது பாதம் கிட்டத்தட்ட உறைந்துபோயிருந்தது. அங்கு சென்ற எல்லோருக்கும் முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டது. பிராணப் பிரதிஷ்டையில் முக்கியப் பங்கேற்ற பாரதிக்கும் அங்கு சென்றதும் ஏதேதோ பாதிப்புகள். பெரிய வலி. அவர் ஏறக்குறைய உடலைவிட்டு விலகும் நிலைக்குச் சென்றார். சத்குரு இது போன்ற சில விளைவுகளை முன்கூட்டியே எதிர்பார்த்து விழிப்பு உணர்வுடன் இருந்ததால், பாரதியை அவர் உடலுக்குள் இருத்திவிட்டார்.
Subscribe
அந்த முழுமையடையாத லிங்கத்தை முழுமையடையச் செய்ய இயலுமா என்று சத்குரு யோசித்தார். விசாரித்தபோது, அந்தக் கோயில் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அன்று இரவு அந்தக் கோயிலில் தங்குவதற்கு விரும்பினார் சத்குரு. ஆனால், அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அந்தக் கோயில் தியானலிங்கத்துக்குக் கடைசி நேரத்தில் நிகழ்ந்த பிரச்னை போல, ஈஷா யோக மையத்தில் அமைக்கும் தியானலிங்கத்துக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதால்தான் முன்கூட்டி தியானலிங்கத்தில் ஒரு விரிசலை ஏற்படுத்தினார் சத்குரு.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தத் தியானலிங்கத்தின் சக்திநிலை சிதைந்துபோகவோ, பலவீனப்படவோ வாய்ப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த உச்சமான சக்தி நிலை அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, இனி லிங்கமேகூட அவசியம் இல்லை. அதை எடுத்துவிட்டாலும் அங்கு சக்தி நிலை அப்படியே இருக்கும். இந்த பூமியே சிதைந்தாலும் இந்த சக்தி நிலை சிதையாது!
ஆகவேதான், இந்தத் தியானலிங்கத்துக்கு பலமூட்டவோ, புத்துணர்ச்சி அளிக்கவோ மந்திரங்கள், பூஜைகள், அபிஷேகங்கள் என்று எந்த வழிமுறைகளும் அவசியம் இல்லை. வற்றாத சக்தி நிலையுடன் அப்படியேதான் இந்தத் தியானலிங்கம் பல ஆயிரம் ஆண்டுகள் தொடரப்போகிறது.
தியானலிங்கத்தின் பயன்களைப்பற்றி குறிப்பிடும் போது... அதன் முதல் நோக்கம், தியானம் உணரும் வாய்ப்பு! ஆனால் அதிலிருந்து வாழ்க்கையின் பலவிதமான தேவைகளுக்கானப் பலன்களும் கிட்டுகின்றன. அவை இரண்டாம் பட்சமே. பொருள்ரீதியான நல்வாழ்வு, ஆரோக்கியரீதியான நல்வாழ்வு, உறவுகள்ரீதியான நல்வாழ்வு இவைதான் ஒரு மனித வாழ்வின் வாழ்வியல் தேவைகள் என்று நினைக்கும் மனிதராக நீங்கள் இருந்தால், அதற்கு தியானலிங்கத்தைப் பயன்படுத்துவது அதிகம்! தியான லிங்கம் அவற்றைத் தராதா? தரும்! ஆனால், அதன் சக்தி வேறு! பெரிய பெரிய மரங்களைத் தூக்கும் யானையை அழைத்து ஒரு பென்சிலை எடுத்துவைக்கச் சொல்வது போன்று ஆகிவிடும். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கைகள், கால்கள் மூளை தரப்பட்டிருக்கும்போது எதற்காக தியானலிங்கத்தை நாட வேண்டும்? வாழ்வியலைக் கடந்து ஆன்மீகத் தேடல் இருக்கும் அன்பர்களுக்கு தியான லிங்கம் ஒரு வரம்.
மனிதர்களின் நல்வாழ்க்கையை மட்டும் மையப்படுத்தி உருவாக்கப்படுகிற லிங்கம் வேறு. அவை ஜோதிர்லிங்கம் எனப்படும். அவையும் சக்தி வாய்ந்தவையாகும். சத்குரு ஒருமுறை உஜ்ஜயினியில் உள்ள ஒரு ஜோதிர்லிங்கத்தைத் தரிசிக்கச் சென்றார். இரண்டு முறை இஸ்ஸாமியர்களால் தாக்கப்பட்ட ஆலயம் அது. ஆலயம் சிதைக்கப்பட்ட அந்த நேரத்தில் லிங்கத்தை மட்டும் ஒருவர் எடுத்து பாதாளத்தில் மறைத்துவைத்துக் காப்பாற்றியிருக்கிறார். சத்குரு அந்தக் கோயிலுக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த சக்தி நிலையின் வீரியம் சத்குருவை அவரின் உடலிலிருந்தே அகற்றும் அளவு இருந்தது!
அடுத்த வாரம்...
பில்லி, சூனியம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தியானலிங்கத்திற்கு வரும்போது, அவை அகன்றுவிடுகிற வாய்ப்பு இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? அடுத்தவாரப் பகுதியில் தெரிந்துகொள்ளுங்கள்.
இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை